டிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்று வந்த பிறகு, தி இந்து – தினமணி – தினமலர் போன்ற பார்ப்பன பத்திரிக்கைகள், ரஜினி பற்றிய ஆதரவான செய்திகளை அநேகமாக அனைத்துப் பக்கங்களிலும் வெளியிட்டன. “போராட்டம் கூடாது, போராடும் விஷக்கிருமிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். போராடினால் வேலையின்றி தமிழகம் சுடுகாடாகிவிடும்” என்று எழுதிக் குவித்தன. அடுத்த நாளே, ரஜினி மிகச் சரியாக, துணிச்சலாக பேசியிருக்கிறார் என்று தமிழருவி மணியனது பேட்டியை வெளியிட்டது தி இந்து.

இப்படி, தமிழகமே ரஜினியின் கருத்தை ஆதரிப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க இவர்கள் முயன்றாலும் உண்மையில், சிறுகடை வியாபாரிகளும், தொழிலாளர்களும், சாதாரண மக்களும் என்ன சொல்கிறார்கள். இங்கே நாம் சந்திப்பது, சென்னை பட்டினம்பாக்கம் மீனவக் குடியிருப்புப் பகுதியை ஒட்டிய மக்கள்.

கோபால், கடைகளுக்கு சோடா  போடுபவர், வடபழனி.சினிமாவுக்கும், அரசியலுக்கும் என்ன வித்தியாசம்னே ரஜினிகாந்துக்கு தெரியல… யாரோ எழுதிக்கொடுத்தத பேசுற மாதிரி இருக்கு. எனக்குத் தெரிஞ்சு வெசக்கிருமின்னு போலீசத்தான் சொல்றாருன்னு நெனக்கிறேன்.

கருப்பசாமி, பெட்டிக்கடை வியாபாரி, டுமீல்குப்பம்.காக்கா, குருவிய சுட்ட மாதிரி அப்பாவிங்கள சுட்டுக்கொன்னுருக்கான் போலீசுகாரங்க. இந்த ரஜினிகாந்த் என்னான்னா போராடுனா சுடுகாடாயிடும், விசக்கிருமிகள் உள்ள பூந்துட்டாங்கன்னு படம் காமிக்கிறாரு. இப்படி சுட்டுக்கொன்னுட்டேயிருந்தா கண்டிப்பா சுடுகாடாத்தான் தமிழ்நாடு மாறும்… இவருக்கென்னா, அறிக்கைய வுட்டுட்டு இமயமலைக்கு போயிருவாரு… வேற எதாவது நல்ல கேள்வியா கேளுப்பா?

ஆரோக்கியமேரி மற்றும் டுமீல்குப்பம் பெண்கள்.
ரஜினிகாந்த்து யாருமில்ல.. மோடியோட ஆளுதான்பா. ஒரு சொட்டு தண்ணிகூட தரமாட்டேன்னு சொன்னவரு, தமிழ்நாட்டுக்கு வந்தா தோச சுட்டுத் தருவிங்களான்னு கேக்குறாரு. தோச என்ன தோச, முட்ட தோசையே சுட்டு தர்றோம். வரச்சொல்லு பாக்கலாம்.

போராடக்கூடாதாம். ரஜினி சொல்லியா அந்த கம்பெனிய மூடுனாங்க? ஜல்லிக்கட்டுல மட்டும் இன்னாவாம், சும்மாவா கொடுத்தாரு மோடி? மோடியோட கூட்டணி வெச்சுகினு கண்டபடி பேசிக்கினு இருக்காரே… ஓட்டு கேட்டு வரட்டும், நல்லா கேக்குறோம்…

சுந்தரி, (48 வயது – புகைப்படம் தவிர்த்தார்)
ரஜினி சொல்லுறது 100-க்கு 100 தப்புப்பா… எம் பொண்ணும் ரஜினியோட ரசிகர் தான்… நேத்துகூட இதப்பத்தித்தான் பேசிட்டிருந்தோம். எனக்கும் அவளுக்கும் ஒரே சண்ட.

எனக்குத் தெரிஞ்சு சமூக விரோதி யாருன்னா ரஜினிதான். இந்த மனுசன் காலா படத்துக்காகத்தான் கவர்மெண்டுக்கு ஆதரவா இப்போ பேசிக்கிட்டிருக்காரு.

விஜயகாந்து ஒருத்தரு. எப்பப் பாத்தாலும் குடிச்சிட்டு ஔருவாரு, இந்தாளு குடிக்காமயே ஔருராரு. நீ வேணும்னா பாரு… விஜயகாந்துக்கு நடந்ததுதான் ரஜினிக்கும் நடக்கப் போகுது…

ஆரோக்கியராஜ், ஏ.சி. மெக்கானிக்.
சமூக விரோதிங்கன்னு ஆஸ்பத்திரியில சொல்லியிருந்தா அங்கயே அவரயும் அட்மிட் பண்ணிருப்பாங்க. இவரோட பேச்சு, ஃபுல்லா பி.ஜே.பி. வாய்ஸ்தான் சார். அவருக்கு என்ன… காலா படம் ஓடனும்!

சரண், ஏ.சி. மெக்கானிக்.
சமூக விரோதின்னு ரஜினி யாரயெல்லாம் சொல்றாரு தெரியுமா… போராடுர நம்மளத்தான்… இதெல்லாம் கஷ்டப்பட்டு, அடிபட்டு அனுபவிக்கிறவனுக்குத் தான் வலி தெரியும்… காசுக்கு நடிக்கிற ரஜினிக்கெல்லாம் எங்களோட கஷ்டம் எப்படி புரியும்?

பெருமாள், ஆட்டோ ஓட்டுனர், வேளச்சேரி.
தமிழக மக்களத்தான் சமூக விரோதிங்க, விஷக்கிருமிங்கன்னு சொல்றாரு ரஜினிகாந்த். காந்தி கூடத்தான் போராடுனாரு.. போராட்டம் இல்லாம எதாவது ஒன்னாச்சும் நடந்திருக்கா? இதெல்லாம் சும்மா ஆதாயத்துக்காக பேசுறாருங்க…

சக்திவேல், துப்புரவுத் தொழிலாளி.
போராட்டம் நடத்திக்கினே இருந்தா சுடுகாடா மாறிடும்கிறாரு… செரி போராடலன்னா வல்லரசு ஆயிடுமா?

முகமது அன்வர், மீனவர், பட்டினம்பாக்கம்.
கலகம் பண்ணலன்னா எதுவுமே கெடைக்காது… போராட்டமுன்னு ஒன்னு நடக்கலன்னா, ஜல்லிக்கட்டையே அழிச்சிருப்பாங்க. போராடித்தான்  நம்ம உரிமையை பெற்றிருக்கோம்.

தூத்துக்குடியில என்ன அவரு பொண்டாட்டி, புள்ளங்கள கடத்துறதுக்கா போறோம், சமூக விரோதின்னு சொல்றதுக்கு… கேன்சர உருவாக்குற ஸ்டெர்லைட்டதானே வேணான்றோம்.

சார், நான் சொன்னேன்னு போடுங்க… ரஜினி ஒரு பைத்தியக்காரன்… ஒரு நாள் எங்க கூட வந்து வெயில்ல நின்னு வேல செய்யச் சொல்லுங்க, அப்ப தெரியும் போராடனுமா வேணாமான்னு!

ரஞ்சித், மீனவர்.
தூத்துக்குடி போராட்டத்துல விஷக்கிருமிகள் உள்ள வந்து என்ன பண்ணுனாங்கன்னு சொல்லுவாரா ரஜினி…. ஏ.சி. ரூம்ல ஒக்காந்துகிட்டு என்ன வேணும்னாலும் பேசக்கூடாது.. எங்க கூட கடலுக்கு வரச்சொல்லுங்க… கஷ்டம்னா என்னன்னு புரியும்…

வளர்ச்சி வேணுமுன்னா போராடாதேன்றாரு, அதுக்கு முதல்ல உசுரோடு இருக்கனுமே?

முத்துராஜ், மோர் வியாபாரி.
நான் தூத்துக்குடிகாரன். என்னோட சொந்தக்காரப் பையனும் அடிபட்டு ஆஸ்பத்திரியிலதான் கெடக்குறான்.

ஏன் போராடுராங்க? கேன்சர் வருது, சுத்தமான தண்ணி, காத்து வேணுமுன்னுதானே? 99 நாளா மக்கள் போராடும்போது இந்த ரஜினி எங்கே போயிருந்தாரு. போனவாரம் 13 பேரை சுட்டுக் கொன்னப்ப போலீசை கண்டிச்சு அறிக்கை விட்டாரு. சுட்ட 9 நாளுக்குப் பெறவு தூத்துக்குடி போயிட்டு வந்து, விஷக்கிருமிகளாலத்தான் போலீசு சுட்டாங்கன்னு சொல்றாரு. யாரு இந்த விஷக்கிருமின்னு சொல்லுவாரா இந்த ரஜினி?

சேகர், கார் டிரைவர்.
போராட வேணாம், கோர்ட்டுக்கு போங்கன்னு சொல்றாரு ரஜினி. அதே கோர்ட்டு தானே 2 மொற ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவா தீர்ப்பு கொடுத்தாங்க…. மக்கள் என்ன பொழுது போகலன்னா போராடிக்கிட்டு இருக்காங்க…. ஒன்னுமில்லங்க, இவர இயக்குறது பி.ஜே.பி.காரனுங்க. அதனால அவுங்க சொல்றத அப்படியே வாந்தியெடுக்குறாரு அவ்ளோதான்.

ஆசிக் – பழையபொருள் வாங்கி விற்பவர் (வலது), ராஜசேகரன்- ஆசிரியர் (ஓய்வு)

ஆசிக், காயலாங்கடை.
இதே ஸ்டெர்லைட் ஆலைய மஹாராஷ்டிரால வேணாம்னுதானே போராட்டம் பண்ணி வெரட்டி விட்டாங்க… அப்ப மராட்டியர்களும் சமூக விரோதிகளான்னு ரஜினிதான் சொல்லனும்.

ராஜசேகரன், ஆசிரியர் – ஓய்வு.
சிஸ்டம் சரியில்லன்னாரு… எப்படிங்க சரி பண்ணப்போறாரு…. சும்மா ஆக்‌ஷன் கொடுத்துக்கிட்டே இருக்காரு… படம் பிரச்சினையில்லாம ஓடனும்ல.. அதான் கவர்மெண்ட அட்ஜட்ஸ்ட் பண்ணிட்டு போறாராம்…

மருது, பால் வியாபாரம்.
ரஜினி சொல்றதெல்லாம் ஒரு பொருட்டாவே எடுத்துக்கக்கூடாது… இங்கிருந்து போறப்ப நடிகனா போறேங்குறாரு…. சிஸ்டம் சரியில்ல போராடனும்கிறாரு, அடுத்த நாள் போராட்டம் நடத்துனா சுடுகாடு ஆயிடும்கிறாரு. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தா கடவுளாளக் கூட இந்த நாட்ட காப்பாத்த முடியாதுன்னாரு, இப்ப என்னன்னா அந்தம்மா இருந்தா இரும்புக்கரம் கொண்டு அடக்கிருப்பாங்கன்னு சொல்றாரு. மொத்தத்துல லூசுங்க அவரு…

தாத்தா, பாட்டன் வேசத்துல நடிக்க வேண்டியவரு, இன்னமும் காலேஜ் ஸ்டூடன்டாவே நடிச்சி மக்கள முட்டாளாக்கினது போதாதுன்னு, இப்போ அரசியலுக்கு வந்து நாட்டையே குட்டிச்சுவராக்கப் போறாரு.

மஞ்சு,  (புகைப்படம் தவிர்த்தார்)
நாங்க எங்க பிரச்சினைகளுக்காகத்தானே போராடுறோம், இவருக்கு என்னா பிரச்சினயாம் இப்போ. ஜல்லிக்கட்டுக்கு போராடித்தானே வெற்றி கெடச்சுது. இந்த மீடியாக்காரங்க தான் ரஜினிய பெரிய ஆளாக்குனாங்க… இப்ப அவுங்களயே திட்டிட்டாருல்ல… எனக்கு தெரிஞ்சு ரஜினிதாங்க உண்மையிலேயே சமூக விரோதி.

ராபின், பி.காம்.
சமூக விரோதி, விசக்கிருமியெல்லாம் காலா படம் பிரச்சினையில்லாம ஓடனும்னுதான். ஆளுங்கட்சி சப்போர்ட் வேணும்ல… போராடாம எது எதெல்லாம் நமக்குக் கெடச்சிருக்குன்னு ரஜினிய சொல்லச் சொல்லுங்க பார்ப்போம். சரி போராடம இருந்தா செடி, கொடியெல்லாம் தானா வளர்ந்துடுமா, இல்ல குடிக்க நல்ல தண்ணிதான் கெடைக்குமா? எல்லாமே போராடுனாதானே கெடைக்குது.

ஷியாம் மற்றும் நண்பர்கள்.
மேட்டர் ஒன்னுதான் ப்ரோ, ரஜினி மோடி சப்போர்ட்டர், அப்போ நாமோ யாரு? சமூக விரோதிங்கதானே!

  • வினவு புகைப்படச் செய்தியாளர்கள்.

4 மறுமொழிகள்

  1. vinavu எவ்வுளவு தான் ரஜினியை பற்றி அவதூறு பரப்பினாலும் அடுத்த முதல்வர் ரஜினி தான், அதை யாராலும் தடுக்க முடியாது.

  2. பொதுவாக ரஜினி மேல இருந்த grace இப்ப இல்ல. இது தான் உண்மை. இன்னும் நாலுவாட்டி மக்கள் பிரச்சினை பற்றி ரஜினி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தட்டும். அப்புறம் பார் விஜயகாந்த விட கேவலமா social media கலாய்க்கும்.

  3. எப்படிங்க சமுக விரோதிகளை எல்லாம் சுட்டு சாகடிச்சிட்டு தேர்தல் வைப்பார்களா?

  4. ஏன், “தமிழன்டா இவன்.. இவன் எவ்வளவு அடிச்சாலும் தங்குவான். ரெம்ப நல்லவன்டா.”. ன்னு யாராவது சொன்னார்களா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க