னிதர்களுக்கு உலகில் மிக ஆபத்தான உயிர்கொல்லி உயிரினம் எது என்ற கேள்வியை வைத்தால் அவரவர் “பொது அறிவு” மட்டத்திற்கேற்ப வெவ்வேறு பதில்கள் வரும்.  ஆனால், மிக ஆபத்தான உயிர்க் கொல்லி உயிரினம்  நாம் அற்பமானவை என நினைக்கும் “கொசுக்கள்” என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். உலக கொசுக்கள் தினம் என்று ஒரு நாள் அனுசரிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு சிரிப்பையும் வரவழைக்கலாம்.

மாதிரிப் படம்

கொசுக்கள் பரப்பும் நோய்கள் மற்ற எதையும் விட மனிதர்களுக்கு மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன. மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஜிகா வைரஸ், மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவ காரணமாக கொசுக்கள் இருக்கின்றன.  உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்களின் படி கொசுக்கள் போன்ற நோய்பரப்பிகள் பரப்பும் நோயினால் உலகளவில் ஆண்டுக்கு 7 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

2013-ல் நேச்சர் இதழில் வெளியான ஒரு அறிக்கை உலகில் ஆண்டுக்கு தோராயமாக 39 கோடி பேரை டெங்கு வைரஸ் தொற்றுவதாகவும், அதில் 9.6 கோடி பேர்  டெங்கு நோயினால் பாதிக்கப்படுவதாகவும் மதிப்பிட்டுள்ளது. உலசுகாதார அமைப்பின் ஒரு கணக்கீட்டின் படி ஒரு ஆண்டுக்கு உலக அளவில் சுமார் 20 கோடிப் பேர் மலேரியாவினால் பாதிக்கப்படுகின்றனர்.  மலேரியா நோயால் மட்டும் உலகளவில் ஆண்டுக்கு சராசரியாக 4 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர். 2015-ம் ஆண்டில் 4 இலட்சத்து 46 ஆயிரம் பேரும், 2016-ம் ஆண்டில்  4 இலட்சத்து 45 ஆயிரம் பேரும்  மலேரியா நோயால்  கொல்லப்பட்டுள்ளனர்.

மாதிரிப் படம்

2016-ம் ஆண்டில் மட்டும் உலக அளவில் 91 நாடுகளில் 21.6 கோடி பேர் மலேரியாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அது முந்தைய 2015-ம் ஆண்டை விட 50 இலட்சம் அதிகமாகும். ஆப்பிரிக்க பிராந்தியம் உலகளாவிய மலேரியா நோய்த்தொற்றில் அதிக பங்கைக் கொண்டுள்ளது. 2016-ம் ஆண்டின் மொத்த மலேரியா நோயாளிகளில் 90% அப்பிராந்தியத்தில் இருந்துள்ளதோடு மலேரியாவால் இறந்தோரில் 91% பேர் ஆப்பிரிக்கர்கள். அதிலும் பெரும்பாலானோர் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளாவர்.

நாம் அற்பமானவை என நினைக்கும் கொசுக்களைப் பற்றி நமக்கு தெரிந்தது மிகக் குறைவு தான். எல்லா கொசுக்களுமே மனிதர்களைக் கடிப்பதில்லை.  கொசுக்களுக்கு இரத்தம் முதன்மையான உணவல்ல. பெண் கொசு, ஆணுடன் கூடிக் கலவியில் ஈடுபட்ட பிறகு, முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதங்களைப் பெறுவதற்காகவே இரத்தம் குடிக்கிறது. ஆண் கொசு இரத்தம் குடிப்பதில்லை அதாவது மனிதர்களையோ அல்லது விலங்குகளையோ கடிப்பதில்லை.

கொசுக்கள் சிலரை அதிகமாக கடிக்கும், சிலரை மிகக் குறைவாகவே கடிக்கும்.  மனிதர்களின் இரத்த வகை, உடல் வெப்பநிலை, வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு, உடலில் இருந்து வெளிப்படும் கொசுக்களை ஈர்க்கும் ஒருவகையான வாசனையின் அளவு போன்றவற்றைப் பொருத்து கொசுக்கள் தனது இலக்கை தீர்மானிக்கின்றன. ‘ஓ’ வகை இரத்தமுள்ளவர்களை மற்ற இரத்த வகைகளைவிட கொசுக்கள் அதிகம் கடிக்கும். எந்த இரத்த வகையாக இருந்தாலும், உடல் வாசனை அதிகமிருப்பவர்களையும், உடல் வெப்பம் அதிகமிருப்பவர்களையும் கொசுக்கள் கடிக்கும். பெண்கள் கருவுற்றிருக்கும் போது அதிக கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுவதால், அவர்களை அதிகம் கடிக்கும். அதனாலேயே கருவுற்ற பெண்கள் மலேரியா போன்ற  நோய்பரப்பிகள் பரப்பும் நோய்களுக்கு எளிதில் இலக்காகின்றனர்.

மேலும், எல்லா கொசுக்களும் மனித உடலில் எல்லா உறுப்பிகளிலும் கடிப்பதில்லை.  உதாரணமாக, டச்சு நாட்டின் மலேரியா கொசு முகத்தில் கடிப்பதை அதிகம் விரும்புகிறது.  ஆப்பிரிக்க மலேரியா கொசு கணுக்கால் மற்றும் கால்களில் கடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. மனித உடலின் வெவ்வேறு பகுதியில் வெவ்வேறு வகையான வாசனை, வெவ்வேறு வேதிப் பொருட்கள் சுரக்கின்றன. அவற்றைக் கொண்டு தனது இலக்கை கொசுக்கள் தீர்மானிக்கின்றன.  பெண் கொசுக்களின் வாழ்நாள்  40 முதல் 50 நாட்கள் வரை.  ஆண் கொசு ஒரு வாரத்திற்கும் குறைவாகவே உயிர் வாழும்.

கொசுக்கள் குடும்பம் அனாஃபிலினே (Anophelinae), க்யூலிசினே (Culicinae) என்ற இரண்டு துணைக் குடும்பங்களைக் கொண்டுள்ளது. ஏடிஸ் (Aedes),  அனாஃபிலஸ்  (Anopheles), க்யூலெக்ஸ் (Culex)  போன்ற 40 பேரினங்களும் அவற்றுக்கு கீழ்  3500 கொசு வகைகள் கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன.  3500 வகைகளில் சில நூறு கொசுக்கள் மட்டுமே மனிதர்களைக் கடிக்கின்றன. அனாஃபிலஸ் (Anopheles) எனப்படும் கொசு  இனத்தில் சுமார்  430 கொசு வகைகள் உள்ளன. இதில் சுமார் 100 வகைகள் மலேரியா கடத்திகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.  இதில் 40 வகைகள் மனிதர்களுக்கு மலேரியாவைக் கடத்துகின்றன.  ஏடிஸ் (Aedes) கொசுக்கள்  டெங்கு, சிக்கன்குனியா, ஜிகா வைரஸ், மஞ்சள் காய்ச்சல் போன்றவற்றின் நோய்பரப்பிகளாக உள்ளன.

1897-ம் ஆண்டு ஆகஸ்ட், 20-ம் நாள்  மலேரியா  நோய்க் கிருமிகள் கொசுக்களின் வழியாக பரவுவதை  மருத்துவர் சர் ரொனால்டு ராஸ் கண்டறிந்தார்.  அக்கண்டுபிடிப்பின் நினைவாக ஆகஸ்டு 20, உலக கொசுக்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.  ஏப்ரல் 25, உலக மலேரியா தினமாக  கடைபிடிக்கப்படுகிறது.  அறிவியலும் தொழில்நுட்பங்களும் இவ்வளவு வளர்ந்த பின்னும் மலேரியா போன்ற ஆட்கொல்லி நோய்களால் மக்கள் கொல்லப்படுவது மட்டும் இன்னும் தீரவில்லை.

சர் ரொனால்டு ராஸ்

ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற ஏழை மற்றும் மூன்றாம் உலக நாடுகள் மலேரியாவால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு மோசமான சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடு,  மோசமான நோயறிதல் சோதனை முறைகள், கண்காணிப்பு முறைகள் காரணமாக இருக்கின்றன. மோசமான உட்கட்டமைப்பு வசதிகள் அதாவது முறையான நீர் வடிகால்கள் இல்லாமை போன்றவைகளால் கொசுக்கள் பல்கிப் பெருகுவதும் பலர் உயிரிழக்க காரணமாக இருக்கிறது.

புதிய தாராளவாத கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு உலகின் பெரும்பாலான நாடுகள் மக்கள் நலத்திட்டங்களை வெட்டிச் சுருக்கி வருகின்றன. மருத்துவம், சுகாதாரம் போன்றவை விற்பனைக்கான சரக்காக மாற்றப்பட்டு பொது சுகாதாரத்திற்கான நிதியையும் அரசுகள் குறைத்து வருகின்றன. இந்த நிலையில் அவை எப்படி மலேரியாவை ஒழிக்க முடியும்? குறிப்பாக இந்தியாவை எடுத்துக் கொண்டால், மோசமான சுகாதார கண்காணிப்பு வழிமுறைகளின் காரணமாக மலேரியாவால் பாதிப்படைவோரில் 8 சதவீதத்தினர் மட்டுமே கண்டறியப்பட்டு பதிவு செய்யப்படுவதாகவும், சிகிச்சையளிக்கப்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. அதோடு இந்திய அரசு புள்ளிவிவர மோசடிகள் செய்தும் மலேரியா இறப்பை குறைத்துக் காட்டுகிறது.

உலக சுகாதார மையத்தின் 2017-ம் ஆண்டின் அறிக்கையின் படி மலேரியாவினால் பாதிப்பும் இறப்பும் அதிகமுள்ள 15 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியாவைத் தவிர மீதமுள்ள 14 நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளாகும்.

மாதிரிப் படம்

2010-ம் ஆண்டில் உலக சுகாதார மையம் தனது அறிக்கையில் ஆண்டுக்கு சராசரியாக 15,000 இந்தியர்கள் மலேரியாவால் இறப்பதாக மதிப்பிட்டிருந்தது. ஆனால், லேன்செட் என்ற மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வறிக்கை ஆண்டுக்கு சராசரியாக சுமார் 2 இலட்சம் பேர் மலேரியாவால் இறந்ததாக சொல்கிறது. 2010-ம் ஆண்டில் மட்டும், 4800 ஐந்து வயதுகுட்பட்ட குழந்தைகளும், 42000 ஐந்து வயதுக்கு மேற்படோரும், ஆக மொத்தம் 46800 பேர் மலேரியாவால் இறந்ததாக  அதே லேன்செட் இதழில் வெளியான மற்றொரு கணக்கீடு தெரிவிக்கிறது.  மாறாக, 2010-ம் ஆண்டில் 1018 பேர் மட்டுமே மலேரியாவால் இறந்ததாக இந்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

2013-ல் இந்திய மருத்துவக் கவுன்சிலின் டாக்டர் பாதம்சிங் பிரதான் தலைமையிலான குழு தனது ஆய்வில் ஆண்டுக்கு சராசரியாக 40,297 பேர்  கொசுக்கள் போன்ற நோய்பரப்பிகள் பரப்பும் நோயினால் இறப்பதாக தெரிவிக்கிறது.  இது அரசின் புள்ளிவிவரங்களை விட 40 மடங்கு அதிகம். தேசிய நோய்பரப்பிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டத்தின் (National Vector Borne Disease Control Programme – NVBDCP) தலைவர் டாக்டர் ஏ.சி.தாரிவால் அது 40 மடங்கு இருக்காது என்றும் 20 முதல் 30 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆக, இந்திய அரசு மோசடி செய்த  மலேரியா குறித்த புள்ளிவிவரங்களின் படியே மலேரியாவால் அதிக மக்கள் உயிரிழக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா  இருக்கிறது. இந்தியாவிலும் சரி உலக அளவிலும் சரி கொசுக்கள் போன்ற நோய்பரப்பிகளால் இறக்கும் மக்களின் எண்ணிக்கை பதிவுசெய்யப்பட்ட புள்ளிவிவரங்களை விடப் பல மடங்கு அதிகம் இருக்கவே வாய்ப்புள்ளது.

2016-ல் இந்தியாவை விட பொருளாதார நிலையில் பின் தங்கியுள்ள கிர்கிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளை மலேரியா இல்லாத நாடுகளாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்ததை இதோடு ஒப்பிட்டு நமது அரசின் யோக்கியதையைப் புரிந்து கொள்ளலாம்.

மலேரியா நோயை ஒழிக்க வேண்டுமென்றால் அதைப் பரப்பும் கொசுக்களை ஒழிக்க வேண்டும். கொசுக்களை எப்படி ஒழிப்பது?   கொசுவை ஒழிப்பதற்கு வழமையான கொசு மருந்துகள், புகைகள் போன்றவை போதிய விளைவுகளைத் தரவில்லை. பூச்சிக் கொல்லிகள் மற்றும் வேதிப்பொருட்களால் சூழல் மாசடைவதுடன் மற்ற உயிரினங்களையும் பாதிக்கிறது. அதோடு கொசுக்களும் அந்த வேதிநச்சுக்களை தாங்கி உயிர்வாழ  பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றன. நச்சுக் கொல்லிகளின் வீரியத்தை ஓரளவிற்கு மேல் அதிகப்படுத்தவும் முடியாது.

எல்லா வகையான கொசுக்களும் தனது முட்டைகளை நீர்ப்பரப்பில் மட்டுமே இடுகின்றன.  ஒரு பெண் கொசு தன் வாழ்நாளில் 200 முதல் 300 முட்டைகள் வரை இடும். வெப்ப மண்டல நாடுகளில் கொசு  முட்டைகள் 48 மணி நேரத்திற்குள் பொறிந்து லார்வா புழுக்களாகிவிடும். பின்னர் அவை கூட்டுப்புழுவாகி கொசுவாக மாறுவதற்கு 5 முதல் 15 நாட்கள் வரை ஆகிறது. மழை நீர் அல்லது கழிவு நீர் ஓரு சில நாட்கள் தங்கினாலே கொசுக்கள் உற்பத்தியாவதற்கு போதுமானதாகும். இந்தக் காரணங்களும் கொசுவை ஒழிப்பதற்கு தடையாக உள்ளன.

தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) திட்டம் 2014-ல் ஆர்ப்பாட்டமாக அறிவிக்கப்பட்டு நான்காண்டுகள் ஆகிறது. சில மேட்டுக்குடிகளும் ஆட்சியாளர்களும் ஒரு நாள் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இத்திட்டத்தால் கொசுக்களை ஒழிக்க முடியுமா? அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களின் படி  2016-ம் ஆண்டு இந்திய மொத்த மக்கட் தொகையில் 68.9 கோடி பேர் மலேரியா தாக்கும் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர்.  331 பேர் மலேரியாவால் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆண் கொசு தன் வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே பெண் கொசுவுடன் கூடுவதால், மிக விரைவாகவே தனது இணையை தேர்ந்தெடுத்து இனப்பெருக்கத்தில் ஈடுபடும். ஒரு ஆண்கொசுவை விடுவித்தால் அது மிக விரைவாகவே பெண் கொசுவை தேடிப்பிடித்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுவிடும். ஆண் கொசுவின் இந்த சிறப்பு பண்பை அவற்றுக்கே எதிரியாகப் பயன்படுத்தி கொசுக்களை ஒழிக்கும் திட்டத்தை அறிவியல் கண்டறிந்துள்ளது.

மலட்டுத் தன்மையுள்ள ஆண் கொசுக்களை உருவாக்கி விடுவிக்கும் போது அவை உடனடியாக பெண் கொசுக்களை கண்டடையும். போட்டியினால் ஏற்கனவே உள்ள ஆண் கொசுக்களுக்கு இனப்பெருக்க வாய்ப்பு குறையும். அடுத்த தலைமுறையில் கொசுக்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறையும். முன்னர் ஆண் கொசுக்களில் மலட்டுத் தன்மையை உண்டாக்க கதிர்வீச்சை செலுத்துவது, அவற்றை தனியாக பிரித்தெடுத்து வளர்ப்பது போன்ற பழைய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.

தற்போது முற்றிலும் மலட்டுத் தன்மையுள்ள ஆண் கொசுக்களை உருவாக்குவதை நவீன மரபணு திருத்தம் செய்யும் (Gene Editing) தொழில்நுட்பங்கள் எளிமையாக்கியுள்ளன. சில கொசுக்களின் மரபணுவில் மாற்றம் செய்து ஆண் கொசுக்களை மட்டுமே அவை ஈன்றெடுக்க வைக்கலாம். ஆண் கொசுக்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு பின் வரும் சந்ததிகள் முட்டையிலிருந்து பொரிந்து லார்வா நிலை வந்தவுடன் இறந்துவிடுமாறும்  மாற்றியமைக்கலாம். இவற்றை விடுவிக்கும் போது அவை உடனடியாக பெண் கொசுக்களை கண்டடையும்.

இந்த செயல்முறையை திரும்ப திரும்ப செய்யும் போது 4 முதல் 5 மாதங்களுக்குள்ளாகவே கொசுக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட  85% குறைந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆக, நோய் பரப்பும் ஒரு குறிப்பிட்ட கொசு வகையை ஓரிரு ஆண்டுகளுக்குள் முற்றிலுமாக ஒழித்துவிட முடியும்.

ஆனால், இதை நடைமுறைப்படுத்துவதற்குக் கூட  அறிவியலைத் தாண்டிய அரசியல் பொருளாதார அடிப்படைகள் அதாவது, மக்கள் நல அரசு – ஆட்சியாளர்கள், மக்கள் நல கொள்கைகள், நிதி ஒதுக்கீடு போன்றவை தேவையாக இருக்கிறது.

இந்திய அரசோ மலேரியா தடுப்பிற்கான நிதியைக் குறைத்து வருகிறது. 2018-ல் தேசிய நோய்பரப்பிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா 2017-18-ஆம் ஆண்டு மோடி அரசு ஒதுக்கிய நிதி 2014-15-ஆம் ஆண்டை விட 13% குறைவு என ஒப்புக் கொண்டார்.

ஒரு சாதாரண கொசுவை ஒழிக்கக் கூட இந்த அரசால் முடியவில்லை. கொசுக்களிடம் காட்டும் எரிச்சலை அரசிடம் காட்டினால் அதை விட நல்ல தடுப்பு மருந்து ஏது?

– மார்ட்டின்

மேலும் படிக்க :

2 மறுமொழிகள்

  1. விளக்கமான கட்டுரை. பாராட்டுக்கள். அப்பாவி ஏழை மக்களின் மீதான மேற்கத்திய அந்நிய நிறுவனங்களின் போர் ஆயுதம் தான் கொசுவும் அது பரப்பும் நோய்களும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க