டப்பாடி அரசின் அலங்கோலங்களையும் அதனின் அடிவருடித்தனத்தையும் கண்டு சலிப்படைந்திருக்கும் பாமர மக்களுள் சிலர், “அம்மா இருந்திருந்தால், இப்படியெல்லாம் நடந்திருக்கவிட மாட்டார்” என்றவாறு வாதிட்டு வருவதை நம்முள் பலரும் கேட்டிருக்கக்கூடும்.

ஜெயாவின் அறிவு, தைரியம் குறித்துப் பொதுவெளியில் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பத்திலிருந்துதான் இந்தப் பாமரத்தனமான வாதம் பிறக்கிறது.

அந்த பிம்பத்தின் போலித்தனமும் மோசடித்தனமும் ஒருபுறமிருக்கட்டும். இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். கும்பல் அம்மாவின் வழியில், அம்மாவின் ஜெராக்ஸ் பிரதியாக இருந்துதான் ஆட்சி நடத்தி வருகிறார்கள். மெய்க்கும் பிரதிக்கும் இடையில் வித்தியாசம் இருக்கத் தானே செய்யும் என வாதிடுபவர்கள்கூட அசந்து போகும்படி, அச்சுப் பிசகாமல் அம்மாவே மறுபிறவி எடுத்து வந்து ஆட்சி நடத்துவதைப் போன்று இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். கும்பல் நடந்துவருவதை குட்கா ஊழல் விவகாரம் எடுத்துக் காட்டியிருக்கிறது.

குட்கா ஊழல் விவகாரம் ஜெயா உயிரோடு இருந்தபோதே அம்பலத்திற்கு வந்துவிட்ட போதும், அந்த ஊழலில் கைநனைத்த அமைச்சர் விஜயபாஸ்கர் மீதோ, ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட போலீசு அதிகாரிகள் மீதோ முதலமைச்சர் ஜெயா எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குட்கா ஊழல் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டவுடனேயே, அமைச்சர் விஜய பாஸ்கரையும், போலீசு டி.ஜி.பி. ராஜேந்திரனையும் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காக முடிந்தது. இத்துணைக்கும் ராஜேந்திரன் ரெகுலர் டி.ஜி.பி. கிடையாது. பதவி நீட்டிப்புப் பெற்று அந்தப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார். அவர் மீது குட்கா ஊழல் குற்றச்சாட்டு இருப்பது தெரிந்தும் பதவி நீட்டிப்புக் கொடுத்ததே அம்மாவின் வளர்ப்புப் பிராணியான எடப்பாடிதான்.

குட்கா ஊழல் வழக்கை நேர்மையாக விசாரிக்க முயன்ற டி.ஜி.பி. அசோக்குமாரை மிரட்டிப் பதவி விலக வைத்தார், முன்னாள் முதல்வர் ஜெயா. அதே போல, இந்த வழக்கை விசாரிப்பதற்காக மதுரை உயர் நீதிமன்றத்தால் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்ட ஜெயக்கொடியையும், இவ்வழக்கில் கூடுதல் அக்கறை செலுத்திவந்த ஊழல் தடுப்புப் பிரிவின் இயக்குநர் மஞ்சுநாதாவையும் பதவி மாற்றம் என்ற பெயரில் தூக்கியடித்து, குற்றவாளிகளைக் காப்பாற்றிவருகிறார், இந்நாள் முதல்வர் எடப்பாடி.

குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, அவ்வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்ட சிவக்குமார் மேல்முறையீடு செய்திருந்தார். உச்ச நீதிமன்றத்தில் வாதிடும் மூத்த வழக்குரைஞர்கள் கேஸ் கட்டை ஒரு புரட்டு புரட்டுவதற்கே பத்தாயிரம் தொடங்கி ஐந்து இலட்ச ரூபாய் வரை கேட்பார்களாம்.

மைய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகி

குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாயைக் வக்கீல் பீஸாகக் கொடுக்கும் தகுதி இருப்பவர்கள் மட்டும்தான், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும். சாதாரண சுகாதார ஆய்வாளரான சிவக்குமாரோ உச்ச நீதிமன்றத்தில் தனக்காக வாதிட மைய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகியை ஏற்பாடு செய்திருந்தார். “அவரை வைத்து வாதிடுமளவிற்கு சிவக்குமாருக்குப் பணம் எங்கிருந்து வந்தது?” என்ற கேள்வியை எழுப்பிய எதிர்க்கட்சிகள், சிவக்குமார் அமைச்சர் விஜயபாஸ்கரின் பினாமி என அம்பலப்படுத்தின.

குட்கா வழக்கில் சிவக்குமார் எபிஸோட், சொத்துக்குவிப்பு வழக்கில் பவானி சிங்கின் எபிஸோடை நினைவுக்குக் கொண்டு வருகிறது.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில், அவ்வழக்கின் அரசு தரப்பு வழக்குரைஞர் பவானி சிங் நீதிமன்றத்திற்கு வராமல் டிமிக்கிக் கொடுக்கத் தொடங்கினார். தனது விடுப்பை நியாயப்படுத்த போலியான மருத்துவச் சான்றிதழையும் நீதிமன்றத்திற்கு அளித்தார்.

குற்றவாளிகளுக்குச் சாதகமாக அரசு வழக்குரைஞர் நடந்துவருவதைப் புரிந்துகொண்ட நீதிபதி குன்ஹா, பவானி சிங் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்த நாட்களுக்கு உரிய வழக்குரைஞர் கட்டணத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து பவானி சிங் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அவருக்கு எதிராகவே தீர்ப்பு அமைந்தது. அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

பவானி சிங்கின் ஒரு நாள் வக்கீல் பீஸ் ஏறத்தாழ் 60,000 ரூபாய்தான். அவர் இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் போனதற்கு ஏற்பட்ட அதிகபட்ச இழப்பு இரண்டு இலட்ச ரூபாய்க்குள்தான். ஆனால், அவரோ அந்த இரண்டு இலட்ச ரூபாய்க்காக, பத்து இலட்ச ரூபாய்க்கும் மேல் வக்கீல் பீஸ் கொடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்காடினார்.

‘அம்மா’-வுக்கு எதிராக வழக்கில் ஆஜராகாமல் இருந்த அரசு வக்கீல் பவானி சிங் (வலது)

குட்கா வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த சாதாரண சுகாதார ஆய்வாளருக்குப் பின்னால் இருந்தது அமைச்சர் விஜய பாஸ்கர் என்றால், சொத்துக் குவிப்பு வழக்கில் பவானி சிங்கை உச்ச நீதிமன்றம் வரைக்கும் தூக்கிப் போய் ஆட்டி வைத்தது, ஜெயா-சசி கும்பல்.

ஓ.பி.எஸ். ஜெயாவின் சமாதியில் தியானத்தில் அமர்ந்தபோது, அம்மாவின் ஆன்மா உத்தரவு போட்டதாகக் கூறினார். அந்த நகைச்சுவை காட்சியில் மட்டுமல்ல, இந்த ஆட்சியின் அலங்கோலங்கள், முறைகேடுகள் அனைத்தின் பின்னும் அம்மாவின் ஆன்மா மறைந்திருப்பதை நுணுக்கிப் பார்த்தால் காண முடியும்.

என்றாலும், அம்மாவிற்கும் அவர் வளர்த்துவிட்டுள்ள இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். உள்ளிட்ட ஜந்துக்களுக்கும் இடையே இம்மியளவுகூட வேறுபாடே இல்லை என்றும் புரிந்துகொள்ளக் கூடாது.

ஜெயா, தன்னளவிலேயே பார்ப்பன – பாசிஸ்டாக இருந்து தமிழகத்தைக் கொள்ளையடித்தார். போயசு தோட்டத்தையே தலைமைச் செயலமாக மாற்றி, அவர் நடத்திவந்த வக்கிர ஆட்சிக்குத் தமிழகப் பார்ப்பனக் கும்பல் காவல் நாயாக வேலை செய்தது.

இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். கும்பலோ, மோடி தொடங்கி எஸ்.வீ. சேகர் வரையிலான இந்து மதவெறி பார்ப்பன – பாசிசக் கும்பலுக்கு எடுபிடியாக இருந்துகொண்டு தமிழகத்தை மொட்டையடித்து வருகிறது.

டெல்லியும் (மோடி) மயிலாப்பூரும் (குருமூர்த்தி) தமிழகத்தின் தலைமைச் செயலமாக இயங்கி, இந்த அடிவருடிகளின் ஆட்சி கவிழ்ந்துவிடாமல் காப்பாற்றி வருகின்றன.

-திப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க