ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை நிலத்தடி நீர், காற்று மண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்தி பெரும் கேடினை ஏற்படுத்திக் கொண்டிருப்பதால் அந்த ஆலையை அகற்றக்கோரி மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அதை தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இந்த போராட்டத்தின் உச்சமாக மே 22, 2018 அன்று நூறாவது நாள் போராட்டத்தின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்து அமைதியான முறையில் ஊர்வலம் சென்றனர்.

இதனை ஒடுக்கும் விதமாக போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியது போலீசு. இப்போராட்டத்தின் போது போலீசு நடத்திய கோர  தாண்டவத்தில்13 பேர் உயிரிழந்தனர்.

ஜூன் 3, 2018, ஞாயிற்றுக் கிழமை அன்று அதிகாலை; ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு நினைவேந்தல் கூட்டம்  புளூமிங்டன், இல்லினாய்ஸ் (Bloomington, Illinois) என்ற ஊரில் அமெரிக்க வாழ் தமிழர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், நண்பர்களுடன் கூடி நடத்தப்பட்டது.

வந்திருந்தவர்களை வரவேற்ற பிறகு, அமைதி பேரணியில் உயிரை இழந்த போராளிகளை பற்றி சிறிய உரையுடன் நினைவேந்தல் கூட்டம் தொடங்கியது.  ஸ்னோலின், தோழர் ஜெயராமன் பற்றியும் அவர்களின் போராட்டக் குணம், குடும்ப சூழ்நிலை பற்றி பேசப்பட்டது. அவர்களின் இழப்பை ஈடு செய்யமுடியாமல் தவிக்கும் குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்தனர்.

வந்திருந்தவர்களில் ஒருவர் தூத்துக்குடியை சேர்ந்தவர். அவர் 1993-ஆம் ஆண்டு பொறியியல் படிப்பு முடித்துள்ளார். அவரது அனுபவத்தையும், தாமிர உருக்கு ஆலையின் தொடர் அநீதிகளையும் தோலுரித்து பேசினார். அங்கு அவருடைய நண்பர்கள் குடும்பத்தினரிடம் நடந்ததை கேட்டு மனமுடைந்து போனதை விவரித்தார். “இது முழுக்க முழக்க மக்கள் ஒருங்கிணைத்த போராட்டம்.” என்று மிகவும் அழுத்தமாக அனைவருக்கும் எடுத்துரைத்தார்.

நினைவேந்தல் கூட்டத்திற்கு அனைவரும் சாதி, மதம், மொழியெல்லாம் தூக்கியெறிந்து ஒருமித்த எண்ணத்துடன் கூடினர். சிலர் அவர்களுடைய குடும்பத்தினரையும் அழைத்து வந்தார்கள். இறந்தவர்களின் புகைப்படங்கள் முன் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தினர் குழந்தைகளும் அதில் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.

பிறகு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மெழுகுவர்த்தி ஏந்தி கொண்டிருந்த தருணத்தில் அனைவரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரையிலும் அதன் பின்னரும் போராடும் மக்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கருத்தை பகிர்ந்தனர்.

சொந்த நாட்டையும், மக்களையும் தள்ளி வெகுதூரத்தில் இருந்தாலும் தமிழ்நாட்டின் உணர்வு சற்றும் குறையாமல் உறுதியோடு அவர்களுடன் துணை நிற்போம் என்று உறுதி எடுத்தனர்.

போராட்டங்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும், மக்கள் அவர்களது வாழ்வாதாரத்திற்குத்தான் போராடுகின்றனர் எனவே அதை வரவேற்க வேண்டும் என்று ஒருவர் அவரது கருத்தை பதிவு செய்தார்.

தொடர்ந்து தூத்துக்குடியில் நடக்கும் கள நிலவரங்களையும் பற்றி, வாட்ஸாப் குழுவில் அனைவரும் பகிர விருப்பம் தெரிவித்தனர். யாரும் அந்த குழுவில் இருந்து வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு இரண்டு நாட்கள் பொது இடத்தில் கூடி தூத்துக்குடியில் நடக்கும் விவரங்களை கேட்டறிந்து கொள்ளலாம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது, அதற்கு வந்திருந்தவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

அமெரிக்காவின் இதே ஊரில் இதற்கு முன்பு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாகவும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆதரவு தெரிவித்தும் தமிழ் மக்கள் அமைதி போராட்டங்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று நினைவேந்தல் கூட்டம் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களான Chicago, Dallas, Columbus, Bentonville, Bellevue ஆகிய இடங்களில் ஆங்காங்கே வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

– வினவு களச் செய்தியாளர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க