சொத்தைப் பல்லால் கஷ்டப்பட்டார் என்பதால் ஹிட்லரை மன்னிப்பீர்களா ?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொலைகாரர்களான போலீசாரை வெறும் ஏவல் நாய்கள், என்பதாக சுருக்கிப்பார்க்கும் கண்ணோட்டத்தின் உளவியல் என்ன?

11

தூத்துக்குடி படுகொலைகள் :
சொத்தைப் பல்லால் கஷ்டப்பட்டார் என்பதால்
ஹிட்லரை மன்னிப்பீர்களா?

மகால தமிழக வரலாற்றின் மிக மோசமான அத்தியாயம் வேதாந்தாவுக்காக எடப்பாடி பழனிசாமி அரசு நடத்திய படுகொலைகள்தான். ஒரு சாதாரண ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை அனேகமாக மாநிலத்தில் யாருமே நம்பியிருக்க மாட்டார்கள்.

மோடியும் எடப்பாடியும் நீங்கள் நம்பவே விரும்பாத காரியங்களை மட்டுமே செய்வார்கள் என்பதால் அந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டது. அதுகுறித்த ஏராளமான விவாதங்களும் போராட்டங்களும் நடந்து இப்போது தமிழகம் அடுத்த பிரச்சினையை நோக்கி நகர்த்தப்பட்டுவிட்டது.

மேலிட உத்தரவுக்கு கட்டுப்பட்டோ அல்லது பெரும் பணம் கிடைக்குமென்பதற்காவோ உங்களால் ஒரு சிறுமியைக் கொல்ல முடியுமா?

நடந்த விவாதங்களை கவனிக்கையில் ஒரு பொதுத்தன்மையை காண முடிகிறது. போலீஸ் வெறும் ஏவல் நாய் மட்டுமே, நாம் உத்தரவிட்டவர்களை கண்டிப்போம் என்பதாக பலரும் கருத்திடுகிறார்கள்.

போலீஸ் தரப்பில் இருந்து அனாமதேய பொழிப்புரைகளும் ஊடக தரப்பில் இருந்து சில அய்யோ பாவம் பாணி கட்டுரைகளும் வெளியாகின்றன. அவை போலீஸ் வேலை எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்பதாக இருகின்றன.

எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து புரிந்துகொள்ள முற்படும்போது, நாம் தமிழ்நாடு போலீசின் கொடூர முகத்தை மிகவும் நீர்த்துபோன வடிவில் புரிந்துகொள்ளுமாறு நிர்பந்திக்கப்படுகிறோம் என்பது புலனாகிறது. ஏவல் நாய்கள் என கடும் சொல்லால் அவர்களை அழைப்பதே வேறு வடிவிலான அய்யோ பாவம் பாணி விமர்சனம்தான்.

தூத்துக்குடி படுகொலையின் தீவிரத்தன்மையை உணர்ந்தவர்களால் அது வெறுமனே உத்தரவுக்கு கட்டுப்பட்டு நிகழ்த்தப்பட்ட கொலைகள் அல்ல என்பது புரியும். செத்தவர்கள் அருகாமையில் இருந்து சுடப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் தெளிவாக தெரிகிறது. ஒரு 16 வயது சிறுமியும் அவ்வாறே கொல்லப்பட்டிருப்பார்.

மேலிட உத்தரவுக்கு கட்டுப்பட்டோ அல்லது பெரும் பணம் கிடைக்குமென்பதற்காவோ உங்களால் ஒரு சிறுமியைக் கொல்ல முடியுமா?

காவல் வண்டியின் மீதேறி சுடும் காட்சியின் உரையாடலை கவனியுங்கள், துப்பாக்கிய நீட்டிப் பிடித்திருக்கும் போலீசின் முகபாவத்தை கவனியுங்கள், இறந்து கிடக்கும் இளைஞன் மீது காலால் எட்டி உதைத்து “நடிக்காதடா” என மிரட்டும் போலீசின் எதிர்வினையை கவனியுங்கள்.. இவற்றில் ஏதேனும் ஒரேயொரு உணர்வோடு உங்களால் ஒரு நாயையேனும் கொல்ல இயலுமா?

இவைதான் சாதாரண மனிதனையும் போலீஸ்காரனையும் வேறுபடுத்தும் புள்ளி. ஒரு கொலையை தொழில்முறை கிரிமினல் செய்வதையும் அல்லது ஒரு சித்தாந்த வெறியூட்டப்பட்ட மதத்தீவிரவாதி செய்வதையும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். அவர்கள் அந்தக் கொலை குறித்து குற்ற உணர்வு கொள்ளாதிருக்க பயிற்றுவிக்கப்பட்டிருப்பார்கள்.

அல்லது இயல்பிலேயே குற்ற உணர்வற்ற ஆண்ட்டி- சோஷியல் சைக்கோபாத்கள் அப்படி செய்வதில் ஒரு லாஜிக் இருக்கிறது. ஆனால் இந்த இயல்பு எப்படி சம்பளத்துக்கு வேலை பார்க்கும் ஆட்களிடம் இருக்க முடியும்?

மிக இயல்பாகவும் தொழில் நேர்த்தியோடும் நிராயுதபாணிகளாக ஓடும் மக்களைப் பார்த்து சுட்டுத்தள்ள முடிகிற கும்பலை நம்மிடம் அய்யோ பாவம் என அறிமுகப்படுத்துகின்றன ஊடகங்கள். விமர்சனம் ஏதும் இன்றி நாம் அதனை ஏற்றுக்கொள்கிறோம். பொது சமூகம் தன் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்ள இதைவிட வேறு சிறந்த வழி இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

உங்களால் தவிர்க்க இயலாத மனிதர்கள், உங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நியாயத்தை பெற்றுத்தரும் பொறுப்பில் உள்ள மனிதர்கள் “சிலரைக் கொன்றால்” பிரச்சினையை முடித்துவிடலாம் எனும் தீர்வை தீர்மானமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வசம் துப்பாக்கிகள் இருக்கின்றன.

இறந்து கிடக்கும் இளைஞன் மீது காலால் எட்டி உதைத்து “நடிக்காதடா” என மிரட்டும் போலீசின் எதிர்வினையை கவனியுங்கள்..

அவர்கள் கற்பழிப்பில் ஈடுபட்டாலும் கைது செய்ய இயலாத அளவுக்கு அரசு அவர்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறது (விழுப்புரம் இருளர் பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டதற்கு அரசு என்ன செய்த்து என யோசித்துப்பாருங்கள்). இதைவிட மோசமான வாழ்க்கைச் சூழல் அனேகமாக நாஜி அரசிடம் வாழ்ந்த யூதர்களுக்கு வேண்டுமானால் இருந்திருக்கலாம்.

போலீஸ் தரப்பு வாதங்களை பார்க்கையில் மேற்சொன்ன கருத்து ஊர்ஜிதமாகிறது. ரப்பர் குண்டு இல்லை அதனால் நிஜ தோட்டாக்களால் சுட்டோம் என்கிறார் ஒரு அதிகாரி. போராட்டத்தின் காரணம் நல்லதா கெட்டதா என பார்ப்பது போலீசின் வேலையல்ல என்கிறார் டிவி விவாதமொன்றில் கருணாநிதி எனும் முன்னால் போலீஸ் அதிகாரி.

ஒரு போலீஸ்காரரின் பெயரில்லாத வாட்சப் உரை ஒன்று எந்த குற்ற உணர்வும் இல்லாமல் நாங்களே அடிமை வாழ்வு வாழுறோம் என அங்கலாய்க்கிறது. ஒரு பெண் போலீசின் வாட்சப் பேச்சு (இந்து தமிழில் செய்தியாக வந்திருக்கிறது) எங்களுக்கு வேலை பர்க்கும் இடத்தில் கக்கூஸ் இல்ல, வெய்யில்ல நிக்கிறோம், 24 மணிநேரம் வேலை பார்க்குறோம் ஆனாலும் மக்கள்கிட்ட எங்களுக்கு மரியாதை இல்லை என நீள்கிறது. தங்கள் கைகளால் 13 பேரின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது எனும் குற்ற உணர்வோ அல்லது துயரமோ எந்த போலீசின் பேச்சிலும் வெளிப்படவில்லை.

ஏராளமான அரசு ஊழியர்கள் கால நேரம் பார்க்காமல் உழைக்கிறார்கள். பலருக்கு மக்களிடம் மரியாதை இல்லை, சாமானிய மக்கள் பலருக்கு வாழ்நாள் முழுக்கவே சரியான வசிப்பிடமும் கழிவறையும் வாய்ப்பதில்லை. இவர்கள் யாரும் யாரையும் கொன்றுவிட்டு அதற்கு என் வேலைச்சுமையும் மரியாதையின்மையும் காரணம் என எகத்தாளம் பேசுவதில்லை. கஷ்டங்கள் கூடினால் அதிகபட்சமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

உயரதிகாரி வீட்டில் கக்கூஸ் கழுவும்போது வராத ஆத்திரம், அடிப்படை வசதியில்லாமல் வேலை செய்ய நிர்பந்திக்கப்படும்போது வராத ஆத்திரம், மாலை வரப்போகும் அமைச்சருக்காக காலை முதல் வெயிலில் நிற்கச்சொல்லும்போது வராத ஆத்திரம் எல்லாம் உயிருக்கு அஞ்சி ஒடும் மனிதர்கள் மீதும் எதிர்த்து கேட்கும் ஒரு சிறுமி மீதும் வருகின்றது என்றால்… அதன் பெயர் துணிச்சலோ மன அழுத்தமோ அல்ல. உச்சகட்ட சைக்கோத்தனம். குற்ற உணர்வின்மை என்பது கிளினிக்கல் சைக்கோபாத்களின் பெரிய அதிமுக்கிய அறிகுறி.

ஒருபுறம் எந்த நியாயத்துக்கும் கட்டுப்படாமல் யாரையும் ஒடுக்கக்கூடிய கேட்பாரற்ற அதிகாரம், மறுபுறம் தமது அடிப்படை உரிமைகளைக்கூட கேட்க இயலாத நாயினும் கீழான அடிமைத்தனம் இந்த இருதுருவ இயல்பு போலீசை மட்டுமல்ல யாரையும் அபாயகரமானவர்களாக மாற்றிவிடும்.

உயரதிகாரி வீட்டில் கக்கூஸ் கழுவும்போது வராத ஆத்திரம், உயிருக்கு அஞ்சி ஒடும் மனிதர்கள் மீதும் எதிர்த்து கேட்கும் ஒரு சிறுமி மீதும் வருகின்றது என்றால்… அதன் பெயர் உச்சகட்ட சைக்கோத்தனம்.

விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், சிறுதொழில் முதலாளிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் போராட வேண்டியதற்கான காரணங்கள் கூடிக்கொண்டே செல்கின்றன. மிடில் கிளாசின் தாலியை அறுக்காமல் அரசாங்கம் நகர இயலாது எனும் அளவுக்கு பொருளாதாரம் பல்லிளிக்கின்றது. யார் வம்புக்கும் போகாமல் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாய் வாழ்ந்துவிடலாம் எனும் நடுத்தர வர்க நம்பிக்கை காலாவதியாகிவிட்டது.

போராடாமல் வாழ முடியாது எனும் நிலைமைக்கு மக்கள் வந்திருக்கும் வேளையில் நாலு பேரை போட்டாத்தான் போராட்டம் அடங்கும் எனும் முடிவுக்கு அரசு வந்திருக்கிறது என்பதை தூத்துக்குடி சம்பவம் உணர்த்துகிறது. போலீஸ் எட்டி உதைக்கும் சாத்தியமுள்ள சாலையில் நாம் பயணிக்கிறோம், கேமராவுக்கு முன்பே குறிபார்த்து நிதானமாக சுட்டுத்தள்ளும் சுதந்திரம் கொண்ட காவலர்களின் வசம் நம் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை எனும் கேள்விக்கு பதில் சொல்லக்கூட அவசியமற்றவர்களாக காவல் அதிகாரிகள் வாழ்கிறார்கள். காவல்துறை உயரதிகாரி மகளை கேள்வி கேட்டு அதை வீடியோ எடுத்த பாவத்துக்காக கை உடைக்கப்பட்டு நிற்கிறார் ஒரு போலீஸ்காரர், அதை (நக்கீரன் தவிர) செய்தியாக்க விரும்பாத ஊடகங்கள் வழியேதான் நீங்கள் நீதி கேட்டாக வேண்டும்.

வேறு வழியே இல்லை, போலீசின் கேட்பாரற்ற அதிகாரம் குறித்தும், அவர்களின் சிந்தனையில் ஊறிப்போயிருக்கும் சாதாரண மக்கள் மீதான வெறுப்பு, தன்னியல்பாக வெளிப்படும் பணக்கார மற்றும் உயர்சாதி விசுவாசம் ஆகியவை குறித்து பொது சமூகம் மிகத் தீவிரமாக விவாதித்தாக வேண்டும். அவர்களை மகிமைப்படுத்தும் எல்லா செய்திகள் மீதும் நமது விமர்சனங்கள் எழ வேண்டும்.

லாக்கப் கொலைகள் ஏன் பணக்காரர்களுக்கு நிகழ்வதில்லை, எச்.ராஜா எவ்வளவு மோசமாகப் பேசினாலும் ஏன் வழக்கு பாய்வதில்லை, சிறுமியின் வாயில் சுடும் அளவுக்கு கோபக்காரர்கள் ஏன் வினாயகர் ஊர்வலத்தில் மன்றாடி நிற்கும் சாந்த சொரூபிகளாக இருக்கிறார்கள் என்பதாக நாம் கேட்க நூற்றுக்கணக்கான கேள்விகள் இருக்கின்றன.

அவை பரவலாக கேட்கப்படாததால் போலீஸ் இன்னும் தீவிரமாக லத்திக் கம்புகளையும் துப்பாக்கிகளையும் காதலிக்கத் துவங்குகிறது. அவை ஒருபோதும் மக்களைக் காக்க பயன்பட்டதில்லை என்பதை நினைவில் வையுங்கள்.

  • வில்லவன்
    (அரசியல் விமர்சகர்)