முஸ்லீமை திருமணம் செய்தால் பாஸ்போர்ட் கிடையாது !

ஒருவரையொருவர் காதலித்து, அவரவர் தத்தமது மத நம்பிக்கைகளோடு வாழ்வதெனும் அடிப்படை ஜனநாயக உரிமையைத்தான் விகாஸ் மிஸ்ரா மறுத்துள்ளார். இதையேதான் நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் ‘லவ் ஜிகாத்’ என்ற போலிச் சொல்லாடலை பயன்படுத்தி செய்துவருகிறது.

முசுலீம்கள் என்றாலே தீவிரவாதிகள், வெறுக்கப்படவேண்டியவர்கள், இந்த நாட்டின் குடிமக்களாக கருதப்படக் கூடாதவர்கள் என்றொரு பொதுக்கருத்து சங்கிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. பாஜக-வின் அடித்தளமான வடமாநிலங்களில் இந்த நிலைமை இன்னும் மோசம். சமீபத்தில் உத்திரப்பிரதேசத்தில் ஒரு பாஸ்போர்ட் அதிகாரி, ஒரு கலப்பு மண தம்பதியினரை, ”மதம் மாறினால்தான் பாஸ்போர்ட் தரமுடியும்” எனக் கூறி கடுமையாகச் சாடிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த முகமது அனஸ் சித்திக்கும், தன்வி சேத்தும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார். நொய்டாவில் உள்ள தனியார் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் இருவரும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதைத் தொடர்ந்து நேர்காணலுக்காக இருவரும் லக்னோ பாஸ்போர்ட் கிளை அலுவலகத்துக்கு கடந்த 20-ஆம் தேதி (20.06.2018) அழைக்கப்பட்டனர். இதில் 3-வது சுற்று நேர்காணலின் போது தன்வியை நேர்காணல் செய்த அதிகாரி விகாஸ் மிஸ்ரா என்பவர் தன்வியின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தன்வி சேத், முகமது அனஸ் சித்திக் தம்பதியினர்

”இரண்டு சுற்று நேர்காணல்கள் முடிவுற்ற நிலையில், மூன்றாவது சுற்று நேர்காணலுக்காக முதலில் தன்வி அழைக்கப்பட்டார். தன்வியின் ஆவணங்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்த பாஸ்போர்ட் அதிகாரி விகாஸ் மிஸ்ரா, கணவர் என்ற இடத்தில் என்னுடைய பெயர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்று, என் மனைவி தன்வியிடம் ’உன் பெயரை மாற்றிவிடு, இல்லாவிட்டால் உன்னுடைய விண்ணப்பப் படிவம் நிராகரிக்கப்படும்’ என்று மிரட்டியுள்ளார்” என்கிறார் முகமது அனஸ் சித்திக்.

மேலும் முகமது அனஸ் சித்திக் இந்து மதத்துக்கு மாறி, பெயர் மாற்றம் செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார் விகாஸ் மிஸ்ரா. தனது பெயரை மாற்ற முடியாது என்று கூறிய தன்வி, “எனது கணவர் முசுலீமாக இருப்பதில் எனது குடும்பத்திற்கே எந்த பிரச்சினையும் இல்லை. எனவே நான் ஏன் பெயரை மாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த பதிலால் ஆத்திரமடைந்த பாஸ்போர்ட் அதிகாரி விகாஸ் மிஸ்ரா, அங்கிருந்தவர்கள் முன்னிலையிலும் சப்தம் போட்டு தன்வியை திட்டி அவமதித்துள்ளார். அவமானம் தாங்காமல் தன்வி அழ ஆரம்பித்திருக்கிறார்.

அடுத்ததாக முகமது அனஸ் சித்திக்கை அழைத்த விகாஸ் மிஸ்ரா, அவரையும் கடுமையான வார்த்தைகளால் அவமதித்திருக்கிறார். இது குறித்து முகமது அனஸ் கூறுகையில், “அவர் என்னை நோக்கி, ‘நீங்கள் இந்து மதத்திற்கு மாறிவிட வேண்டும், இல்லையெனில் உங்கள் திருமணம் செல்லுபடி ஆகாது; எனவே இந்துமத முறைப்படி தன்வியைத் திருமணம் செய்து அதற்கான ஆதாரங்களைத் துணை பாஸ்போர்ட் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று கூறி என்னுடைய விண்ணப்பத்தையும் நிராகரித்தார்” என்றார்.

பாஸ்போர்ட் அதிகாரி விகாஸ் மிஸ்ரா

இதையடுத்து இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து நிகழ்ந்தது குறித்து வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டனர், அதில் தன்வி குறிப்பிடுகையில், “ஆதங்கத்துடன் இதைப் பதிவிடுகிறேன், எனது கணவர் முசுலீம் என்பதால் எனது பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது. 12 வருட திருமண வாழ்க்கையில், இதுபோன்று ஒரு அவமானத்தை வேறு எங்கும் சந்தித்ததில்லை. பாஸ்போர்ட் அலுவலகத்தில் இதுபோன்று நிகழும் என எதிர்பார்க்கவில்லை” என குறிப்பிட்டிருந்தார்.

ஊடகங்களில் இந்த சம்பவம் அம்பலப்பட்ட சில மணி நேரத்தில் வெளிவிவகார அமைச்சகம் இந்த விசயத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டது. முகமது அனஸ் சித்திக் மற்றும் தன்வி இருவரும் வியாழக்கிழமை (21.06.2018) பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இவர்களால் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி விகாஸ் மிஸ்ரா இப்போது தண்டனை ஏதுமின்றி வெறுமனே இடமாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளார்.

பாஸ்போர்ட் அதிகாரி விகாஸ் மிஸ்ரா, இந்தக் கணம் வரை தான் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்றே சொல்லி வருகிறார். தான் சட்ட விதிகளின் படியே நடந்து கொண்டதாகவும், மேலும் போலி பாஸ்போர்ட்டுகளைத் தடுப்பதற்காகவே இப்படி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் நியாயப்படுத்தியுள்ளார். இவருக்கு ஆதரவாக டெல்லி ஆர்.எஸ்.எஸ். வானரங்களும் களமிறங்கியுள்ளன.
பாஸ்போர்ட் அதிகாரியின் வேலை என்பது விண்ணப்பதாரரின் ஆவணங்களைச் சரிபார்ப்பதேயன்றி அவர் யாரைத் திருமணம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கருத்து சொல்வதல்ல.

டிவிட்டரில் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பாக விளம்பரம் தேடும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,  பாஸ்போர்ட் அதிகாரியின் இடமாற்றதை குறிப்பிட்டு உடன் பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாக கூறியதும், சங்கிகளின் ட்ரோல் இராணுவம் சுஷ்மாவை உண்டு இல்லை என பின்னி எடுத்து விட்டது. இதனால் தனது ஃபேஸ்புக் பக்கத்தின் ரேட்டிங் ஸ்டார் ஆப்சனை எடுத்து விட்ட சுஷ்மா இஞ்சி தின்ற சங்கி போல திணறுகிறார்.

போராடி கிடைக்கப்பெற்ற பாஸ்போர்ட்

முசுலீம் என்ற பெயரைப் பார்த்தவுடனேயே அந்த பாஸ்போர்ட் அதிகாரிக்கு ஏன் இத்தனை வெறுப்பு ஏற்பட்டது? ஒருவரையொருவர் காதலித்து, அவரவர் தத்தமது மத நம்பிக்கைகளை கடைபிடித்துக் கொண்டே மதக் கலப்புத் திருமணம் புரிந்து வாழ்வதென்பது, ஜனநாயக உரிமையின் ஒரு பகுதியே. இங்கு இந்த அடிப்படை ஜனநாயக உரிமையைத்தான் மதவெறி பிடித்த விகாஸ் மிஸ்ரா மறுத்துள்ளார். இதையேதான் நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் ‘லவ் ஜிகாத்’ என்ற போலிச் சொல்லாடலை பயன்படுத்தி செய்துவருகிறது.

’லவ் ஜிகாத்’ என்ற பெயரில் முசுலீம் இளைஞர்கள் இந்துப் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து இசுலாத்திற்கு மதம் மாற்றுவதாக இதே பொய்யைக் கூறிதான் உத்திரப் பிரதேசத்தில் ஒரு இந்துவெறிச் சாமியாரான யோகி ஆதித்யநாத், முதல்வர் பதவியையும் பிடித்து விட்டார்.

இதே லவ் ஜிகாத்தை முன்னிறுத்திதான், உ.பி மாநிலம் காசியாபாத்தில் 22.12.2017 அன்று நடக்கவிருந்த இந்து-முஸ்லீம் மதக்கலப்புத் திருமண விழாவில் புகுந்து ஆர்.எஸ்.எஸ் – பார்ப்பன மதவெறியர்கள் கலவரம் செய்தனர். அப்போது மணப்பெண்ணின் தந்தை புஷ்பேந்திர குமார் கூறியதுதான் இங்கு முக்கியமானது. “இது எனது தனிப்பட்ட விவகாரம். உங்களது குறுக்கீடு எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு மனிதர்கள்தான் முக்கியம். மதம் இரண்டாம்பட்சமானதுதான். ஒரு மனிதரை எனக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பதுதான் முக்கியம், அந்த நபர் இந்துவா அல்லது முஸ்லீமா என்று நான் பார்க்கவில்லை” என்று இந்துத்துவக் கிரிமினல் கும்பலுக்கு அப்போதே பதிலடி கொடுத்தார் புஷ்பேந்திர குமார்.

இந்தி நடிகர் சையப் அலிகான் – கரீனா கபூர் திருமணத்தின் போதும், இதே லவ் ஜிகாத்தை முன்னிறுத்தி அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடப்பட்டது.

எங்கு பார்க்கிலும் இசுலாமிய எதிர்ப்பு, தாழ்த்தப்பட்டோருக்கெதிரான தாக்குதல், பெண்களுக்கெதிரான வன்முறை என்பது தான் இந்துத்துவ பாசிச அரசியலின் அடிப்படை. ’இந்துப்’ பெண்கள் தமது வாழ்க்கைத் துணையாக யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸ் எனும் வன்முறைக் கூட்டமா முடிவு செய்வது?

  • வினவு செய்திப் பிரிவு

மேலும் படிக்க
Lucknow passport officer ‘humiliates’ inter-faith couple, tells husband to ‘convert’