“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும் பொறுப்புகளும்” என்ற தலைப்பின் பத்திரிகை நண்பர்கள் – பிரமுகர்கள் சிலர் ஒரு கலந்துரையாடலுக்கு ஒழுங்கு செய்திருக்கிறார்கள். இதில் பல்வேறு தொலைக்காட்சி மற்றும் ஆங்கில தினசரி பிரபலங்கள், உயர்மட்ட நிர்வாகிகள், உரிமையாளர்கள் பங்கேற்கிறார்கள்.

இது குறித்த அழைப்பிதழில் தமிழக செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுவது, புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எதிரான வழக்கு, மாற்றுக் கருத்துக்கான இடம் சுருங்கி வருவது, போன்றவற்றிலிருந்து ஊடக பின்னடவைத் தடுத்து நிறுத்த ஊடக தலைமைகள் அரசுடன் எப்படி உரையாடுவது என்பதை விவாதிப்போமெனக் கூறப்பட்டிருக்கிறது. சரி எப்படியோ கருத்துச் சுதந்திரம் குறித்தும், அதில் ஊடகங்களின் பங்கு குறித்தும் பேசுவது குறித்து மகிழ்ச்சி. ஆனால் சில கேள்விகள் இருக்கின்றன.

இந்தக் கலந்தாய்வின் தலைப்பும் சரி, விளக்கமும் சரி திறந்த விசயம் ஒன்றை முடிந்த மட்டும் மூடு மந்திரமாகக் கூறுகிறது. இதை ஒட்டியும், சமீப காலமாக அரசு ஊடகங்களை ‘அன்போடும்’, உரிமையோடும் மிரட்டுவது, போராட்டச் செய்திகளை வெளியிடாமல் தடுப்பது, அதில் கொஞ்சம் தயக்கம் காட்டினால் அரசு கேபிள் வலைப்பின்னலில் இருந்து குறிப்பிட்ட செய்தி சேனலை வெளியேற்றுவது, அல்லது பிற மொழி வரிசையில் சேர்த்து யாரும் பார்க்கவிடாமல் செய்வது என்பதும் நடைபெறுகிறது.

மேற்கண்ட பிரச்சினைகள் குறித்து எந்த ஊடகமும் எந்த செய்தியையும் வெளியிடவில்லை. ஆகவே சென்னையில் நடக்கும் இந்தக் கலந்தாய்வில் சில கேள்விகளை முன்வைப்போம்.

கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் என்பது அரசு கருணையுடன் வழங்கும் ஒன்றா? இல்லை மக்கள் போராடிப் பெற்ற ஜனநாயக உரிமையா?

கேபிள் டிவியில் அரசு தடை செய்யும் என்பதை இதுநாள் வரை எந்த தொலைக்காட்சியும் சொல்லாமல் அதற்கு பயந்து பணிந்து போனது ஏன்?

எடப்பாடி அரசு எனும் ஒரு அடிமை அரசுக்கே ஊடகங்கள் பயந்து சாகும் நிலையில் இங்கே போராடும் மக்களை அரசு மேலும் ஒடுக்குவதற்கு இந்த பயம் பயன்படுமா இல்லையா?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த அன்று மதியம் வரை தொலைக்காட்சிகள் துப்பாக்கிச் சூடு செய்தியை பேசாதது ஏன்?

அடுத்த நாட்களில் மக்கள் கல்லேறி காட்சிகளை மட்டும் திரும்பத் திரும்பக காட்டிவிட்டு போலீஸ் அடிக்கும் காட்சிகளை மறைத்தது ஏன்? இன்றும் போலீசின் கலவரக் காட்சிகளின் புட்டேஜ் ஊடகங்களிடம் இருப்பதாக கூறுகிறார்கள். அதை வெளியிடுவார்களா?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் மக்கள் அதிகாரம் அமைப்பை குற்றவாளியாக காட்டுவதற்கு பல்வேறு ஆய்வு கட்டுரைகளை வெளியிடும் நாளிதழ்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு யார் உத்தரவு போட்டார்கள் என்பதை ஆய்வு செய்து உண்மையை தெரியப்படுத்தாது ஏன்?

எட்டு வழிச்சாலையை எதிர்க்கும் விவசாயிகளின் போராட்டத்தை சன் நியூஸ் தவிர மற்ற சானல்கள் காட்ட மறுப்பது ஏன்?

அரசு கேபிள்தான் பிரச்சினை என்றால் நீங்கள் அரசு தரும் சேவையை பெறுவதற்காக செய்திகளை மறைக்கும் ஒரு ஊழல் செய்வதாக பொருள் கொள்ளலாமா?

எடப்பாடி அரசை பாஜகதான் ஆட்டுவிப்பதாக கருதப்படும் நிலையில் அந்த அடிமை எடப்பாடி அரசுக்கு ஊடக நிறுவனங்கள் பயந்து பம்முவது ஏன்? ஊடகங்களை இப்படி பயந்து போனால் போராடும் மக்களுக்கு இங்கே யார் ஆதரவாக செயல்பட முடியும்?

எட்டுவழிச்சாலை போராட்டத்தை காண்பிக்க வந்த மாத்ருபூமி, தீக்கதிர் பத்திரிகையாளர்களை போலீசு திருப்பி அனுப்பியதை ஊடகங்கள் ஏன் செய்தியாகக் கூட காட்டவில்லை?

அரசு கேபிளில் சானல்களை ஏற்க மறுப்பது சட்டவிரோதம் என்று ஒரு வழக்கைக் கூட போடுவதற்கு ஊடக நிறுவனங்கள் முன்வராதது ஏன்?

அரசு கேபிள் சேவையை நடத்துவது தமிழ்நாட்டில் மட்டும்தான் எனும் போது அதை ஒரு வழக்கு போட்டு முறியடிக்காமல் எடப்பாடி அரசுக்கு மனுப்போட்டு  சாதித்து விடலாம் என்று நினைப்பது சரியா?

ஜல்லிக்கட்டு போராட்டத்தை கலவரம் செய்து போலீசு முடித்து வைத்த போது போராட்டத்தை ஆகா ஓகோ என ஆதரித்த சானல்கள் பல போலீசு அடிக்கும் காட்சிகளை காட்டாமல், தணிக்கை செய்து வெளியிட்டது ஏன்?

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வாகனங்களை, குடியிருப்புகளை எரித்த போலீசு இதுவரை விசாரிக்காமல், தண்டிக்கப்படாமல் இருப்பதை ஊடகங்கள் மறந்து போனது ஏன்?

அரசு அனுமதித்தால்தான் ஒரு செய்தியை வெளியிடுவோம் என ஊடக தலைமைகள் நடப்பதில்லை என்று கூற முடியுமா?

இந்த ஊடக நிகழ்விற்கு வராத அல்லது பேசாத தந்தி டி.வி, குமுதம், தினமலர், நியூஸ் 18 இன்னபிற ஊடகங்கள் குறித்து உங்கள் கருத்து என்ன? அவர்கள் ஊடக அறத்தை கைவிட்டு எடப்பாடி அரசை ஆதரிப்பதாகக் கொள்ளலாமா?

இவை போக மக்களும் வாசகர்களும் கேள்விகள் எழுப்புங்கள். இன்றைய கலந்தாய்வில் பேசும் ஊடக ஆளுமைகள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று பார்ப்போம். இந்தக் கேள்விகள் ஊடக சுதந்திரம் மீட்கப்படவேண்டும், அந்த மீட்பு குறித்த சரி தவறுகள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதற்கே. நன்றி

டம்: ஊடகக் கல்விக்கான காயிதே மில்லத் சர்வதேச அகாடமி, 82, ஸ்டெர்லிங் சாலை நுங்கம்பாக்கம், சென்னை – 600034 (லயோலா கல்லூரி எதிரில்)

நேரம்: ஞாயிறு ஜூலை 1, 2018, மாலை 5 மணி முதல் 8 மணி வரை

தலைமை:
என். ராம், தலைவர், தி இந்து குழுமம்

சிறப்புரை:
அருண்ராம், ஆசிரியர், டைம்ஸ் ஆஃப் இந்தியா
எஸ். கார்த்திகைசெல்வன், நிர்வாக ஆசிரியர், புதிய தலைமுறை
தில்லை, நிர்வாக ஆசிரியர், நியூஸ் 7
சவுமியா அன்புமணி, மேலாண் இயக்குனர், மக்கள் டிவி
என். ரவி, வெளியீட்டாளர், தி இந்து குழுமம்
எல். கே. சுதீஷ், மேலாண் இயக்குனர், கேப்டன் டிவி
ஹுமாயூன், துணைத்தலைவர், கலைஞர் டிவி,
சாமிநாதன், பொதுமேலாளர், சத்தியம் டிவி
தேவநாதன், மேலாண் இயக்குனர், வின் டிவி
மற்றும் தமிழகத்தின் முன்னணி ஊடக ஆளுமைகள்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்
சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம்
பவுண்டேஷன் ஃபார் மீடியா புரபஸ்னல்ஸ்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்

பாருங்கள், பகிருங்கள் !

பகுதி 1:

பகுதி 2:

 

 

 

 

1 மறுமொழி

  1. ஊடகங்களில் விவாதம் என்று வருகின்ற பகுதிகளைப் பார்ப்பதற்கே மனம் கொதிக்கிறது. ஒன்று ஊடகங்கள் செய்திகள் அல்லது ஏற்கப்பட்ட கருத்துகளையே கேள்விகளாக்குவது. (உதாரணமாக, மக்களுக்கு ஜனநாயகம் வேண்டுமா? என்று கேட்பார்கள். இந்த முட்டாள்களை என்ன செய்வது?) இரண்டாவது, எல்லா விவாதங்களிலும் கண்டிப்பாக, பாஜக/இந்துத்துவ சார்பில் பேச அதிகம் பேரை ஏற்பாடு செய்துவிட்டு, பங்கேற்கும் சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சி ஆட்கள், இடதுசாரிகள் எண்ணிக்கையைக் குறைப்பது. எந்த விவாதமாக இருந்தாலும் பட்டையடித்துக் கொண்டு ஒரு வலதுசாரிச் “சிந்தனையாளர்” உட்கார்ந்திருப்பார். இவர்கள் உளறுவதைக் கேட்க மனம் பொறுக்கவில்லை. முதலில் ஊடகங்கள் தங்கள் சுதந்திரத்தை ஒழுங்காகப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ளட்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க