புதுதில்லி துவங்கி புதுவை வழியாக கிண்டி ராஜ்பவன் வரை ஆளுநர்கள் ‘அட்ராசிட்டி’ சொல்லி மாளாது! ஆனால் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அங்கிருக்கும் ஆளுநர் கணேஷ்லால் மீது ஒரு மெமோவே போட்டிருக்கிறார்!

கடந்த புதன்கிழமை 06.07.2018 அன்று ஒடிசா அரசாங்கம், ஆளுநர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறது. அதில் மேதகு ஆளுநர் அவர்கள் ஹரியாணவிற்கு இன்பச் சுற்றுலா போன செலவு 46 இலட்சம் ரூபாய்க்கு விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. ஜெட் விமான செலவு வகையில் 41.18 இலட்சம் ரூபாயும், ஹெலிகாப்டர் வகையில் ஐந்து இலட்சமும் ஆகியதென அந்தக் கடிதம் குறிப்பிடுகிறது.

ஒடிசா ஆளுநர் கணேஷி லால்

இப்படி தேசப் பாதுகாப்பின் இரகசியங்கள் எல்லாம் கூட்டல் கழித்தல் கணக்கு வகையில் அம்பலமானால் பாரத மாதாவின் கௌரவம் என்ன ஆவது என மாலை நேர காவி பண்டார வித்வான்கள் எட்டுக் கட்டையில் மிரட்டுவார்கள்.

பா.ஜ.க-வோடு கூட்டணி முரண்பாடு வந்த உடன் நவீன் பட்நாயக்கும் வங்கத்தைப் பார் என மமதா பாணியில் பயணிக்கிறார். இல்லையென்றால் முதலுக்கே மோசமாகிவிடும் என பல மாநிலங்களின் அரசியல் நிலைமை தெரிவிப்பதால் ஐயா உசாராக பா.ஜ.க-விற்கு கட்டம் கட்ட முயற்சிக்கிறார்.

“ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுக்குமளவு என்ன காரணம், சூழல் ஏற்பட்டது என்பதை அறிய பணிவுடன் விரும்புகிறோம்” என்று கடிதத்தில் கவர்னரை குறுக்கு விசாரணை செய்கிறார் நவீன் பட்நாயக். ஏனெனில் அவரது நிர்வாகத்தில்தான் மேற்கண்ட கடிதம் அனுப்பிய பொது நிர்வாக அமைச்சகத் துறை வருகிறது.

புதுதில்லிக்கு ஜெட்விமானத்திலும், சிர்சாவிற்கு ஹெலிகாப்டரிலும் பறந்த கவர்னர் இதற்கு என்ன விளக்கம் சொல்லுவார்? தீடிரென்று மாமியார் வீட்டிற்கு போக விரும்பினேன் என்றா? இல்லை புதுதில்லியின் விவேகானந்தர் குறுக்குத் தெருவில் இருக்கும் கைப்புள்ளையின் சமோசா கடைக்கு சென்று சாப்பிட விரும்பினேன் என்றா?

ஒடிசாவின் ஆளுநர் கணேஷ் லாலின் பின்புலம் என்ன? ஐயாவும் கொட்டை போட்ட ஒரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்தான். ஆர்.எஸ்.எஸ்-ல் முழுநேரமாக மதவெறியைப் பரப்பும் பிரச்சாரக் ஆவதற்கு முன் ஐயா ஒரு கணிதப் பேராசிரியராக காலம் தள்ளியவர். அந்த வகையில் 46 இலட்சத்திற்கு கணக்கு கொடுப்பதில் கூட்டல் கழித்தல் தெரியாது என்று சொல்லிவிட முடியாது.

ஹரியாணா விகாஷ் பரிஷத் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஹரியாணாவில் ஆட்சி அமைத்த போது முதல்வர் பன்சிலால் தலைமையில் 1996-ம் ஆண்டு இவர் ஒரு அமைச்சராக பணியாற்றியிருக்கிறார். மேலும் ஹரியாணா பா.ஜ.க-வின் முன்னாள் தலைவரும் கூட.

சென்ற மே 29, 2018 அன்று மோடி-அமித்ஷா ஜோடியால் ஓடிசாவின் ஆளுநராக பணியேற்றார். ஒடிசாவில் இருந்து நினைத்தால் சொந்த ஊருக்கு போவதென்றால் இவர்கள் மக்கள் காசை விரயமாக்கி தனி விமானம் மூலம் பறப்பார்கள். விமான வாடகை போக இவர்களை பராமரிப்பதற்கு ஒரு அதிகாரிகள் கூட்டம் ஆங்காங்கே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும்.

பிறகு இவர்கள் என்னம்மா எப்படி இருக்க என்று பெண் பத்திரிகையாளர்கள் கன்னத்தில் தட்டுவாரகள். மேகாலயாவின் முன்னாள் ஆளுநர் ஷண்முகநாதன் போன்றோர் ஆளுநர் மாளிகை பெண் ஊழியர்களை படுக்கைக்கே அழைப்பார்கள், அதற்காக அவர்களை மிரட்டுவார்கள். தமிழகத்திலும் ஆய்வு செய்கிறேன் என்று ஆளுநர் செய்யும் அக்கப்போர்கள் ஒருபுறம். அதற்கு கருப்புக் கொடி காட்டினால் பிடித்து 7 ஆண்டு உள்ளே போடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டுகிறது ஆளுநர் மாளிகை. அடிமை எடப்பாடி கும்பலோ அதற்கு பின்பாட்டு பாடுகிறது!

ஓட்டுக் கட்சி கூட்டணியின் முரண்பாட்டினால்தான் நவீன் பட்நாயக், இப்படி கணக்கு கேட்கிறார் என்றாலும் 46 இலட்சம் கணக்கு விளக்கத்தினதால் ஒன்றும் ஆகிவிடாது என்றாலும் இந்த தம்மாத்துண்டு சுயமரியாதை கூட தமிழகத்தை ஆளும் வஸ்துக்களுக்கு இல்லை என்பது ஒரு மேட்டரே இல்லை!

மக்களின் வரிப்பணம் இத்தகைய மாநில ரப்பர் ஸ்டாம்புகளால் எப்படி விரயமாக்கப்படுகிறது என்பதற்கு ஒடிசா ரப்பர் ஸ்டாம்பின் ஜெட் விமானப் பயணம் ஒரு சான்று!

இப்படியே சான்றுகளை மட்டும் படித்துக் கொண்டிருந்தால் போதுமா?

வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க