ந்தியா ஒரு இளமையான தேசம். இன்றைய இளைஞர்கள் வேலை வாய்ப்பை உருவாக்குபவர்களாக வளர்கிறார்கள்” என்று ட்விட்டரில் சமீபத்தில் பதிவிட்டு இருந்தார் மோடி. அவர் சொல்வதில் பாதி மட்டும் உண்மை. இந்தியாவின் மக்கள் தொகையில் 15-34 வயதிற்குள் 34.8 விழுக்காட்டினர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் வேலையை உருவாக்குபவர்களாக இருக்கிறார்களா?

ஹுருதானந்தா இன்னும் இளைஞர் எனும் தகுதியைப் பெறவில்லை. சிறுவனாகிய அவனைத்தான் இளமையான மற்றும் வளரும் இந்தியாவை உருவாக்கவிருப்பவராக நாடு பார்க்கிறது. ஆனால் ஒடிசாவின் நவ்பாடா(Nuapada) மாவட்டத்தில் இந்திரா ஆற்றின் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அவனது தந்தையால் இதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

கீழ் இந்திரா ஆற்று நீர்பாசன திட்டம் 2012 ஆண்டே முடிவடைந்து விட்டதாக திட்ட இணையதளம் கூறுவதற்கு மாறாக காலக்கெடுவை 2018 ஆண்டு வரை அரசு நீட்டித்து இருக்கிறது.

கீழ் இந்திரா ஆற்று நீர்பாசன திட்டத்தால் காலியான 30 கிராமங்களில் அவரது களிமட்டி(Kalimati) கிராமமும் ஒன்று. இத்திட்டம் 6,181 கிராம மக்களை இடம்பெயரச் செய்தது. அதன் பிறகு தற்போது வரை கிட்டத்தட்ட இரு மடங்கு மக்களை அது பாதித்திருக்கிறது. ஹுருதானந்தா போன்ற சிறுவர்கள் கல்வியறிவு கிடைக்காமலேயே வளர்ந்துள்ளனர். “அவர்கள் எங்களது பள்ளியை இடித்துவிட்டார்கள்” என்கிறான் சிறுவன் ஹுருதானந்தா. பள்ளிக்கூடம் செல்ல விருப்பம் தெரிவிக்கும் ஹுருதானந்தா தற்போது தன்னுடைய தந்தையிடம் இருந்து ஏதோ கற்றுக் கொண்டு வருகிறான்.

களிமட்டியின் பள்ளிக்கூடங்கள், சுகாதார நிலையங்கள் மற்றும் கிராம சாலைகள் என அனைத்து விதமான வளர்ச்சித் திட்டங்களும் அணை கட்டத் தொடங்கிய ஏழாண்டுகளுக்குப் பின்னர், கடந்த 2008-ம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டதாக சமூகப் பத்திரிகையாளரான சத்யநாராயண் பஞ்சோர் கூறுகிறார். 30,000 ஹெக்டேர் நிலங்களின் நீர்பாசனத் திட்டத்திற்கு முன்னுரிமை அளித்த அரசு, இந்திரா ஆற்றங்கரையோர மக்களின் வாழ்க்கையை உயர்த்தாதது மட்டுமல்ல, அவர்களுக்கான மறுவாழ்வையும் உறுதி செய்யவில்லை.

30,000 ஹெக்டேர் நிலத்திற்கு பாசன வசதி அளிப்பதாக கூறப்படும் திட்டத்திற்காக 4,766 ஹெக்டேர் நிலம் (விகிதம் 1:6) மூழ்கடிக்கப்பட்டுள்ளது. பரவலான எதிர்ப்பிற்கு உள்ளான நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சர்தார் சரோவர்  அணைக்கட்டு மூழ்கடித்த நிலத்தின் விகிதம் கூட 1:50 தான்.

இந்திரா நீர்பாசன திட்ட இணையதளம் 2012-ம் ஆண்டே இந்த திட்டம் நிறைவடைந்து விட்டதாகக் கூறுகிறது. ஆனால் அத்திட்டத்திற்கு புதிய காலக்கெடுவாக 2018-ம் ஆண்டை நிர்ணயித்துள்ளதாக அரசின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்த நீர்பாசன திட்டத்தின் மேலாண்மை மற்றும் நடைமுறைப்படுத்தல் இரண்டையும் ஒடிசா அரசே நேரடியாக கவனித்து வருகிறது. நடக்கவிருக்கும் ஒடிசா சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு, இதுவரை நிறைவேறாத திட்டங்கள் அனைத்தையும் முடித்துத் தருவதாகவும் இந்திரா நீர்பாசன திட்டத்திற்கான காலக்கெடுவை ஒடிசா அரசு தவறவிட்டு விட்டதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். மோடியின் சூளுரை அத்திட்டத்தால் வெளியேற்றப்பட்ட மக்களுக்கும், கல்வியறிவு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கும்  தீர்வை கொடுக்குமா?

கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகள் . (படம்: வீடியோ தன்னார்வலர்கள் குழுவின் காணொளியில் ஒரு காட்சி)

நவீன் பட்நாயக்கின் தலைமையிலான ஒடிசா அரசு திட்டத்தை முடிக்காமலும் அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்காமலும் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் மோடிக்கு இதை கூறுவதற்கு அருகதை இருக்கிறதா? பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளோ அல்லது காங்கிரசுக் கட்சியோ ஆளும் மாநிலங்களில் மக்களுக்கான மறுவாழ்வை உறுதிப்படுத்தியதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. சர்தார் சரோவர் திட்டம் உறுதியளித்த 40,000 குடும்பங்களுக்கான மறுவாழ்வு இன்னும் கிடைத்தபாடில்லை. எந்த இழப்பீடுகளையும் கொடுக்காமலே வீடுகள் மற்றும் பள்ளிக்கூடங்களை மூழ்கடிப்பதற்கு ஒன்றுக்கு இரண்டுமுறை கூட யோசிக்கவில்லை என்பதே இதற்கு மிகச்சிறந்த எடுத்துகாட்டு.

மீள் குடியேற்றங்களுக்கு பின்னர் அம்மக்களின் வாழ்க்கை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவது அவர்களது தலையாய பத்து பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பதாகவும், இடப்பெயர்ச்சி மற்றும் மீள் குடியேற்றம் பற்றிய ஒரு ஆய்வு கண்டறிந்திருக்கிறது. இது கல்வி உரிமையை அப்பட்டமாக மீறிய செயலாகும். ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை விலையாக கொடுத்துவிட்டு, முதலாளிகளின் ‘அச்சே தின்’-ற்காகதான் (நல்ல நாள்) இந்த அரசுகள் செயல்படுகின்றன.
————————

நன்றி: ’தி வயர்’ இணையதளம்
தமிழாக்கம்: வினவு செய்திப் பிரிவு
In Odisha, ‘Achhe Din’ Promise Washes Childhoods Away in the Name of Development

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க