கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட கொலைக் குற்றவாளிகள் 11 பேருக்கு பிணை வழங்கப்பட்டதை ஆதரித்து மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா மலர் மாலை அணிவித்து, இனிப்புகள் ஊட்டி மகிழ்ச்சியோடு கொண்டாடியிருக்கிறார்.

மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா

மத்தியில், மோடி ஆட்சியில் அமர்ந்த பிறகு இந்தியா முழுவதும், பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் சங்க பரிவாரங்கள் முசுலீம் மக்கள் மீது தாக்குதல் தொடுத்து வரும் நிலை இன்றளவும் நீடித்து வருகிறது. அத்தகைய வன்முறை சம்பவங்களை கண்டும் காணாமலும் மறைமுகமாக,ஆதரித்து வருகிறது மோடி அரசு.

கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 29 அன்று, ஜார்கண்டில் உள்ள ராம்கர் பகுதியில் அலிமுதீன் என்ற இசுலாமியரை, மாருதி வாகனத்தில் மாட்டுக்கறி கொண்டு சென்றதாகக் கூறி பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த கும்பல் அடித்து உதைத்தது. அவர் வந்த மாருதி வாகனத்தையும் எரித்தது. இதில் கடுமையாக காயமடைந்த அலிமுதீன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இப்படுகொலை சம்பவம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட 12 பேரைக் கைது செய்தது போலீசு. இக்கும்பலிலிருந்த 11 பேர் மீதான வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியது. மீதமுள்ள ஒருவன் சிறுவன் என்பதால், சிறார் நீதிமன்றத்தில் இவ்வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பிலிருந்து ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப்பட்டது. அதோடு குற்றவாளிகளுக்கு பிணை வழங்கவும் மனு முன் வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் குற்றவாளிகள் 11 பேருக்கும் பிணை வழங்கியது.

ஆயுள் தண்டனைக் குற்றவாளிகள் 11 பேரும் வெளியே வந்ததை அந்தப் பகுதி பா.ஜ.க. விழா முன்னெடுத்துக் கொண்டாடியது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா ? மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா. கூடவே பாஜகவின் ராம்கர் மாவட்டத் தலைவர் பானர்ஜி மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த இதர பாஜக தலைவர்கள் இக்கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டனர்.

இக்கொண்டாட்டக் கூட்டத்தில் பேசிய பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் சங்கர் சவுத்ரி, பிணை வாங்கித் தந்த பாஜக வழக்கறிஞர் பி.எம் திரிபாதியை, “கடவுள்” எனக் குறிப்பிட்டார்.

கூட்டத்தின் ’சிறப்பு’ விருந்தினரான மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா, அந்த 11 கொலைகாரர்களுக்கும் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவர்களுக்கு ’தாய்’மனதோடு இனிப்பு ’ஊட்டி’ கவுரவித்தார்.

இந்த நிகழ்வு குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கும் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா, முதல் மேல் முறையீட்டிலேயே உயர்நீதிமன்றம் பிணை வழங்கியதை வரவேற்பதாகவும், அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பினை தொடக்கத்தில் இருந்தே தான் ஏற்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், தாம் வன்முறைகளைக் கண்டிப்பதாகக் கூறிவிட்டு, அப்பாவிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

அதாவது மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி சொல்லப்பட்ட அலிமுதீன் ‘குற்றவாளி’யாம். கொன்ற 11 பேரும் அப்பாவியாம். இதைச் சொல்லும் இவர் மத்திய அமைச்சராம். இந்த அமைச்சரவையின் தலைவர் இந்நாட்டின் பிரதமராம்.

கொலைகாரக் கிரிமினல்களை மத்திய அமைச்சர் கொஞ்சி மகிழும் இந்தக் கேலிக்கூத்து உலகில் வேறு எந்த ஜனநாயகத்திலும் நடைபெறாத ஒன்று. இது அப்பட்டமாக மதவாத வன்முறைகளைத் தொடர்ந்து நடத்த சங்க பரிவார கிரிமினல்களுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரம். ஆனால் இவையனைத்தையும் ’மாட்சிமை தாங்கிய’ நீதிமன்றங்களும், ’நேர்மையான’ ஊடகங்களும் கண்டும் காணாமல், பத்தோடு பதினொன்றாகக் கடந்து செல்கின்றன.

நம்புங்கள் ! நாம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

  • வினவு செய்திப் பிரிவு

மேலும் படிக்க:

1 மறுமொழி

  1. அவர்கள் ஒவ்வொரு முறையும் தாங்கள் யார் என்பதை தெளிவாக சொல்கிறார்கள்.ஆனால் மக்கள்தான் புரிந்து கொள்ளமால் இந்து என்ற மாயவலையில் சிக்குண்டு கிடக்கிறார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க