சேலம் 8 வழிச்சாலை என்பது வளர்ச்சி திட்டம் என்று அரசு மிரட்டியவாறு கூறுகிறது. இல்லை என்போரை கைது செய்கிறது. சென்னை மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதறிய களத்தில் இறங்கினோம்.

எட்டு வழிச்சாலை பற்றி உங்கள் கருத்து கேட்க வந்திருக்கிறோம் என்றவுடன் “வேண்டாம்” என்று சிலர் விரக்தியில் கடுப்பானார்கள்.. சிலர் சிரித்துக் கொண்டே வேலை இருக்குது பாஸ் என்றனர். சிலர் கருத்துக்களை சொல்லிவிட்டு புகைப்படம் வேண்டாம்.. ப்ளீஸ்.. என்று கடந்தனர்.

எட்டு வழிச்சாலை எதிர்க்கும் மக்களையும், சமூக ஆர்வலர்கள், இயக்கத்தினரை அரசு கைது செய்து தொடர்ந்து அச்சுறுத்துவதாலோ என்னமோ பொதுவில் மக்கள் இது குறித்து பேச தயங்குகிறார்கள். கிராமங்களில் இருந்து வந்திருப்போருக்கு விவசாயிகளின் பிரச்சினை புரிகிறது. விவசாயிகளை அறியாதோர் இது வளர்ச்சி என்றே பேசுகிறார்கள். ஒரிரண்டு தவிர அனைத்து ஊடகங்களும் இப்போராட்டம் குறித்து இருட்டடிப்பு செய்வதால் பலருக்கு பிரச்சினையின் தன்மையோ தீவிரமோ தெரியவில்லை.

நம்மிடம் பேசிய பல இளைஞர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேலை நிமித்தம் சென்னை வந்திருந்தவர்கள்தான். இந்த சென்னை வாழ் தமிழக இளைஞர்கள் எட்டு வழிச்சாலையைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?

சூர்யா, பெரம்பூர் – மெடிக்கல் ஊழியர்

8 வழிச்சாலைஜி.எஸ்.டி, பணமதிப்பழிப்பு இதெல்லாம் வளர்ச்சின்னு சொன்னாங்க.. அது யாருக்கு வளர்ச்சின்னு தெரிஞ்சிடுச்சி. இப்ப 8 வழிச்சாலை வளர்ச்சின்னு சொல்லுறாங்க. யாருனா நம்புவாங்களா….? இவங்க வளர்ச்சிக்காக விவசாயிகளோட வீடு வாசலை இடிச்சி அவர்களை நடுத்தெருவில் விட்டா, நாம வேடிக்கை பார்க்க முடியுமா?

நரேந்திரன், திண்டிவனம் – சுயதொழில் முனைவர்
தினேஷ், தலைவாசல் – ஐ.டி. ஊழியர்

அரசியல்வாதிகளா இவங்க. ஊழல்வாதிங்க. நாம இப்படியே பேசிட்டு போயிடுவோம்னு நெனக்கிறாங்க. ஆட்சியாளர்கள் பாதிக்கிற மாதிரி போராட்டம் நாம செய்யணும் .. வளர்மதி, பாலபாரதின்னு வரிசையா கைது பண்ணுவாங்களா? பாதிச்ச விவசாயிங்களை பார்க்கிறது கூடவா அஃபன்ஸ் .. இது சரியில்லை.. நாம விடக்கூடாது.

கார்த்திகேயன், சென்னை

மோடி சுவிட்ச் போடுறாரு இவங்க இங்க ஆடுறாங்க.. நாம இதெல்லாம் பார்த்துகினுதான் இருக்க முடியும்.. வேற என்ன செய்ய முடியும்.. இன்னிக்கு ஒருநாள் போராட்டத்துக்கு வர முடியும் .. நாளைக்கு? இதான் சார் எல்லோருக்கும். நான் ஆட்டோதான் ஓட்டுறேன். சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் ரெஸ்ட் கிடைக்கும். அப்போ பேஸ்புக், வாட்சப்ல இவனுங்கள பயங்கரமா திட்டுவேன்.. வேற என்ன செய்யிறது?

சந்திரசேகர், தேனி – ஜியோ எஞ்சினியர்

அரசு பண்றது தப்புதான் .. அங்க போராட்டம் நடக்குது.. ஆனா பாதி பேர் பணத்தை வாங்கிட்டதா சொல்லுறாங்க .. எடப்பாடியும் அப்படிதான் சொல்லுறாரு… கிரவுண்டுல போயி பாத்தாதான் தெரியும்.

கார்த்தி, திருச்சி – ஜியோ ஊழியர்

ஒவ்வொரு ஆளும் ஒன்னொன்னு சொல்லுறாங்க.. நெறைய பேருங்க மூனு நாலு மடங்கு பணம் தருவேன்னு சொல்றாங்க. ஒரு தென்னைக்கு ஐம்பதாயிரம்’னு சொல்லுறாங்க.. விளையாத நெலம் தானே அது.. சில பேரு ரோடு வேணும்னு சொல்லுறாங்க.. என்னன்னு முழுசா சொல்லத்தெரியல.. 8 வழிச்சாலை கனிமங்களை எடுக்கிறதுக்கு வருதுன்னு சொல்றாங்க.. உண்மை எது? பொய் எது?

கணேஷ், படப்பை

இதுவரைக்கும் நாம எதுவும் பண்ணல…. பண்ணவும் முடியாது.. இருந்தாலும் விவசாயிகளை அப்படியே விட்டுட முடியாது.. எதாவது அரசுதான் செய்யணும் .. இல்லனா நாம செய்யணும் ..

வடிவேலு, ஆரணி – டிரைவர்

நான் ரெகுலரா அந்த ரோட்டுலதான் போயிட்டு வரேன்.. எட்டு வழிச்சாலை தேவை இல்ல.. பெரிய டிராபிக் உளுந்தூர்பேட்டையில தான் இருக்கு.. அதை மட்டும் விரிவுபடுத்தினா போதும் .. பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாம இதை செய்யணும்.

கவுதம் – ஐடி ஊழியர் (போட்டோ தவிர்த்தார்)

சில போராட்டம் தேவையில்லாம நடக்குது.. ஸ்டெர்லைட் அப்படித்தான் கடைசியில யாரோ வந்தாங்க.. எல்லாரையும் சொல்லல.. சம்திங்க் ராங்…. இப்ப எட்டு வழிச்சாலை போடனும்னு சொன்னா, விவசாயிகளுக்கு நல்ல மாத்து இடம் தரணும். இல்லனா கிராமத்து ஜனங்க போராடத்தான் செய்வாங்க.

வினோத், மதுரை – சொந்தமாக பிசினஸ் செய்பவர்

அரசாங்கத்தோடு தொடர் நடவடிக்கை எதுவுமே சரியில்ல… ஒரு அரசுக்கு முதல்ல மக்கள் நலன்தான் முக்கியம்.. அப்புறம் தான் வளர்ச்சி.. அந்த வளர்ச்சி கூட மக்களுக்கானதாத்தான் இருக்கணும். 8 வழிச்சாலை நாம பயன்படுத்த போறது இல்ல.. மக்களோட வளர்ச்சிக்கு அடிப்படையானது விவசாயம் தான். அதை அழிச்சிட்டு போடுற ரோடு என்ன வளர்ச்சி?

தினேஷ், தேவிகாபுரம், திருவண்ணாமலை – நிலத்தை பறிகொடுத்தவர்

எங்களோட நிலம் கொஞ்சம் கையகப்படுத்தி இருக்காங்க. அக்கம் பக்கத்து நிலம் தான் முழுசா போகுது .. அந்த நெலத்தை வச்சிதான் எங்க அப்பா என்ன படிக்க வச்சாரு.. நான் படிச்சி முடிச்சி வேலைக்கு வந்துட்டேன்.. இன்னும் எங்க ஊர்ல படிக்க வேண்டியவங்க இருக்காங்க அவங்க எல்லாம் என்ன பண்றதுண்ணே தெரியல.. இந்த நெலத்த தனியார் அபகரிக்கறான்னா கவர்மெண்டுகிட்ட போகலாம்.

கவர்மெண்ட்டே இப்படி பண்ணும்போது என்ன பண்றதுன்னு தெரியாம தவிக்கிறோம். யாரு கிட்ட போறதுன்னு தெரியல.. எல்லாரும் கொடுக்கும் போது நாம மட்டும் எதிர்த்து என்ன பண்ண முடியும்னு தோணுது…. மத்த படி நெலத்த கொடுக்கணும்னு யாருக்கும் விருப்பம் இல்ல.. இந்த சம்பவம் எனக்கு உணர்த்துறது ஒண்ணுதான்.. இது கவர்ன்மெண்ட் இல்ல.. ஒரு கார்ப்பரேட். எனக்கு எல்லா உதவியும் செஞ்சு கொடுத்து என்ன பாதுகாத்துன எங்க குடும்பம்தான் எனக்கு கவர்ன்மெண்ட். இனி நாமளேதான் எல்லாத்தையும் பார்த்துக்கணும்!

சீனுவாசன், திருத்தணி – ஐ.டி ஊழியர்

8 வழிச்சாலைவிவசாயிங்க கிட்ட நிலம் எடுக்கிறது தவறான விசயம்.. அரசு கொடுக்கிற காசு அவங்களுக்கு எவ்ளோ நாளைக்கு வரும்? நிலம் இருந்தாதான் கடைசி வரைக்கும் விவசாயிங்க உழச்சி சாப்பிட முடியும்.. விவசாயத்தை அழிச்சி நாட்டு வளர்ச்சி தேவையில்லை…. வளர்ச்சின்னா என்ன? பணக்காரனுங்க எல்.கே.ஜி படிக்கிறதுக்கு ஒரு லட்சம் பீஸ் கட்றாங்களே அதுவா? ஐ.டி கம்பனியில நாளைக்கு என்ன வேலையில இருந்து துரத்திட்டா நான் எங்க போவேன்..? கடைசியில கிராமம் தான்.. அவங்க நிலத்த விடக்கூடாது. நீங்க போராடுங்க.. நாங்க துணைக்கு வரோம்னு நாம சொல்லணும்.

ராஜேஷ், பிரபு, ஆகாஷ் – பிரிசிடென்சி கல்லூரி முன்னாள் மாணவர்கள்

எட்டு வழி சாலைக்கு பேர் வச்சிருக்கிறத பாருங்க.. பசுமை சாலையாம்..! நிலத்தை அழிச்சி போடுற ரோடு பசுமையா? இவனுங்களுக்கு ரிவிட் அடிக்கனும்.. அப்ப தான் அவனுங்களுக்கு புரியும்.

ராமு, மயிலாடுதுறை – சென்னை பல்கலைக்கழகம்.

8 வழிச்சாலைசிறந்த தலைவர்கள்தான் இப்ப தேவை.. நாட்டுப்பற்று, மொழிப்பற்று அவங்களுக்கு இருக்கணும்.. ஓட்டுப் போட்டா நமக்கு மரியாதை இல்ல. தெரிஞ்சிடுச்சி.. ஓட்டுப் போடக்கூடாது.. நீங்க அடங்கி போவாதிங்க நாங்க வரோம்னு விவசாயிக்கு சொல்லணும்.

ஜெகன்நாதன், கிருஷ்ணகிரி

இந்த கவர்மெண்ட் இருக்கிர வரைக்கும் அப்படித்தான் நடக்கும். கவர்மெண்ட் மாறனும். நாம தனியா என்ன பண்ண முடியும்.. ஜல்லிகட்டு, ஸ்டெர்லைட் மாதிரி எல்லோரும் சேரணும்.

ராஜா, கும்பகோணம் – ஆக்டிங் டிரைவர்

8 வழிச்சாலைநானே டிரைவர்தான். 8 வழிச்சாலை மக்களுக்கு தேவை இல்லை. பத்தாயிரம் கோடியில கமிசன் அடிக்கிறவங்களுக்கு அது தேவை… சேலத்து ஜனங்க ஏற்கனவே அதிகமா கஸ்டப்படுறவங்க.. இந்த சாலையால அவங்களுக்கு இன்னும் துன்பம்தான்.. அவங்களுக்கு தெரிஞ்சது விவசாயம், ஆடு, மாடு. இந்த எட்டு வழிச்சாலைய வச்சி அவங்க என்ன பண்ணுவாங்க?

-வினவு புகைப்பட செய்தியாளர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க