பெய்ஜிங்கில் வெளியேற்றப்படும் ஏழைகள் ! இதுதான் சீனாவின் வளர்ச்சி !

” வளர்ச்சி, முன்னேற்றம் ” போன்ற சந்தைப் பொருளாதார சட்டகத்தில் புழங்கும் சொற்கள் மக்களுக்கு எதிரானது என்பதற்கு சேலம் மட்டுமின்றி சீனமும் இரத்த சாட்சியாக நம்முன் இருப்பதை உணர்த்துகிறது இந்த ஆவணப்படம்!

”மகளே, நான் இதையெல்லாம் உன் எதிர்காலத்திற்காகவே செய்கிறேன். உனது தந்தையும், தாத்தாவும் அனுபவித்த துயரங்களை எல்லாம் நீயும் அனுபவித்து விடக்கூடாது என்பதற்காகவே செய்கிறேன். அதற்காகத்தான் நாங்கள் பட்டப் பகலில் பலரும் பார்க்க உண்மையை உரக்கப் பேசத் துணிந்தோம்” மூடிய அறையினுள் அந்த வீடியோ பதிவு செய்யப் பட்டுள்ளது. வெளியே போலீசார் கதவைத் தட்டும் சப்தம் கேட்டுக் கொண்டிருக்க கைப்பேசியின் செல்பி கேமரா மெல்லிய நடுக்கத்தோடே அந்த மனிதன் பேசுவதைப் பதிவு செய்கிறது.

” வளர்ச்சி, முன்னேற்றம் ” யாருக்கு ?
பளபளக்கும் சீனத் தலைநகர் பெய்ஜிங்.

அந்த மனிதரின் பெயர் க்வாய் யோங். சீனாவைச் சேர்ந்தவர். சென்ற 2017-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி சீனத் தலைநகர் பெய்ஜிங்கை அடுத்துள்ள புறநகரம் ஒன்றில் உள்ள அடர்த்தியான சந்தையில் தீ விபத்து ஒன்று நடக்கிறது. இந்த விபத்தையே முகாந்திரமாகக் கொண்டு மக்கள் அடர்த்தியாக வாழ்வது பாதுகாப்பற்றது என அறிவித்த சீன அரசாங்கம், சீனாவின் நாட்டுப்புறத்தில் இருந்து இடம்பெயர்ந்து அப்பகுதியில் வாழ்ந்து வந்த கூலித் தொழிலாளிகள் அனைவரையும் உடனடியாக அப்புறப்படுத்தியது.

சுமார் 20 ஆண்டுகளாக அங்கே வாழ்ந்து, பளபளப்பான சர்வதேச நகரமாக பெய்ஜிங்கை உருமாற்றிய அந்த மக்கள் ஓரிரு நாள் அவகாசத்தில் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்களது வாழிடங்கள் புல்டோசர்களால் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டன.

” வளர்ச்சி, முன்னேற்றம் ” யாருக்கு ?
பெய்ஜிங் நகர்புற சேரிகள் (மாதிரி படம்)

அதை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டங்கள் அனைத்தையும் மொத்தமாக இருட்டடிப்பு செய்தது சீன அரசாங்கம். உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் எவரும் போராட்டம் நடக்கும் இடத்திற்கு அருகே கூட அனுமதிக்கப்படவில்லை. கடுமையான தணிகை அமலில் இருந்த போதும் உள்ளூர் மக்கள், நடக்கும் போராட்டங்களை தங்களை கைபேசிகளில் பதிவு செய்து உலகளவில் பரவச் செய்தனர். அவ்வாறு போராட்டங்களை வெளியுலகுக்கு தெரியப்படுத்தியவர்களில் முக்கியமானவர் க்வாய் யோங்.

நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களை தனது செல்பேசி கேமராவில் பதிவு செய்து இணையத்தின் மூலம் உலகறியச் செய்தார் யோங். அவர் எடுத்த வீடியோ ஒன்றில் பளபளப்பான சாலை ஒன்றில் கார்கள் அணிவகுத்து நிற்க, போராட்டக்காரர்கள் சாலையை மறித்து நின்று முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

“நாங்கள் சாப்பிட வேண்டும்” “எங்களுக்கு இருப்பிடம் வேண்டும்” என்று முழக்கமிடும் மக்களின் உரிமை முழக்கத்திற்கு பதிலாக  போலீசாரை அனுப்புகிறது அரசு.
“உங்கள் பிரச்சினையை அப்புறம் பார்க்கலாம். முதலில் நீங்கள் நின்று கொண்டிருப்பது பொதுச் சாலை. இது அரசாங்கச் சொத்து. சாலை அரசாங்கத்துக்குச் சொந்தமானது தெரியும் தானே.. முதலில் அனைவரும் கலைந்து ஓடிப் போங்கள்” அடிவயிற்றிலிருந்து போராட்டக்காரர்களைப் பார்த்து கூச்சலிடுகிறார் ஒரு போலீசு அதிகார. அதிகாரத்தின் குரல்கள் சேலத்திலும் சீனத்திலும் ஒன்றே போல் கேட்பதில் நமக்கு எந்த வியப்புமில்லை.

க்வாய் யோங் போலீசாரால் கைது செய்யப்படுகிறார்.

*****

பெய்ஜிங்கை உலகத் தரமான நகரமாக உருவாக்கும் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார் சீன அதிபர் ஜின்பிங். 2020-ம் ஆண்டுக்குள் தலைநகர் பெய்ஜிங்கின் மக்கள் தொகையை 15 சதவீதம் குறைப்பது அத்திட்டத்தின் ஒரு அங்கம். கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக நாட்டுப்புறங்களில் இருந்து பெய்ஜிங்குக்கு குடியேறிய கூலித் தொழிலாளர்கள் தாம் அரசின் இலக்கு. இன்றைய தேதியில் சுமார் 70 லட்சம் இடம்பெயர் தொழிலாளர்கள் பெய்ஜிங்கில் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் சேரிகளில் வாழ்ந்து வரும் இவர்களைப் படிப்படியாக வெளியேற்றி வருகிறது சீன அரசு.

சீன அதிபர் ஜின்பிங்

ஷின் ஜான் அவ்வாறான ஒரு சேரிப் பகுதி. சுமார் ஒருலட்சத்து இருபதாயிம் மக்கள் வசித்து வரும் அந்த சேரிப்பகுதியை விட்டு மூன்றே நாட்களில் காலி செய்து விட வேண்டும் என மக்களுக்கு உத்தரவிட்டுள்ளது அரசு. அல்ஜசீரா தொலைக்காட்சி செய்தியாளர்கள் அந்த மக்களின் வாழ்க்கையையும் இவ்வாறு அவர்கள் விரட்டியடிக்கப்படுவதால் எதிர்கொள்ளும் துன்ப துயரங்களையும் ஆவணப்படம் ஒன்றில் பதிவு செய்துள்ளது.

”சுற்றிலும் பார்த்தீர்கள் அல்லவா.. இந்தக் குப்பை கூளங்களுக்கு மத்தியில் தான் நாங்கள் வாழ்ந்து வந்தோம். இப்போது எங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுத்திருக்கிறார்கள்… அனைத்தையும் வழித்து சுத்தம் செய்து விட்டு எங்காவது ஓடிப் போக வேண்டும்” என்கிறார் ஒரு பெண்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் ஷின் ஜே. சிறிதாய் ஒரு மளிகைக் கடை நடத்தி வந்துள்ளார். அவரது வீட்டையும் கடையையும் மூன்றே நாட்களில் காலி செய்ய வேண்டும். வீட்டை காலி செய்து விடலாம்; ஆனால் கடையையும் அதில் உள்ள பொருட்களையும் என்ன செய்வது? பொருட்களை மூன்றே நாட்களில் விற்றுத் தீர்க்க முடியாது; வாங்குவதற்கு அக்கம் பக்கத்தில் வாழ்ந்து வந்த மனிதர்களும் இப்போது இல்லை. வேறு ஒரு பகுதியில் தற்காலிகமாக ஒரு இடத்தை வாடகைக்குப் பிடித்து கடையின் பொருட்களை எல்லாம் அங்கே அள்ளிச் சென்று அடைத்து விட்டு அவற்றை வந்த விலைக்கு தள்ளி விட்டால் போதும் என வாடிக்கையாளர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

“அதிபர் ஜின்பிங் பேசியதை தொலைக்காட்சியில் கேட்டேன். அப்போது கேட்கும் போது நன்றாகத் தான் இருந்தது. பொருளாதார சீர்திருத்தம் என்றார்… நாட்டை திறந்து விடுவோம் என்றார்… ஆனால் இப்போது பாருங்கள் எங்களுக்கு பெய்ஜிங் இல்லை என்கிறார்கள். நான் இனி இன்னொரு நகரத்தைப் பார்த்து ஓட வேண்டும். அது ஷாங்காயா, குவாங்சௌவா எனத் தெரியவில்லை.. எங்கே போவதென்றே எனக்குத் தெரியவில்லை” ஷின் ஜேவின் கண்களில் நீர் வழிந்தோடப் பேசிக் கொண்டிருக்கிறார்.

ஜின்பிங்கின் அறிவிப்பைத் தொடர்ந்து இடம்பெயர்த் தொழிலாளர்கள் வாழ்ந்து வந்த புறநகர் பகுதிகள் அனைத்தும் இப்போது பேய் நகரங்களைப் போல் காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றன. மக்கள் அனைவரையும் விரட்டியடித்த பின் அந்த நிலங்களை எல்லாம் ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு அள்ளிக் கொடுத்துள்ளது சீன அரசாங்கம். தாங்கள் வாழ்ந்து வளர்த்தெடுத்த நகரம் தங்களையே பிடறியைப் பிடித்து தள்ளுவதைப் பார்க்கப் பொறுக்க முடியாமல் கண்ணீரோடு நீண்ட வரிசைகளில் பெய்ஜிங்கை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

*****

”நான் பொறுத்திருந்து பார்க்கப் போகிறேன். அதன் பின் சூழலுக்குத் தகுந்தாற் போல் மாறிக் கொள்வேன். இது ஒரு கொரில்லா யுத்தம் போலத் தான். அவர்கள் எங்களை ஓரிடத்தில் இருந்து விரட்டினால் நாங்கள் இன்னொரு இடத்திற்குச் சென்று விடுவோம். நிலைமை மிக மோசமாக மாறினால் எங்கள் ஊருக்கே போய் விட வேண்டியது தான். அதற்குப் பிறகும் பெய்ஜிங்கில் எங்களுக்கு என்ன வேலை?” எனக் கேட்கும் அந்த மனிதர் இடித்து வீழ்த்தப்பட்ட கட்டிடங்களின் சிதிலங்களுக்கு இடையே நின்று கொண்டிருக்கிறார். அவர் பெயர் ஸூ ஜி. ஷின் ஜான் புறநகர்ப் பகுதி இடிக்கப்பட்டதில் தனது வீட்டையும் கடையையும் இழந்தவர்.

உங்கள் உழைப்பு தேவை ஆனால் நீங்கள் தேவையில்லை.

ஸூ ஜி ஒரு மெக்கானிக். அவரது மனைவி அருகில் உள்ள பெரிய கடையில் ஊழியராகப் பணிபுரிகிறார். இருவருமாகச் சேர்ந்த மாதம் 1700 டாலர்கள் சம்பாதிக்கிறார்கள். ஒரு காரை சுத்தம் செய்து கொடுக்க 45 டாலர் கட்டணமாகப் பெறுகிறார் ஸூ ஜி. இதே தனது சொந்த ஊர் என்றால் மாதம் வெறும் 700 டாலர்கள் தான் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்கிறார் ஸூ ஜி. நாட்டுப் புறத்தில் இருந்து பெய்ஜிங் போன்ற ஒரு பெரு நகரத்திற்கு வேலை தேடி வருவது அத்தனை சுலபமான காரியமில்லை என்கிறார் ஸூஜி.

முதலில் வேலை தேடிச் செல்விருப்பதைப் பதிவு செய்ய வேண்டும். பதிவாவதற்கு மூன்று வாரங்கள் காத்திருக்க வேண்டும். பின் உள்ளூர் பாதுகாப்பு அலுவலகத்திற்குச் சென்று தன் மேல் எந்த குற்ற வழக்கும் நிலுவையில் இல்லை எனத் தடையில்லாச் சான்று வாங்க வேண்டும். அதன் பின் உள்ளூர் நிர்வாகத்திடம் பிறப்புச் சான்றிதழ் பெற்று வெளியூருக்குச் செல்லவிருப்பதை அறிவிக்க வேண்டும். இத்தனைக்கும் பின் எந்த பெரு நகரத்துக்கு செல்வதாய் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த நகரத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிலிருந்து பணிக்கான ஆணை பெற்றிருக்க வேண்டும்.

” வளர்ச்சி, முன்னேற்றம் ” யாருக்கு ?இடியாப்பச் சிக்கலான இந்த நிர்வாக நடைமுறைகளைத் தாண்டியே கோடிக்கணக்கான மக்கள் நாட்டுப்புறங்களில் இருந்து பெருநகரங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். அப்படியே இடம் பெயர்ந்து செல்லும் நகரங்களில் மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட எந்தவிதமான சமூகப் பாதுகாப்பும் இத்தொழிலாளிகளுக்கு கிடைப்பதில்லை. அதே போல் பெருநகரங்களின் வாழ்க்கைச் செலவை ஈடுகட்டும் அளவுக்கான வருமானமும் கிடைக்காது. எனவே மக்கள் தங்களது குழந்தைகளை ஊரில் உள்ள பெற்றோரின் பொறுப்பில் விட்டு விடுகின்றனர். சீனாவில் மட்டும் சுமார் 61 மில்லியன் (6.1 கோடி) குழந்தைகள் பெற்றோரைப் பிரிந்து தாத்தா பாட்டிமார்களின் பொறுப்பில் வளர்ந்து வருவதாகச் சொல்கிறது ஒரு கணக்கெடுப்பு.

இடம்பெயர்ந்து நகரங்களுக்கு வரும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை வருடத்திற்கு ஓரு முறையே பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பெரும்பாலும் சீனப் புத்தாண்டிற்கு சொந்த ஊர் செல்லும் தொழிலாளிகள், தங்கள் கைபேசிகளில் பதிந்து வரும் பிள்ளைகளின் படங்களைப் பார்த்துக் கொண்டே ஏக்கத்தோடு அடுத்த ஒரு வருடத்தைக் கழிக்க வேண்டும்.

ஸூ ஜியின் வருமானம் ஓரளவுக்குப் நன்றாக இருப்பதால் மாதம் ஒருமுறையாவது சொந்த ஊருக்குச் சென்று விடுகிறார். இந்த முறை தனது மகனைப் பார்க்க ஊருக்குச் செல்லும் ஸூஜியுடன் அல்ஜசீராவின் செய்தியாளரும் செல்கிறார். ஸூஜியின் தந்தையும் முன்னொரு காலத்தில் பெய்ஜிங்கில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தவர் தான். இப்போது அவருக்கு கிராமத்தில் சொந்தமாக ஒரு துண்டு நிலம் இருக்கிறது. சிறிய அளவில் நடக்கும் விவசாயத்தின் வருமானத்தைக் கொண்டு எப்படியோ சமாளித்து வருகிறார். கிராமத்திலிருந்து மீண்டும் பெய்ஜிங் கிளம்பும் ஸூஜியின் காரைப் பார்த்து ஏக்கத்தோடு அழுகிறான் அந்தச் சிறுவன்.

சேலமானாலும் சீனமானாலும் வளர்ச்சி மக்களுக்கானது அல்ல… (படம் : தினகரன்)

“நாங்கள் இரகசியமாகத் தான் வேலை செய்ய வேண்டும். அரசாங்கத்துக்குத் தெரிந்தால் சிக்கல் தான்… நான் என்ன நினைக்கிறேன் என்றால், தேசம் தான் என்ன நினைக்கிறதோ அதைச் செய்யத் தான் போகிறது. தனிநபர்களால் அதைத் தடுத்து விட முடியுமா என்ன.. இதைத் தவிற வேறென்ன சொல்ல முடியும் என்னால்?” என்கிறார் ஸூஜி.

அரசின் ‘‘இடிதடி” திட்டத்தின் பட்டியலில் சுமார் 100 பள்ளிக்கூடங்களும் இருக்கின்றன. அவையெல்லாம் கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகள். சுமார் 80,000 பிள்ளைகள் அந்தப் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“இந்தப் பள்ளிக்கூடங்களை இடித்து விட்டால்  எங்கள் பிள்ளைகள் எங்கே போவார்கள்? இவர்களின் பெற்றோரெல்லாம் இங்கே ஏதோவொரு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகளை ஊரில் விட்டு வளர்க்கும் வாய்ப்பு இல்லை என்பதால் தான் இங்கே அழைத்து வந்துள்ளனர். பள்ளிக்கூடங்களை இடித்து விட்டால் இவர்களுக்கு வேறு போக்கிடம் கிடையாது. பெற்றோர் இவர்களின் படிப்பை நிறுத்தி விடுவார்கள்” என்கிறார் பள்ளி ஆசிரியை ஒருவர்.

*****

சீனாவில் நடந்து கொண்டிருப்பது ‘கம்யூனிச’ அரசு இல்லை. ஆனால் அது கம்யூனச நாடு என்கிற மயக்கம் ஊடகங்களால் உருவாக்கப்படுகிறது. முப்பதாண்டுகளுக்கு முன்பாகவே முதலாளித்துவத்தை வரித்துக் கொண்ட வெறும் பெயர்தாங்கிக் கம்யூனிஸ்டுகளால் நடத்தப்படும் ஒரு எதேச்சாதிகார அரசுதான் சீனாவை ஆள்கிறது. மக்களுக்கான குறைந்தபட்ச சமூக பாதுகாப்பைக் கூட உத்திரவாதப்படுத்திக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணமில்லாத கருணையற்ற அரசாங்கம் தான் சீனத்தில் நடந்து வருகின்றது என்பதை துல்லியமாக அம்பலப்படுத்துகிறது அல்ஜசீராவின் இந்த ஆவணப்படம்.

”வளர்ச்சி, முன்னேற்றம்” என சந்தைப் பொருளாதார சட்டகத்துக்குள் புழங்கிக் கொண்டிருக்கும் சொற்கள் உழைக்கும் மக்களுக்கே எதிரானது என்பதற்கு சேலம் மட்டுமின்றி சீனமும் இரத்த சாட்சியாக நம்முன் இருக்கின்றது. இந்த ஆவணப்படத்தை அவசியம் பார்ப்பதோடு நண்பர்களுக்கு கட்டாயம் அறிமுகம் செய்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

2 மறுமொழிகள்

  1. மேற்கு வங்கத்தில் போலி கம்யூனிஸ்டுகள் நடத்திய நரவேட்டையை இப்போது சீன போலி கம்யூனிஸ்டுகள் பீஜிங்-கில் நடத்துகின்றனர்.

  2. சீனா முதலாளத்துவக் கொள்கைகளைப் பின்பற்றும் நாடு என்பத மிகச் சரியானது.
    அமெரிக்காவுடன் அதிக அளவில் வணிகம் செய்யும் நாடும் சீனாதான்.
    அதிகார நாய்கள் எல்லா நாட்டிலும் ஒரே மாதிரிதான் செயல்படும்.
    பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பிராந்தீய ரீதியாக அதிகமுள்ளதாகத் தகவல்க்ள் கூறுகின்றன.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க