த்தாயிரம் கோடி செலவில் அமைக்கப்படும் பசுமை வழிச் சாலை மக்களின் நன்மைக்கானது என்றும் நாட்டின் வளர்ச்சிக்கானது என்றும் கூறி பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கத் தொடங்கிவிட்டது அரசு.

திருவண்ணாமலை, சேலம், தருமபுரி மாவட்டங்களில் இருக்கும் கவுத்தி வேடியப்பன், கல்வராயன் மலைகளில் குவிந்து கிடக்கும் இரும்புத்தாதுவை வெட்டி விரைவாக ஏற்றுமதி செய்ய வசதியாக, கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்கு தமிழக மக்களை காவுக்கொடுக்கும் திட்டம்தான் இந்த 8 வழி பசுமைச் சாலை. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எத்தனை இடையூறுகள் வந்தாலும், மக்கள் போராட்டங்கள் வெடித்தாலும் அதனை அடக்குமுறையின் மூலம், அச்சுறுத்தி நிறைவேற்றுவது என்று மத்திய, மாநில அரசுகள் துணிந்துவிட்டன.

மக்கள் மண்ணெண்ணைய் ஊற்றி உயிரை மாய்த்துக் கொண்டாலும் சரி, இதனை எல்லாம் “கேளாதவர் காதில் சங்கு ஊதியதைப் போல்” கண்டு கொள்ளாமல் நடந்து கொள்கிறது அரசு.  பாதிக்கப்படும் கிராமங்களில் போராடக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே உளவாளிகளை வைத்து கண்காணிப்பது, நிலம் அபகரிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்படாதவர்கள் இடையே பிளவை ஏற்படுத்துவது, அந்த கிராமங்களையே சுற்றி வருவது, என பல வகைகளில் மக்களை அச்சுறுத்தி வருகிறது போலீசு.

அழிக்கப்படவிருக்கும் தென்னந்தோப்பு

தருமபுரியை அடுத்த பாப்பிரெட்டிப்பட்டி முதல் சேலம் சாலையில் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் போலீசை நிறுத்தி அச்சுறுத்துவதுடன், உள்ளூர் உளவாளிகளை வைத்துக் கொண்டு அந்த கிராமங்களைச் சுற்றி வருவது என போலீசு கண்காணிப்பில், திறந்த வெளி சிறைச்சாலையாக இருந்து வருகிறது பாப்பிரெட்டிப்பட்டி பகுதி.

அந்த நிலையில்தான் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள மஞ்சுவாடி கிராமம், மற்றும் காளிப்பேட்டை கிராமத்தை பார்க்க முடிந்தது. அருகில் ஒரு கிராமத்தில் மிகபெரிய அளவில் போலீசை குவித்து போலீசு அராஜகத்தை செயல்படுத்தி, இதையே அருகில் உள்ள எல்லா கிராமங்களுக்கு ஒரு மாதிரியாக சொல்லி பயமுறுத்துகிறது போலீசு. யாராவது 8 வழிச்சாலை குறித்து பேசினாலோ, பேட்டி கொடுத்தாலோ அவர்களை கண்காணித்து இரவில் வீட்டில் இருக்கும் போது கைது செய்து மிரட்டுகிறது போலீசு.

நிலத்தை அபகரிப்பதில் கைதேர்ந்த ரியல் எஸ்டேட் கொடுங்கோலர்களைப் போன்று போலீசு, நிலஅளவையாளர்கள், ஆர்டிஓ, கலெக்டர் என பெரும்படையுடன் மக்களின் மீது அறிவிக்கப்படாத ஒரு வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு நில அபகரிப்பை மேற்கொள்கிறது அரசு.

மஞ்சுவாடி கிராமத்தில் ஒரு பெண்மணி கூறும்போது, “நிலத்தைக் கொடுக்க முடியாதுன்னு போராட்டம் பண்ணுனா, ஸ்டெர்லைட் போல சுடுவாங்க, இல்லன்னா, முட்டிக்கு கீழ் சுடுவாங்கன்னு எல்லாரும் பயப்படுறாங்க” என்றார். அதே போல் 2 ஏக்கர் நிலத்தை பறிக்கொடுத்த முதியவர் ஒருவரை சந்தித்து பேசும்போதே அவருடைய கண்களில் கண்ணீர் மல்க மனவேதனையோடு செய்வதறியாமல் விரக்தியில் பேசுகிறார். “பட்டா என்னுதுதான், சொத்து கெவர்மண்டோடதா?  என்ன செய்ய முடியும், யாராலையும் ஒண்ணும் பண்ணமுடியாது. எங்கேயாவது போக வேண்டியதுதான்” என்றார் அம்முதியவர்.

மற்றுமொரு விவசாயி, தனது நிலத்தை கொடுக்க முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, ”நீ வரி கட்டலாம், இத்தனை வருசமா விவசாயம் செய்துருக்கிற, அதுக்கு இது சரியா போச்சு, அந்த காலத்திலேயே இந்த திட்டம் வந்துடுச்சு” எனக் கூறியிருக்கின்றனர் அரசு அதிகாரிகள்.

55 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர், “போராடினாலும், காலில் விழுந்து கெஞ்சினாலும், கல்லு நட்டுட்டு போய்ட்டே இருக்குறாங்க, என்ன பண்ணமுடியும்?” என்று கூறினார். அரசின் அராஜகத்தைக் கண்டு வாயடைத்து போயிருக்கிறார் அவர்.

இதையும் தாண்டி போராடுபவர்களை குடும்பத்தோடு கைது செய்து, அவர்களிடம் ”அமைதியா இருந்தா இரு.. இல்லேன்னா ரோடு போட்டு முடிக்கிற வரைக்கும் வெளியில விட மாட்டோம். ஜெயில்ல கிடக்க வேண்டியதுதான்” என மிரட்டியிருக்கிறது போலீசு.

சாலைக்காக நிலம் எடுக்க பள்ளிவளாகத்தில் கல் பதிக்கப்பட்டுள்ளது

மஞ்சுவாடி உயர்நிலை பள்ளிக்கட்டிடம் 2 கோடி ரூபாய் செலவிடப்பட்டு திறப்பதற்கு தயாராக இருக்கும் நிலையில், இந்த பள்ளிக்கூடமும் 8 வழிச்சாலைக்கு பலியாகவிருக்கிறது. அதோடு காளிப்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையமும் பலியாகிறது. இது குறித்து பேசினாலோ, பேட்டி கொடுத்தாலோ அவர்களை கண்காணித்து கைது செய்து மிரட்டுகிறது போலீசு.

”அன்றாடம் எங்க நிலத்தில இருந்து 10, 50 ரூபாயின்னு வருமானம் வந்தாலும் அது எங்களுக்கு சின்ன சின்னத் தேவையை பூர்த்தி செஞ்சு நிம்மதியா வாழ்ந்தோம். இப்ப ஒட்டுமொத்தமா நிலத்த பிடுங்கிட்டு நஷ்டஈடு கொடுத்தா என்ன பண்றது? இரண்டு பசங்கள படிக்க வச்சாலோ, அல்லது மருத்துவம் பார்த்தாலோ அந்தக் காசு காலியாகிடும். அப்புறம் நாங்க நடுத்தெருவுலதான் நிக்கும்” என்று கூறுகிறார் ஒரு விவசாயி.

”மூனு சென்ட் நிலமே 3 – 4 லட்சத்துக்கு போகுது. இவங்க ஒரு ஏக்கர் நிலத்தை 8 – 9 லட்சத்துக்கு கேட்குறாங்க. எல்லாமே ஏமாற்றுதான்” என்று கூறுகின்றனர் விவசாயிகள்.

மக்கள் மீது அடக்குமுறையை ஏவி, அச்சுறுத்தி வாழ்வாதாரத்தை பறித்து சொந்த மண்ணிலே அவர்களை அகதிகளாக்கும் இந்த அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக சக்திகளும், பொது மக்களும் அமைப்பாக திரளுவதின் மூலம்தான் அரசு பயங்கரவாதத்தையும், பாசிசத்தையும் வீழ்த்தவும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் முடியும்.

தகவல்:
பு.ஜ செய்தியாளர், தருமபுரி

1 மறுமொழி

  1. கும்பிய‌ோ (வயிறு)கூழுக்கு அழுகிறது க‌ொண்‌ட‌ைய‌‌ோ பூவுக்கு அழுகிறதாம். தமிழக அரசின் ந‌ில‌ை அப்படித்தான் இருக்கு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க