கிழ்ச்சிக்கான வெளிப்படையான விளைவை சிறிய அளவிலான உடற்பயிற்சிகள் ஏற்படுத்தக் கூடும். வாரம் ஒருமுறையோ அல்லது நாள்தோறும் 10 நிமிடம் என்றாலும் கூட உடற்பயிற்சி செய்பவர்கள் செய்யாதவர்களை விட உற்சாகமாக இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆரோக்கியமான மனநிலை மற்றும் உடல்ரீதியிலான செயல்பாடுகள் பற்றிய இந்த புதிய ஆய்வின்படி எந்த உடற்பயிற்சியும் இதற்கு உதவக்கூடும்.

உடலியக்கம் நம்முடைய மனநிலையை பண்படுத்தும் என்பது புதிய கருத்தல்ல. சிறிய ஓட்டத்திற்குப் பிறகோ அல்லது உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று வந்த பிறகோ குறைவான சோர்வையோ அல்லது அதிக மனநிறைவையோ நாம் உணர்கிறோம் என்பதை நம்மில் பலர் அனேகமாக ஒப்புக்கொள்ளக் கூடும்.

உடற்பயிற்சி கூடங்கள்
சமீப காலமாக அதிகமாக உருவாகிவரும், சாலையின் ஓரங்களில் ஒவ்வொரு கட்டிடத்தின் மொட்டைமாடியை அலங்கறிக்கும் உடற்பயிற்சி கூடங்கள்

அறிவியலும் பொதுவாக இதை ஒப்புக்கொள்கிறது. எவ்வித செயல்பாடுமற்றவர்களை விட உடல்ரீதியாக நல்ல செயல்பாடுடன் இருப்பவர்களுக்கு சோர்வும் பதட்டமும் குறைவாகவே இருக்கும் என்று கடந்தகால ஆய்வுகள் பல ஆய்ந்தறிந்திருக்கின்றன.

ஆனால் உடற்பயிற்சிக்கும் மன அழுத்தம் மற்றும் கவலை ஆகிய உளவியல் சிக்கல்களுக்கும் இடையிலான உறவை மையப்படுத்தியே இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. உடற்செயற்பாடு மற்றும் உற்சாகமான மனநிலை குறித்து உளவியல் ரீதியாக நல்ல நிலையில் இருந்தவர்களிடம் இந்த  ஆய்வு நடத்தப்பட்டன. மேலும் அவை பெரும்பாலும் குறிப்பிட்ட வயதுக்குட்பட்டவர்கள் அல்லது உடற்பயிற்சி வகைகளையே ஆய்வு செய்தன.

ஆனாலும் என்ன உடற்பயிற்சி செய்தால் அல்லது எவ்வளவு நேரம் செய்தால் நம்முடைய உற்சாகம் கூடும் அல்லது வழக்கமான உடற்பயிற்சியினாலா அல்லது குறிப்பிட்ட வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டும் உறசாகத்தைத் தருமா என்றும் தன்னளவில் அவை குறிப்பாக தெரிவிக்காது.

உடற்பயிற்சியும் மகிழ்ச்சியும் பற்றிய கடந்தகால ஆய்வுகள் பலவற்றை மதிப்பீட்டு ஆய்வு செய்து தி ஜர்னல் ஆஃப் ஹேப்பினஸ் ஸ்டடீஸ் (The Journal of Happiness Studies) அறிவியல் சஞ்சிகையில் வெளியிட மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.

அவர்கள் 1980 முதல் தரவுத்தளங்களில் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை தேடி முடிவாக 23 கட்டுரைகளை தெரிவு செய்தனர். அவற்றில் பெரும்பாலானவை கூர்நோக்கல் (observational) அடிப்படையிலானவை. அதாவது ஒரு குறிப்பிட்ட மக்களிடம் எவ்வளவு உடற்பயிற்சி செய்தார்கள் மற்றும் எப்படி மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்ற அடிப்படையில் ஆய்வாளர்களின் கேள்விகள் இருந்தன. சில ஆய்வுகளில் உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னுமான தகவல்களை ஆய்வாளர்கள் திரட்டியிருந்தனர்.

அந்த ஆய்வு ஒவ்வொன்றிலும் எடுத்துக் கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரும்பாலும் குறைவாக இருந்தாலும் அனைத்து ஆய்வுகளையும் சேர்த்து பரிசீலிக்கப்பட்டன. சிறுவயது முதல் வயதானவர்கள் வரை பல்வேறு சமூகப் பொருளாதார பிரிவுகளைச் சேர்ந்த 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்களை அவை ஆய்வு செய்தன.

மேலும் உடற்பயிற்சிக்கும் மகிழ்ச்சிக்குமான இணை பிரியாத உறவை பெரும்பாலான ஆய்வுகள் உறுதிப்பட கூறுவதாக மிச்சிகன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உடற்பயிற்சி
நடுத்தர வர்க்க குடும்ப பெண்களை கவரும் பூங்காக்களில் அமைந்துள்ள உடற்பயிற்சி உபகரணங்கள்…

உடல்ரீதியான செயற்பாட்டிற்கும் மகிழ்ச்சிக்கும் இடையேயான பயனுள்ள உறவை அனைத்து ஆய்வுகளுமே சுட்டுவதாக மிச்சிகன் பல்கலைக் கழகத்தின் இணை இயற்பியல் பேராசிரியரான வேய்யூன் சென் (Weiyun Chen) கூறுகிறார்.  அவரது பட்டப்படிப்பு மாணவரான ஜான்ஜியா ஜாங்குடன் (Zhanjia Zhang) சேர்ந்து அந்த மதிப்பீட்டை வேய்யூன் எழுதினார்.

உடற்பயிற்சி என்ன செய்கிறோம் என்பது முதன்மையல்ல. மகிழ்ச்சியான மனிதர்கள் சிலர் நடக்கவோ இல்லை ஓடவோ செய்தனர். ஏனையோர் யோகா மற்றும் உடலை நீட்டி மடக்கும் தளர்வு உடற்பயிற்சிகளை செய்தனர்.

உற்சாகத்தைத் தூண்டுவதற்கு சிறிய அளவு உடற்பயிற்சியே போதுமானதாக இருந்தது என்று பேராசிரியர் சென் கூறினார். வாரத்தில் ஒன்றோ இரண்டு முறையோ உடற்பயிற்சி செய்தவர்கள் செய்யாதவர்களைக் காட்டிலும் உற்சாகத்துடன் இருந்ததாக பெரும்பாலான ஆய்வுகள் கூறின. சில ஆய்வுகள் நாளுக்கு 10 நிமிட உடற்பயிற்சியே உற்சாகத்தை அளித்ததாக கூறின.

ஆனால் அதிக உடல் ரீதியிலான இயக்கம் பொதுவாக அதிக மகிழ்ச்சிக்கு பங்களித்தது. நல்ல உடல்நலத்திற்கு நாள்தோறுக்கும் 30 நிமிட உடற்பயிற்சி தேவை என்பது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் திட்டமான பரிந்துரை. அவற்றை பின்பற்றுபவர்கள் அதாவது நாள்தோறும் 30 நிமிட உடற்பயிற்சி செய்வோர் ஏனையோரை விட 30 விழுக்காடு அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாக சென் குறிப்பிடுகிறார்.

“உடற்பயிற்சி மகிழ்ச்சிக்கு பங்களிக்கும் என்பதற்கு வலுவான அறிகுறிகள் இருக்கின்றன. எதுவும் பயனளித்தாலும் கூடுதல் உடற்பயிற்சி கூடுதல் மகிழ்ச்சிக்கு வித்திடும்” என்று அவர் கூறுகிறார்.

மகிழ்ச்சிஆனால் பெரும்பான்மையான ஆய்வுகள் கூர்நோக்குதல் அடிப்படையிலானவை என்பதால் உடற்பயிற்சி உற்சாகத்திற்கு நேரடியாக பங்களிக்கிறதா என்பதை இன்னும் அறுதியிட்டு கூற முடியவில்லை. அல்லது இரண்டும் ஒருசேர நடக்கின்றனவா என்பதும் கூற முடியவில்லை. சோகமான மனிதர்களை விட மகிழ்ச்சியான மனிதர்கள் தொடர்ச்சியாக உடற்பயிற்சிகளை செய்கிறார்கள் என்று கூற முடியும். இதன் படி பார்த்தால் உடற்பயிற்சி மகிழ்ச்சிக்கு உதவில்லை மாறாக அவர்களின் மகிழ்ச்சியான மனநிலை உடற்பயிற்சிகள் செய்வதற்கு உதவி செய்கிறது என்று அவர் கூறுகிறார்.

மகிழ்ச்சி என்பது மென்மையான ஒரு அகநிலை சார்ந்த விசயமும் கூட. மக்கள் எப்படி மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்று மட்டும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கட்டுரைகள் ஆய்ந்தன. ஆனால் ஒருவரது மகிழ்ச்சி மற்றவரது சோகமாகவும் இருக்கலாம் எனவே உடற்பயிற்சி செய்வதற்கான உணர்வுபூர்வமான அணுகுமுறைகளை பொதுமைப்படுத்துவதில் இது சிக்கலை ஏற்படுத்துகிறது.

மேலும் உடற்பயிற்சி செய்வது எப்படி மகிழ்ச்சியைத் தூண்டும் என்பதை பற்றி இந்த விமர்சன ஆய்வு ஆழமாக இறங்கவில்லை.

“உடற்பயிற்சிக்கும் உற்சாகத்திற்கும் இடையேயான உறவுகளை சிலருக்கு சமூக காரணிகளும் பாதிக்கக்கூடும்” என்று சென் கூறுகிறார். அதாவது உடற்பயிற்சி வகுப்பின் போதோ அல்லது உடற்பயிற்சி கூடத்திலோ ஏற்படும் சமூகரீதியிலான தொடர்புகள் மனிதர்களின் மனநிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த உதவக்கூடும்.

மகிழ்ச்சி
ஆரோக்கியமான உணர்வு மனிதர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கலாம்

அல்லது உடற்பயிற்சி உடலில் மூளையும் சேர்த்து நேரடியாக மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

“உடற்பயிற்சி உடல்நலத்தை மேம்படுத்தும் என்று நமக்கு தெரியும். ஆரோக்கியமான உணர்வு மனிதர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கலாம்” என்கிறார் சென்.

மேலும் உடற்பயிற்சியானது புதிய செல்களை உருவாக்குவதனாலோ அல்லது மூளையில் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துவதனாலோ மூளையை புத்தாக்கம் செய்கிறது. முடிவில் இது நேர்மறையான சிந்தனைக்கு பங்களிக்கிறது.

இப்பிரச்சினைகளைப் பற்றி எதிர்கால ஆராய்சிகள் மேலும் ஆய்வு செய்யும் என்று சென் நம்புகிறார். ஆனால் இப்போதைக்கு “உடற்பயிற்சி செய்யும் மக்கள் உடற்பயிற்சி செய்யாத மக்களைக் காட்டிலும் மகிழ்ச்சியாக இருக்ககூடும் என்பதை நாம் உறுதியாக சொல்ல முடியும்” என்று கூறுகிறார் சென்.

நமது நாட்டைப் பொறுத்தவரை பெரும்பான்மையான மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே அதிக உழைப்பைச் செலுத்தியாக வேண்டிய நிலை. அந்த உழைப்பை புத்துருவாக்கம் செய்யும் சத்துணவு போதுமான அளவில் கிடைக்காத நிலை. கூடவே மருத்துவம் – ஆரோக்கியம் பற்றிய குறைந்த பட்ச விழிப்புணர்வு கூட நமது மக்களுக்கு கிடைப்பதில்லை. மேலும் அதிக உழைப்பு கொண்ட வேலைகள் கூட ஒரே மாதிரியான உடல் அசைவுகளைக் கோருவதால் நமது மக்கள் குறிப்பிட்ட உடல்பகுதி சார்ந்த குறைபாடுகளில் சிக்கிக் கொள்கின்றனர்.

சமீபகாலமாக அனைத்து சமூகப்பிரிவுகளிலும் நடக்கும் தற்கொலை-கொலை இதர வன்முறைகள் அதிகரிப்பதும் கூட நமது மக்கள் பொதுவில் மகிழ்ச்சியற்றவர்களாகவே வாழ்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இதற்கு பல்வேறு சமூக பொருளாதார காரணிகள் இருந்தாலும் இருக்கும் வாய்ப்புகளில் நாம் நமது மக்களை முறைப்படுத்துவதற்கு முயலவேண்டும்.

எனவே நடைப்பயிற்சி, குழந்தைகளோடு ஓடி ஆடி விளையாடுவது, நண்பர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சியோ, சிறு விளையாட்டோ ஆடுவது என்பதையாவது நாம் செய்ய வேண்டும். முக்கியமாக எளிய மக்களுக்கு இந்த உடற்பயிற்சி அவசியத்தை விளக்குவதோடு கூடுமானவரை செய்வதற்கு ஆலோசனை கூற வேண்டும். ஆட்டோ ஓட்டுநரோ, டீக்கடை மாஸ்டரோ, கடை சிப்பந்திகளோ, அலுவலக ஊழியர்களோ அனைவரும் முப்பது நிமிட பயிற்சி செய்வது அவசியம். அந்த அவசியம் இன்று கைகூடுமளவு அரசு – சமூக அமைப்புகள் இல்லை என்றாலும்………
– வி்னவு

– வினவுச் செய்திப் பிரிவு
நன்றி: நியுயார்க் டைம்ஸ் Even a Little Exercise Might Make Us Happier

1 மறுமொழி

  1. உற்சாகமான மனோநிலைக்கு உடற்பயிற்சி அவசியம்.இது உடலுக்கும் மனதிற்கும் நலம் பயக்கும்.அதேவேளையில் மனதை மேலும் வளமாக வைத்திருப்பதற்கு நல்ல புத்தகங்களை தேடிப்பிடித்து படிப்பது மிகமிக அவசியம்.என்ன மாதிரியான புத்தகங்கள்? அறிவியல், வரலாறு, பகுத்தறிவு, தொழில்நுட்பம், கவிதைகள், கதைகள்…….. எந்த புத்தகமாக இருந்தாலும் அது அதிகமான மக்களை ‘நேர்மையான’ முறையில் “மகிழ்ச்சிகரமாக” வைத்திருக்க வழிகாட்டியாக இருக்கவேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க