மோடி – வேதாந்தா – லைக்கா – ரஜினி 

ங்கிலாந்து அரச குடும்பம் – ஆளும் கட்சியோடு மட்டும் உறவு கொண்டு லைக்கா குழுமம் கொழிக்கவில்லை. இலங்கையின் ராஜபக்சேவோடு நெருக்கமான தொழில் உறவும் இந்தியாவின் மோடிக்கு இங்கிலாந்தில் புரவலராகவும் பணியாற்றியுள்ளது.

செப்டம்பர் 2015-ல் இங்கிலாந்து சென்ற மோடியை வரவேற்பதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் சுமார் 60,000 பேர் கலந்து கொள்ளும் நிகழ்வு ‘இங்கிலாந்து மோடியை வரவேற்கிறது’ என்ற பதாகையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்வில் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த அப்போதைய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கலந்து கொண்டார்.

Lyca productions
தமிழ்நாட்டின் சினிமாத்துறை தாதாவாக உருவெடுக்கும் லைக்காவின் சுபாஷ்கரன்.

அந்நிகழ்வு நடைபெற்ற லண்டன் வெம்பிளி அரங்கத்தின் வாடகை மட்டும் 2 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 17.32 கோடி), மொத்த செலவு சுமார் ரூ. 25 கோடி. இச்செலவுத் தொகை அனைத்தையும் பொறுப்பெடுத்துக் கொண்டதோடு மோடி பிராண்டை விளம்பரப்படுத்தி உதவிய பன்னாட்டு நிறுவனங்களில் சுபாஷ்கரனின் லைக்கா மொபைல் நிறுவனமும் ஸ்டெர்லைட் இழிபுகழ் அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனமும் முன்னிலை வகித்தன. ஆகவேதான் லைக்காவின் நடிகரான ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்று வந்து போராடும் மக்களை சமூகவிரோதிகள் என்று சொன்னதன் பின்னே அவரது நலனும், லைக்காவின் நலனும், வேதாந்தாவின் நலனும், பா.ஜ.க-வின் நலனும் உள்ளன.

அதோடு லைக்கா நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ராஜு மகாலிங்கம் ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜு மகாலிங்கம் 2005-2011 காலத்தில் லைக்காடெல், லைக்கா மொபைல் நிறுவனங்களின் இந்திய தலைமை அதிகாரியாகவும், பின்னர் லைக்கா புரொடக்சன்சின் தலைமை செயல் அதிகாரியாகவும் செயலாற்றியுள்ளார்.

rajini kanth
லைக்காவின் நடிகரான ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்று வந்து போராடும் மக்களை சமூகவிரோதிகள் என்று சொன்னதன் பின்னே அவரது நலனும், லைக்காவின் நலனும், வேதாந்தாவின் நலனும், பா.ஜ.க-வின் நலனும் உள்ளன.

ராஜு மகாலிங்கத்தின் தலைமையில்தான் ரஜினி மக்கள் மன்றம், ஒரு தேர்ந்த கார்ப்பரேட் நிறுவனம் தனது பொருளை சந்தைப் படுத்துவதைப் போல் ரஜினி பிராண்டை சந்தைப்படுத்துகிறது. ரஜினியின் படங்களை தயாரிக்கிறது லைக்கா; ரஜினியின் அரசியல் செயல்பாடுகளை தயாரிக்கிறார் ராஜு மகாலிங்கம். அதே போன்று கமல் மற்றும் பிற முன்னணி நடிகர்களை வைத்து லைக்கா பெரும் முதலீட்டில் படங்கள் தயாரிப்பதும், தயாரிக்கப்பட்ட படங்களை பெரும் நிதியில் வாங்கி வினியோகிப்பதும் கூட சந்தேகத்திற்குரியதுதான். ஏனெனில் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தையும் இவர்கள் கட்டுப்படுத்தும் போது, அரசியலைக் கட்டுப்படுத்தத் துடிக்கும் கமல் – ரஜினி போன்ற கோமாளிகளை இவர்கள் பெரும் நிதி கொடுத்து கட்டுப்படுத்துவது இயல்பாக நடக்கும்.

சிஸ்டம் கெட்டுவிட்டது என்று சொல்லி அரசியலுக்கு வந்துள்ள ரஜினி, தூத்துக்குடியில் போராடிய மக்களை சமூக விரோதிகள் என்று சொன்னது மற்றும் தூத்துக்குடியில் ‘யார் நீங்க’ என்று கேட்ட இளைஞர் சந்தோசை ரஜினி மக்கள் மன்றத்தினர் மிரட்டியதன் பின்னணியும் இதுதான். சொல்லப்போனால் மிரட்டப்பட்ட இளைஞர் சந்தோசின் வீடியோவை ராஜு மகாலிங்கமே வெளியிடுகிறார். ரஜினியை முதலீடாக்கி தமிழக அரசியல், இந்திய அரசியல், பொருளாதார திட்டங்கள் என லைக்கா தீர்மானித்து செயல்படுவதற்கு மேற்கண்ட நிகழ்வுகளே சாட்சி !

கடந்த 2016, மே 31-ல் இந்திய தொலைதொடர்பு அமைச்சகம், தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) பரிந்துரையின் அடிப்படையில் செல்பேசி மெய்நிகர் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது. பலதரப்பட்ட சேவை வழங்கும் நிறுவனங்களைக் கொண்ட இந்திய சந்தையின் நடைமுறைச் சிக்கல்களால் செயல்படுத்தப்படாமல் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் மூலம் முகேஷ் அம்பானி ஏகபோகத்தை அடையும்போது ஒருவேளை லைக்கா மற்றும் இதர நிறுவனங்கள் ஜியோவிற்கு கீழ் மெய்நிகர் சேவை வழங்கும் நிறுவனங்களாக செயல்பட துவங்கக் கூடும்.

ராஜபக்சே + லைக்கா = ஊழல் + கருப்புப் பணம்.

இலங்கையில் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சே கும்பலோடு லைக்காவிற்கு இருக்கும் உறவு இன்னும் ஆழமானது. ஒருவேளை ராஜபக்சே அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் லைக்கா நிறுவனம் ராஜபக்சேவின் அதானியாக மாறியிருக்கும்.

rajapaksha
ராஜபக்சே + லைக்கா = ஊழல் + கருப்புப் பணம்.

லைக்காவிற்கும் ராஜபக்சே குடும்பத்திற்குமான உறவு 2005-ம் ஆண்டிலிருந்தே தொடங்குகிறது. லங்காநியூஸ்வெப் இணையதளம் வெளியிட்ட தகவலில் 2005-ம் ஆண்டு லைக்கா 200 மில்லியன் ரூபாய்கள் தேர்தல் நிதி வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளது. ஜானகி விஜயரத்ன என்ற பெண் ஒருவர் மூலமாக ராஜபக்சே சகோதரர் பசில் ராஜபக்சேவிற்கு 2005-ம் ஆண்டு இந்நிதி கைமாற்றப்பட்டதாக லங்காநியூஸ்வெப் தெரிவிக்கிறது.

2006-ம் ஆண்டு ராஜபக்சே ஆட்சியில் ஸ்கைநெட் என்ற லெட்டர் பேட் நிறுவனம் தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமாக பதிவு செய்து துவங்கப்படுகிறது. ஸ்ரீசேனா மற்றும் கே.எம்.எஸ் பண்டாரா என்ற இருவர் 10 இலங்கை ரூபாய் மதிப்புள்ள இரண்டு பங்குகளில் ஆளுக்கு ஒரு பங்கைக் கொண்டு அதன் பங்குதாரர்களாக இருக்கின்றனர். அதாவது அந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 20 இலங்கை ரூபாய்கள். 175/2 பழைய கொட்டவா ரோடு, மிரன்ஹா, நியுகேகொடா, எனும் முகவரியில் தொடங்கப்படுகிறது இந்த உப்புமா நிறுவனம். இதன் பின் பொறியாளர் அஜந்தா கருணதாசா என்பவர் இயக்குனராக இணைக்கப்படுகிறார். ஆவணங்களில் இவருடைய வசிப்பிட முகவரியாக ஏற்கனவே நிறுவனம் ஆரம்பிக்க கொடுக்கப்பட்ட முகவரியே நியுகேகொடா முகவரியே குறிப்பிடப்படுகிறது. இதன் பின் இந்நிறுவனம் ஒராண்டுக்கும் மேல் எந்த செயல்பாடும் இன்றி ஆழ்ந்த தூக்கத்திலிருக்கிறது. அதனால்தான் இவைகள் உப்புமா கம்பெனி என்று அழைக்கப்படுகிறது. பினாமி நிறுவனங்கள் பலவும் இப்படியான செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.

கொல்லப்பட்ட சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்தா

இந்தக் காலகட்டத்தில் அரசு நிறுவனமாக சிறீலங்கா டெலிகாம் கம்பியில்லா சேவைக்கான (WiMAX) என்ற 2G அலைக்கற்றை சேவைக்கான உரிமத்தைப் பெற ஒழுங்கமைப்பு ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி சிறீலங்கா டெலிகாமிற்கு நிராகரிக்கபட்டது. அப்போது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது அதிபர் ராஜபக்சே என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி ராஜபக்சே கும்பல் என்பது இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, மொத்த இலங்கை மக்களுக்குமே எதிரி என்று நிரூபிக்கப்படுகிறது. இனப்படுகொலையும், தனியார்மய ஆதரவும் வேறு வேறு அல்ல என்பதோடு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிறகு மொத்த இலங்கையை சுருட்டுவதற்கு ராஜபக்சே திட்டம் போட்டிருந்ததையும் இது காட்டுகிறது.

ஸ்ரீலங்கா தொலை தொடர்பு நிறுவனத்திற்கு ஒதுக்கப்படாத கம்பியில்லா சேவைக்கான (WiMAX) உரிமம் லெட்டர் பேட் கம்பெனியான ஸ்கைநெட்டுக்கு மார்ச் 2007-ல் ஒதுக்கப்படுகிறது. பின்னர் மார்ச் 15, 2007 அன்று ஸ்கைநெட்டின் 9,50,000 (95%) பங்குகளை ஹாஸ்டிங்க்ஸ் ட்ரேடிங்க் ஈ சர்விசஸ் என்ற போர்ச்சுக்கலை சேர்ந்த லைக்காவின் கிளை நிறுவனம் வாங்குகிறது. இப்போது வெறும் 20 ரூபாய் கம்பெனி 9,50,000 இருபது ரூபாய்கள் மதிப்புள்ள கம்பெனியாகிவிட்டது. லைக்காவின் கரம் பட்டதும் ஒரு உப்புமா கம்பெனி, சரவண பவன் போன்றொதொரு பெரும் ஓட்டலாக மாறிவிட்டது.

himal
வலதுப்புறத்தில் ராஜபக்சேவின் மருமகன் ஹிமல் லலீந்திர ஹிட்டிராச்சி

இரண்டு வாரம் கழித்து பொறியாளர் அஜந்தா கருணதாசா தனது இயக்குனர் பதவியிலிருந்து விலகுகிறார். அதே சமயத்தில் ராஜபக்சேவின் மருமகன் ஹிமல் லலீந்திர ஹிட்டிராச்சி 5% பங்குகளுடன் இயக்குனர் பொறுப்பை ஏற்கிறார். ஹிமல் லலீந்திர ஹிட்டிராச்சியின் ஆவணங்களிலும் வசிப்பிடமாக அதே நியுகேகொடா முகவரியே  குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் ஒட்டுமொத்த WiMax தொழில் நுட்பதிறன் சேவையின் பெரும் தொழில் அதிபராக மாறுகிறார் ராஜபக்சே மருமகன்.

சிறீலங்கா டெலிகாம், ஸ்கைநெட்டிடம் இருந்த அலைக்கற்றை உரிமத்தை பயன்படுத்த 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்துகொள்ள நிர்பந்திக்கப்பட்டது. மேலும் ஸ்கைநெட்டில் முதலீடு செய்ய சிறீலங்கா டெலிகாம் நிர்பந்திக்கப்பட்டது.  இதன் மூலம் ராஜபக்சே குடுபத்தினரும் லைக்கா நிறுவனமும் இணைந்து நடத்திய 100 மில்லியன் டாலர் மதிப்பிலான (சுமார் ரூ. 650 கோடி) ஊழல்களையும் சண்டே லீடர் பத்திரிக்கை வெளிக்கொண்டு வந்தது. பின்னர் அதன் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க சந்தேகத்திற்கிடமான வகையில் படுகொலை செய்யப்பட்டார். கவனியுங்கள், அரசு நிறுவனத்தின் நிதியை கைப்பற்றியது, ஒரு தனியார் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியது, தனது குடும்பத்தினரை நிறுவன அதிபர்களாக மாற்றியது என ராஜபக்சே வெளிப்படையாக ஊழல் செய்கிறார். அவை அத்தனைக்கும் லைக்காவே அடிப்படையாக இருக்கிறது. இறுதியில் இந்த ஊழல்களை வெளிக் கொணர்ந்த லசந்த கொல்லப்படுகிறார்.

ஆனால் லைக்காவின் தயாரிப்பில் விஜய் நடித்த கத்தி படம் வெளிவந்த போது சீமான், சுபாஷ்கரனுக்கு ஆதரவாக நின்றது குறிப்பிடத்தக்கது. ஆக இனப்படுகொலை செய்த ராஜபக்சேவின் ஊழலை ஒரு சிங்களர் வெளிக் கொணர்ந்தார் – அதற்காகவே கொல்லப்படுகிறார், இனப்படுகொலையை எதிர்ப்பதாகக் கூறும் சீமான் லைக்காவை ஆதரிக்கிறார். இந்த முரண்பாடே லைக்காவின் இடம் என்ன என்பதையும், நமக்குத் தெரிந்த அரசியல் உலகம் எப்படி இயங்குகிறது என்பதையும் உணர்த்திவிடும்.

subaskaran
குடும்பத்துடன் சுபாஷ்கரன் அல்லிராஜா

இப்படியாக லைக்காவின் நிதியோடு ராஜபக்சே குடும்பத்தால் பினாமி நிறுவனம் ஆரம்பிக்கப்படுகிறது. இலங்கை அரசு நிறுவனத்திற்கு உரிமம் மறுக்கப்படுகிறது. பினாமி கம்பெனி உரிமத்தைப் பெறுகிறது. அதன் பங்குகளை லைக்கா சுபாஷ்கரன் வாங்குகிறார். அந்த உரிமத்தில் ஒரு பகுதியை பயன்படுத்திக்கொள்ள அரசு நிறுவனம் நிர்பந்திக்கப்படுவதோடு அப்பினாமி நிறுவனத்தில் அரசின் முதலீட்டையும் போடச் செய்து நடந்த ஊழல், கருப்புப் பணப் பரிவர்த்தனைகளில் தொடர்புடையவர்தான் லைக்கா சுபாஷ்கரன் அல்லிராஜா. ஆக லைக்காவின் திரைப்படத் தயாரிப்பில் பணப் பெறும் தமிழக நடிகர்களோ தொழில் நுட்பக் கலைஞர்களோ அனைவரும் அந்தப் பணத்தில் கொல்லப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் இரத்தம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஒருவேளை அவர்களே மறுத்தாலும் நாம் அதை மறக்கவோ மன்னிக்கவோ கூடாது.

மலேசியா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா போன்றவற்றை இணைக்கும் தெற்காசியா-மத்திய கிழக்கு-மேற்கு ஐரோப்பா (SEA-ME-WE) என்ற கடலடி ஒளியிழை (submarine optical fibre) தடத்தின் இணைப்புப் புள்ளியாக இலங்கை இருக்கிறது. இந்த இணைப்புப் புள்ளியை இலங்கை அரச நிறுவனமான சிறீலங்கா டெலிகாம் நிர்வகிக்கிறது. இவ்வழித் தடத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கொள்ளை லாபமீட்ட சர்வதேச தகவல் தொடர்பு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.

spiritual politics
ஆன்மீக அரசியல்வாதிகளும் கூட்டு களவாணிகளும்

2006-லிருந்து ராஜபக்சே ஆட்சியில் இருந்த காலப்பகுதி முழுவதும் புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைக்கு நடந்த தொலைத் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் லைக்கா – சிறீலங்கா டெலிகாம் – ஸ்கைநெட் வழியாகவே நடந்தன. இந்நிறுவனங்கள் குறிப்பாக ஸ்கைநெட்-லைக்கா மொபைல் நிறுவனங்கள்- தகவல் பரிமாற்றங்கள் அனைத்தையும் இலங்கை பேரினவாத அரசுக்காக ஒட்டுக்கேட்டு, உளவு பார்த்து இனப் படுகொலைக்கு உதவியிருப்பதற்கும் சாத்தியமிருக்கிறது.

இனப்படுகொலைக்குப் பின்னர் உலகின் ஜனநாயகவாதிகளும், முற்போக்கு சக்திகளும் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடக்கக்கூடாது என்று குரலெழுப்பிக் கொண்டிருந்த வேளையில், லைக்கா நிறுவனமோ மாநாடு நடத்துவதற்கு முதன்மையான நிதி வழங்குனராக செயல்பட்டது. காமன்வெல்த் மாநாட்டின்போது இலங்கை இராணுவத்துடன், இராணுவ ஹெலிகாப்டரில் சுற்றித் திரிந்தார் சுபாஷ்கரன் அல்லிராஜா. இதே நேரம் லைக்காவிடம் ஊதியம் பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன், இலங்கை அரசை ஆதரிக்கும் ஈழத்தமிழரின் விருந்துபசாரத்தில் ஆஸ்திரேலியாவில் கழித்துக் கொண்டிருந்தார். இனம் இனத்தோடு எப்படி ’கொலைநயத்தோடு’ ஒன்று சேர்கிறது பாருங்கள்!

2006-ல் மிகின் லங்கா என்ற குறைந்த கட்டண விமான சேவை நிறுவனத்தை மக்கள் பணத்தைக் கொண்டு ராஜபக்சே அரசு துவங்கியது. இதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைக் கூட ராஜபக்சே பெறவில்லை. வரவு செலவு ஆண்டறிக்கையின் படி 2008-ம் ஆண்டில் சுமார் 320 கோடி இலங்கை ரூபாயும், 2009-ம் ஆண்டில் சுமார் 130 கோடி இலங்கை ரூபாயும், 2010-ம் ஆண்டில் சுமார் 120 கோடி இலங்கை ரூபாயும், இழப்படைந்ததாக அறிவித்தது. மிகின் லங்கா தனது நட்டத்தை அறிவித்த பின் 2014-ஆம் ஆண்டில் லைக்கா பிளை Level 6, East Tower, World Trade Center, Colombo (Number of Company: PV 96006 ) என்ற முகவரியில் கொழும்பில் தனது கிளையை ஆரம்பிக்கிறது.

mihin lanka
அரசாங்கத்தால் தொடங்கப்பட்டு  லைக்காவால் ஒழிக்கப்பட்ட மிகின் லங்கா ஏர்லைன்ஸ்

ராஜபக்சேவின் மைத்துனர் தலைவராக இருந்த சிறீலங்கன் ஏர்லைன்ஸ் லைக்கா ஃப்ளை நிறுவனத்தை முக்கிய தொழில் கூட்டாளியாக அறிவித்திருந்தது. சிறீலங்கன் ஏர்லைன்சின் இங்கிலாந்து முகவராகவும் லைக்கா ஃப்ளை செயல்பட்டு வருகிறது. லைக்கா ஃப்ளை இலங்கை அரசின் சுற்றுலாத் துறையின் அதிகாரப்பூர்வ ஐரோப்பிய முகவராக செயல்பட்டு இன அழிப்பு போருக்குப் பின் இலங்கை சுற்றுலாவை வைத்தும் கல்லா கட்டுகிறது. அதாவது ஒரு மலிவு கட்டண அரசு சேவையை துவங்கி ஊழலின் மூலம் ஒழித்துவிட்டு அதனிடத்தில் தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

2014, மார்ச் மாதம் லண்டனில் வந்துராம்ப காசப்ப தேரர் என்ற சிங்களப் பேரினவாத பவுத்த பிக்கு நடத்திய உணவுத் திருவிழாவின் முழுச்செலவையும் பொறுப்பேற்றது லைக்காவின் துணை நிறுவனமான லைக்கா ஃப்ளை (LycaFly).

இங்கிலாந்து பல்கலைக் கழகங்களில் புலம்பெயர் தமிழ் மாணவர் ஒன்றியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு முன்னர் புலி ஆதரவு அமைப்புகளாகச் செயல்பட்ட இவ்வமைப்புக்களுக்கு லைக்கா குழுமம் 5 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரம் பவுண்ட் வரையிலான நிதியுதவிகளை அளித்துள்ளது. சில பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்களின் இணையங்களில் லைக்காவிற்கான இலவச விளம்பரங்களும் வெளியாகின.

chandrika
ஒவ்வொரு நாட்டின் அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டுகொண்டு ஊழல் மோசடிகளை செய்து ஆசிய பகுதிகளிலே தாதாவாக உருவெடுக்கும் லைக்கா.

இனப்படுகொலைக்கு பின்னர் புலம்பெயர் ஊடகங்கள், வானொலிகள் லைக்கா – லிபாரா நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டன; விளம்பரங்களின் மூலம் இலங்கை அரசின் தொங்குசதையாக மாற்றப்பட்டன.

ராஜபக்சே குடும்பத்துடன் லைக்கா நிறுவனத்தின் வியாபார மற்றும் அரசியல் தொடர்புகளை  தொடர்ச்சியாக வெளியிட்டு வந்ததற்காக லங்கா நியூஸ் வெப் மற்றும் இலண்டனில் செயல்படும் இனியொரு போன்ற சில இணைய ஊடகங்கள் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு சில நாட்கள் முடக்கபட்டன.

2009-ம் ஆண்டு இனப்படுகொலைக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ராஜபக்சே அரசுடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த லைக்காவின் நடவடிக்கைகள் இன்றைய இலங்கை அரசாலும் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. மாறாக லைக்காவின் மாதிரி கிராமத்தை சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க திறந்துவைத்துள்ளார்.

லைக்கா குழுமம் தொழில் செய்யும் எந்த கட்டமைப்பையும் தானே உருவாக்கவில்லை; மாறாக ஐரோப்பாவில் மற்ற நிறுவனங்களின் கட்டமைப்பை பயன்படுத்தும் உரிமத்தை பெறுதல் (லைக்கா மொபைல்), இலங்கையில் ஊழல், கருப்புப் பண பரிவர்த்தனைகளின் மூலம் நிறுவனங்களை கையகப்படுத்துதல், பங்குகளை வாங்குவது போன்றவை மூலம் தனது தொழிலை செய்துவருகிறது.

பிரிட்டன் அரசகுடும்பம் மற்றும் இங்கிலாந்து அரசுடனான உயர்மட்ட உறவு, இலங்கை சிங்களப் பேரினவாத அரசுடனான தொழில் மற்றும் அரசியல் தொடர்புகள், தமிழ் தேசிய அமைப்புகளுடன் உறவு, ஐரோப்பாவில் பினாமி நிறுவனங்கள், நிழலுலகத் தொடர்புகள், நடவடிக்கைகள், அம்பலப்படுத்துவோரை மிரட்டிப் பணியவைப்பது, என்று ஒரு தேர்ந்த குற்ற கும்பலுக்கே (Crime Syndicate) உரிய சகல வலைப் பின்னல்களையும் பெற்றிருக்கிறது லைக்கா குழுமம்.

இப்பேர்ப்பட்ட ‘விருது’களோடு லைக்கா நிறுவனம் தமிழ் சினிமாவின் நிரந்தர புரவலராக மாறுவதோடு ரஜினி – கமல் போன்றவர்களுக்கு பெரும் ஊதியத்தையும் அளிக்கிறது. மோடியோடும் பெரும் நட்பைக் கொண்டிருக்கிறது. இறுதியில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்துத்துவத்தை எதிர்க்கும் தமிழ் மக்களை வீழ்த்துவதற்கு தமிழகத்தில் ஒரு அதானி தலையெடுத்து விட்டார். அவரது பெயர் சுபாஷ்கரன் அல்லி ராஜா. அவரது நிறுவனம் லைக்கா!

– முற்றும்

இளநம்பி
(வினவு புலனாய்வு குழு உதவியுடன்)

பாகம் 1: கருப்புப் பணம் = ரஜினி – ஷங்கர் – ஜெயமோகன் – லைக்கா
பாகம் 2 : லைக்காவின் மோசடி பணத்தில் கொழிக்கும் கமல் – ரஜினி – காலாக்கள் !

ஆதாரங்கள்: