பேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் !

பாகிஸ்தானின் பேருந்துகள் மற்றும் லாரிகள் அதன் வர்ணப் பூச்சு வேலைகளுக்காகவே பிரபலம். ஆனால் வர்ணம் பூசுபவர்களின் வாழ்க்கை நிறமிழந்து போயுள்ளது.

பாகிஸ்தானின் ஃபைசலாபாத்தைச் சேர்ந்தவர் முகமது ரஃபீக். இவர் பேருந்துக்கு வர்ணம் பூசுவது மற்றும் ஓவியம் வரையும் பணியில் கடந்த 40 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.

பேருந்துக்கு வர்ணம் பூசுவது மற்றும் ஓவியம் வரையும் பணியில் கடந்த 40 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் முகமது ரஃபீக்.

தனது கோடிக்கணக்கான சக குடிமக்களைப் போலவே, ரஃபிக்கும் தனது 12 வயதில் கல்வியை கைவிட்டு குழந்தைத் தொழிலாளராக இப்பணியை தொடங்கியிருக்கிறார்.

”நாங்கள் எங்கள் முழு மனதையும் இத்தொழிலில் ஈடுபடுத்தினோம். தற்போது இந்த வேலைகளை தொழில் பழகுனர்களை வைத்துச் செய்கிறார்கள். அவர்கள் கூலிக்கு வேலை செய்துவிட்டுப் போகிறார்கள்” பேருந்துகளுக்கு வர்ணம் பூசுபவராகத் தொடங்கிய தனது கடந்த காலத்தை நினைவுகூர்ந்தவாறு கூறுகிறார் ரஃபீக்.

வர்ணம் பூசுவதையும் படம் வரைவதையும் வெகு விரைவில் கற்றுக் கொண்ட அவர், பாகிஸ்தான் முழுக்க பயணிக்கும் பேருந்துகளின் மேலுள்ள அழகான காட்சிகளையும் ஓவியங்களையும் வரையும் தமது திறமைக்காக விரைவில் பிரபலமடைந்தார். கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 5000-க்கும் அதிகமான பேருந்துகளுக்கு வர்ணம் பூசி படம் வரைந்திருக்கிறார்.

”எனது பணி பாகிஸ்தான் முழுமைக்கும் பரவியது. ஆனால் எங்களுக்கு பேருந்தில் ஓவியம் வரைவதற்கு உரிய பணம் என்றும் கிடைத்ததில்லை” என்கிறார் ரஃபீக்.

தற்போது, பாகிஸ்தானில் பேருந்தில் வர்ணம் பூசுபவருக்கு கிடைக்கும் ஒருநாள் கூலி 600 பாகிஸ்தான் ரூபாய்கள் மட்டுமே.

இந்தக் கூலி உயிர்வாழ மட்டுமே போதுமானதாக இருப்பதாகவும், இதனைக் கொண்டு தங்களது குழந்தைகளுக்கு சராசரியான கல்வி கொடுப்பதற்குக் கூட இயலவில்லை என்றும் ஒவ்வொரு மாதமும் வீட்டு வாடகையை கட்டுவதற்கே போராடும் நிலை இருப்பதாகவும் கூறுகிறார் ரஃபீக்.

இந்த வேலையின் மீதான ரஃபீக்கின் ஆர்வமே, இதுவரை அவரை உந்தித் தள்ளி கொண்டுவந்துள்ளது. “முன்னாட்களில் கையாலும் பிரஷ்களாலுமே வாகனத்திற்கு வர்ணம் பூசப்படும். அவை அழகாக இருக்கும், இன்று அவர்கள் அச்சு பதிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை உபயோகிக்கிறார்கள். அது அதற்கேற்றாற் போன்ற அழகோடு உள்ளது” என்கிறார் ரஃபீக்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, பேருந்துக்கு வர்ணம் பூசும் பணியில் எவ்விதமான பாதுகாப்பு உபகரணங்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துக் கொள்ளாததன் விளைவு, இத்தொழிலாளர்களின் உடல்நிலையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. 69 வயதான ரஃபீக்கிற்கு நுரையீரல்கள் தற்போது செயலிழந்து வருகின்றன.

”இந்த பிரச்சினை, பெயிண்ட், இரசாயனங்கள், தின்னர் மற்றும் பெட்ரோல் புகைகளால் வருகின்றது” என்கிறார் ரஃபீக்.

அவரோடு பணிபுரிபவர்களில் பெரும்பான்மையினர் இதே பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாருக்கும் இப்பாதிப்புகளுக்கு முறையான சிகிச்சையை எடுத்துக் கொள்ளும் வசதியில்லை. தனக்கு இத்தொழிலின் மீது விடாத ஆர்வம் இருக்கும்போதிலும், வேறு யாருக்கும் இந்தத் தொழிலை ரஃபீக் பரிந்துரைப்பதில்லை.

“வேறு யாரும் இந்த வேலையில் சேர நான் விரும்பவில்லை. எனது வாழ்க்கையில் என்னால் பணம் சேமிக்க முடியவில்லை. என் பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை. விதி என்வசம் இல்லை” என்கிறார் ரஃபீக்

நன்றி: அல்ஜசீரா இணையதளத்தின் செய்தியாளர் ஹசன் கானி தயாரித்த குறுஞ்செய்திக் காணொளி.

மூலக்கட்டுரை: Transforming Pakistan’s buses into art

2 மறுமொழிகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க