”பல கலாச்சாரங்கள் கூடி வாழும் ஒரு சமூகம் என்பது பல முனைகளில் முரண்படும் சமூகம் ஆகும். வெவ்வேறு கலாச்சாரங்கள் கூடி வாழ்வது என்பது சாத்தியமற்றது. ஆனால், அப்படித்தான் வாழ வேண்டும் என்றால் சிறுபான்மைக் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மைக் கலாச்சாரத்தை மதித்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும்” – இதைக் கேட்பதற்கு நாம் தமிழர் தம்பிமார்கள் ‘வடுக வந்தேறிகளுக்கு’ எதிராகவோ, ஆர்.எஸ்.எஸ் டவுசர்கள் முசுலீம்களுக்கு எதிராகவோ பேசும் வாதங்களை ஒத்தது போல் இருக்கிறதா?

இல்லை. இந்தக் குரல் பிரான்சு தேசத்தில் இருந்து ஒலிக்கிறது. ஆம், சுமார் இருநூற்றி முப்பது ஆண்டுகளுக்கு முன் எதேச்சதிகாரத்தையும் நிலபிரபுத்துவத்தையும் இரத்தப் புரட்சியின் மூலம் வீழ்த்தி ‘ஜனநாயக’த்தைப் பிரசவித்த அதே பிரான்சு தான். இன்றைக்கும் பிரெஞ்சு ஜனநாயக விழுமியங்களும், சகிப்புத்தன்மையும் உலகறிந்த விசயங்கள்தாம்; அதற்காகவே முதலாளித்துவ ஜனநாயகத்தின் மாதிரியாக அந்த நாடு கொண்டாடப்படுகின்றது. எனினும், அதே பிரான்சு தேசத்தினுள் இன்னொரு தேசமும் உள்ளது. அதற்கென்று ஒரு இருண்ட முகமும் உள்ளது. கட்டுரையின் துவக்கத்தில் உள்ள வார்த்தைகள் பிரான்சின் வலதுசாரிக் கட்சியான தேசிய முன்னணியின் இளைஞர் பிரிவின் தலைவரும் அக்கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினருமான கேதென் தஸ்ஸாவே (GAETAN DUSSAUSAYE) உதிர்த்தவை.
இந்து பயங்கரவாத அமைப்பினரின் செயல்பாடுகளால் அவ்வப்போது தர்மசங்கடத்திற்கு உள்ளாகும் நமது ஊடகங்கள் போலியாகப் பயன்படுத்தும் ‘ஃபிரின்ஞ் எலிமெண்ட்ஸ்’ எனும் போர்வைக்குள் பிரான்சின் தேசிய முன்னணியை அடைத்து விட முடியாது. கடந்த அதிபர் தேர்தலின் போது இம்மானுவல் மாக்ரோனை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணியின் மேரி லீ பென் பெற்ற வாக்குகளின் சதவீதம் 33.9. பிரான்சு இசுலாமியமயமாகி வருவதாகவும், வந்தேறிகளின் கலாச்சாரம் பிரெஞ்சு கலாச்சாரத்தை நசுக்கி வருவதாகவும் தேசிய முன்னணி தீவிரமாக பிரச்சாரம் செய்தது. இன்றும் இசுலாமியர்களுக்கும் பிற இனச் சிறுபான்மையினருக்கும் எதிராக பிரெஞ்சு மக்களிடம் விசத்தைப் பரப்பி வரும் இக்கட்சி விதிவிலக்கான உதிரிக்கட்சியல்ல; மக்களின் கணிசமான ஆதரவு பெற்ற மைய நீரோட்டக் கட்சி.
பிரெஞ்சு சமூகத்தினுள் மிக ஆழமாகப் பரவி வரும் இனவெறிக் கலாச்சாரத்தை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது ”பாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம்: பிரெஞ்சுக்காரர்களாய் இருப்பதன் பொருள் என்ன” (Paris: A Divided City: What does it mean to be French?) எனும் அல்ஜசீரா தொலைக்காட்சியின் ஆவணப் படம்.
https://www.youtube.com/watch?v=bXDmFlyPZOY
***
அடமா எனும் கருப்பின இளைஞனின் கொட்டடிக் கொலையை விவரிப்பதில் இருந்து துவங்குகிறது இந்த ஆவணப்படம். கடந்த ஆண்டு (2017) ஜூலை மாதம் தனது 24ம் பிறந்த நாளைக் கொண்டாட நண்பர்களோடு செல்கிறார் அடமா தரோ (Adama Traoré). அது கருப்பினத்தவர்கள் அடர்த்தியாய் வசிக்கும் பியோமோண்ட் சுரோசேய் (Beaumont-sur-Oise) எனும் புறநகர்ப்பகுதி. அப்போது வேறு ஒரு குற்றவாளியைத் தேடி அங்கே வரும் போலீசார், அடமாவையும் அவரது நண்பர்களையும் தடுத்து நிறுத்துகின்றனர்.
பிரெஞ்சு போலீசாருக்கும் கருப்பினத்தவருக்குமான முறுகல் நிலை அனைவரும் அறிந்த இரகசியம்தான். போலீசாரால் கருப்பின இளைஞர்கள் தடுத்து நிறுத்தப்படுவதும் மிக இயல்பானது. சாதாரணமாக வெள்ளை இனத்தைச் சேர்ந்த ஒருவரை விட கருப்பினத்தவர் நான்கு மடங்கு அதிகமாகவும், அரபிகள் ஏழுமுறை அதிகமாகவும் போலீசாரின் சோதனைகளுக்கு ஆளாகிறார்கள் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. போலீசார் தடுத்து நிறுத்தும் போது அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இல்லையென்றால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவார்கள். அன்று அடமாவின் கையில் அடையாள அட்டை இல்லை.
போலீசாரால் கைது செய்யப்படுவோம் என்கிற அச்சத்தில் அடமா ஓட்டமெடுக்கிறார்; போலீசார் விரட்டிப் பிடிக்கிறார்கள். கைது செய்யப்படும் போது போலீசார் அதிகளவு வன்முறையைப் பிரயோகித்துள்ளனர். நெருக்கிப் பிடிக்கப்பட்ட அடமா மூச்சுத் திணறலால் மயங்கி விழுகிறார். உடனிருந்த நண்பர்கள் அடமாவை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு போலீசாரிடம் கேட்கின்றனர். ஆனால் போலீசார் அவரை காவல் நிலையத்துக்குத் தூக்கிச் செல்கின்றனர். காவல் நிலையம் சென்ற அடமா இறந்து போகிறார்.

அடமா இறந்த செய்தியை உடனடியாக வெளிப்படுத்தாமல் மறைக்கும் போலீசார், பின்னர் பிரேதப் பரிசோதனை ஒன்றை நடத்தி கைது செய்யப்படும் போது அடமா போதையில் இருந்ததாக அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். அது ரம்ஜான் மாதம்; அடமா நோம்பில் இருந்த சமயம். ரம்ஜானின் போது தனது மகன் போதை உட்கொண்டிருக்க வாய்ப்பே இல்லை என சந்தேகப்படுகிறார் அடமாவின் தாயார்; அவரது குடும்பத்தார் மறுபரிசோதனை தேவை என்று கோருகின்றனர். முதலில் போலீசார் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், அடமாவின் குடும்பத்தினர் தனியார் மருத்துவ மனையில் மறு பிரேதப் பரிசோதனை ஒன்றை நடத்துகின்றனர். இதில் அடமா மூச்சுத்திணறலால் இறந்தார் எனத் தெரியவருகிறது. அது ஒரு படுகொலை என்பது உறுதியாகிறது.
அடமாவின் கொலைக்கு நீதி கேட்டுப் போராடிய அவரது சகோதரர் இன்றும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்; மற்றொரு சகோதரி நண்பர்களின் துணையுடன் போராடி வருகிறார்.
“அந்த இளைஞர்கள் போலீசாரின் உத்தரவுகளுக்கு கீழ்படிய மறுக்கிறார்கள்”
”சட்டத்தை அமல்படுத்துவதற்கே போலீசார் உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்கள்”
”இதைத் தானே நாம் சட்டத்தின் ஆட்சி என்கிறோம்?
ஆவணப்பட இயக்குநர் சந்தித்த ஓய்வு பெற்ற போலீசு அதிகாரியின் குரலில் ஒரு அநியாய மரணம் விளைவித்திருக்க வேண்டிய எந்த துயரமும் இல்லை. அவர்கள் இறந்து போக வேண்டியவர்கள்தானே என்கிற திமிர்த்தனமே அருவெறுக்கத்தக்க வகையில் வெளிப்படுகிறது. அந்த உரையாடல் பிரெஞ்சு மொழியில் மட்டும் நடக்கவில்லை – உலகெங்குமுள்ள உழைக்கும் மக்கள் அறிந்து வைத்துள்ள அந்த மொழி ஆதிக்கத்தினுடையது.
***
இது அடமா என்கிற இளைஞர் ஒருவருக்கு நிகழ்ந்த தனிப்பட்ட துயரம் அல்ல. பளபளப்பான பாரீஸ் நகரைச் சுற்றி அமைந்திருக்கும் புறநகர்ப் பகுதியின் சேரிகளில் வாழும் இசுலாமியர்களும், கருப்பின மக்களும் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினை. க்ளிச்சே சோஸ்போ எனும் புறநகர்ப் பகுதியில் 2005-ம் ஆண்டு இரண்டு இளைஞர்கள் போலீசாருக்கு அஞ்சி ஓடிய போது மின்சாரம் தாக்கி இறந்து போனார்கள். இதையடுத்து வெடித்த கலவரம் பிரெஞ்சு சமூகத்தில் புறையோடிப் போயிருக்கும் இனவெறியை உலகறியச் செய்தது. அரசால் புறக்கணிக்கப்பட்ட இப்பகுதியில் நிலவும் ஏழ்மை நம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது.
ஔல்ஃபா எனும் கருப்பினப் பெண் க்ளிச்சே சோஸ்போ பகுதியைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர். ஆவணப்பட இயக்குனருக்கு தங்களது வாழிடத்தை அவர் சுற்றிக் காட்டுகிறார். அங்கே ஒரு கடை உள்ளது. மலிவான விலைக்குப் பொருட்கள் விற்கும் கடை. பெரிய கடைகளில் வீசப்படும் அழுகிப் போன, கெட்டுப் போன உணவுப் பண்டங்களையும் காலாவதியான மளிகைப் பொருட்களையும் அள்ளி வந்து குறைவான விலைக்கு அங்கே விற்கிறார்கள். “இங்கே உள்ள வாழ்க்கை பெண்களுக்கானது அல்ல. பையன்களாவது எப்படியாவது சமாளித்துக் கொள்கிறார்கள். ஆனால், பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மிகக் கொடூரமானவை” என்கிறார் அந்தப் பெண். வறுமையின் அழுத்தம் விரக்தியான வார்த்தைகளில் வெளிப்படுகிறது, “இந்த தேசத்தை நாங்கள் நேசிக்கிறோம். நாங்கள் குடியேறிகள்தான். என்றாலும், யாருக்கும் குறையாத அளவுக்கு தேசபக்தி கொண்டவர்கள். இந்த தேசம் எங்களுக்கு நீதி வழங்கவில்லை என்றாலும் நாங்கள் இந்த தேசத்தை நேசிக்கவே செய்கிறோம்” என்கிறார் ஔல்ஃபா.
தனது பயணத்தில் கருப்பினத்தவர்கள் வசிக்கும் பகுதியில் நிலவும் போதைப் பொருள் பழக்கத்தையும், போதை மாஃபியா கும்பலையும் சந்திக்கிறார் இயக்குநர்.

”நான் பிரான்சுக்கு வந்த முதல் 25 ஆண்டுகள் கொடூரமான வறுமையில் கழிந்தது. சில நாட்கள் சாப்பிடுவதற்கு கூட ஒன்றும் கிடைக்காது. மாஃபியா கும்பலில் சேர்வதெல்லாம் எங்களுடைய விருப்பத் தெரிவு அல்ல. நாங்களும் அலுவலகங்களில் கணினிகளின் முன் அமர்ந்து வேலை செய்யவே விரும்புகிறோம். ஆனால், அந்த வாய்ப்புகள் எங்களுக்கு மறுக்கப்படுகின்றன. எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. எனது பெற்றோரும் எனக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள். வறுமை என்பது அத்தனை சுலபமானது அல்ல” என்கிறார் அந்த மனிதர். அவர் போதை மருந்து கும்பலைச் சேர்ந்தவர். தனது முகத்தை கருப்புத் துணியால் மறைத்துக் கொண்டு ஆவணப்பட இயக்குனருக்குப் பேட்டியளிக்கிறார்.
பிரான்சில் குடியேறிகளின் வாழ்க்கை ஏராளமான சவால்கள் நிறைந்தது. அர்ஜெண்டேய் எனும் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த தௌஃபிக் ஒரு தற்காப்புக் கலை ஆசிரியர். நண்பர்களோடு சேர்ந்து ஒரு பயிற்சிப் பள்ளி நடத்தி வருகிறார். சிறுவயதில் அடக்க ஒடுக்கமான பையனாக வளர்க்க இவரது பெற்றோர் நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். “இங்கே நிலவும் சூழல் உங்களை அமைதியானவனாக இருக்க அனுமதிக்காது. ஒரு கட்டத்தில் எனக்கும் பொறுமை இழந்து வன்முறைப் பாதையைத் தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது அதில் இருந்தெல்லாம் விலகி வந்துள்ளேன்” எனக் கூறும் தௌஃபிக், தனது நண்பர்களின் 80 சதவீதம் பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மீதி 20 சதவீதம் பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கிறார்.
பாரீசில் மட்டும் சுமார் 55 லட்சம் இசுலாமியர்கள் வசிக்கின்றனர். அதில் பெரும்பான்மையானோர் வளர்ச்சியடையாத புறநகர்ப் பகுதிகளிலேயே வசிக்கின்றனர். ஏழைகளை அவர்களது வாழ்விடத்தில் இருந்து விரட்ட புதுமையான முறை ஒன்றைக் கையாள்கிறது பிரான்ஸ் அரசு. தெரிவு செய்யப்பட்ட புறநகர்ப் பகுதிகளை மேம்படுத்துவதாகக் கூறி ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் நிலங்கள் ஒப்படைக்கப்படுகின்றன. அந்த நிலங்களில் எழும்பும் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை குடியேற்ற மக்கள் காசு கொடுத்து வாங்கிக் கொண்டு கவுரவமான வாழ்க்கை வாழ்ந்து கொள்ளலாம் என்பது அரசின் திட்டம். வீடு வாங்குவதற்கு காசில்லாதவர்களின் நிலை? ’மேம்படுத்தப்பட்ட’ பகுதிகளில் வீடுகள் வாடகைக்கு விடப்படுவதில்லை என்பதால் அவர்கள் வெளியேறுவதைத் தவிற வேறு வழியில்லை.
தனது ஆவணப்படத்திற்காக லீ மோண்ட் பத்திரிகையில் பணிபுரியும் ஆலென் கேரெஷ்ஷை சந்திக்கிறார் இயக்குனர். இசுலாமியர்களின் தரப்பை நியாயமான முறையில் எடுத்துக்கூற பத்திரிகைகள் தவறி விட்டதெனக் கூறும் ஆலென், “ஐ.எஸ்.ஐ.எஸ், நீங்கள் பிரெஞ்சு முசுலீம்கள் அல்ல; முதலில் முசுலீம் அப்புறம் தான் பிரெஞ்சு குடிமகன் என்கிறது. இதையே தான் பிரான்சு அரசாங்கமும் நடைமுறையில் செய்கிறது. இசுலாமிய மக்களைக் குடிமக்களாக கருதாமல் அவர்களின் மத அடையாளத்தைப் பிராதனப்படுத்துகிறது. இதில் இருந்து தான் எல்லா பிரச்சினைகளும் துவங்குகின்றன” என்கிறார்.
சிறுபான்மை மக்கள் மட்டுமின்றி இதர ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் அனைவருமே அன்றாடம் சந்திக்கும் துன்பங்களின் ஒரு குறுக்கு வெட்டுச் சித்திரத்தை வழங்கும் இந்த ஆவணப்படத்தை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.
நன்றி : அல்ஜசீரா இணையதளத்துக்காக அப்துல்லா எல்ஷமி எடுத்த ஆவணப்படம்