தோ, அந்த ஆற்றின் வளைவில் இருப்பதுதான் என்னுடைய வீடு” என்று தன்னுடைய நண்பனின் கைப்பேசியில் உள்ள கூகிள் வரைபடத்தில் காட்டுகிறான் 13 வயதான முகேஷ். அதில் தங்களுக்குப் பரிச்சியமான காவல் நிலையம், கோயில் மற்றும் பாலம் உள்ளிட்ட நினைவிலிருக்கும் தனது கிராமத்தின் புகைப்படங்களை தங்களது விரல்கள் மூலம் பெரிதாக்கியும் சிறிதாக்கியும் ஒப்பிட்டு அடையாளம் கண்டு உற்சாகமானார்கள்.

புதுத்தெருவின் (Nai Sarak) நுழைவில் 15 மீட்டர் நீளமான அந்த வளைந்த நடைபாதையெங்கும் வீட்டைப் பிரிந்திருப்பவர்களின் சோகம் சூழ்ந்திருக்கிறது. பீகாரின் முசாபர்நகரில் உள்ள தங்களது வீடுகளிலிருந்து ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இடம்பெயர்ந்திருக்கும் முகேஷ் உள்ளிட்ட 45 அகதிகளுக்கு சாவ்ரி பஜாரின் (Chawri Bazaar) மூலையில் இருக்கும் அந்த பழைய தில்லியின் மொத்த காகிதச் சந்தைதான் அடுத்து வரும் இரவுக்கு புகலிடம் கொடுக்கவிருக்கிறது. கடுமையான எடை கொண்ட பொருட்களை சுமந்து பாரவண்டிகள் மூலம் அவற்றை கடைகளுக்கும், பண்டகசாலை மற்றும் கிடங்குகளிலிருந்து சரக்கு மிதிவண்டி மற்றும் சரக்கு ஆட்டோக்கள் மூலம் தொடர்வண்டி நிலையத்திற்கும் கொண்டு சேர்க்கும் எண்ணிறந்த சுமை தூக்கும் தொழிலாளிகளில் (jhalliwallahs) அவர்களும் ஒரு பகுதியினர்.

நடைபாதை வியாபாரிகள், விளம்பர அட்டைகள், உறங்குபவர்கள் என நடைபாதையை ஆக்கிரமித்துள்ள அனைத்தையும் காலி செய்யச் சொன்ன உச்சநீதிமன்ற ஆணையின்படி நகராட்சி அலுவலர்களால் புதுத்தெரு தூய்மைப்படுத்தப்பட்டுவிட்டது. நெகிழி சாக்குகள், கயிற்றுத்துண்டுகள், காகித சுருள்கள் மற்றும் கோப்புகளை பொட்டலம் கட்டத் தேவையான பொருள்களும் அவற்றில் அடங்கும். மெத்தை மடிப்புகள் மற்றும் சொந்த பயன்பாட்டு பொருட்கள் – மாற்று உடைகள் மற்றும் உணவு தயாரிக்க மற்றும் பரிமாறத் தேவையான தட்டுமுட்டு பாத்திரங்கள் என்று சந்து பொந்தெங்கும் காணப்படுகின்றன.

நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட சிறு குழுவினர் மண்ணெண்ணெய் அடுப்புகளில் தங்களுக்கு தேவையான ஒன்றை சமைக்கின்றனர். ஞாயிறைத் தவிர மற்ற நாட்களில் பகலில் கடுமையாக உழைப்பதற்கு பயிறு, அரிசி, காய்கறிகளையும், ஒரு கோப்பை பாலினையும் நாள்தோறும் உணவில் சேர்க்கும் நல்வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இந்தியாவின் உள்நாட்டு அகதிகள்

மேற்கு வங்கம் மற்றும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த அகதிகள் சாவ்ரி பஜாரின் பிற பகுதிகளிலும் தங்கியுள்ளனர். முகலாய கஸ்பாவின் (Mughal Kasbah) ஒவ்வொரு வளைவு மற்றும் சந்தின் கால் பகுதிகளில் அவர்கள் தங்கியுள்ளனர். ஆனால் ஏற்கனவே நடைபாதையில் அபாயகரமான உரிமைப் பிரச்சினை இருப்பதால் இன்னும் எவ்வளவு காலம் அங்கு தாக்குப்பிடிக்க முடியும் என்ற சந்தேகங்களும் அவர்களுக்கு எழுகின்றன.

எண்ணிறந்த நடைபாதை வியாபாரிகளையும் முறைசாரா தொழிலாளர்களையும் வேலையை விட்டுத் துரத்திய நீதிமன்றத்தின் ஆணை, 19  மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதும் ஏழை எளிய மக்களை பேரிடருக்கு தள்ளிய மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை குறித்து எதுவும் கேட்கவில்லை.

“நாங்கள் ஏதிலிகள்: அனைத்தையும் இழந்தவர்கள்” என்று பருப்புக்குழம்பைக் கிளறிக்கொண்டிருந்த மாஸ்டர்ஜி அதை நிறுத்தி குரலை உயர்த்தி பேசினார். “நாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள். மற்றவர்களின் இரக்கத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள். அனைத்து நம்பிக்கையும் இழந்த பிறகு உதவிக்கு கடவுளைத்தான் எதிர்பார்க்கிறோம்” என்று மேலும் கூறினார்.

“பீகாரில் எங்கள் பகுதியில் ஏற்படும் வெள்ளம் இடம்பெயர்வதற்கு எங்களை தயார்படுத்தியிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலையோரத்தில் தார்த்துணி கூடாரத்திலோ அல்லது மழைக்காலத்தில் கரை புரண்டோடும் பாக்மதி ஆற்றங்கரையிலோ வாழ நேரும்போது உங்களது பொருட்களை கட்டிக்கொண்டு விரைவாகவும் பாதுகாப்பாகவும் வேறொரு பகுதிக்குச் செல்ல நீங்கள் கற்றுக்கொள்கின்றீர்கள்” என்று அந்த குழுவில் அதிகம் கற்றவரும், வயதில் மூத்தவருமான மாஸ்டர்ஜி-யின் பேச்சுக்கு கூச்சம் கலந்த புன்னைகையுடன் விளக்கமளித்தார் இராம்நாத்.

இந்தியாவின் உள்நாட்டு அகதிகள்ஒவ்வொரு வெள்ளத்தின் போதும் தேசிய பேரிடர் நிவாரணப்படையினர் ஹெலிகாப்டர் மூலம் போடும் உணவுப்பொட்டலத்தை பற்றிய மாஸ்டர்ஜியின் இந்த மேலோட்டமான பேச்சு அவரது பகுதியிலிருந்து வரும் ஒவ்வொருவரின் பொதுவான சித்திரமாக இருக்கிறது.

பிரவ்ச்சா (Pirauchha) கிராமத்தில் ஒரு தொடக்கப்பள்ளியில் சிறிது காலம் ஆசிரியராக பணியாற்றியதே ‘மாஸ்டர்ஜி’ பட்டத்திற்கான காரணம். மாஸ்டர்ஜி தங்கியிருக்கும் நடைபாதையின் ஒரு பகுதியில் தங்கியிருக்கும் பெரும்பாலானோர் அந்த கிராமத்திலிருந்துதான் வந்திருக்கின்றனர். எந்த சூழ்நிலையில் மதிப்புமிக்க அந்த வேலையை அவர் பறிகொடுத்தார் என்பதை அவர் சொல்லவில்லை என்றாலும் ஒரு மனிதனின் நல்வாய்ப்பு எப்படி திடீரென தலைகீழாக புரளக்கூடும் என்பதற்கு அவருடன் தங்கியிருக்கும் இளைஞர்கள் அவரையே எடுத்துக்காட்டாக காட்டுகின்றனர்.

இராம்நாத்தும் பிரவ் சச்சாவிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அசியா ஜரங்கை சேர்ந்த அவரது நான்கு நண்பர்களும் இன்னும் சற்றுத்தொலைவில் உள்ள சந்தையில் வேலை செய்கின்றனர். அங்கு பெரும்பாலும் கிழக்கு உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த அகதிகளே வேலை செய்வதாக அவர்கள் கூறினர். ஆனால் வேலையிலிருந்து திரும்பிய பிறகு அவர்களுடன் சேர்ந்தே இரவில் தங்குகின்றனர்.

வேலை குறைந்த மதிய நேரங்களில் சமீபத்தில் மூடப்பட்ட ஜாமியா உணவகத்தின் அலங்கார வளைவுகளின் கீழே அவர்களைப் பார்க்க முடியும். ஒட்ட நறுக்கிய தலைமுடி, கசங்கிய பருத்தி சட்டைகள் மற்றும் புகையிலை கறை படிந்த வாய்களைப் பார்க்கும் போது அவர்கள் மாலுமிகள் போல இருக்கிறார்கள். உண்மையில் இந்த அகதிகள் கங்கை சமவெளியில் இருந்து கடல்களை கடந்து மொரீசியஸ் அல்லது டிரினிடாட் மற்றும் டொபாகோ சென்ற அகதிகளின் வாரிசுகளே. அடிமைகளுக்கு பதிலாக இவர்களின் முன்னோர்களை கரும்புத்தோட்டங்களில் வேலை செய்ய வெள்ளையர்கள் 1830-களில் ஈடுபடுத்தினர்.

பீகாரின் துக்கம் என்றழைக்கப்படும் பாக்மதி (Bagmati), கண்டகி (Gandak) மற்றும் கோசி (Kosi) ஆகிய இமயமலை ஆறுகளின் வெள்ளங்கள் பீகாரின் சமவெளிப்பகுதி மக்களை பல தலைமுறைகளாக புலம்பெயரச் செய்திருக்கிறது. குறுகிய பார்வை கொண்ட பொறியியல் தலையீடுகள் மற்றும் வெள்ளப்போக்கை கட்டுப்படுத்த ஒதுக்கப்பட்ட நிதியாதாரத்தில் நடைபெற்ற ஊழல்களால் சூழ்நிலை மிகவும் மோசமாகி வெளியேறும் மக்களின் எண்ணிக்கையை அதிகமாக்கிவிட்டது.

சீதை பிறந்த ஊராக நம்பப்படும் சீதாமர்ஹி (Sitamarhi) அருகே பாக்மதி ஆற்றின் மீது அணைக்கட்டும் பழைய திட்டம் ஒன்று தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. சீதாமர்ஹிக்கு 70 கிலோமீட்டர் தெற்கே உள்ள பிரவ்ச்சாவின் குடிமக்களுக்கு அவர்களது குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் அனைத்தும் அணை கட்டவிருக்கும் பகுதிக்குள் இருப்பதால் இழப்பீட்டை வாங்கிக்கொண்டு இடத்தை காலி செய்ய வேண்டும் என்ற அரசின் அறிவிப்புகள் இந்த ஆண்டின் துவக்கத்தில் வந்துள்ளன.

“எங்களது வளமான விளைநிலங்களுக்கு அதன் பாதி மதிப்பிலான இழப்பீடுகளை ஏற்றுக்கொண்டு எங்களது வீடுகளில் இருந்து துரத்தியடிக்கப்படுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். கோடை பயிர் வீணாகிப்போவதோ அல்லது வீட்டிலிருந்து வெகுதூரத்தில் இப்படி அவலமான நிலைமைகளில் வேலை செய்வதோ கூட இதைவிட மோசமில்லை” கூட்டமிகு துணிச்சந்தையை தனது சோர்வுற்ற கண்களால் அலசியவாறே மதன் கூறினார்.

ஞாயிற்றுகிழமைதான் அவர்களுக்கு ஒரே ஓய்வு நாள். அன்று, இரமலான் வழிபாட்டாளர்கள் கூட்டத்தின் மத்தியில் தன்னுடன் வேலை செய்பவர்கள் சிலரைக் கூட்டிக்கொண்டு மல்யுத்த போட்டியைக் காண மதன் சென்று கொண்டிருக்கிறார். மீனா பஜார் அருகேயுள்ள அந்த சிறிய அரங்கிற்கு வந்தபோது இரமலான் நோன்பு நடப்பதால் 30 நாட்களுக்கு மல்யுத்த போட்டி நிறுத்தப்பட்டுள்ளதாக அவர்களிடம் கூறப்பட்டது. “மல்யுத்த வீரர்கள் முஸ்லிம்கள் என்று தெரிந்திருந்தால் நாங்கள் இங்கே வந்திருக்க மாட்டோம்” என்று கிட்டத்தட்ட மன்னிப்பு கேட்கும் தொனியில் மதன் கூறினார். கலவையான மல்யுத்த வீரர்களை கொண்ட பிரபலமான விளையாட்டு போட்டி நடக்கும் பழைய டெல்லியின் இந்த அரங்கம் சமூக நல்லிணக்கத்திற்கு உறுதியில்லாத காட்சியாக விளங்குகிறது.

இந்தியாவின் உள்நாட்டு அகதிகள்இந்நிலையில் மதனின் இக்கருத்து டெல்லி போன்ற நகரங்களுக்கு புலம் பெயர்ந்திருக்கும் அகதிகளுக்கு ஒரு உலகக்கண்ணோட்டத்தை அளிக்கிறது. ஆற்று வெள்ளத்தாலும், சாதி அடையாளங்களாலும் எதிரிகளின் கருத்துக்களாலும் ஆண்டாண்டுகளாக பாதிப்புக்குள்ளாகும் வாழ்க்கையில் இது அவர்களுக்கு ஒரு உறுதியான இணக்கத்தை அளிக்கிறது. மேலும் இன்றைய இந்தியாவின் இனவாத வன்முறைகள் நிறைந்த சூழலில், புலம் பெயர்ந்த அகதிகள் பலர் போராளி இயக்கங்களின் ஆதரவாளர்களாகவும் உள்ளனர்.

வெளிச்சமற்று அழுக்கடைந்த சாவ்ரி பஜாரின் அந்த நடைபாதையில் கூட யாதவர்களுக்கும் தாழ்த்தப்பட்ட சாமர்களுக்கும் (Chamars) இடையே நான்கடி இடைவெளி இருக்கிறது. சாதியரீதியிலான வாக்களித்தல் இந்திய ஜனநாயகத்திற்கும் பொருத்தமில்லாமல் இருப்பதாக பிரவ்ச்சா மற்றும் அசியா ஜரங்கை சேர்ந்த யாதவ சாதியினர் ஒருவேளை கூறலாம். ஆனால் அருகேயிருக்கும் சாமர்ஸ் சாதியினரிடம் ஏன் உணவு தீண்டாமை பார்க்கின்றீர்கள் என்று அவர்களிடம் கேட்டுப்பாருங்கள். அவர்களது பகைமை உணர்வு இயற்கையின் மாறா விதிகள் போல இருப்பது தெரியும். அவர்களுக்கு இரண்டு விசயங்கள் மட்டுமே உறுதியானது: சாதிப்பாகுபாடு மற்றும் ஆற்று வெள்ளங்கள்.

இந்தியாவின் உள்நாட்டு அகதிகள்இது திங்கள்கிழமை மாலை 7:30 மணி. முகேஷும் அவனது இளம் வயது முதலாளியும் புதுத்தெருவின் வளைவுகளைத் தாண்டிய சந்தில் உள்ள ஒரு தெருவோரக் கடையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். காபி தயாரிக்கும் அந்த பளபளக்கும் இயந்திரம்தான் அவர்களிடம் இருக்கும் விலை மதிப்பில்லா ஒரே பொருள். முகேஷ் தூய்மைப்படுத்துவதில் மும்முரமாக ஈடுப்பட்டிருக்க அவனது முதலாளி அன்றைய வருமானத்தை எண்ணிக்கொண்டும், ஆர்டர்களுக்காக பயன்படுத்தும் தொலைபேசியை எடுத்து வைத்துக் கொண்டும் இருந்தார். அடுக்கடுக்கான காகித தம்ளர்கள், குடுவைகள், தேனீர் மற்றும் காபித்தூள் குடுவைகள் மற்றும் மர நாற்காலியின் அடியில் முகேஷின் பலவீனமான சிறிய உருவம் தற்போது மறைந்து விட்டது. அந்த பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு அருகேயுள்ள கிடங்கிற்கு அவற்றை எடுத்துச் செல்கிறான் முகேஷ்.

இதற்கிடையில் கிடங்கிலிருந்து மிதிவண்டியில் ஏற்றுவதற்காக 40 கிலோ சுமையை முகேஷின் அண்ணனான மதன் சுமந்து கொண்டிருந்தார். காலை முழுவதும் காத்திருந்தும் வேலை கிடைக்காமல் இருந்ததால் கிடைத்த இந்த வேலையை சோர்வடையும் வரை செய்வதில் அவருக்கு மகிழ்ச்சி. மூச்சை இழுக்க சற்றே நிற்கிறார். தன்னுடைய புருவத்தில் இருந்து வடியும் வியர்வையைத் துடைத்துக்கொண்டே தன்னுடைய தம்பிக்கும் வயதான உறவினர் ஒருவருக்கும் இடையேயான தகராறை எப்படி தீர்ப்பது என்று யோசிக்கிறார்.

“அவனுக்கு இங்கே என்ன வாய்ப்புகள் இருக்கின்றன?” என்ற கேள்விக்கு, “எனக்குத் தெரியவில்லை. எங்களது ஊரில் அவனுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை. எப்போதுமே சச்சரவுதான். பள்ளிக்கூடமும் செல்லமாட்டான். அதனாலேயே அவனை இங்கே அழைத்து வந்து விட்டேன்” என்று அவர்களிருவருக்கும் இரவு உணவு தயாரித்துக் கொண்டே மதன் கூறினார்.

இந்தியாவின் உள்நாட்டு அகதிகள்முன்பு டீக்கடை பையனாக டீ விற்றதாகக் கூறிய மோடி, அதை 2014 பொது தேர்தலின் போது வெற்றிகரமாக சந்தைப்படுத்தினார். அவரது கட்சி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி விட்டது. இன்று அமெரிக்க பாணியிலான தகுதியுள்ளவனுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது பற்றியும், வெற்றியாளன் அனைத்தையும் எடுத்துக் கொள்வது பற்றியும் மேட்டுக்குடியினர் அங்கலாய்க்கும் அதே நேரத்தில் பாதிக்கப்படுபவர்களும் ஏழை மக்களும் மிகச்ச்சாதாரணமாக கைவிடப்படுகின்றனர். இந்தியாவின் இதயமான கிராமப்புற ஏழை மக்கள் துன்பக்கடலில் மூழ்கடிக்கா வண்ணம் ஏற்படுத்தப்பட்ட மிகக்குறைந்த சமூக நலத்திட்டங்கள் கூட இன்று அழிக்கப்படுகின்றன. இந்நிலையில் தேநீர் விற்கும் முகேஷிற்கு என்ன வாய்ப்பு இருக்கப் போகிறது?

மே மாத கத்திரி வெயில் சற்றே குறையத்தொடங்கிய அந்த நேரத்தில் ஆற்றை நோக்கியிருக்கும் அவனது வீட்டைப்பற்றி முகேஷ் கூறிக்கொண்டிருக்கும் போது அவனை விட சற்றே வயது குறைந்த அவனது நண்பன் கூறத்தொடங்கினான். “கங்கைத் தாயின் கரையிலிருந்து பார்க்கும் போது வலப்புறமாக வீடு உள்ளது. மாலை நேரத்தில் வீசும் தென்றல் காற்று மிகவும் அற்புதமாக இருக்கும் ” கண்களை மூடி மனதில் அதை உணர்ந்தவனாக கூறினான்.

இந்தியாவின் உள்நாட்டு அகதிகள்” அவனது (முகேஷின்) வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் மதகு ஒன்று உள்ளதை நீங்கள் பார்க்கலாம். மழைக்காலங்களில் அதிலிருந்து ஏராளமான நீர் பீறிட்டு வெளியேறும்” என்று கூறினான் அவன்.

கார்காலத்தில் அந்த மதகு ஆபத்தானதா என்று நான் முகேஷை கேட்கிறேன். சிறிது நேரம் யோசித்துவிட்டு ”நீங்கள் எங்கு நிற்கின்றீர்கள் மற்றும் எந்த பக்கத்திலிருந்து அதைப் பார்கிறீர்கள் என்பதைப் பொருத்தது அது” என்று அவன் பதிலளிக்கிறான்.

-வினவுச் செய்திப் பிரிவு

1 மறுமொழி

  1. இந்தியா முழுவதும் உள்நாட்டு அகதிகளின் முகாமாக மாற்றப்படுகிறது.சேலம் TO சென்னை 8 வழிச்சாலையினால் விரைவான உள்நாட்டு அகதிகள் முகாம் உருவாகிறது.இது ஒரு தொடர் கதையாகிறது.
    இந்த ‘அகதிகள்’ அரசியலாக ஒன்றுபட்டவுடன் அனைவருக்குமான இந்தியா என்ற தேசம் கைகூடும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க