முறைகேடாக நிலத்தை விற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கார்டினல் ஜார்ஜ் அலெஞ்செரி மீது வாடிகன் நடவடிக்கை எடுத்து சில வாரங்களே ஆன நிலையில் கத்தோலிக்க பாதிரி ஒருவர் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளால் கேரள கத்தோலிக்க திருச்சபை ஒன்று ஆட்டங்கண்டுள்ளது.

ஜலந்தரைச் சேர்ந்த பாதிரியார் பிராங்கோ முலக்கல் 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தன்னை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக 46 வயதான கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி காவல்நிலையத்தில் புகாரளித்தார். பஞ்சாப்பின் ஜலந்தரை சேர்ந்த இயேசு திருச்சபை சமயப்பரப்பு அமைப்பின் உறுப்பினராக அந்த கன்னியாஸ்திரி உள்ளார். அந்த இயேசு திருச்சபை கேரளாவில் கோட்டயத்தை சேர்ந்த குரவிலங்காடு மற்றும் கண்ணூரைச் சேர்ந்த பரியாரம் ஆகிய இரண்டு இடங்களில்  மடங்களை நிர்வகித்து வருகிறது.

அதில் ஒரு மடத்தை சேர்ந்தவர்தான் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அந்த கன்னியாஸ்திரி. அந்த மடத்தில்தான் பாதிரி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாலியல் பலாத்காரம் நடந்ததாக கூறப்படும் நாட்களில் பாதிரியார் அங்கு இருந்ததை மடத்தின் பார்வையாளர் நாட்குறிப்பும் உறுதி செய்கிறது.

பாதிரிகளின் பாலியல் வன்முறை
பாதிரி பிராங்கோ முலக்கல்

அந்தக் குற்றச்சாட்டை பிராங்கோ முலக்கல் மறுத்துள்ளார். கன்னியாஸ்திரி மீதான விசாரணைக்கு உத்தரவிட்டதற்காக அவர் பழி வாங்குவதாக கூறியிருக்கிறார். “தன்னுடைய கணவருடன் அந்த கன்னியாஸ்திரி தொடர்பு வைத்திருப்பதாக கூறி ஒருப் பெண்ணிடம் இருந்து எனக்கு ஒரு புகார் வந்தது” என்று பிராங்கோ கூறினார்.

கன்னியாஸ்திரியின் குற்றச்சாட்டை முன்கூட்டியே தடுத்து நிறுத்தும் நோக்கில் தமது பிரார்த்தனை கூட்டத்தை சேர்ந்த நான்கு கன்னியாஸ்திரிகளும் அவர்களது உறவினர்களும் சேர்ந்து பிராங்கோ முலக்கலை கொலை செய்ய திட்டமிட்டதாக குற்றஞ்சாட்டி ஜலந்தர் மறை மாவட்ட திருச்சபையின் தகவல் தொடர்பு அதிகாரியான பீட்டர் கவம்பட் கோட்டயம் காவல்துறை கண்காணிப்பாளரான அரி சங்கரிடம் ஒரு வழக்கைப் பதிவு செய்திருந்தார்.

“பாதிரி மீது கன்னியாஸ்திரி கொடுத்த பாலியல் பலாத்கார புகார் மீது ஒரு வழக்கும் கன்னியாஸ்திரி மற்றும் அவரது கூட்டாளிகள் பாதிரியை கொலை மிரட்டல் புகார் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றும், இரண்டு வழக்குகளையும் ஆய்வு செய்து வருவதாகவும் சங்கர் கூறினார்

வியாழக்கிழமை அன்று கோட்டயம் நீதிமன்ற நீதிபதியின் முன்பு தன்னுடைய குற்றச்சாட்டை பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி மீண்டும் பதிவு செய்தார். மேலும்  பாதிரி தனக்கு உள்நோக்கத்துடன் அனுப்பிய குறுஞ்செய்தியையும் காவல்துறையிடம் பகிர்ந்திருக்கிறார்.

கேரளாவிற்கு வரவழைத்து பாதிரியை விசாரிப்பதா அல்லது தற்போது அவர் இருக்கும் ஜலந்தர் சென்று விசாரிப்பதா என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறது போலீசு.

தொடரும் சர்ச்சைகள்

கேரளாவைச் சேர்ந்த பல்வேறு கிறித்தவ தேவாலயங்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஒன்றும் புதிதல்ல. 16 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கருவை கலைக்க முயற்சித்ததாக குற்றஞ்சாட்டி புனித செபஸ்டியன் தேவாலயத்தின் பாதிரி ராபின் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் போலீசால் கைது செய்யப்பட்டார். ஆனால் அந்த சிறுமிக்கு பின்னர் குழந்தை பிறந்தது. 9 வயதான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக இராஜு கோக்கேன் என்ற மற்றொரு பாதிரி 2014–ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

திருச்சூரை சேர்ந்த புதன்வெளிக்கராவில் உள்ள தன்னுடைய வீட்டில் 14 வயதேயான சிறுமியை பாதிரி எட்வின் பிகாரெஸ் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 2016-ம் ஆண்டில் அவருக்கு இரண்டு ஆயுள் தண்டனை விதித்து எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 2013-ம் ஆண்டில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்ததாக புனித ஸ்டானிஸ்லாஸ் தேவாலயத்தின் மதகுருவான ஆரோக்கியராஜ் மீது குற்றம் சாட்டப்பட்டது. பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்ட பாதிரி அந்த தேவாலயத்தில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் அவர் மீது போலீசில் எந்த வழக்கும் பதியப்படவில்லை.

இந்தியாவில் லத்தீன்,  சிரோ-மலபார் மற்றும் சிரோ-மலங்கரா தேவாலயங்கள் கத்தோலிக்க திருச்சபை நிர்வாகத்தில் வருகிறது. ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு 132 மறை-மாவட்டங்களும், சிரோ-மலபார் தேவாலயத்திற்கு 31 மறை-மாவட்டங்கள் மற்றும் சிரோ-மலங்கரா தேவாலயத்திற்கு 11 மறை-மாவட்டங்களும் இந்தியாவில் உள்ளன.

தேவாலய பாதிரிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள் என்பது மனவருத்தத்தை தந்ததாக சிரோ-மலபார் தேவாலயத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான அருட்தந்தை பால் தெலக்காட் கூறினார். “இது அதிகரித்து வருவது கண்டு நான் வருத்தமடைகிறேன். மேலும் இது தேவாலயத்திற்கு சவாலான ஒன்று” என்றும் கூறினார்.

பாதிரிகளின் பாலியல் வன்முறை
சகோதரி ஜெஸ்மி

கன்னியாஸ்திரிகளின் மீதான அத்துமீறல்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் சிறு பகுதி மட்டுமே வெளியே வந்திருக்கிறது என்று திருச்சூரை சேர்ந்த புனித மேரி கல்லூரியின் முன்னாள் முதல்வரான சகோதரி ஜெஸ்மி கூறுகிறார். “பல்வேறு திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகளின் நிலைமை படுமோசமாக இருக்கிறது” என்றார் அவர். மேலும் “நமது சமூகத்தின் பிற பெண்களது நிலையை விட அவர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தங்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது புகார் அளிக்கவாவது நமது சமூகம் இடம் கொடுக்கிறது. ஆனால் கன்னியாஸ்திரிகள், தங்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு மௌனமாக இருக்க வேண்டும். பலாத்காரம் செய்த பாதிரிகள் மீது கன்னியாஸ்திரிகள் புகாரளிக்காதவாறு அவர்களது முன்னோடிகள் பார்த்துக் கொள்கிறார்கள்” என்றும் கூறினார்.

மதர் கார்மிலைட்(Mother Carmelite) சபையில் பணியாற்றிய போது 33 ஆண்டுகளாக தனக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகள் மற்றும் மனரீதியிலான சித்திரவதைகளைப் பற்றிய தன்வரலாற்று நூலான “ஆமென், ஒரு கன்னியாஸ்திரியின் தன்வரலாறு” என்ற நூலில் விளக்குகிறார் தற்போது 62 வயதான ஜெஸ்மி. தேவாலயங்கள் தங்களது புனிதத்தன்மையை இழந்துவிட்டன என்று தேவாலயங்கள் சீர்திருத்த இயக்கமான “வெளிப்படையான தேவாலய இயக்கத்தின்” தலைவரான ரெஜி ஜல்லனி கூறினார். மேலும், “பாதிரிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் இகலோகத்தில் மூழ்கி விட்டனர். பாதிரிகளின் பணபலத்தையும் அரசியல் செல்வாக்கையும் கட்டுப்படுத்தினால் மட்டுமே தேவாலயங்களைத் தூய்மைப்படுத்த முடியும்” என்றும் அவர் கூறினார்.

குற்றச்சாட்டை கட்டமைத்தல்

சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நான் அஞ்சமாட்டேன் என்று மலையாள செய்தித் தொலைக்காட்சியான ஏசியாநெட்டில் கடந்த ஜூன் 30–ம் தேதி அன்று முலக்கல் கூறியுள்ளார். “சட்டம் தன்னுடைய கடமையை செய்யட்டும். நான் அதற்கு பயப்படவில்லை. நான் குற்றவாளி என்றால் நான் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். அனைத்து குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றத்தில் நான் எதிர்கொள்வேன்” என்றும் கூறினார்.

கன்னியாஸ்திரி ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டதாக 2016-ம் ஆண்டு புகார் தெரிவிக்கப்பட்டதாக பாதிரி கூறியுள்ளார். “ஒரு பெண்ணிடம் இருந்து அந்த புகார் வந்தது. அவரது கணவருடன் கன்னியாஸ்திரிக்கு தொடர்பு இருந்ததாக அந்த புகார் கூறியது. எனவே அதன் மீது விசாரணை நடத்த அந்த சபையின் தலைமை அருட்தாயிடம் கேட்டுக்கொண்டேன். அதன் பிறகு அந்த கன்னியாஸ்திரி எனக்கு எதிரி ஆகிவிட்டார். இப்போது அவர் என்னை பழி வாங்குகிறார்” என்று பாதிரி கூறினார்.

கன்னியாஸ்திரியின் அலட்சிய அணுகுமுறையால் அந்த விசாரணை முடிக்கப்படவில்லை என்று பாதிரி கூறினார். ”விசாரணை இன்னும் முடியாததால் ஜூலை 2-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறும் இல்லையென்றால் ஒழுங்கு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்றும் கன்னியாஸ்திரிக்கு சபையின் தலைமை அருட்தாய் எச்சரிக்கை கொடுத்திருந்தார். அவர் பதிலளிக்கவில்லை. மாறாக எனக்கு எதிராக புகாரளித்திருக்கிறார்” என்று அவர் கூறினார்.

ஆனால் ஜலந்தரில் இருந்து குரவிலங்காடு மடத்திற்கு வந்த விசாரணைக் குழுவின் புகைப்படத்தை முலக்கலின் வாதத்திற்கு எதிராக கன்னியாஸ்திரியின் குடும்பம் வெளியிட்டிருக்கிறது. “இந்த புகைப்படம் ஜூன், 2-ம் தேதி அந்த விசாரணைக்குழு மடத்திற்கு வந்த போது எடுத்தது” என்றார் கன்னியாஸ்திரியின் குடும்ப உறுப்பினர் ஒருவர். மேலும் “போலீசு நிலையத்தில் புகார் கொடுப்பதற்கு முன்னதாகவே தேவாலயத்தில் கன்னியாஸ்திரி புகாரளித்ததை இது உறுதிப்படுத்துகிறது. தேவாலயக்குழுவும் ஜூன் 30-ம் தேதிக்கு முன்னதாக தீர்வை கண்டுபிடிப்பதாக உறுதியளித்திருந்தது. தேவாலயம் நடவடிக்கை எடுக்காததாலேயே காவல்நிலையத்தில் அவர் புகாரளித்தார். ஆனால் பாதிரியோ தண்டனையில் இருந்து தப்பிக்க உண்மைகளை சிதைக்கிறார்.” என்றும் கூறினார்.

  • வினவு செய்திப் பிரிவு

நன்றி : ஸ்க்ரோல் இணையதளத்தில் அமீருதீன் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

1 மறுமொழி

  1. கன்னியாஸ்திரி என்பது இயற்க்கைக்கு முரணானது, பெண்கள் திருமணம் செய்து கொண்டு சர்ச்சில் வேலை செய்யலாம். எப்படி இருந்தாலும் ஆணும் பெண்ணும் கலப்பது நல்லதல்ல , கலந்தால் குழப்பமே மிஞ்சும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க