ழுத்துல பூ மாலை, நெத்தி நிறைய விபூதி, கன்னத்துல சந்தனம், குங்குமம், தோள்ல காவடி, நாக்குல அலகு, உடம்பச் சுத்துன ஈரச் சேலை… இந்த உருவத்தோட திருவிழா கூட்டத்துல என்னப் பாத்து சிரிச்சது சங்கீதான்னு என்னால சத்தியமா நம்ப முடியல.

உடம்பும் முகமும் அரும்பு மலராட்டம் ஒரு சேர இருப்பாளே, என்ன ஆச்சு இவளுக்கு? இவ வயசு பொண்ணுங்கள்லாம் சேலைக் கொசுவம் கலையாம நடக்கயில இவமட்டும் எதுக்கு இப்படி? இத்தன சின்ன வயசுல பக்தி பழமா நிக்கிறாளே, இவளுக்கென்ன வேண்டுதலு? யாருகிட்டையும் கேக்க முடியாம வாயடச்சு நின்னேன். திரும்பி வர்றேன்னு சைகை காட்டிட்டு போனா.

சங்கீதாவுக்கு கல்யாணம் ஆன நாலு வருசத்துக்கு பிறகு இந்த கோயில் திருவிழாவுலதான் பாத்தேன். ஒரே ஊரு, பக்கத்து வீடு, சின்ன வயசுலேருந்தே தெரியும்.

பெண் அவலம்அசோக வனத்து சீதயப் போல எப்போதும் அவ முகத்துல ஒரு சோகம் படர்ந்திருக்கும். ஆனா யாரு எது கேட்டாலும் பட்டுன்னு சிரிச்ச மொகத்தோட பதில் சொல்லுவா. அவ்வளவு ஏங்க! சங்கீதாவ பத்தி ஒரு வரியில சொல்லனுன்னா இவ நம்ம வீட்டு பொண்ணா இருக்கக் கூடாதான்னு  நெனைக்கத் தோனும்.

சங்கீதாவும் அவ தங்கச்சியும் சின்ன வயசா இருக்கும் போதே அப்பா குடும்பத்த விட்டுட்டு வேற ஒரு பெண்ணு கூட தொடர்பு வச்சுகிட்டு அங்கேயே போயிட்டாரு. அதுவும் கண் காணாத எடத்துல இல்லிங்க, நூறடி தூரத்துலதான். அந்த கொடுமைய சகிச்சுகிட்டு வாழ்ந்தாங்க அவங்க அம்மா. ஆம்பளன்னா அப்படிதான் இருப்பான்னு சப்பகட்டு கட்டுனாங்க சொந்த பந்தமெல்லாம். இதனால கூனி குறுகிப் போன சங்கீதா மத்தவங்க கிட்ட இருந்து ஒதுங்கியே இருந்தா.

அவளப் பத்தின நினைவோட காட்டு கோவில்லருந்து நான் மெதுவா நடந்து வீட்டுக்கு வரங்காட்டி அவ ஓட்டமும் நடையுமா என்ன வந்து சேந்துட்டா.

“நல்லா இருக்கிங்களாக்கா ? பதிலுக்கு என்ன நீங்க அப்படி கேட்டுடாதீங்க. இத்தன வருசம் கழிச்சு பாக்கற உங்ககிட்ட நல்லா இருக்கேன்னு பொய் சொல்ல முடியாது.”

அவ போட்டுருந்த ஆன்மீக அலங்கோலத்த கலச்ச பிறகும் என்னால் ஒத்துக்க முடியல சங்கீதாதான்னு.

“என்னாக்கா புதுசா பாக்குறா மாறி அப்படி பாக்குறீங்க. புரிஞ்சு போச்சு.! என்னடா நாம பாக்கும் போது கொத்தரங்கா மாறி இருந்தாலே இன்னைக்கி பெரிய கோயில் நந்தி போல இருக்காளேன்னு பாக்கிறீங்க. அதானே?”

அவ படிச்ச படிப்புக்கும் போட்டுருந்த கோலத்துக்கும் பொருத்தமே இல்ல. ஏண்டி இப்படின்னு கேட்டா இந்த எடத்துலேயே அழுதுடுவா.. அதுமட்டும் நிச்சயம். என்ன சமாதானப் படுத்த அவ சமத்தா பேசுரான்னு மட்டும் புரிஞ்சது. காலையிலேருந்து பச்சத்தண்ணி பல்லுல படாமெ விரதமிருந்து ஊரச் சுத்தி காவடி தூக்கி அசதியா இருந்தவள அழ வைக்க மனசில்ல. அவளே பேசட்டுன்னு நிதானமா இருந்தேன்.

“ஒரு பொண்ணுக்கு பெரிய சந்தோசம் கொழந்த பிறக்குறது. பெரிய துன்பம் குழந்தை இல்லாம இருக்குறது. ஆசையா பெத்துக்க வேண்டிய குழந்தைய கடமைக்காக பெத்துக்கிட்டா போதுன்னு நெனைக்க வச்சுட்டாங்க. பிள்ளைய பெத்துக்கறதுக்காக என்னோட உடம்ப பழுது பாத்து பழுது பாத்து… இப்ப எல்லா பாகமும் பஞ்சராப் போயி நிக்கிறேன்க்கா.

எனக்கு கொஞ்சம் தைராய்டு இருக்குன்னு உங்களுக்கே தெரியும். அத பிரச்சனையா நெனச்சி குழந்த பெத்துக்க முடியாத நோயா பாக்க ஆரம்பிச்சுட்டாங்க வீட்டுக்காரரும், மாமியாரும். எப்பையுமே இருக்கும் இந்த பிரச்சனை, பீரியடு டயத்துல வீடு பூகம்பமா மாறும், இல்ல மயான அமைதி இருக்கும்.

நாள் கடந்து போறத பொறுக்க முடியல அவங்களால. அடுத்தடுத்த டாக்டர் வைத்தியம்னு கூட்டிட்டு போயிட்டே இருந்தாங்க. கர்பப்பை சுத்தம், கர்பப் பையில நீர் கோத்துகிட்டு கட்டி இருக்குன்னு மூனு தடவ வயித்துல ஓட்ட (லேப்ராஸ்க்கோபி மருத்துவம்), ஏகப்பட்ட மருந்து, மாத்தரய சாப்புட்டு ரெண்டே வருசத்துல உடம்பு ஊதி போச்சு.  இப்ப ரணமா இருக்கு. இப்ப உடம்ப கொறைச்சாதான் கொழந்த பொறக்குமுன்னு சொல்றாங்க. சொல்லப்போனா படிச்ச எனக்கே தெரியல எந்த மாத்திரய எதுக்கு சாப்புடறேன்னு.

அலோபதி மருத்துவத்தோட கிராமத்துல யாரெல்லாம் கொழந்த இல்லன்னு பச்சல மருந்து குடுக்குறாங்களோ எல்லாத்தையும் குடிச்சிட்டேன். பத்தாதத்துக்கு அம்மன் கோயில்லேருந்து அய்யனாரு கோயிலு வரைக்கும் பால்கொடம் காவடி எல்லாம் அமர்க்களமா போயிட்டு வாரேன்.”

உன் வீட்டுக்காரரு வெளி நாடெல்லாம் போயி வந்தவராச்சே அவருமா இதுக்கெல்லாம் ஆமோதிக்கிறாரு.

“அய்யோ அய்யோ. அக்கா அவருக்கு கிடச்ச நாலு மாச லீவுல நான் கர்பமாயிட்டா எனக்கு பொறுப்பான வேலைய கொடுத்துட்டு நிம்மதியா போகலாமுன்னு சொன்னவரே அவருதான். கொழந்த இருந்தா அத வளர்க்குற வேலையில எம்மனசு அப்புடி இப்புடி அலையாது அப்படிங்கற கீழ்த்தரமான புத்தி அந்த ஆளுக்கு.

பெண் அவலம்
மாதிரிப் படம்

கல்யாணம் முடிஞ்சு நாலு மாசத்துலேயே தெரிஞ்சுருச்சு பக்கா குடிகாரன்னு. கொழந்தைக்காக ரெண்டு பேருமேதான் டாக்டர்கிட்ட போனோம். அவருக்கும் சில குறைபாடு இருக்குன்னு சொல்லி மருந்து கொடுத்தாங்க. மாசத்துல பத்து நாள் மருந்து சாப்பிடும் போதாவது சாராயம் குடிக்காம இருக்கனுமுன்னு டாக்டர் சொல்றாங்க. ஆனா அவரால பத்து நாள் குடிக்காமெ இருக்க முடியல.

அம்மாட்ட வந்து சொன்னா யாருதான் குடிக்காம இருக்கான்னு சமாதானம் சொல்றாங்க. சரி அவன திருத்தலான்னா, உங்க அப்பனே குடிகார பொம்பளப் பொறுக்கி, நீ எனக்கு பாடம் எடுக்க எந்த தகுதியும் கெடையாதுன்னு அசிங்கப்படுத்துறான்.”

சாதி, பணம் படச்ச பெரிய இடத்து கூட்டத்த சேந்த ஏழை பொண்ணு சங்கீதா. சாதி, பணத் திமிர்ல குடி, பொம்பள சவகாசம்னு அப்பாவோட நடத்த கெட்ட பழக்கம் குடும்பத்த நடுத்தெருவுல நிறுத்துச்சு. தப்பு செஞ்ச அப்பா தாராளமா தலை நிமுந்து நடக்குறாரு. தண்டனை பொண்ணுக்கு. அடிமைப்பட்ட இப்படியான வாழ்க்கைய அம்மாவும் ஏத்துக்கணும், 30 வருசம் கடந்து பொண்ணும் ஏத்துக்கணும். அந்த நிலையிலதான் இன்னும் பொண்ணுங்க வாழ்க்க இருக்கு.

“பெத்தவங்க செய்யும் பாவம் பிள்ளைங்கள சேருன்னு சொல்றது இதுதான் போலருக்கு. எனக்கு விவரம் தெரிஞ்சு நான் அப்பான்னு கூப்புட்ட ஞாபகமே இல்ல. ஆனா என்னோட கல்யாணத்து அன்னைக்கி பாத பூஜ செய்ய சொல்லி அவரு கையால கன்னியாதானம் பன்னி குடுக்குறாங்க. இத்தன வருசம் இல்லாத அப்பா இப்ப எப்படி திடீர்னு வந்தாரு, அதெல்லாம் செய்ய மாட்டேன்னு எத்தன வம்பு பண்ணேன். நான் அதிகமா பேசுறதா சொந்தக்காரங்க என்ன அசிங்கமா பாத்தாங்க.

நான் எங்க அம்மாட்ட எத்தனையோ தடவ கேட்ருக்கேன். சாதி பெருமைக்கி ஏம்மா நாம பட்டினி கெடக்கணும். வீட்டுக்கே வராத அப்பாவுக்காக நீ எதுக்குமா தாலிய சுமந்துட்டு இருக்குறன்னு. நீ படிச்ச திமிர்ல பேசுர இதுதான் கௌரவம்னுச்சு… இன்னைக்கி எனக்கு போட்ட தலையெழுத்து ஒனக்கும் போட்டுட்டான் ஆண்டவன்னு நெனச்சுக்கணுங்குது.

இதுதான் குடும்ப கௌரவம், குடும்ப கௌரவமுன்னு சொல்லி சொல்லியே இப்ப எனக்கும் இதுதான் கௌரவமுன்னு பழகிப்போச்சு. யாருட்ட சொல்லி அழறதுன்னே தெரியலக்கா.”

அடங்காத ஆராசனையோட அழுத அவளுக்கு நான் என்ன ஆறுதல் சொல்லி நிறுத்துறது. அவன விட்டுட்டு உனக்கு புடிச்ச நல்ல வாழ்க்கைய ஏற்படுத்திக்கன்னா? இல்ல, நீ படிச்சவதானே, சொந்த கால்ல நின்னு காட்டுன்னா? அப்படியான சமூகத்துலயா நாம இருக்கோம்?

பெண் அவலம்“குடிக்கிறான், அடிக்கிறான், குழந்தை பெத்துக்க முடியாத மலடின்னு சொல்றான் நிதமும். கெட்ட கெட்ட வார்த்தைகளால் அவமானப் படுத்துறான். ஆனாலும் அடுத்த நேரம் அவங்கிட்ட சிரிச்சுகிட்டு குடும்பம் நடத்த பழகிக்க வேண்டிருக்கு. இதையெல்லாம் உதறி தள்ளிட்டு வெளிய வந்துட்டா என்னன்னு நெனப்பேன்? ஆனா எங்கப்பா, எம்புருசனப் போல மனுசங்க நெரஞ்ச இந்த ஊரு உலகத்துல நான் எங்குட்டு போக?

எம்.பி.ஏ படிச்சேன்னு சொல்லிக்க வெக்கமாருக்கு. எங்க அம்மா பால் வியாபாரம் பண்ணி, சந்தன மணி மாலை கட்டி, ஊதுவத்தி திரிச்சு அத்தன செரமப்பட்டு படிக்க வச்சாங்க. ஆனா வெளியூருக்கு வேலைக்கு அனுப்ப மறுத்துட்டாங்க. வேலைக்கி போயிருந்தா தன்மானம் போகும்போது எதுத்து நாலு கேள்வி கேக்குற தைரியமாவது வந்துருக்கும்.

கல்யாணத்துக்கும் சாதி கௌரவத்துக்குதான் படிக்க வச்சேன். நீ பாட்டுக்கு வெளியூர் போயி காதல்னு வந்து நின்னா குடும்ப மானம் போயிடும்னுச்சு அம்மா. இன்னைக்கி நாலு செவுத்துக்குள்ள எம்மானம் போகுது. பிள்ளை இல்லன்னு சொல்லி ஊர் பாக்க திருவிழாவுல மானம் போகுது. எதுக்கு வாழ்றேன்னே தெரியல”னு சொன்னா.

“எதுக்கு வாழ்றேன்னே தெரியல” சங்கீதா சொன்ன இந்த வார்தைதான் அனேகமா பல பெண்களோட நிலையா இருக்கு. கண்ணை கட்டிக்கிட்டு கிணத்துல விழுவறதும், விழ பழக்கப் படுத்துறதும்தான் நம்ம நாட்டுல பெண்களோட கௌரவமா இருக்கு!

– சரசம்மா
(உண்மைச் சம்பவம். பெயர், அடையாளங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.)