பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு பிறகு, மக்களின் பண பரிவர்த்தனைக்கு மொத்தமாக வங்கியை நிரந்தர அடியாளாக நியமித்துவிட்டது பி.ஜே.பி,அரசு.
டிஜி-தன் அபியான், டிஜி-தன் மேளா, டிஜி பீம் என்று பல வண்ண டிஜிட்டல் சங்கிலியால் மக்களை வங்கியுடன் பூட்டி விட்டது.
மக்களின் பணம் உள்ளே வந்தாலும் வெளியே போனாலும் கட்டணம் என்ற பெயரில் கப்பம் செலுத்தினால்தான் வங்கியில் வேலை நடக்கும். இதுநாள் வரையில் மக்களின் சிறுசிறு கடன் கோரிக்கைகளைக்கூட காதில் வாங்காமல் அவர்களைத் துரத்தியடித்த அரசு வங்கிகள், இப்போது மக்கள் வங்கியில் தங்கள் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தக்கூட அனுமதிக்காமல் மூர்க்கமாக வெளியேற்றுகின்றன.
வங்கியில் சென்று சலான் எழுதி பணம் செலுத்தினால், வாங்க மறுத்து வாடிக்கையாளரை அவமானப்படுத்தி வங்கி அதிகாரிகள் குரூரமாக நடந்து கொண்ட உண்மைச் சம்பவம் இது.
***
சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மைய கிளையில், எனக்கு தெரிந்தவர்களுக்கு உதவுவதற்காக உடன் சென்றிருந்தேன். அவருடைய மகளுக்கு கல்லூரி செமஸ்டர் பீஸ் கட்டுவதற்காக ரூபாய் 5,000 வங்கியில் போடவேண்டும். ஏற்கெனவே அவ்வங்கியின் வெளியில் இருக்கும் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தில் (Deposit Machine) பல தடவை பணம்போட மற்றவர் உதவியுடன் அவர் முயற்சித்து தோல்வியடைந்துள்ளார்.
“டெபாசிட் மெஷினுல ஏ.டி.எம் கார்டு இல்லாம போட்டா, ஒவ்வொரு தடவைக்கும் சர்விஸ் சார்ஜ் 25 ரூபா போயிடும். ஐயாயிரம் போட்டா ஒரு தடவைக்கு மூணாயிரத்தை எடுத்துட்டு; இரண்டாயிரத்தை தள்ளிடும். மறுபடியும் அத போடணும். மறுபடியும் இருபத்தஞ்சி போய்டும். ஏற்கெனவே இந்த அனுபவம் நிறைய எனக்குண்டு. அதனால, நாளைக்கு பேங்கு போய் சலான் எழுதிப் போட்டுடலாம். கொஞ்சம் கூடவாங்க” என்றார்.
சரி என்று போனேன். மறுநாள் காலைல பதினொரு மணிக்கு சென்றோம். காஞ்சிபுரம் எஸ்.பி.ஐ மெயின் பிரான்ச் என்பதால கூட்டம் அதிகம். சலான் கொடுப்பதற்கு தனியாக ஒரு டேபிள்.
நான், “மேடம்… பணம் போடவேண்டும், அதுக்கான சலான் கொடுங்க” என்றேன்.
அங்கியிருந்த ஊழியர், “வெளியில மிஷின் இருக்கே நாப்பதாயிரம் வரைக்கும் மெஷின்லயே போடலாமே? எவ்ளோ பணம்? உங்களோட அக்கௌண்ட்டா? இந்த பிரான்ச்சா?” என்று சலானைத் தராமல் கேள்வியை மட்டும் அடுக்கிக்கொண்டே இருந்தார்.
“ஐஞ்சாயிரம் பணம் இங்கதான் போடணும். கொஞ்சம் சலான் கொடுங்க” என்றேன் மீண்டும்.
“ஐஞ்சாயிரம்தானே வெளியே மிஷின்லயே போடுங்க, ரெண்டு மிஷின் இருக்கே…” என்றார் விடப்பிடியாக…..
“இல்ல… அங்க பணம் வீணா போய்டுது, சலான்லத்தான் போடணும். சலான் கொடுங்க…” என்றேன்.
“பணம்… இங்க போட முடியாது. வேணும்னா… எட்டாம் நம்பர் சார்க்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு சலான ஃபில்லப் பண்ணுங்க…. போய்ப் பாருங்க… சொன்னா கேட்க மாட்டீங்க… நீங்க.” என்றார்.
எட்டாம் நம்பர் சார்க்கிட்டப் போய் “சார் பணம் போடனும் கையெழுத்து போடுங்க … சலான் நிரப்பணும்” என்றேன்.
“ஏன்.. ம்மா இங்க பணம் போட முடியாது, வெளியில மெஷின் இருக்கு அதுலப்போய் போடு”… என்று தலையை நிமிராமலேயே வேகமாக பதில் சொன்னார்.
படிக்க:
♦ ஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப் போராட்டம் சாத்தியமா ? | கேள்வி – பதில் !
♦ நீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி !
நான், “என்ன அநியாயமா இருக்கு… பேங்க் எதுக்கு சார். பணம் போடவும் எடுக்கவும் தானே. அதுக்குதானே நீங்க இருக்கீங்க. ஏன் இப்படி விரட்டி அடிக்கிறீங்க” என்றேன்.
“யாரும்மா உன்ன இங்க அனுப்புனது? எனக்கு தெரியாது. எனக்கு எவ்ளோ வேல இருக்கு உனக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. உன் கேள்விக்கெல்லாம் நான் பொறுப்பு இல்ல…. என்கிட்ட அனுப்புன அந்த ஆள்கிட்டப்போய் சொல்லு…” என்று கத்தினார்.
எனக்கும் கோபம். இருவருக்கும் பேச்சில் வேகம் கூடியது. உடனே, வங்கி ஊழியர்கள் அங்கு ஒன்று கூடினர். ஆங்காங்கு இருந்த வாடிக்கையாளர்களும் என்ன ஏதென்று புரியாமல் பார்த்தனர். அனைவரின் கவனமும் என் மீது திரும்பவே, நான் நியாயம் கேட்க மேனேஜர் ரூமுக்கு உள்ளே போனேன்.
மேனேஜர். “என்னம்மா பிரச்சனை… ஏன் கத்துற? என்னா வேணும்… பொறுமையா சொல்லு?” என்றார்.
மறுபடியும் நான், மொதல்லயிருந்து சொன்னேன்… “ஐஞ்சாயிரம் பணம் என் நண்பர் பொண்ணு அக்கௌண்டுல போடணும். செமஸ்டர் பீஸ் கட்டணும். இன்னிக்கு போட்டாகணும்.” என்றேன்.
மேனேஜர், “வெளியே ஒண்ணுக்கு ரெண்டு மெஷின் இருக்கு, ஒனக்கு போடத்தெரியலனால்லும் போட செக்யூரிட்டி இருக்கும் பாரு, அங்கப் போய் போடும்மா.” என்றார்.
“மெஷின்ல போட்டா இருபத்தஞ்சி ரூபாய் சர்வீஸ் சார்ஜ் போவுது, பேங்க் திறந்திருக்கும்போது நான் ஏன் மெஷின்ல போடணும்? மெஷின் சரியா வேல செய்யல… பணத்த வெளியே தள்ளுது ஒருதடவைக்கு ரெண்டுதடவையா போட்டா அதுக்கு ஐம்பது ரூபாப் போய்டும். அதனால நான் இங்கத்தான் போடுவேன். சலான கொடுக்கச் சொல்லுங்க.. அதுக்கு என்ன வழியோ அத செய்ங்க….சார்”.
“உன் இஷ்டப்படியெல்லாம் இங்க போட முடியாது, ஏ.டி.எம் கார்டு வைச்சிப்போட்டா சர்வீஸ் சார்ஜ் இல்ல…” என்று ஏக வசனத்தில் ஆரம்பித்தார்.
“காலேஜ் படிக்கிற பொண்ணுக்கிட்டத்தானே ஏ.டி.எம் கார்டு இருக்கு… அக்கௌண்ட்ல நாங்க போட்டாதானே, ஏ.டி.எம்-ல அவ எடுக்க முடியும்… நீங்க சொல்லறது புரியல. சலான் எழுதி இங்கப்போட நான் என்ன பண்ணணும்னு சொல்லுங்க” என்றேன்.
“நான் சொல்லிக்கினே இருக்கேன்… மறுபடி, மறுபடி, அடங்காம பேசிட்டே இருக்க? இங்க நீ போட முடியாது, அவங்க பொண்ணு அக்கௌண்ட்ல நீ போட முடியாது…. அவங்க அவங்க அகௌண்ட்ல அவங்கத்தான் போடணும். மூணாவது ஆளுப் போடக்கூடாது! போம்மா… போ…” என்றார் திமிராக.
“எப்படி? அவுங்க அவுங்கதான் பணம் போடணும்னா? உங்க சம்பளப் பணத்த நீங்களே போட்டுக்கீறிங்களா? மெஷின்ல பணம் போடுறவன் யாருனு பாத்துட்டுத்தான் பணத்த மிஷின் எடுத்துக்குத்தா..? என்ன பேசீறீங்க?” என்றேன்.
மேனேஜர் டென்சனாகி கத்தினார்.
அதற்குள் பண அறையில் இருந்து, இரண்டு போலீசு – இரண்டு செக்யூரிட்டி என அட்டேன்சன்ல நின்னு அறையில் என்னை சூழ்ந்துட்டாங்க.
“நீ எங்க நின்னு பேசறேன்னு தெரியுதா? இந்தப் பக்கம் பணம் லாக்கர் இருக்கு…. அந்தப்பக்கம் நகை லாக்கர் இருக்கு…. நீ பேசறதெல்லாம் சுற்றி எல்லா கேமராவுலயும் ரெக்கார்டு ஆயிட்டுருக்கு… என் பவருக்கு நான் என்ன செய்யலாம்னு தெரியுமா?” என்றார் மேனேஜர் கோபம் வழிய.
“பேங்க்ல இருக்கற லாக்கரப்பத்தியெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றீங்க? கேமரா என்ன மட்டும்தான் ரெக்கார்டு பண்ணுமா, நீங்க பேசறதெல்லாம் டெலிட் பண்ணிடுமா? எடுத்துப்போடுங்க பாக்கலாம்…” என்றேன்.
படிக்க:
♦ உசிலையில் இருப்பது ஸ்டேட் பேங்கா? மாஃபியா கேங்கா?
♦ ஏழைகளிடம் பிடுங்கித் தின்னும் பாரத ஸ்டேட் வங்கி !
அதற்குள் என்னை சூழ்ந்தவர்கள் எனக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்கள்.
ஏம்மா…. நீ என்ன மார்க்கெட்டுக்கா வந்திருக்க… பேங்க்குக்கு வந்திருக்க.. அடங்கிப் பேசும்மா…. மேனேஜர் என்ன சொல்றாருன்னு கேளும்மா? என்று அறிவுரைகளை நாற்புறமும் வீச ஆரம்பித்தார்கள்.
நான் உண்மையிலேயே கோபமாகி, “அய்யா, ஆபிசருங்களே..! பேங்குக்கு நான் அட்வைஸ் வாங்க வர்ல, பணத்தை டெபாசிட் பண்ண வந்திருக்கேன், அதுக்கு என்ன வழி அதச் சொல்லுங்க…”. என்றதும்.
திரும்பவும் மேனேஜர், “பொம்பள..ன்ற திமிருல பேசுறீயா? பத்து ஆம்பளைங்க பேசறாங்க, அடங்கவே மாட்ற.. இதுமட்டும் உன் அகௌண்டா இருந்தா, இப்பவே க்ளோஸ் பண்ணி விசிறியடிப்பேன்… அதுக்கு எனக்கு ரிசர்வ் பேங்க் பவர் கொடுத்திருக்கு” என்றார்.
“ஆமாம், எனக்கு திமிருத்தான்! உங்க, ரிசர்வ் பேங்க் பவரை வைச்சி இப்ப இந்த அக்கௌண்ட்ட முடிச்சி அதுல இருக்கற பணத்தை கொடுங்க பாக்கலாம்” என்றேன்.
மேனேஜருக்கு கோபம் கிறுகிறுத்தது. பக்கத்திலிருந்தவர்கள் பதற ஆரம்பித்தார்கள். என்னை மேலும் அறிவுரையில் திணறடித்தார்கள். “கொஞ்சம் அடங்குமா… யாரையும் மதிக்கவே மாட்றயே… பணம் போட வந்தியா? சண்ட போட வந்தியா?” என்று அவர்களும் மேனேஜர் மாதிரியே மாறினார்கள்..
“எனக்கு தெரிஞ்சவங்க பொண்ணோட செமஸ்டர் பீசுக்கு பணம் போட வந்த என்னை சண்டக்காரி, அடங்காபிடாரினு அசிங்கப்படுத்திட்டு, என் மேலயே பழி போடுறீங்களா? யாருன்னா ஒருத்தருன்னா நியாயமா பேசுறீங்களா? அறிவுரை சொல்றீங்க, நான் இங்க அட்வைஸ் வாங்கவா வந்தேன்? ஐஞ்சாயிரம் பணம் போட வந்தேன். நீங்க என்ன செய்தாலும் இந்த சலான்ல பணம் போடாம போகமாட்டேன் யாரை வேணும்னாலும் வரச் சொல்லுங்க…” என்று நான் அழும் நிலையில் தடுமாறி கத்தினேன்.
உடனே, மேனேஜர் பக்கத்திலிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து சாலனில் கையெழுத்துப்போட சொன்னார்கள்.
அப்போதும், என்னை அசிங்கப்படுத்த நினைத்த மேனேஜர், வெளியிலிருக்கும் செக்யூரிட்டியிடம் என் பாஸ் புக்கையும், பணத்தையும் கொடுத்து மெஷினில போடச்சொல்லி வெளியேற்றப் பார்த்தார்.
அவர் கையிலிருந்து, அவற்றை பிடுங்கி “என்னை மேலும் அசிங்கப்படுத்தி பாக்கிறீங்களா? சலான் எழுதி பேங்க்ல தான் இந்தப் பணம் போடணும், இல்லாட்டி நான் இங்கிருந்து போகவே மாட்டேன்.” என்று நான் கத்த…
மேனேஜர், மேலும்.. மேலும் அசிங்கமாவதைத் தவிர்க்க தன்னுடைய கோபம், குரூரத்தைத் மறைத்து, எனக்கு அறிவுரை கூறிவது மாதிரி கையெழுத்துப்போட தயாரானார்.
நான் அப்போதும் அடங்காமல், “ஐயா, அறிவுரைகளை நீங்களே வைச்சிக்கங்க, என் அகௌன்ட்ல பணம் மட்டும் போட வழிப் பண்ணுங்க… உங்களோட அதிகாரத்தையும், அறிவுரையையும் ஐயாயிரம் போட வந்த எங்கிட்டதான் காட்டுவீங்க” என்று சொல்ல அவர் என்னை பார்க்காமலேயே வேகமாக கையெழுத்து போட்ட சலானை என் முன்னே தள்ளினார்.
அப்போது பத்தாம் நம்பர் கௌண்டரிலிருந்து ஒரு இளம் ஊழியர், “….மேடம் கொஞ்சம் ரிலாக்சாவுங்க…. நீங்க ரெண்டாம் நம்பர் கௌண்டருக்கு போங்க….. ஃப்ரண்ட் பேஜ் பிரிண்ட் பண்ணச் சொல்லி போன் பண்றேன்…. போங்க…” என்றார்.
நமக்காக பேங்க்லருந்து ஒரு குரல் வருதேன்னு அவரை மதிச்சி, இரண்டாம் நம்பர் கொளண்டருக்குப் போனேன்.
“மேடம் ஃப்ரண்ட் பேஜ் பிரிண்ட் பண்ணனும், சாரு சொன்னாரு?” என்றேன்.
“சாரிங்க….. பிரிண்டர் ஒர்க் ஆகல, அப்புறம் போட்டுக்கங்க…. ப்ளீஸ்” என்றார்.
உடனே, என் பக்கத்திலிருந்த ஒருவர் “எப்பத்தான் பிரிண்டர் ஒர்க் ஆச்சி….. வெளியவும் ஒர்க் ஆகல…. உள்ளயும் ஒர்க் ஆகல…” என்றார் விரக்தியாக.
சுமார், 45 நிமிடம் நடந்த இந்தச் சலான் போராட்டத்தில் வெற்றிப் பெற்றாலும் உள்ளுக்குள் உதறல், பதற்றம் நீடித்தது. இருந்தும் நம் பணத்தை கட்டுவதை தடுக்க இவர்கள் யார்? என்ற சாதாரண உண்மைதான், தைரியமாக கேள்வி கேட்க வைத்தது.
ஆனாலும், சுற்றி மக்கள் இருந்தும் யாரும் என்ன? ஏது? என்று வங்கி அதிகாரிகளை ஒரு கேள்வி கேட்கவில்லையே என்ற வலி… வெளியே வரும்போது ஒருபெண்ணாகக் கண்ணீர் துளிர்த்தது, கண்ணீரைத் துடைத்தப்படியே நண்பருடன் வங்கியை விட்டு வெளியேறினேன்.
***
அரசின் நல்ல நிர்வாகம் என்பது; வெளிப்படைத்தன்மை மற்றும் குடிமக்கள் சாத்தியம் என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இன்றைய அரசு வங்கிகளின் செயல்பாடுகள் யாருக்கானது? இன்றளவும் அரசு வங்கிகள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சேவை செய்வதை தன் கடமையாகவும்; வங்கி படியேறும் சாமான்ய மக்களை அலைக்கழிப்பதும், அவமானப்படுத்துவதும் தன் அதிகாரமாகவும் வலம்வருகின்றன.
அரசு வங்கிகளை மொத்தமாக தனியார்வசம் தாரைவார்க்க மோடி அரசு எத்தனிக்கும் வேளையில், அதன் ஊழியர்களே மக்களிடமிருந்து அந்நியப்பட்டால் யார் அவர்கள் பிரச்சினைக்களுக்கு துணைநிற்பது?
– கீதா
அருகில் உள்ள தபால் நிலையம் செல்லுங்கள் அங்கு( IPPB )INDIA POST PAYMENT BANK இல் ZERO BALANCE இல் கணக்கை துவக்குங்கள் IPPB இல் இருந்து NEFT மூலமாக பண பரிவர்த்தனை செய்யலாம் commission Rs.5/-