றை இசையைக் காதில் கேட்டதும் உடம்பில் நூறு மெகாவாட் மின்சாரம் பாய்ச்சியதைப் போன்றதொரு உணர்வு. இளமைத் துடிப்புணர்ச்சி நரம்பு மண்டலங்கள் முழுவதும் பரவி, உங்கள் கால்களை கபடி ஆடச்செய்யும் மகிமை பறையிசைக்கு மட்டுமே உரித்தான ஒன்று. பறையிசையின் மகிமை பொதுவில் மேடையேற்றப்படுவதில்லை. அந்த வித்தையை நிகழ்த்தும் கலைஞர்களும் மேடையேற்றப்படுவதில்லை. சென்னை ராயப்பேட்டை முத்தையா தோட்டத் தெரு பேண்டு வாத்தியக் கலைஞர்கள் வாழும் ஒரு பகுதி. அவர்களைச் சந்திப்போம்!

முத்தையா தோட்டத் தெரு
எந்த வசதிகளுமின்றி ஒதுக்குப்புறத்தில் வசிக்கும் பறையிசை கலைஞர்களின் வீதி.. முத்தையா தோட்டத் தெரு

இசைத் தென்றல் சசிக்குமார்

பேண்டு வாத்தியத்துல எங்க குடும்பம் பேர் போனது. அடையாறு – ரிசர்வ்பேங்கு – ராயப்பேட்டை சுத்தி இருக்கும் எல்லா இடத்திலும் பன்னீர்செல்வம் பேண்டுன்னா தெரியாதவங்களே இல்ல. அந்த அளவுக்கு மவுசு இருந்தது.

ஆனா இன்னிக்கி நாங்க வேலை இல்லாம இருக்கோம். இப்பல்லாம் கல்யாணம்ன்னா, மண்டபத்துக்காரங்களே ஆர்டர வாங்கிக்கிறாங்க. சாவுன்னா ’பிரீசர் பாக்ஸ்’காரன் ஆர்டர எடுத்துடுறான். எங்கள தேடி வரவங்க கொறஞ்சிடுறாங்க. சாவு ஊட்டுக்கு தாரை தப்பட்டை அடிக்க மூனு பேர் நாங்க போனா நாலாயிரம் கேட்போம். அவுங்க ஆயிரம் ரூபா குறைச்சிட்டு மூவாயிரமா கொடுப்பாங்க.

’பிரீசர் பாக்ஸ்’ போடுறவங்க கிட்ட ஆர்டர கொடுத்தா சாமியானா பந்தல் போடுறதுல இருந்து கருமாதி வரைக்கும் எல்லா வேலையும் செய்யிறதா பேசி முப்பதாயிரம் வாங்கிக்குவாங்க. அப்ப எங்களுக்கு வேலை இல்லாம போயிடுது.
எங்களுக்கு கல்யாண ஆர்டர் வரும். புல் செட்டப்போட வரசொல்லுவாங்க. அப்படின்னா, இருபது பேர் போவோம். பாட்டு பாடுற ஒருத்தரும், கீபோர்டு வாசிக்கிற ஒருவரும் மேலே இருப்பாங்க. மீதி பதினெட்டு பேர் கீழே இருப்போம்.

முத்தையா தோட்டத் தெருகல்யாண ஊர்வலம் முடியிற வரைக்கும் வாசிக்கனும். அதுக்கு நாங்க முப்பதாயிரம் கேட்போம். யாரும் தரமாட்டாங்க. அவ்ளோ பணம் எங்ககிட்ட கொடுக்கிறதுக்கு ஒரு நகை வாங்கி போட்டுக்கலாம்னு நினைச்சி ஆர்டர கேன்சல் பண்ணிட்டு போயிடுராங்க.

சில விஐபி ஆர்டர் வரும். அதாவது படத்துக்கு பேண்டு வாசிக்க கூட்டிட்டு போவாங்க. காலமெல்லாம் காதல் வாழ்க, பட்டியல்னு சில படத்துக்கு பேண்டு வாசிச்சிருக்கேன். அதுல எதாவது கெடைக்கும்.

என்கிட்ட ட்ரம்பெட், சட்டி மேளம், தப்பு செட்டு, கானா இசைக்கு டோலாக் செட்டு, பஞ்சாபி மேளம் டோலிக் பாசா, மொரா கோர்ஸ், சைட் ட்ரம், டோல், கட்ட மேளம் (மாட்டுத்தோல் மேளம்) எல்லாம் இருக்கு. அத்தனையும் வாசிப்பேன். ஒரு தொழில் செய்யுறோம்னா எல்லாத்தையும் கத்துக்கணும்.

திருவல்லிக்கேணி, நடுக்குப்பம், அயோத்திகுப்பம் இதெல்லாம் எங்க ஏரியா. இங்கல்லாம் கல்யாணம், கருமாதின்னா எங்ககிட்டதான் வருவாங்க. தலைக்கு ஆயிரம் ரூபா கணக்கு பண்ணி தருவாங்க. டிரம்ப்பெட் ஊதுறவங்களுக்கு கூலி தொள்ளாயிரம். கட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு மட்டும் ஆயிரத்து ஐநூறு ரூபா. இதை எல்லாரும் அடிக்க மாட்டாங்க. அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும். கட்ட மேளம் அடிக்க தெரியாதவங்களை கூட்டிட்டு போனோம்னா தொழில் போயிடும். ஆளு கணக்கு காட்ட எல்லாரையும் கூட்டி போயிட்டு கழுத்துல மாட்டி விட முடியாதுல்ல.

கோயில்ல பம்பை உடுக்கை அடிச்சா எப்படி சாமி ஆடுவாங்களோ அதேமாதிரி கட்ட மேளம் அடிச்சா எல்லாருக்கும் தானா ஆட்டம் வரும். ஆடாதவங்க கூட ஆடுவாங்க.
பொணத்துக்கு மாலை போட வரவங்களை கூட்டிட்டு வர போனோம்னா அம்பது, நூறு கொடுப்பாங்க. கைச் செலவுக்கு ஆகும். ஆடி மாசம் வந்தா வேலை கிடைக்கும். விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு ஒருநாள் முழுக்க வேலை இருக்கும். அப்புறம் மஞ்சதண்ணி, காதுகுத்து, பொறந்த நாள் பங்க்சனுக்கும் போவோம். எலக்சன் நேரத்துல ஒரு பத்து நாள் வேலை இருக்கும். பிரச்சாரம் பண்ணும்போது மோளம் அடிக்க கூப்பிடுவாங்க. சில நேரம் அது எல்லாம் கேன்சல் ஆகிடும்.

பன்னீர் செல்வம், சசிக்குமாரின் தந்தை. செனாய் வாசிப்பதில் வித்தகர்.

ஒருமுறை வாசிக்கச் சொன்னதும் ஆர்வமாக வந்து சுவற்றில் மாட்டி வைத்திருந்த செனாயை எடுத்து துடைத்துவிட்டு, ஒரு சின்ன பெட்டியில் இருந்த பீப்பியை (விசில்) எடுத்து தண்ணீரில் நனைத்து நமக்காக ஊதினார். தள்ளாத வயதில் தம் கட்ட முடியவில்லை. இருந்தாலும் மூச்சை இழுத்து ஊதினார். அவருடைய மூச்சே செனாயில் தான் அடங்கி உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

சூர்யா, பன்னீரின் பேரன், சசிக்குமாரின் மகன்.

பி.காம். முடிச்சிருக்கேன். மேல படிக்கனும். இதையெல்லாம் நானும் வாசிப்பேன். திருமண நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அப்பாகூட போயிட்டு வாசிப்பேன். சாவுக்கெல்லாம் கூட்டினு போக மாட்டாரு. பாக்கறவங்க தப்பா நெனப்பாங்கன்னு சொல்லுவாரு. அதனால போறதில்ல.

கோவலன்-லோகேஸ்வரி.

நாங்க சேட்டு பங்க்சனுக்கும் பேண்டு வாசிக்க போவோம். டோலிக் பஞ்சா என்ற தூக்க முடியாத ட்ரம்ஸ்களை வண்டியில எடுத்துனு போயிட்டு வாசிப்போம். எங்க ஜனங்க எந்த பங்க்சனா இருந்தாலும் இந்த மியுசிக் இல்லாம நடத்த மாட்டாங்க.

கல்யாணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு, பர்த்டே பங்க்சன், சாவு, கருமாதி இப்படி எல்லாத்துக்கும் விதவிதமா வாசிப்போம். அது அதுக்கு தனிப்பாட்டு தனி ட்ரெஸ். அந்தந்த கெட்டப்புல தான் போவோம். ரெண்டு பேரு, அஞ்சிபேரு, பத்துபேரு, இருபதுபேருன்னு பணத்துக்கு ஏத்த மாதிரி எங்களை கூப்பிடுவாங்க. ஒரு பங்க்சனுக்கு ஐநூறு ரூபாயில இருந்து ஆயிர ரூபா வரை கெடைக்கும்.

விக்னேஷ் – யுவராஜ். பேண்டு விற்பன்னர்கள்.

இத பறமோளம்- சாவு மோளம், பேண்டு வாத்தியம் அடிக்கிறவன்னு எங்களை மட்டமா பார்ப்பாங்க. ஆனா இந்த வாத்தியத்தினுடைய ஒரிஜினல் பேரு ராஜ வாத்தியம். இப்போ இதிலும் பெருசா வேலை இல்ல.கூலியும் இல்ல.

ஈவண்ட் மேனஜ்மென்ட் மாதிரி புரோக்கர் வேலை செய்யிறவங்கதான் இதுல சம்பாதிக்கிறாங்க. கல்யாண கவரேஜ் எடுக்கிறவங்க எல்லா கல்யாண மண்டபத்தையும் புடிச்சி வச்சிக்கிற மாதிரி இவனுங்க எல்லா சுடுகாட்டையும் பிடிச்சி வச்சிகிறானுங்க. பள்ளிகரணை, வேளச்சேரி, லைட் ஹவுஸ், திருப்போரூர் இப்படி எல்லா சுடுகாடும் இவனுங்களோட ராஜ்ஜியம்தான். பொணத்துக்கு பிரீசர் பாக்ஸ் வக்கிறது பாடை கட்டுறது பூ வேலை செய்யிறது, சடங்கு செய்து பிணத்தை சங்கூதி பொதைக்கிற வரைக்கும் பேக்கேஜா பேசிக்கிறாங்க.

இருபதாயிரத்துல இருந்து ஒரு லட்சம் வரை வாங்குறாங்க. வி.ஐ.பி சாவுன்னா பத்து லட்சம் கூட செலவு செய்வாங்க. நாட்டுக்கோட்டை M.A. ராமசாமி சாவுக்கு கூட நாங்க வாசிச்சோம். எங்களுக்கு ஒருநாளைக்கு வெறும் ஐநூறு ரூபாதான் கொடுத்தாங்க.

கீர்த்தி,சோயா,சீமா,மோனிஷா. பள்ளி செல்லும் குழந்தைகள்

முத்தையா தோட்டத் தெரு

முத்தையா தோட்டத் தெரு வீதியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் வாசிப்பு சத்தம் கேட்டதும் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியில் ஓடிவந்தனர்.

-வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க