எங்களுக்கு உரிமையான மலைகளை வேதாந்தா நிறுவனம் அபகரிக்க விடமாட்டோமென எதிர்த்து நிற்கும் டோங்கிரியா கோண்டு இன மக்கள்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த, தியாகம் தோய்ந்த போராட்டம், ஒடிசா மாநிலத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அம்மாநிலத்தில் இயங்கிவரும் வேதாந்தா குழுமத்தின் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரிப் போராடிவரும் டோங்கிரியா கோண்டு (Dongria Kondh) பழங்குடியின மக்கள், தூத்துக்குடி போராட்டத்தால் உற்சாகமடைந்து தமது போராட்டத்தையும் தீவிரப்படுத்துவதென அறிவித்துள்ளனர்.

ஒடிசா மாநிலத்தின் காலஹந்தி, ராயகடா மாவட்டங்கள் இரண்டிலும் விரிந்து பரந்திருக்கும் நியம்கிரி மலைத்தொடர்தான் டோங்கிரியா கோண்டு பழங்குடியின மக்களின் தாயகம். முப்பதுக்கும் மேற்பட்ட வற்றாத நீரோடைகள், நாகபாலி, பன்ஷாதரா என்ற இரண்டு ஆறுகள் ஆகியவற்றின் பிறப்பிடமான அம்மலைத்தொடரின் 112 கிராமப்புறப் பகுதிகளில் இவ்வின மக்கள் வசித்து வருகின்றனர்.

டோங்கிரியா கோண்டு இன மக்கள் இன்னும் இந்துமயமாக்கப்படவில்லை. அவர்கள் அந்த மலையைத்தான், நியம் ராஜா எனப் பெயரிட்டு, குலசாமியாக வணங்கி வருகிறார்கள். நியம் ராஜாவைத் தவிர, அவர்கள் வேறெந்த தெய்வத்தையும் வணங்குவதில்லை.

இப்பழங்குடியினரின் பிரதானத் தொழில் விவசாயம். மாம்பழம், அன்னாசி, வாழைப்பழம், பழாப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்டுப் பலவகையான பழவகைகளையும், மஞ்சள், இஞ்சி உள்ளிட்ட நறுமணப் பொருட்களையும் பயிர் செய்து வருகின்றனர்.

நியம்கிரி மலைத்தொடர் வளமிக்க விவசாயப் பகுதி மட்டுமல்ல, தாதுவளத்தையும் தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது. இம்மலைத்தொடர் பகுதியில் மட்டும் 8 கோடி டன் அளவிற்கு அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்ஸைட் புதைந்திருக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், இம்மலைத்தொடரை எப்படியாவது கோண்டு பழங்குடியினத்தவரிடமிருந்து அபகரித்துக் கொள்ள கடந்த 14 ஆண்டுகளாக முயன்று வருகிறது, வேதாந்தா.

நியம்கிரி மலைத்தொடரின் அடிவாரத்திலுள்ள லஞ்ஜிகரி எனும் பகுதியில் கடந்த 2004-ஆம் ஆண்டு வேதாந்தா குழுமம், ஸெஸா ஸ்டெர்லைட் எனும் பெயரில் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையைத் தொடங்கியது. இவ்வாலை ஆண்டொன்றுக்கு 10 இலட்சம் டன் அலுமினியம் உற்பத்தி செய்வதற்கு ஒடிசா அரசும் மைய சுற்றுப்புறச் சூழல் துறையும் அனுமதி அளித்திருந்தன.

நியம்கிரி மலையடிவாரத்தில் பழங்குடி மக்களின் வயல்வெளிகளுக்கு நடுவே அமைந்திருக்கும் வேதாந்தாவின் அலுமினியத் தொழிற்சாலை.

ஒட்டகம் மூக்கை நுழைத்துவிட்டதை அப்பொழுதே புரிந்துகொண்டுவிட்ட அப்பழங்குடியின மக்கள், நியம்கிரி பாதுகாப்பு கமிட்டி எனும் அமைப்பை உடனடியாக உருவாக்கி வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராகப் போராடத் தொடங்கினர். அம்மக்கள் பயந்தபடியே ஒடிசா அரசு, நியம்கிரி மலைத்தொடரில் பாக்சைட்டைத் தோண்டியெடுப்பதற்கான அனுமதியை, ஒடிசா சுரங்கக் கழகத்திற்கு வழங்கியது. இந்த நிறுவனத்திடமிருந்து பாக்ஸைட் தாதுவைக் கொள்முதல் செய்து கொள்வதற்கு வேதாந்தாவிற்கு அனுமதி வழங்கப்பட்டது. இது தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் தந்திரம் என்பதைப் பச்சைக் குழந்தைகூடப் புரிந்துகொள்ள முடியும்.

நியம்கிரி மலைப்பகுதியில் பாக்ஸைட்டைத் தோண்டுவது கோண்டு பழங்குடியின மக்களுக்கு மட்டும் ஆபத்தானதல்ல. அவர்கள் தமது தாயகப் பகுதியிலிருந்து துரத்தப்படுவார்கள், அவர்களது விவசாயம் அழியும் என்பதையும் தாண்டி, பாக்ஸைட் சுரங்கத்தின் தொடக்கம் இரண்டு நதிகளின், இரண்டு மாவட்டங்களின் அழிவில் சென்றுமுடியும். இந்தக் காரணங்களால் கோண்டு பழங்குடியின மக்கள் நியம்கிரி மலைப்பகுதியில் பாக்சைட் சுரங்கம் அமைக்கப்படுவதை எதிர்த்துப் போராடினர்.

பல்வேறு அடக்குமுறைகளுக்கு முகங்கொடுத்து நடைபெற்றுவந்த அப்போராட்டம் நாடெங்கிலுமுள்ள முற்போக்கு – ஜனநாயக சக்திகளின் ஆதரவைப் பெற்றது. அப்போராட்டம் தொய்வின்றி ஒன்பது ஆண்டுகளாக நடந்துவந்த நிலையில், பாக்சைட் சுரங்கத்திற்கு எதிராக நடைபெற்ற வழக்கில், பாக்சைட் சுரங்கத்தை அனுமதிப்பதா, வேண்டாமா என்பதைப் பழங்குடியின மக்களின் கிராமசபை முடிவெடுத்து அறிவிக்கும் என 2013-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது, உச்ச நீதிமன்றம்.

அவர்கள் தமது தாயகப் பகுதியிலிருந்து துரத்தப்படுவார்கள், அவர்களது விவசாயம் அழியும் என்பதையும் தாண்டி, பாக்ஸைட் சுரங்கத்தின் தொடக்கம் இரண்டு நதிகளின், இரண்டு மாவட்டங்களின் அழிவில் சென்றுமுடியும்.

இத்தீர்ப்பின் அடிப்படையில் பழங்குடியின மக்களின் கிராம சபை நியம்கிரி மலைப்பகுதியில் ஒடிசா சுரங்கக் கழகம் பாக்சைட் சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி அளிக்க மறுத்தது. ஒடிசா அரசு இம்முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்து, கிராம சபை கூட்டங்களை மீண்டும் நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியது. ஆனால், ஒடிசா அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வெற்றி முழுமையானதல்ல என்பதை உணர்ந்திருந்த கோண்டு இன மக்கள், வேதாந்தாவின் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரித் தமது அடுத்தகட்ட போராட்டத்தைக் கடந்த ஐந்தாண்டுகளாக நடத்திவருகின்றனர்.

இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 10 இலட்சம் டன் அலுமினியத்தை உற்பத்தி செய்வதற்கு மட்டுமே அனுமதியைப் பெற்றிருந்த வேதாந்தா, அரசின் அனுமதியைப் பெறாமலேயே தனது உற்பத்தியை 20 இலட்சம் டன்னாக உயர்த்திக்கொண்டது. தனது ஆலைக்கழிவுகளை இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக ருஷிகுல்யா நதியில் திறந்துவிட்டு, அந்நதியை மாசுபடுத்தி வருகிறது. மேலும், இந்த அலுமினிய சுத்திகரிப்பு ஆலையின் கட்டுமானமும் விரிவாக்கமும் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டிருப்பதோடு, ஏனோதானோவென்று நிர்வகிக்கப்படுகிறதென்றும் ஒடிசா மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் மாநில அரசிற்கு அறிக்கை அளித்தது.

இத்தகைய விதிமீறல்களுக்காக அவ்வாலையை மூடுமாறு வேதாந்தாவிற்கு ஒடிசா அரசு உத்தரவிட்டிருக்க வேண்டும். வேதாந்தா குழுமத்தையும் அதன் முதலாளி அனில் அகர்வாலையும் குற்றவாளியாக அறிவித்திருக்க வேண்டும். ஆனால், அம்மாநில அரசோ வேதாந்தா அலுமினிய ஆலை, தனது உற்பத்தித் திறனை ஆண்டொன்றுக்கு 60 இலட்சம் டன்னாக உயர்த்திக்கொள்ள அனுமதிக்கும் முடிவை எடுத்தது.

இதனையடுத்து, இந்த உற்பத்தித் திறனுக்கு ஏற்ற மூலப்பொருளைச் சொந்த மாநிலத்திலிருந்தே கொள்முதல் செய்வது என்ற முகாந்திரத்தைச் சொல்லி, கோராபுட் மாவட்டத்திலுள்ள கோதிங்காமாலி மலைப்பகுதியிலிருந்து பாக்ஸைட் வெட்டியெடுக்கும் அனுமதியை வேதாந்தா நிறுவனத்திற்கு அளிக்கும் முடிவும் எடுக்கப்பட்டிருக்கிறது.

போராட்டத்தைத் தொடர்ந்து உறுதியாகவும், தீவிரமாகவும் நடத்துவது என நியம்கிரி பாதுகாப்பு கமிட்டி முடிவெடுத்து அறிவித்திருக்கிறது. அம்முடிவுக்கு தூத்துக்குடி போராட்டம்தான் ஆணிவேராக அமைந்திருக்கிறது.

மைய பா.ஜ.க. அரசும் தன் பங்குக்கு, நியம்கிரி பகுதியில் வளர்ச்சியைக் கொண்டுவருவது என்ற முகாந்திரத்தில், சாலைகளை அமைத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சாலைகள் நியம்கிரியிலிருந்து பாக்ஸைட் வெட்டியெடுத்துக் கொண்டுவரும் நோக்கத்திற்காகவே அமைக்கப்படுகிறது என கோண்டு பழங்குடியினர் அம்பலப்படுத்துகின்றனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை வேதாந்தா நிறுவனத்தை எதிர்த்துப் போராடிவரும் கோண்டு பழங்குடியின மக்களின் மீது மேலும் கடுமையான அடக்குமுறைகளை ஏவிவிடும் நோக்கில், நியம்கிரி பாதுகாப்பு கமிட்டிக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பிருக்கிறது என்ற ஆதாரமற்ற பழியைச் சுமத்தியிருக்கிறது, மத்திய உள்துறை.

மைய, மாநில அரசுகளின் வேதாந்தாவிற்குச் சாதகமான இந்த நடவடிக்கைகள், நியம்கிரியை மலையை டோங்கிரியா கோண்டு பழங்குடியின மக்களிடமிருந்து அபகரித்துக்கொள்ள ஆளுங்கும்பல் குறுக்குவழியில் இறங்கியிருப்பதை அம்பலப்படுத்துகின்றன.

சர்வதேசக் குற்றவாளி என அம்பலமாகிப் போயிருக்கும் வேதாந்தா நிறுவனத்திற்காக ஆளுங்கும்பல் எதையும் செய்து கொடுக்கத் தயாராகிவிட்ட நிலையில், அதற்கு எதிராக, எத்தகைய விலை கொடுக்க நேர்ந்தாலும், போராட்டத்தைத் தொடர்ந்து உறுதியாகவும், தீவிரமாகவும் நடத்துவது என நியம்கிரி பாதுகாப்பு கமிட்டி முடிவெடுத்து அறிவித்திருக்கிறது. அம்முடிவுக்கு தூத்துக்குடி போராட்டம்தான் ஆணிவேராக அமைந்திருக்கிறது.

தியாகங்கள் என்றும் வீண்போவதில்லைதானே!

  • அழகு

மின்னூல்:

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com