வீட்டை கூட்டுவதற்கும் தெருவை சுத்தம் செய்வதற்கும் அவசியமான துடைப்பம், இன்று மோடியின் ஆட்சியில் அதைத் தாண்டிய அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆம், ‘தூய்மை இந்தியா’ என வீதிகளில் குப்பையைக் கொட்டி கவர்னர்களும், பிரபலங்களும் ஆளுக்கொரு துடைப்பத்துடன் போட்டோவிற்கு போஸ் கொடுக்க உதவும் கருவியாக மாறியுள்ளது. இதே வேலையை அன்றாடம் செய்யும் துப்புரவுத் தொழிலாளிகளின் வாழ்க்கை மட்டுமலல, அந்த துடைப்பங்களை பின்னிக் கொடுக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது.
ஒரு நாள், சிலநாட்கள் அல்ல தங்கள் வாழ்க்கையையே வீதிகளில்தான் வாழ்ந்து முடிக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையின் சோகம் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது. இங்கே சென்னை ஆலந்தூரில் துடைப்பங்களை பின்னி விற்கும் சில தொழிலாளிகளைச் சந்திப்போம்.

அழகர்சாமி, சொந்த ஊர் திண்டுக்கல்.

என்னோட பாட்டன் பூட்டன் காலத்துல இருந்து துடைப்பம் வியாபாரம்தான். நாங்க அம்பது வருசமா இதே பிளாட்பாரத்துல இருக்கோம். தொழிலுக்கு பேங்குல லோனு கேட்டா ஆயிரம் கேள்வி, சொத்து பத்து எல்லாம் கேக்குறாங்க. சொத்துக்கு நா… எங்க போவேன்?

பாப்பாத்தி, அழகர்சாமியின் மனைவி.

எங்களுக்கு ரெண்டு பசங்க. ஊர்லயே இருக்காங்க. ஏழாவது வரைக்கும்தான் படிக்க வைக்க முடிஞ்சது. இப்ப ஓட்டல்ல வேலை செய்யுறாங்க. பசங்கள இங்க அழைச்சிட்டு வரலாம்னா வீடு இல்ல. நாங்க குளிக்கிறது, தூங்கறது எல்லாம் பிளாட்பாரத்துல, சாப்பாடு அம்மா ஓட்டல்ல. இப்படியே எங்க பொழப்பு ஓடிட்டு இருக்கு.

மூணு மாசம் வரைக்கும் லோடுவர துடைப்பத்த பின்னி சுத்தம் பண்ணுவோம். அப்புறம் தலை சுமையா தூக்கிட்டு விக்கறதுக்கு கெளம்பிடுவோம். ஒரு துடைப்பம் 15 ரூபா. ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய்க்கு துடைப்பம் வித்தாலே எங்க பாரம் கொறஞ்ச மாதிரி.

திண்டுக்கலைச் சேர்ந்த தம்பதியினர்.

தேனி, வத்தலகுண்டு, உசிலம்பட்டியில இருந்து மொத்தமா துடைப்பம் வாங்குறோம். தமிழ்நாடு முழுவதும் துடைப்பம் பின்னும் வேலை செய்யிறவங்களுக்கு சரக்கை கொண்டு வந்து கொடுப்போம். இந்த தொழில்ல லாரி வாடகை, சாப்பாட்டு செலவுன்னு அதிகம். குடும்பத்துல இருக்கவங்களே சேர்ந்து வேலை செஞ்சாதான் சோறு. சரக்கு எடுக்க கடன் வாங்குறது அதுக்கு வட்டி கட்றதுன்னு வாழ்க்கை ஓடுது.

வீரம்மாள், சொந்த ஊர் உளுந்தூர்பேட்டை.

நா… உளுந்தூர்பேட்டை விழுப்புரம் பக்கம். பதினாலு வயசுல இந்த (சென்னை ஆலந்தூர்) ஊருக்கு வந்தேன். என் வீட்டுக்காரு மீன்பாடி வண்டி ஓட்டுனாரு. அவரு போயி சேந்துட்டார். முப்பந்தஞ்சி வருசமா இந்த வேலைய செய்யுறேன். ஒரு நாளைக்கு 100, 150 சம்பாதிக்கிறேன். அதை வச்சிக்கிட்டுதான் ஒப்பேத்துறேன். நோயிங்க அதிகமா வருது. தூசு தும்பு பாடாபடுத்துது. அடிக்கடி தலைவலி, கைகால் நோவு, படபடன்னு இருக்கும். இப்ப கண்பார்வையும் சரியா தெரில.

நல்லதம்பி, முன்னாள் விவசாயி.

சின்ன வயசுல விவசாயம் பண்ணேன். மழை இல்லாததால விவசாயம் பண்ண முடியல. இங்க வந்தா கெடச்சது இந்த வேலைதான். ஒரு நாளைக்கு இருநூறு தருவாங்க. அதுவும் நாலு நாளைக்குதான் வேலை. லோடு வந்தா கூப்பிடுவாங்க. வேற என்ன சொல்ல?

-வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க