யனாவரம் பாலியல் வன்கொடுமை சம்பவம் அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் பிள்ளைகள் பெற்றவரை கவலையடையச் செய்திருக்கிறது. யாரை நம்புவது எப்படி பழகுவது என எல்லோரையும் சந்தேகிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையொட்டி சென்னையில் பல தரப்பட்ட மக்களிடம் பேசினோம்.

வாசுதேவன் ரெங்கசாமி

செல்போனாலதான் கெட்டுடுத்து உலகம். முன்னெல்லாம் மனுசாள் கலந்து பேசிப்போம். இப்ப ஆளுக்கொரு செல்போன் வச்சுட்டு அத பாந்துண்டுருக்கோம். நீங்க எது வேண்ணாலும் அதுல பாக்கலாம்.

குழந்தன்னு பாக்காமெ கூட அப்படி நடந்துகிட்டது தப்புதான். அவங்களுக்கும் ஆயிரம் வேலை பிரஸ்சரு இருக்கு. ரிலாக்சுக்கு செல்போனு பாக்கும் போது கண்டதும் வருது. மனசு சஞ்சலப் பட்டுன்டுறது.

சோசியல் மீடியாவுல இந்து கல்ச்சர கேவலமா கிண்டலடிக்கிறா. மகாபாரதம் ராமயணத்துலதான் தர்மம் அதர்மம் பாவம் புண்ணியம் எல்லாம் சொல்லிருக்கு. அதப் படிச்சவா எந்த பாவமும் பண்ண மாட்டா. கல்ச்சர கடைபிடிங்கோ! பிரார்த்தனை பண்ணுங்கோ!

யசோதா, கோயிலில் வேலை செய்பவர்.

பருவம் வந்த ஆம்பள பொம்பள அத்தன பேருக்கும் காம உணர்வு வர்றது இயல்பு. இதுல எந்த சிக்கல் வந்தாலும் பொம்பள பொறுமையா இருந்து பொறந்த எடம் புகுந்த எடம் மானத்த காப்பாத்துவா. ஆனா ஆம்பள கட்டையில போற வரைக்கும் ஆசைய முடிச்சுக்க மாட்டான். அதனாலதான் அரிப்பெடுத்து கட்டையில போற வயசுல குழந்தைய நாசம் செஞ்சுருக்கானுங்க.

இந்த கோயில்லதான் சுத்தம் செய்ற வேலை செய்றோம். நாங்க பாட்டுக்கு வேலை செஞ்சுட்டு இருப்போம் அப்படியே ஒரசிக்கிட்டு போவானுங்க. அப்புடிதான் நோட்டம் விடுவானுங்க. அவ்வளவு ஏன் இங்க வேலை செய்ற அய்யரத் தவிர வெளியருந்து வர்ற அய்யரு குருக்களு கூட அப்படிதான் செய்வானுங்க.

சசிகலா

அவன நிக்கவச்சு சுடனும். அவன் வீட்டு பொண்ணாருந்தா அப்படி செஞ்சுருப்பானா. எங்கிட்ட கூட்டியாங்க, அவனுங்கள அத்தன பேத்தையும் ஒத்தால நின்னு வெட்டி சாச்சுப்புடுறேன். நெதமும் பேப்பருல இதேதாங்க சேதி. பொம்பளப் பிள்ளைய வச்சுகிட்டு நிம்மதியாவே இருக்க முடியல. பத்தடி தூரத்துல இருக்கும் பள்ளிக்கூடத்துக்கு நம்பி அனுப்ப முடியல. பயந்துகிட்டு வீட்டுக்கு கூட்டியார வேண்டிருக்கு. ……… பசங்க. அநியாயம் பன்றானுங்க!

அப்துல் ரசாக், துணிக்கடை ஊழியர்.

வெறி புடிச்ச நாய்ங்க. அவனுங்க குடும்பத்துல உள்ளவங்க கையில துப்பாக்கிய குடுத்து சுடச் சொல்லனும். என்ன கேட்டா சட்டம் சரியில்லன்னுதான் சொல்லுவேன். எதுக்கு கோர்ட்டு கேசு விசாரணையின்னு நாள் கடத்தனும். அதே எடத்துல பட்டுனு போட்டு தள்ளனும், அப்பதான் மத்தவனுக்கு பயம் வரும்.

சண்முக வடிவு

அந்த குழந்தைக்கி காது கேக்காது வாயி பேசாதுன்னு சொல்றாங்க. அப்புடி புள்ளையக் கூட விட்டு வைக்காமெ இப்படி செய்றாங்களே, உலகம் எங்க போயி முடியுமோ. கொஞ்சநஞ்சம் மனசுல ஈரமுள்ளவனக் கூட இந்த டாஸ்மாக்கு வந்து கெடுத்துட்டுது. மூக்கு முட்ட தண்ணியப் போட்றான். தாயிக்கும் தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாம தறிகெட்டு திரியிரான். மொதல்ல இந்த சாராயக் கடைய இழுத்து மூடனும்மா.!

சிவா – சிலம்பரசன்

இந்த காலத்துல இளைஞர்கள் இப்படியான அசிங்கத்த செய்ய மாட்டாங்க. மொபையில் நெட்டு வந்து கெடுத்துருச்சுன்னு சொல்றாங்க. ஆனா நல்ல விசயத்த கத்துக்கத்தான் இக்கால இளைஞர்கள் முயற்சி செய்றாங்க. பெண்கள மதிக்கிறாங்க. ஆனா வயசான பெரியவங்கதான் அந்த கால நெனப்புலேயே பெண்களை பாக்குறாங்க. இணையம் செல்போனல்லாம் அவங்க வக்கிறத்துக்கு தீனி போடுதுன்னு சொல்லலாம்.

கோபால், செக்யூரிட்டி ஊழியர்.

ரஜினி சொல்றாப்போல சிஸ்டம் சரியில்லேன்னுதான் சொல்லனும். அரசியல் வாதிலேருந்து போலீஸ்க்காரன் வரைக்கும் யாருமே சரியில்லம்மா. விருகம்பாக்கத்துல கொலைசெஞ்ச ரவுடி ஜாமின்ல வெளிய வரும்போது ஒரு எம்.எல்.ஏ மாலை போட்டு வரவேற்கிறான். சாமியாரு ரேப் பண்றான் பந்தோபஸ்துக்கு போலீசு போறான்!

வழிநடத்த வேண்டிய பொறுப்புல இருக்குற எவனுமே சரியில்லன்னு தெரியும். தப்பு செய்யிறவனுக்கு என்ன தோணும். இது சீர் கெட்ட சமூகம் நாம எது வேணுன்னாலும் செய்யலாங்கற நெனப்பு தரிகெட்டு ஓடும். பேரப்பிள்ளையா பாக்க வேண்டிய வயசுல பச்ச கொழந்தைய நாசம்பன்னிருக்க மாட்டானுங்க.

முகமது – யூசுப்

இவனுங்களப் போல ஆளுங்களுக்கு குடுக்குற தண்டனையப் பாத்து  மத்தவங்களுக்கு கனவுலையும் இப்படி தப்பு பன்ன தோணக்கூடாது. அந்த அளவு சட்டமும் தண்டனையும் வலுவா இருக்கனும். அதே நேரத்துல பெத்தவங்களும் விழிப்புணர்வோட இருக்கனும். குழந்தைகளுக்கு ஓரளவுக்கேனும் பாலியல் தொடர்பான விசயங்கள சொல்லிக் கொடுக்கனும்.

தேவகி

அவனையெல்லாம் அதே எடத்துல சுடனும். அவனும் ஒரு தாய் வயித்துல பொறந்தவந்தானே. நெனச்சாலே வயிரு எரியுது. ஒரு ஊனமுற்ற கொழந்தைய பாவம் பாக்காமெ செஞ்சுருக்கேனே அவன் வெளங்குவானா. எனக்கு இப்பதான் பேரன் பொறந்துருக்கான் அவனுக்கு பொண்ணும் ஒன்னப்போல மனுசப்பிறவிதான்னு சொல்லிக் கொடுத்து வளக்கனும்னு காலையிலதான் சொல்லிகிட்டிருந்தேன்.

மாதவி – சுபஸ்ரீ, சட்டக்கல்லூரி மாணவிகள், புகைப்படம் தவிர்த்தார்கள்.

இப்படியான மனிதர்கள சுத்திதான் நாமளும் இருக்கோன்னு நினச்சாலே அசிங்கமா இருக்கு. நல்லாத்தானே பழகுறாங்கன்னு யாரையும் நம்ப முடியல. யாருகிட்ட பேசினாலும் நம்மல எப்படி பாப்பாங்களோன்னு ஒடம்பு கூசுது. அடிக்கடி இதுபோல நிகழ்வு நடப்பதால இப்ப எதார்த்தம் போல கடந்து போயிட்றோம். எதார்த்தமா எப்படி தோனுதுன்னா இதுபோல விசயத்த கேள்விபடும் போது அவங்க மேல வர்ற கோபத்த விட நாம எப்படி உசாரா இருக்கனுங்கற எச்சரிக்க உணர்வுதான் முதல் வருது.

இந்த பொறுக்கிப் போல ஆளுங்களுக்கு யாருமே அப்பீல் ஆகக்கூடாதுன்னு நெனச்சேன். அதே போல வழக்கறிஞர் சங்கம் அறிவிச்சுருக்கு. பெற்றோர்கள் கவனமா குழந்தைங்க கிட்ட ஃபிரண்ட்லியா பேசி பழகனும். அவங்களோட வெளியுலகத்தோட நாமும் தொடர்புல இருக்கனும். சின்ன சின்ன விசயத்த கூட அவங்க கிட்ட பகிர்ந்துக்கனும். விளையாட்டுத் தனமான விசயமானாலும் குழந்தைங்க சொல்றத நாம காதுகொடுத்து கேக்கனும்.

லாவண்யா,  செவிலியர். புகைப்படம் தவிர்த்து விட்டார்.

திருமணம் குழந்தையின்னு ஆன பிறகு புருசன் பொண்டாட்டி அவ்வளவா நெருக்கமா இருக்கறது கிடையாது. விரும்பியும் விரும்பாமலும் அது நடக்குது. இதுல பெண்கள் குடும்பம் குழந்தையின்னு விதிக்கப்பட்டத ஏத்துகிட்டு வாழ்றாங்க. ஆனா ஆம்பளைங்க அப்படி கெடையாது. இதுக்கான சந்தர்ப்பம் வெளியில வாய்க்கும் போது அத பயன்படுத்திக்கிறான்.

அதுல வெறி கொண்ட மிருகமா இருந்துருக்கானுங்க இவனுங்க. 17 பேருக்கும் தெரியும் போது ஒருத்தங்கூட வெளிய சொல்லி குழந்தைய காப்பாத்த நெனைக்காமெ தானும் அனுபவிக்கனுன்னு நெனைக்கிறதுக்கு காரணம் என்ன? காலங்காலமா ஆணுங்கற திமிரு.

வினவு களச் செய்தியாளர்கள்

1 மறுமொழி

  1. மகாபாரதம், இராமாயணம் போன்ற புராண ஆன்மீகங்களின் LATEST VERSION தானே இந்த கால இணைய ஆபாச வக்கிரமான வீடியோக்கள்.பிறகு எப்படி புராணங்களிலிருந்து நல்லதை அறியமுடியும்? புராண ஆன்மீகங்களை கரைத்து வடிகட்டி குடித்தவாதானே காஞ்சிகாமக்கேடி ஊத்தவாயர் ஜெயேந்திரர்,நித்தி மற்றும் வடமாநில சாமியார்கள்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க