என்.எஸ்.ஏ தகர்ந்தது ! வழக்கறிஞர் அரிராகவன் விடுதலை !

ன்று காலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அரிராகவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் 20-ம் தேதியன்று தொடங்கி 26-ம் தேதி இறுதி செய்ததாக கூறினார்.

23-ம் தேதி உயர் நீதி மன்றம் அவருக்கு எல்லா வழக்குகளிலும் பிணை வழங்கியிருப்பது உங்களுக்குத் தெரியாதா? போலீசார் சொல்வதை அப்படியே கேட்பதுதான் மாவட்ட ஆட்சியரின் பொறுப்பா? அரிராகவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை வைத்தால் அவர் குறைந்த பட்சம் நான்கைந்து மாதங்களாவது சிறையில் இருந்திருக்க வேண்டும். அவருடைய உரிமை பறிக்கப்படுவதற்கும், இந்த பாதிப்புக்கும் யார் பொறுப்பேற்பது? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இனி பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை கூறியது.

பின்னர் அரிராகவன் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட உத்தரவை ரத்து செய்து அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தது.

இன்னும் பல தூத்துக்குடி மக்கள் பொய் வழக்குகளில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.  புதிது புதிதாக கைது செய்யப்படுகிறார்கள். அனைவரையும் விடுவிப்பதற்கு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என தூத்துக்குடி மக்களுக்கு உறுதியளிக்கிறோம்.

இந்த வழக்குகள் அனைத்திலும் எவ்வித கட்டணமும் பெற்றுக்  கொள்ளாமல், கடுமையாகப் பாடுபட்ட வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள் அனைவருக்கும் எமது நன்றியை உரித்தாக்குகிறோம்.

– மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு