கோவில்பட்டியைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் ஆதி, சரவணன், கணேசன், சந்தன குமார், கருப்பசாமி ஆகியோரை கடந்த 14.02.19 அன்று அதிகாலை 1.30 மணியளவில் சட்ட விரோதமாக கடத்திக் கொண்டு போனது இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான இருபதுக்கும் மேற்பட்ட போலீசைக் கொண்ட டீம்.   அதிகாலை நேரத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டிருந்த தம்மை நோக்கிக் குரைத்த நாய்களை சட்டை செய்யாமல் கடத்திச் செல்வதில் குறியாக இருந்தனர் போலீசார்.

காரணம் கேட்ட போது தோழர் கணேசனைத் தவிர மற்ற அனைவருக்கும் சொல்லப்பட்ட காரணம், டி.எஸ்.பி உங்களோடு பேச வேண்டும் என்கிறார் என்பதுதான். கணேசன் வீட்டுக்குள் புகுந்த போலீசாரிடம் அவர் சம்மன் அனுப்பினீர்களா? வாரண்ட் இருக்கிறதா? என போலீசாரிடம் தமக்கு அரசியல் சாசனம் சட்டப்படி வழங்கியுள்ள உரிமைகளைக் கேட்டார். அதற்கு சட்டத்தை மதிக்கிற போலீசு, “உம்மேல ஒரு பொம்பள கேஸ் கொடுத்திருக்கா. வா ஸ்டேசனுக்கு” என்று அடித்து இழுத்துச் சென்றனர்.

வலிப்பு நோயால் உடல் நலிவுற்று மருத்துவம் எடுத்துக் கொண்டிருந்த தோழர் சரவணனை போலீசு கடத்திய போது, அவரது மருந்துகளைக் கூட எடுத்துவர அனுமதிக்கவில்லை. எப்போது வேண்டுமானாலும் வலிப்பு வரலாம் என்ற நிலையில், நாக்கு கடிபடாமல் இருக்க பற்களுக்கு இடையில் சிறு துண்டை (துணியை) வைத்துக் கொண்டால் காயம் படாமல் இருக்கும் என்று அதை எடுத்துவரக் கேட்ட போது அதை மறுத்தார் ஆய்வாளர் ராமகிருஷ்ணன். அச்சிறு துண்டு அளவில் கூட அவரிடம் மனிதாபிமானம் இல்லை. சரவணனின் மனைவி அவருக்கு உடம்பு சரியில்லை என்றபோது கூட நக்கலாக நாங்க பாத்துக்கிறோம் என்றார் அவர்.

போலீசின் அராஜகத்தை அனுபவத்தின் மூலம் கண்ட அவர் மனைவி உடனே கோபமாக, “நீங்க என்னத்த பார்ப்பீங்கன்னு எனக்குத் தெரியாது?. உங்க லட்சணத்தைத்தான் நான் பார்த்தேனே. இத மாதிரித்தான் விசாரிச்சுட்டு அனுப்பிடறோம்ன்னு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்ததுக்கு அப்புறமா கூட்டிட்டு போனீங்க. என்.எஸ்.ஏ-வுல போட்டீங்க. நாலு மாசம் கழிச்சுத்தான் வந்தாங்க. உங்கள நம்பி அனுப்ப முடியாது” என சரவணன் கையைப் பிடித்துக் கொண்டார். என்ன நீ ஓவரா பேசுற எனக் கூறி இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் அவரை தள்ளி விட்டார்.  வீட்டுக்குள்ளிருந்து மெயின் கேட்டிற்கு சரவணனை இழுத்து வந்த போலீசு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் பூட்டப்பட்டிருந்த மெயின் கேட்டில் நிறுத்தி ஏறி வெளியே குதி என்றார். நாமறிந்து திருடன் மட்டுமே சுவரேறி குதிப்பான். போலீசு என்று சொல்லிக் கொள்ளும் இவர்களுக்கும் ஏன் அவ்வாறு தோன்றுகிறது ?

ஏறிக் குதிக்க மறுத்திருக்கிறார் சரவணன். சாவி கொண்டு வந்து திறந்தபின் வண்டியில் ஏற்றிக் கொண்டு போனார்கள். பின்னாலேயே அவரது மனைவி மருந்து பாட்டில்கள் செருப்பு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார்.

போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டரிடம், “நான் இப்போதுதான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ச் ஆகியிருக்கிறேன். மருந்து எடுத்துக் கொள்ளவில்லையானால் எனக்கு வலிப்பு வந்து விடும்” என்று சரவணன் கூற, “எந்தப் பக்கம் வரும்” என்று இஸ்பெக்டர் கேட்டார். “வலது பக்கம் வரும்” என்று சரவணன் கூற, “எனக்கு இடது பக்கம் வரும், போய் உக்காரு” என்று நக்கலாகவும் திமிராகவும் கூறியிருக்கிறார். தொழில்முறை கொலைகாரனுக்குக் கூட கொஞ்சம் இரக்கம் இருக்கும். பாசிஸ்டுகளுக்கு அடியாள் வேலை பார்க்கும் இந்த அதிகார வர்க்க போலீசுக்கு அது இருக்காது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆனது. சரவணன் மனைவியின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் மருந்து அவரிடம் சேர்ந்தது.

படிக்க:
♦ எதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் !
♦ எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் !

தோழர் ஆதி கால் ஒடிந்து சிகிச்சைக்குப் பிறகு சரியாக நடக்க முடியாமல் இருப்பவர். டி.எஸ்.பி யை காலையில் வந்து பார்க்கிறேன். கால் வலியால் தற்போது என்னால் வர முடியாது எனக் கூறிய போது, கட்டாயம் இப்போதே வர வேண்டும் எனக் கூறி, நடக்க முடியாத அவரை இழுத்துக் கொண்டு போனது போலீசு.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பெயர் விலாசத்தை பதிவு செய்து கொண்டு ஐவரையும் வண்டியில் ஏற்றிக் கொண்டார்கள். எங்கே எனக் கேட்ட போது மேற்கு காவல் நிலையம் என்று போலீசு சொன்னது. ஆனால் வண்டி அதையும் தாண்டிச் சென்றது. அப்போது நாலாட்டின் புதூர் என்றது. மேற்கு காவல்நிலையம் என்று கூறிவிட்டு ஏன் நாலாட்டின் புதூர் அழைத்துச் செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு மௌனமே பதிலாக கிடைத்தது. நாலாட்டின்புதூர் காவல்நிலையத்துக்கு சென்று வெளி கேட்டை பூட்டி விட்டு உள்ளே சென்று உறங்கியது போலீசு. குளிரும் கொசுக்கடியும் ஐவரையும் உறங்க விடவில்லை.

காலை 10 மணிக்கு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வந்து அவரது அறைக்குள் சென்றார். ஒரு பென்ச் போடப்பட்டு ஐவரும் அதில் அமர வைக்கப்பட்டனர். டீ வந்தது பிஸ்கட் கொண்டு வராததற்கு கான்ஸ்டபிளைக் கடிந்து கொண்டார். டீ குடிங்க என்று அனுசரணையாகக் கூறினார்.

“ஒண்ணுமில்லை டி.எஸ்.பி வருவார், உங்க கிட்ட பேசுவார் அவ்வளவுதான்.”

“அதுக்காக எங்களை ஏன் நைட் 1.30 மணிக்கு இழுத்துட்டு வந்தீங்க”

“இழுத்துக்கிட்டு வரல அழைச்சிக்கிட்டு வந்தோம்.”

“அழைச்சிக்கிட்டு வற்றவங்க தான் கதவை உடைச்சிக்கொண்டு வருவாங்களா? சட்டையை கிழிப்பாங்களா? அடிப்பாங்களா? மருந்து எடுக்கக் கூட விடல சின்ன டவல் கூட எடுக்க விடல”

“சில நேரங்களில அப்படித்தான் நடந்துக்க வேண்டியதிருக்கு. சட்டமே அப்படித்தான் இருக்கு.”

“சட்டத்துல அப்படி எங்க சொல்லியிருக்குது?”

“உதாரணத்துக்கு துப்பாக்கிச் சூடு நடத்துறதுக்கு சில விதிமுறைகள் இருக்குன்னு சட்டம் சொல்லுது. ஆனால் தேவைப்பட்டால் அந்த விதிமுறைகளை மீறலாம்னு சட்டமே சொல்லுது.” என்று அவருடைய புதுமையான சட்ட விளக்கத்தை சொல்லிக் கொண்டிருக்கும் போது டி.எஸ்.பி ஜெபராஜ் உள்ளே வந்தார். வந்து ஒவ்வொருவர் முகத்தையும் பார்த்துக் கொண்டார். பெயரையும் செய்யும் வேலையையும் கேட்டுக் கொண்டார்.

“நீங்க யாரு, எப்படி இருப்பீங்கன்னு எனக்குத் தெரியாது. அதான் உங்களை நேரில் பார்த்து பேசலாம்னு வரச் சொன்னேன். பாருங்க என்னோட சர்வீஸ்ல பிளாக் மார்க் ஒண்ணும் கிடையாது. ஆனா இப்போ உங்களால வந்திடுச்சு. ஏன் மக்கள் அதிகாரத்துல இருக்கிறவங்க மேல கேஸ் போடமாட்டேங்குறீங்கன்னு மேலே இருந்து என்னைக் கேக்குறாங்க”

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து என்.எஸ்.ஏ-வில் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள்

“கேஸ் போடலையா? வழக்கு போட்டு, சிறைக்கு போயிருக்கோம். என்.எஸ்.ஏ போட்டிருக்கீங்க.”

“அது வேற. மே 22-க்கு தூத்துக்குடிக்கு கோவில்பட்டியில இருந்துதான் ஆள திரட்டிட்டு போயிருக்கீங்க”

“சார்.. ஸ்டெர்லைட் போராட்டம் மக்கள் அதிகாரத்தின் போராட்டம் இல்லை. அது தூத்துக்குடி மக்களின் போராட்டம். நாங்க அதுல கலந்துகிட்டோம். கால்ல அடிபடாம இருந்திருந்தா நான் முன்னாடி போய் அன்னைக்கே செத்திருப்பேன்.”

“ஃபாக்டரி இல்லாம நாடு எப்படி முன்னேறும். உதாரணத்துக்கு டிராக்டர் இல்லாம இப்போ உழுதா எல்லோருக்கும் சோறு கெடைக்குமா?”

“சார், இயந்திரங்களுக்கோ தொழிற்சாலைகளுக்கோ நாங்க எதிரி இல்லை. ஒரு முதலாளி லாபம் சம்பாதிக்க ஒரு லட்சம் பேரை சாகடிக்கிறானே, அந்த கார்ப்பரேட் முதலாளிகளைத்தான் எதிர்க்கிறோம். மக்களோடு நிற்கிறோம்.”

“இப்போ நான் சேலன்ச் பண்றேன். எத்தனை பேரு கோவில்பட்டியில உங்க பின்னாடி வர்றான்னு பார்க்கிறேன். உங்கள தூங்க விடாம ’காப்பாத்துங்க காப்பாத்துங்க’ன்னு உங்க பின்னாலேயே சுத்திட்டிருக்காங்களா?”

படிக்க :
♦ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – மக்கள் அதிகாரம் 6 தோழர்கள் NSA-விலிருந்து விடுதலை !
♦ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் ! மக்கள் அதிகாரம் ராஜு பதில் !

“சார், எங்க அஞ்சு பேர நம்பி கோவில்பட்டியில் பத்துபேரு கூட வரமாட்டாங்கன்னு சொல்றீங்க. அப்புறம் தூத்துக்குடியில் எப்படி ஒரு அம்பது தோழர்கள் பின்னாடி தூத்துக்குடியில ஒரு லட்சம் பேர் வந்தாங்கன்னு சொன்னீங்க, நீங்கதான் அதுக்கு காரணம்னு எங்கள சொன்னீங்க ?”

“இல்லை, நான் சொல்லல.”

“யார் சொன்னது?”

“அப்படி ஒரு கருத்து இருக்குது.”

“யாரு அந்தக் கருத்த பரப்புறா?”

“பாருங்க, எல்லோரும் சுப்ரீம் கோர்ட்டுக்கு கீழதான். சட்டத்துக்கு கீழதான். இன்னைக்கு யாரு ஆட்சில இருக்காங்களோ அவங்கதான் சட்டத்தை போடுறாங்க. அதனால் அவங்களுக்கு, அவங்க உத்தரவுக்கு கீழ்படிய வேண்டிய கடமை எங்களுக்கு இருக்குது. தனிப்பட்ட முறையில உங்களோட எந்தப் பகையும் எனக்கு இல்லை. எனக்கு மேல இருந்து பிரஷர்.”

“சார், ஒன்னு சொல்றோம். இந்த சீட்டுல இப்ப எஸ்.பி. முரளி ரம்பா உட்கார்ந்திருந்தாலும் இதைத்தான் சொல்லியிருப்பாரு. மேலே இருந்து மேல இருந்துன்னு சொன்னா அதத்தான் நாங்க சொல்றோம். மேல இருக்குறது கார்பரேட் காவி பாசிசக் கூட்டணி. அங்க இருந்து உத்தரவு வருது. நீங்க உங்க அதிகாரத்தை பயன்படுத்தி ஒடுக்கப் பார்க்குறீங்க.”

“அப்படியில்லை.. அப்படின்னா மரியாதையா உங்கள கூப்பிட்டு பேசிட்டிருக்க மாட்டேன்.”

“கூப்பிட்டுப் பேசல, சட்ட விரோதமா எங்கள இழுத்திட்டு வந்திருக்கிறீங்க.”

“நான் உங்களுக்கு சம்மன் அனுப்பினேனே”

“இல்லை, வரல”

“ஓ வரலியா, டெக்னிகல் ஃபால்டா இருக்கும்”

“அது எப்படி சார் எங்களுக்கு மட்டும் டெக்னிகல் ஃபால்டாகும். நைட்ல 1.30 மணிக்கு அடிச்சு சட்டைய கிழிச்சு கூட்டி வந்திருக்காங்க.”

“ஓ.. எனக்குத் தெரியாது. காலையிலதான் கூட்டி வரச் சொன்னேன். சாரி”

“மருந்து கூட எடுத்துக்க விடாம இந்த இன்ஸ்பெக்டர்தான் நைட்டு பிடிச்சு இழுத்துக்கிட்டு வந்தாரு.”

“ஓ,  நான் பொறுப்பேத்துக்கிட்டு சாரி கேக்கிறேன்.”

போன் ஒலித்தது.. பேசி விட்டு வைத்தார்.

“எஸ்பி தான் பேசுறார். எப்பவும் 10 மணிக்கு மேலதான் பேசுவார் இன்னைக்கு 7.30 மணிக்கே அடிச்சுட்டார். ஸ்பீக்கர்ல போட்டிருப்பேன், நாகரீகமா இருக்காதுன்னுதான் போடல. என்னாச்சுன்னு கேட்டார். சொன்னேன். நான் விட்றலாம்னு தான் பார்த்தேன்.  அவர்தான் செக்சன் 110 போடச் சொல்றாரு. இப்பவாவது புரிஞ்சிக்கிட்டீங்களா.. மேல இருந்து பிரஷர்னு.

“நா இங்கே வந்ததுல இருந்து, பல ரவுடிகள் கிட்ட பேசுறேன். சிபிஐ, சிபிஎம் கிட்ட பேசியிருக்கிறேன். அவங்கல்லாம் அப்படியே மேலோட்டமா பேசுறாங்க. நீங்கதான் உணர்ச்சிவசப்படுறீங்க.”

“உணர்ச்சிவசப் படல சார். நாங்க கொலை பண்ணல, கொள்ளையடிக்கல, யார் தாலியையும் அக்கல, கந்து வட்டிக்கு விடல, மாமூல் வாங்கல, புரோக்கர் வேலை பார்க்கல, சாராயம் காய்ச்சல, விபச்சாரம் பண்ணல, மக்களுக்காக நேர்மையா நிக்கிறோம். தொடர்ந்து நிப்போம்.”

நைச்சியமாய் பேசி அழைத்து வந்து மிரட்டிய சம்பவங்கள் உண்டு. ஆனால் கட்டாயப்படுத்திக் கூட்டி வந்து நைச்சியமாய் பேசி வளைக்கப் பார்ப்பது வரலாற்றில் இதுவே முதல்முறை. இதில் மிரட்டலும் உள்ளே பொதிந்திருப்பதை உணர முடிகிறது. சட்ட விரோதமாக கஸ்டடியில் அடைத்து வைத்து நைச்சியமாய் பேசுவது. ரகரகமாய் புதுப்புது பெயர்களை வைத்துக் கொண்டு மக்களை சாகடிக்கும் மோடி எடப்பாடி கும்பலின் திட்டங்களுக்கும், மேற்படி சதி திட்டத்திற்கும் வேறுபாடில்லை. மக்களோடு தொடர்ந்து நிற்பவர்களை எந்த சதித்தனமும் வீழ்த்த முடியாது. மேற்படி தோழர்கள் ஐவரும் இன்னும் நெஞ்சுரத்துடன் பணிகளைத் தொடர்கின்றனர். காவி கார்பரேட் பாசிச அதிகாரத்தால் மக்கள் அதிகாரத்தை வீழ்த்த முடியாது.

தகவல்
மக்கள் அதிகாரம்,
கோவில்பட்டி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க