மு.வி.நந்தினிமுதல் உலகப்போருக்குப் பின் 1920-1939 வரை யூதர்கள் குறித்து நாசி ஹிட்லர் செய்த பரப்புரைகள் ஜெர்மானியர்களை இனப் படுகொலையாளர்களாக  தயார்படுத்தின. யூதர்கள் ஜெர்மனி நாட்டிற்க்கு அந்நியமானவர்கள் என்ற ஹிட்லர்,  முதல் உலகப் போரில் தோல்வியை சந்தித்ததற்கும் ஜெர்மானியர்கள் எதிர்கொண்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் யூதர்களே காரணம் என்கிற ‘சதிக் கோட்பாட்டை’ முன்வைத்தார். ‘நம்மிடையே கலந்திருக்கும் யூதர்களை வெளியேற்றுதல்’ என துவங்கிய பிரச்சாரம், லட்சக்கணக்கான யூதர்களை படுகொலை செய்ததில் வந்து முடிந்தது.

Hitler
அடால்ஃப் ஹிட்லர்

வரலாறு மீண்டும் மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளில் மட்டுமல்ல இப்போது இந்தியாவிலும் திரும்பியிருக்கிறது.  அனைத்து பிரச்சினைகளுக்கும் யூதர்களே காரணம் என சதிக்கோட்பாட்டை உருவாக்கிய ஹிட்லரைப் போல இன்று ட்ரம்பும் மோடியும் முஸ்லிம்களை கை காட்டுகிறார்கள். படுகொலை முகாம்களுக்குள் அனுப்பப்படும் முன் பெற்றோரிடமிருந்து குழந்தைகளை பிரித்து தனித்தனியாக அடைத்த நாசிக்களின் பாதையை, நாகரீக நாடு எனச் சொல்லப்படும் அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் பின்பற்றுகிறார். அகதிகளாக வரும் அந்நியர்கள் (முஸ்லிம்கள்) நாட்டின் பாதுகாப்புக்கு  அச்சுறுத்தலாக இருப்பதாக  ஹிட்லரின் சதிக்கோட்பாட்டை மோடி அரசு வாசிக்கிறது. 40 லட்சம் மக்களை அந்நியர்கள் என சொல்லி அஸ்ஸாமிலிருந்து விரட்டியடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது இந்த அரசு.

அஸ்ஸாமிய அகதிகள்
ஹிமாந்த பிஸ்வ சர்மா

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் வரைவு அறிக்கை சமீபத்தில் வெளியானது. அருகில் உள்ள வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக அஸ்ஸாமிற்க்குள் குடியேறுவதைத் தடுக்க ‘அஸ்ஸாம் ஒப்பந்தம்’ இந்திய அரசால் 1951-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

இதன்படி பாகிஸ்தானிலிருந்து பிரிந்து பங்களாதேஷ் என்ற தனிநாடு உருவானதற்கு முன் அதாவது, 1971 மார்ச் 24-ஆம் தேதி வரை அஸ்ஸாமில் பிறந்தவர்கள், பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே ‘குடிமக்கள்’. அதன் பின் வந்தவர்கள் அந்நியர்கள்.  அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் கணக்கெடுக்கும் பணி  2014-2016 வரை நடைபெற்றது. இந்த பதிவேட்டின் வரைவில் அஸ்ஸாமில் வசிக்கும் 2.89 கோடி பேர் இடம் பெற்றுள்ளனர். 40 லட்சம் பேர் விடுபட்டுள்ளனர். இதில் 2 லட்சம் பேருக்கு மட்டுமே, தக்க சான்றிதழ் கொடுத்து குடிமக்கள் பதிவேட்டில் மீண்டும் இணைத்துக் கொள்ள வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. மீதியுள்ளவர்கள் அகதி முகாம்களுக்கு அனுப்பப்பட்டு தங்களுடைய ‘சொந்த’ நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்கிறது அரசு.

அனைத்து பிரச்சினைகளுக்கும் யூதர்களே காரணம் என சதிக்கோட்பாட்டை உருவாக்கிய ஹிட்லரைப் போல இன்று ட்ரம்பும் மோடியும் முஸ்லிம்களை கை காட்டுகிறார்கள்.

1971 மார்ச் 24-ஆம் தேதிக்குப் பின் அஸ்ஸாமில் குடியேறிய பக்கத்து மாநிலமான மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களும் அந்நியர்களாக கருதப்படுவார்கள். ஒரே நாடுதான் ஆனால், அந்நியர்! சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தில் குடிமக்கள்-அந்நியர் என்பது மட்டுமே பிரச்சினையில்லை. இந்துத்துவ மோடி அரசுக்கு முஸ்லீம்களின் மீதுள்ள வெறுப்பு மிக முக்கிய காரணம். இந்த வெறுப்பு நாசி ஹிட்லரின் யூத வெறுப்பை ஒத்துள்ளது.

அகண்ட பாரதம்
ஒரு முஸ்லீம் என்பதால் “ D-voter ” எனும் சந்தேக வாக்காளர் நிலைக்கு தள்ளப்பட்ட கிஸ்மத் அலி பல சட்ட போராட்டங்களுக்கு பின்னர் தான் நாட்டின் குடியுரிமை பெற்றார்

தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் லோத் இப்படி சொல்கிறார், “சட்ட விரோதமாக குடியேறியிருக்கும் பங்களாதேஷிலிருந்து வந்தவர்களும் ரொஹிங்கியாக்களுக்கும் வெளியேறாவிட்டால் அவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும். பங்களாதேஷ் பிரிவினையின் போது  அஸ்ஸாமுக்குள் 40 லட்சம் பேர் ஊடுருவி சட்ட விரோதமாக தங்கி விட்டனர். இந்தியாவை அழிக்கும் ‘சதி’யின் ஒரு பகுதியாக  இவர்கள் ஊடுருவியிருக்கிறார்கள் ”. ஜெர்மன் தேசியத்தை முன்னெடுத்து ‘யூதர்களின் சதி’யை பிரச்சாரமாக்கி மக்களை கொன்றொழித்த நாசியின் தொனி தெரிகிறதல்லவா?

சட்ட விரோதமாக குடியேறியிருக்கும் பங்களாதேஷிலிருந்து வந்தவர்களும் ரொஹிங்கியாக்களுக்கும் வெளியேறாவிட்டால் அவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும்.

“நீங்கள் மனித உரிமை குறித்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அஸ்ஸாம் மக்களுக்கு மனித உரிமை தேவையில்லையா? இந்த நாட்டு மக்களுக்கு எந்த உரிமையும் வேண்டாமா? சட்டவிரோதமாக எல்லையில் ஊடுருவிக் கொண்டிருந்தால் இந்த நாடு எப்படி இயங்கும்? சட்ட விரோதமாக குடியேறுகிறவர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு தேச பாதுகாப்புக்கானது; ஊடுருவல்காரர்களை தடுக்கக் கூடியது” என்கிறார் மோடியின் கோயபல்ஸ் அமித் ஷா.

துணை ராணுவப் படையின் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற கிராம மக்கள்.

அஸ்ஸாம் மாநிலத்தில் ’பங்களாதேஷ் குடியேறிகள், அந்நியர்கள், ஆபத்தானர்கள்’ என்கிற பிரச்சாரத்தை முன்னெடுத்து ஆட்சிக்கு வந்தது பாஜக. அஸ்ஸாம் ஜிகாதி முஸ்லிம்களின் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸிலிருந்து பிரிந்து 11 எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் தஞ்சம் புகுந்த ஹிமாந்த பிஸ்வ சர்மா சட்டப்பேரவை தேர்தலின் போது பிரச்சாரம் செய்தார்.

மண்ணின் மைந்தர்களுக்கு முஸ்லிம்களால் ஆபத்து என தொடர்ந்த பிரச்சாரம் பாஜகவை ஆட்சியில் அமர்த்தியது.  முதலில் வைஷ்ணவ மடங்களுக்குச் சொந்தமான நிலத்தை  ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி இஸ்லாமிய அகதிகளை விரட்டியது அஸ்ஸாம் அரசு.  2017 செப்டம்பர் மாதம் கசிரங்கா சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்ததாகக் கூறி 200 கட்டடங்களை இடித்துத் தள்ளினார்கள்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்திய போது  துணை ராணுவப் படையின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகினர். வனப்பகுதி ஆக்கிரமிப்புக்குள்ளானதல்ல என்றும், கசிரங்கா சரணாலயத்தின் விஸ்தரிப்புக்காக மாநில அரசு சமீபத்தில்தான் அப்பகுதியை கேட்டிருந்தது என்றும் ஆதரங்களோடு செய்தி வெளியானது. ஆனாலும் அம்மாநில அரசு ‘பங்களாதேஷ்’ குடியேறிகள் என்ற பதங்களைப் பயன்படுத்தி ஏழைகளை குறிப்பாக, இஸ்லாமியர்களை விரட்டத் தொடங்கியது. அஸ்ஸாமிலிருந்து பங்களாதேஷிகளை துடைத்தெடுக்கும்வரை இந்தப் பணி தொடரும் என அம்மாநில நிதியமைச்சர் அறைகூவல் விடுக்கிறார்.

இந்துத்துவ கும்பலுக்கும் ஆட்சியைப் பிடிப்பது மட்டும் இலக்கு அல்ல, மதவாதமும்,முஸ்லீம்கள் நீக்கப்பட்ட ‘இந்து தேசிய அகண்ட பாரதமே’ அவர்களுடைய இறுதி இலக்கு.

வங்கதேச முஸ்லிம் அகதிகள் விரட்டப்பட வேண்டியவர்களா?
முசுலீம் மக்களை ஐ.எஸ்.ஐ ஏஜெண்டு – அகதி என்று மிரட்டுவதற்கான துருப்புச் சீட்டுதான் இந்த அகதி பிரச்சாரம்.
– கண்ணை மறைக்கும் காவிப் புழுதி தொடர் கட்டுரை

2016-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்தில் இஸ்லாமிய அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் சிறுபான்மையினராக வசித்த இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், கிறித்துவர்கள் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறுகிறவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள். இவர்கள் ஆறு ஆண்டுகள் இந்தியாவில் வசித்தால் இந்திய குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். அதாவது, பாகிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக நுழைந்த ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் கழித்து இந்திய அரசே அவர்களுக்கு குடியுரிமை கொடுத்துவிடும்.

bangladeshi refugees in india
2014 – ல் அஸ்ஸாமின் பாக்‌ஷா மாவட்டத்தில் கிழக்கு வங்காளத்தை சார்ந்த முஸ்லீம்களின் வீடுகளை போடோ இராணுவம் கொளுத்தியது. எங்கு போவதென்று தெரியாமல் குடும்பத்துடன் செல்லும் முஸ்லீம்கள்.

இது பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்துக்களுக்கும் பொருந்தும். இந்த கரிசனம் மியான்மரில் சிறுபான்மையினராக உள்ள ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு இல்லை. முஸ்லிம்களின் மீதுள்ள இந்த வெறுப்புதான் ஹிட்லரின் யூத வெறுப்புடன் ஒத்துள்ளது.

2014 பாஜக தேர்தல் அறிக்கையில் ‘இடருக்குள்ளாகும் அனைத்து இந்துக்களின் தாய்வீடாக இந்தியா திகழும்’ என தெரிவிக்கப்பட்டிருந்ததை இங்கே நினைவு கூறலாம். இந்து தேசியத்தை முன்வைத்து தயாராகிக் கொண்டிருக்கும் அகண்ட பாரத செயல்திட்டத்தின் ஒருபகுதியாகத்தான் அஸ்ஸாம் தேசிய கணக்கெடுப்பு வரைவு அட்டவணையில் 40 லட்சம் மக்கள் விடுபட்டுள்ளதை பார்க்க வேண்டும். 40 ஆண்டுகளுக்கும் மேலாக அஸ்ஸாமிய மக்களோடும் மொழியோடும் கலந்துவிட்ட  பங்களாதேஷிலிருந்து குடியேறிய முஸ்லிம்களை விரட்டுவது மதவெறியின் உச்சம்.

சட்டபூர்வமாகிறது இந்து ராஷ்டிரம்!

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014 கட்டுரை

‘1930களில் நாசிக்களின் யூதவெறுப்பு யூதர்களுக்கு இடர்பாடுகளைத் தருவதாகவே இருந்தது. அதன்பின்பே இனப்படுகொலைகளை செய்தனர்.  இனவாத யூதஎதிர்ப்பு என்பது ‘இறுதி தீர்வை நோக்கியே(அதாவது கொன்றொழித்தல்) அன்றி, நாசி ஆட்சி இறுதி தீர்வு அல்ல’  என வரலாற்று ஆய்வாளர்கள் நாசி ஆரிய இனவாதத்தின் நோக்கத்தை எடுத்துரைக்கிறார்கள். இந்துத்துவ கும்பலுக்கும் ஆட்சியைப் பிடிப்பது மட்டும் இலக்கு அல்ல, மதவாதமும்,முஸ்லீம்கள் நீக்கப்பட்ட ‘இந்து தேசிய அகண்ட பாரதமே’ அவர்களுடைய இறுதி இலக்கு.

  • மு.வி.நந்தினி

கட்டுரைக்கு உதவியவை:
The Roots of Hitler’s Hate
BJP is Using Citizenship Act Amendment to Reinforce and Spread Hindutva in Assam
THE CITIZENSHIP (AMENDMENT) BILL, 2015

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.

2 மறுமொழிகள்

  1. காவி தீவிரவாதிகளிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

  2. சிறிதுகூட பொறுப்பும் மனசாட்சியும் இல்லாமல் எழுதப்பட்ட கட்டுரை இது. பங்களாதேஷ், பாக்கிஸ்த்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து ஒடுக்குமுறை காரணமாக இந்துக்களும் சீக்கியர்களும் உயிர் பிழைக்க அகதிகளாக இந்தியா வருகிறார்கள். மேற்கண்ட மூன்று நாடுகளிலும் கடந்த 50 ஆண்டுகளில் சிறுபான்மை மதத்தினரின் எண்ணிக்கை ஒடுக்குமுறை காரணமாக கடுமையாக குறைந்துள்ளது. பல மதத்தினர் வாழும் இந்த நாடுகளை இஸ்லாமிய நாடு என சட்டபூர்வமாக அறிவித்து பெரும்பான்மையினராக இருக்கும் இஸ்லாமியர்கள் அநியாயம் செய்கிறார்கள். இவர்களில் மிகப் பலர் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளார்கள். மேற்கு வங்காளத்தில் மட்டும் மூன்று கோடிப் பேர் பங்களாதேஷிலிருந்து ஊடுருவி உள்ளனர். இவர்களில் ஒன்றரை கோடி பேர் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு இங்கிருந்து ஊடுருவியுள்ளனர். இவர்கள் போகும் இடத்தில் எல்லாம் மதவாதம், அடிப்படைவாதம் ஆகியன காலப்போக்கில் தலைதூக்க தொடங்கிவிடுகின்றன. உண்மையில் 40 லட்சம் பேர் என்பதே குறைவான எண்ணிக்கை. இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த நாடுகளுக்கு வெளியேற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் இவர்களால் இந்தியாவில் பிரச்சனைகள் அதிகம் தான் ஆகும்.

Leave a Reply to S.Periyasamy பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க