ஆங்கில மோகத்திற்கு பலியிடப்படும் அறிவுத்திறன் – ஒரு கள ஆய்வு !

ஆங்கில வழிக் கல்வி தவறு, தமிழ் வழிக் கல்விதான் சரி என்று பேசுபவர்களை ஏதோ பாவம் பார்த்து பரிதாபப்படுவர்களுக்கு முகத்தில் அறையும் உண்மைகளை எடுத்து வைக்கிறார் வில்லவன்! அவசியம் படிக்கவும்!

8

மீபத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் ஒன்றில் பேச நேர்ந்தது. அதன் உள்ளடக்கம் ஒன்றும் தனிச் சிறப்பானதல்ல, ஓரிரு நிமிட இணைய உலாவலில் கிடைக்கும் ஆலோசனைகளை மட்டுமே கொடுத்தோம். அவற்றை எளிமையாகவும் பயன்பாட்டுக்கு உகந்த வகையிலும் தரவேண்டும் என்பதால் அந்த உரைகளை ஆங்கிலத்தில் மட்டுமே தர முடியாது என வாதிட்டு அதனை ஆற்றுப்படுத்துனர் தரப்பின் சார்பாக செயல்படுத்தி விட்டோம்.

“மத்தவங்க எல்லாம் நெறைய சொன்னாங்க (ஆங்கிலத்தில்), அதை கேட்டுட்டு போய் நம்ம பிள்ளைக்கு சொல்ல முடியலையேன்னு கஷ்டமா இருந்தது. நீங்க தமிழ்ல பேசினதுக்கு நன்றி சொல்லிட்டு போக வந்தோம்”

நிகழ்ச்சி முடிந்து நீண்ட நேரம் பல பெற்றோர்களை சந்திக்க வேண்டியிருந்தது. சற்றேறக்குறைய 45 நிமிடங்களுக்கு ஒரு தம்பதி மட்டும் காத்திருந்தார்கள். வழமையாக அப்படி காத்திருப்பவர்கள் சற்றே பெரிய பிரச்சினையை விவாதிக்க வைத்திருப்பார்கள் என்பது எங்கள் அனுமானம். ஆனால் அவர்களை சந்தித்தபோது அந்த ஊகம் அடிப்படையற்றதாகிவிட்டது. அவர்கள் சொன்னது இதைத்தான் “மத்தவங்க எல்லாம் நெறைய சொன்னாங்க (ஆங்கிலத்தில்), அதை கேட்டுட்டு போய் நம்ம பிள்ளைக்கு சொல்ல முடியலையேன்னு கஷ்டமா இருந்தது. நீங்க தமிழ்ல பேசினதுக்கு நன்றி சொல்லிட்டு போக வந்தோம்”.

ஆங்கில மொழி
ஆங்கில மொழியில் நடத்தபடும் பாடங்கள் புரிகிறதா இல்லையா என்பதைவிட பிள்ளைகள் ஆங்கிலத்துல நாலு வார்த்தைகள் பேசினாலே கெளரவம் என நினைக்கும் பெற்றோர்கள் தான் இங்கு அதிகம்

சில மாதங்களுக்கு முன்னால் பதட்டநோய் அறிகுறியோடு 14 வயது மாணவர் ஒருவர் வந்தார். காலை 5.30 மணிக்கு ஆரம்பிக்கும் அவர் அன்றாடப் பணிகள் இரவு 8.30 வரை நீள்கிறது. காலை விளையாட்டுப் பயிற்சி, மாலை இரண்டு டியூஷன்கள். எதற்காக இரண்டு டியூஷன் என்று கேட்டேன். ஒன்றில் வீட்டுப் பாடங்களை முடிப்பேன் இரண்டாவது டியூஷனில் கணக்கையும் அறிவியலையும் ”தமிழில்” சொல்லிக் கொடுப்பார்கள் என்றார். அதாவது ஆங்கிலத்திலேயே பாடம் நடத்தப்படும் பள்ளியில் பெரும் பணம் கட்டி படிக்கும் மாணவர் அந்த பாடங்களை புரிந்து கொள்ள தமிழில் விளக்கும் டியூஷனுக்கு கூடுதலாக செலவளிக்கிறார்.

ஒரு உபரித் தகவல், சென்னையில் வீட்டுக்கே வந்து பாடம் நடத்தும் ஆசிரியருக்கு ஒருமணிநேர ஊதியம் 500 ரூபாய். அந்த வேலைக்கு வருடத்துக்கு 60 ஆயிரம் என ஒரே பேக்கேஜ் வாங்கும் ஆசிரியர்கள் உண்டு.

அதாவது ஆங்கிலத்திலேயே பாடம் நடத்தப்படும் பள்ளியில் பெரும் பணம் கட்டி படிக்கும் மாணவர் அந்த பாடங்களை புரிந்து கொள்ள தமிழில் விளக்கும் டியூஷனுக்கு கூடுதலாக செலவளிக்கிறார்.

ஆற்றுப்படுத்துனர்கள் மற்றும் உளவியல்சார் வேலைகளில் இருப்போருக்கான பயிலரங்கங்களில் அடிக்கடி பங்கேற்க வேண்டியிருக்கும். அங்கெல்லாம் கூட ஆங்கில உரைகளின் போது ஒரு கடுமையான இறுக்கத்தை காண இயலும். அதையே தமிழில் நடத்துகையில் பார்வையாளர்களது பங்கேற்பு பிரம்மிக்க வைப்பதாக இருக்கும். அப்படியான நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் எல்லோரும் தமிழ் வழியில் கற்றவர்கள் அல்ல. பல தருணங்களில் ஓரிருவர் தவிர ஏனையோர் ஆங்கில வழியில் படித்தவர்களாகவே இருப்பார்கள்.

அனுபவ ரீதியாக மதிப்பிடுகையில், வீட்டு உரையாடலை ஆங்கிலத்தில் நடத்தும் நபர்கள் மற்றும் தமிழ் தெரியாமல் ஆங்கிலத்திலேயே உரையாட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் மட்டுமே ஆங்கில உரைகளின் போதும் பாடங்களின் போதும் சிரமமில்லாமல் கவனிக்கிறார்கள் (பல உயர் மத்தியதர வர்க்க வீடுகளில் பேச்சு மொழி ஆங்கிலமாக இருக்கிறது). பெருநகரங்களில் கூட இந்தப் பிரிவு மக்கள் அதிகபட்சம் 10% விழுக்காட்டுக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்களது அடியொற்றியே பெரும்பாலான கல்வி நிலையங்கள் செயல்படுகின்றன.

ஆங்கிலத்தின் மீதான பிடிவாதமான மோகம் (அப்சஷன்) ஒரு மதத்தைப் போல நம்மை பீடித்திருக்கிறது. அதற்காக எதையும் தியாகம் செய்யும் மனநிலையில்தான் பெரும்பான்மை பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

“ஒன்பது வருசமா அங்க படிக்கிறான், இன்னும் ஒழுங்கா இங்கிலீஷ் பேச வரல. இந்த வருசம் ஸ்கூலை மாத்திரலாம்னு இருக்கேன்” என சலித்துக் கொண்டார் ஒரு நண்பர். அவர் ஒரு பள்ளி ஆசிரியர் என்பது உபரித் தகவல்.

இந்த ஆங்கில பக்தி எப்படியெல்லாம் அறிவுத் திறனை சிதைக்கிறது?

ஆங்கில வழிக்கல்வி
ஆங்கில வழிக்கல்வி நம் பிஞ்சுகளின் அறிவை வளர்க்குமா ? சிதைக்குமா?

முதலில் அது வகுப்பறையை உயிரோட்டமற்ற இடமாக மாற்றுகிறது. கற்பித்தல் என்பது தெரிந்தவற்றில் இருந்து தெரியாதவற்றை நோக்கி மாணவர்களை அழைத்துச் செல்லும் பணி. ஒரு ஆசிரியர் தனக்கு தரப்பட்ட பாடத்தின் மீது மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படும்படியான சூழலை உருவாக்கினாலே போதும். மற்றவற்றை ஒரு மாணவனே கூட தேடிக் கண்டடைய எல்லா வாய்ப்புக்களும் இன்று கிடைக்கின்றது. அந்த ஆர்வத்தை உருவாக்க எளிமையான மொழிநடையும், உதாரணங்களும் கூடவே துடிப்பான உரையாடல்களும் தேவை. இந்த மூன்றையும் சிதைப்பது ஆங்கிலத்தில் பேசவேண்டும் எனும் கட்டாய சூழல் (அது தமிழில் பேசும்போதும் நிகழலாம் என்றாலும் கட்டாய ஆங்கிலம் அதனை மூர்க்கமாக செய்கிறது).

மொழியை எளிமையாக்க முடியாமல் ஆசிரியர் உபதேசிப்பதைப் போல பாடம் நடத்துகிறார், தமிழ் உரையாடல் சூழலில் வளர்ந்த மாணவர்கள் அதனை புரிந்துகொள்ள இயலாமல் ஆர்வமிழக்கிறார்கள். மாணவர்கள்  எளிதில் கவனம் சிதறும் இயல்பு கொண்டவர்கள் என்பதால் அவர்கள் குறும்பு செய்யவோ அல்லது வேறு யோசனைக்கு செல்லவோ நேர்கிறது. இது அதிகரிக்கையில் ஆசிரியர் ஆர்வமிழக்கிறார். என் பார்வையில் இதுவே பள்ளி ஒழுங்கீனத்தின் (பாடத்தை கவனிக்காதிருப்பது, வகுப்பு நேரத்தில் சேட்டைகள் செய்வது உள்ளிட்ட) ஆரம்ப காரணி. மேலும் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருப்பதால் ஆசிரியர் தமது அறிவின் பரப்பை ஆங்கில மொழித்திறன் எனும் குறுகிய எல்லைக்குள் அடக்க வேண்டியிருக்கிறது. இதனால் உதாரணங்களை அவர் தவிர்க்க நேரலாம். எதிர்திசையில் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்க இயலாமல் போகிறது.

மொழியை எளிமையாக்க முடியாமல் ஆசிரியர் உபதேசிப்பதைப் போல பாடம் நடத்துகிறார், தமிழ் உரையாடல் சூழலில் வளர்ந்த மாணவர்கள் அதனை புரிந்துகொள்ள இயலாமல் ஆர்வமிழக்கிறார்கள்.

பல சமயங்களில் பாடத்தில் சந்தேகம் என்பது முழு பாடத்தையுமே மீண்டும் கேட்பதாக இருப்பதை பார்த்திருக்கிறேன்.

ஆண்டு விழாக்களில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பது பாட்டு, நடனம் மற்றும் மைம் போன்ற உரையாடல் அவசியமற்ற நிகழ்ச்சிகளில் மட்டும்தான். காரணம் ஆங்கில உரையாடல்கள் தேவைப்படும் நாடகங்கள் அவர்களுக்கு சிரமமாக இருக்கிறது (எலைட் பள்ளிகளையும் சேர்த்தே சொல்கிறேன்). இன்னுமொரு காரணி அவர்களை நாம் சிந்திக்க விடுவதில்லை, ஆகவே (நடனம் போன்ற) பயிற்சி மட்டுமே தேவைப்படும் பிற வாய்ப்புக்களை மட்டும் தெரிவு செய்கிறார்கள்.

ஜி.ஹெச்.க்யூ, இ.பி.க்யூ போன்ற உளவியல் சார் மதிப்பீட்டுக்கான கேள்வித் தாள்களை நிரப்ப அனேகமாக எல்லா மாணவர்களும் தடுமாறுகிறார்கள் (இதிலும் எலைட் பள்ளி மாணவர்கள் அடக்கம்). ஆங்கில ஞானத்தை நோக்கி தவமிருக்கும் பெற்றோரும் பள்ளிகளும் வளர்க்கும் பிள்ளைகளின் நிலை இது.

ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் எனும் கட்டாயம் உள்ள பள்ளிகளில் நாம் கேட்கும் வார்த்தைகள் மிக சுவாரஸ்யமாக இருக்கும். ஹேய் கம்டா, கோடா, கிவ்டா ஆகியவை சில உதாரணங்கள். ஒருமுறை மாணவர் ஒருவர் ’’ஹி இஸ் கிண்டலிங் மீ’’ என சக மாணவர் மீது குற்றம் சாட்டினார்.

தனியார் பள்ளிகளில் ஒரு சர்வே நடத்திப் பாருங்கள். பெரும்பான்மையானவர்கள் தமிழ் சிரமமாக இருக்கிறது என்பார்கள். எந்த மொழியில் பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறார்களோ அதே மொழியை  ஒரு பாடமாகக் கற்பது சிரமமாக இருக்கிறது அவர்களுக்கு. இந்த முரண்பாடு நமது கல்வியமைப்பின் பெரும் தோல்வி!

கணக்கும் ஆங்கிலமும் சிரமமாக இருக்கிறது என்று சொல்லும் மாணவர்களைத்தான் இருபதாண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கிறோம். இப்போது தனியார் பள்ளிகளில் ஒரு சர்வே நடத்திப் பாருங்கள். பெரும்பான்மையானவர்கள் தமிழ் சிரமமாக இருக்கிறது என்பார்கள். எந்த மொழியில் தங்களுக்கு பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறார்களோ அதே மொழியை  ஒரு பாடமாகக் கற்பது சிரமமாக இருக்கிறது அவர்களுக்கு. இந்த முரண்பாடு நமது கல்வியமைப்பின் பெரும் தோல்வியின் சிறிய அறிகுறி.தமிழ் எளிதாக இருக்கிறது என்று சொன்ன ஒரேயொரு மாணவரைத்தான் கடந்த ஓராண்டில் சந்தித்திருக்கிறேன். அவர் ஒரு ஆங்கிலோ இந்தியன் மாணவர்

தமிழ் வழிக்கல்வி
பொதுவாக செய்திகள் வாசிப்பதிலும் ஆங்கிலமே அறிவு என்கின்றனர்.

இங்கே வழக்கமான கற்றல் நடைமுறை என்பது கேள்விகளையும், அதற்கான பதில்களையும் மனப்பாடம் செய்ய வைத்து இந்த கேள்விக்கு இந்த பதில் எழுத வேண்டும் என்பதாக இருக்கிறது. ஆரம்ப வகுப்புக்களில் மாணவர்களை தேர்வுக்கு தயாரிக்க இந்த வழிமுறையே எல்லா இடங்களிலும் பின்பற்றப்படுகிறது. அது 12-ம் வகுப்புவரை தொடர்கிறது. எதற்காக ஒன்றாம் வகுப்பிலேயே வாக்கியங்களை எழுதும்படியான பாடத்திட்டத்தை நம் நாட்டில் வைத்திருக்கிறோம் என்பது புரியவில்லை. அதைக்கூட ஒரு ஆசிரியரால் சமாளிக்க முடியும். ஆனால் அதோடு சேர்த்து மாணவனுக்கு பரிச்சயமில்லாத ஒரு மொழியையும் அவர் கற்றுத்தர வேண்டியிருப்பதால் அவர்களுக்கு இதைத்தவிர வேறு வாய்ப்பில்லை.

சர்வதேச பாடத்திட்டத்தில் பெரும்பாலும் மனப்பாடம் செய்து பதில் எழுத இயலாது, பதிலை நீங்கள் பரிந்துரைக்கப்படும் புத்தகங்களில் இருந்து படித்து அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே அதில் பயிலும் தன் மகனுக்கு பதிலை கண்டுபிடித்து – எழுதித்தந்து – பிறகு சொல்லிக் கொடுக்க தனி ஆசிரியரை நியமித்திருக்கிறார் ஒரு தொழிலதிபர்

ஏன் அரசுப் பாடத்திட்டத்துக்கு தனியார் பதிப்பக புத்தகங்களை வாங்குகிறீர்கள்? என்று ஒரு பள்ளி ஒருங்கிணைப்பாளரை கேட்டேன். அரசு புத்தகங்களை வாங்கினா “இதை படிக்கனும்னா நாங்க கவர்மெண்ட் ஸ்கூல்லயே பையனை சேர்த்துருவோமே” ,ன்னு பெற்றோர்கள் குறைபட்டுக்குறாங்க என்கிறார் அவர். இந்த காரணத்துக்காவே கூடுதல் பாடங்கள் தனியார் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஹிந்தி அதில் முக்கியமானது. சென்ற ஆண்டுக்கான எங்கள் ஆய்வறிக்கையில் ஆற்றுப்படுத்துனர் சேவையை 35% எட்டாம் வகுப்பு மாணவர்கள் நாடியிருக்கிறார்கள்.

அடுத்த பெரும் எண்ணிக்கை ஏழாம் வகுப்பினர். இந்த எண்ணிக்கை ஒன்பதாம் வகுப்பில் 7.3% சதவிகிதமாக வீழ்கிறது, காரணம் ஹிந்தியும் கணினி அறிவியலும் 9, 10 வகுப்புக்களுக்கு கிடையாது. 10 மற்றும் 11-ம் வகுப்புக்களில் ஆற்றுப்படுத்துனரை நாடுவோர் எண்ணிக்கை மீண்டும் 22% ஆக உயர்கிறது- காரணம் பொதுத்தேர்வு அழுத்தம் மற்றும் பதின்பருவ குழப்பங்கள். ஆக பாடச்சுமையானது அவர்களது மனநலத்தில் தாக்கம் செலுத்துவது கண்கூடாக தெரிகிறது.  இது 2000 மாணவர்கள் உள்ள ஒரு பள்ளியின் தரவு, பொதுவான சூழல் இதைவிட குறைவாகவோ அல்லது அதிகமாகமான சிக்கலுடையதாக இருக்கலாம்.

அல்லேலூயா கும்பல்கள் இயேசு வருவார் என வெறித்தனமாக நம்புவதைப் போல நாமும் ஆங்கில வழியில் படிப்பையே ஒரே மீட்பராக கருதும்படிக்கு தயாரிக்கப்பட்டிருக்கிறோம். அந்த முரட்டு நம்பிக்கைக்காக நாம் மிகப்பெரிய விலையை கொடுத்துக்  கொண்டிருக்கிறோம்.

அரசுப்பள்ளிகளில் இருக்கும் ஆங்கிலவழி வகுப்புக்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்பது தெரியவில்லை. அல்லேலூயா கும்பல்கள் இயேசு வருவார் என வெறித்தனமாக நம்புவதைப் போல நாமும் ஆங்கில வழியில் படிப்பையே ஒரே மீட்பராக கருதும்படிக்கு தயாரிக்கப்பட்டிருக்கிறோம். அந்த முரட்டு நம்பிக்கைக்காக நாம் மிகப்பெரிய விலையை கொடுத்துக்  கொண்டிருக்கிறோம். அதில் பல ஒருக்காலும் மீளப்பெற இயலாதவை.

ஆங்கில வழியின் மூலம் நாம் பெருந்தொகையான மாணவர்களையும் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் நாம் வெவ்வேறு வழிகளில் தண்டிக்கிறோம். ஓரளவு கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் அவர்களுக்கான சிறப்பு பயிற்சியில் தமிழை சிறப்பாக கற்பதை எங்கள் தரவுகளில் இருந்து அறிய முடிகிறது. காரணம் அதில் சொற்களை சேர்த்து வார்த்தையை உருவாக்குவது எளிது. தமிழில் அறிவு என்பதை அ -றி -வு என கோர்த்து எழுதுவது எளிது. ஆனால் ஆங்கிலத்தில் knowledge என எழுத்துக்களின் தொகுப்பை நீங்கள் மனப்பாடம் செய்ய வேண்டும். தமிழில் அப்படியல்ல, நீங்கள் கேட்பதை அப்படியே எழுத்தாக்க முடியும். கற்பதற்க்கு எளிய மொழியை புறந்தள்ளுவதன் மூலம் நாம் (பெரும்பாலான) மாணவர்களின் கற்றலை இரட்டை சுமையாக்குகிறோம்.

ஆங்கிலத்தில் பேசுவதும் எழுதுவதும் அதி அத்தியாவசியம் என நீங்கள் நம்பினாலும்கூட அதனை நாளுக்கு ஒரு மணிநேர பயிற்சியின் மூலம் சிறப்பாக செய்ய வைக்க இயலும். ”கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை” என்பது ராணுவ முகாம்களில் சொல்லப்படும் வாக்கியம். அதனை நாம் கல்வியில் செயல்படுத்துகிறோம். அதனால் பள்ளிக்கூடங்கள் போர்க்களங்களாக மாறியிருக்கிறது.

– வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

8 மறுமொழிகள்

  1. தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது. அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள் தோழர்.

  2. ஒரு எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் தமிழ்வழிக் கல்வியை வழங்கிய அரசு பள்ளிகள் மட்டுமே பெரும்பாலும் இருந்தன. அவை தரமான கல்வியை அப்போதைய மாணவர்களுக்கு கொடுத்தன. இன்றைக்கு 80 90 வயதான பெரியவர்களை பாருங்கள். அவர்கள் பத்தாம் வகுப்பு வரை தான் தமிழ் வழியில் அரசு பள்ளியில் படித்திருப்பார்கள். ஆனால் ஆங்கிலத்தில் பின்னி எடுப்பார்கள். இந்து நாளேட்டை சரளமாக படிப்பார்கள். கணித அறிவும் மெச்சக்கூடிய வகையில் இருக்கும். ஆனால் இப்போதோ தனியார் ஆங்கில வழி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கூட ஆங்கிலத்தில் சரளமாக பேச வராது. அன்றைக்கு அரசு பள்ளி ஆனாலும் தரக்கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டது. இன்றைக்கும் வட இந்தியாவில் மத்திய அரசாங்கம் நடத்தும் ஹிந்தி மீடியத்தில் ஆன கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளில் ஓரளவுக்கு தரம் கட்டிக் காக்கப்படுகிறது. இப்போது வளைகுடா நாடுகளில் இருந்து வேலை இழக்கும் இந்தியர்கள் திரும்ப இந்தியாவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியா வந்த உடன் செய்யும் முதல் வேலை தங்கள் குழந்தைகளை நல்ல சிபிஎஸ்சி பள்ளிகளில் சேர்ப்பதுதான். அவர்களெல்லாம் வில்லவனுக்கு அறிவு கெட்டவர்கள். 2006இல் சமச்சீர் கல்வி என்னும் தண்டத்தை தமிழக மாணவர்களின் தலையில் கருணாநிதி அரசாங்கம் கட்டியது. ஏற்கனவே கெட்டு கிடந்த தமிழகத்தின் கல்வித்தரம் மேலும் மோசம் ஆனது. ஆனால் இந்த வில்லவன் போன்றவர்களும் பிரின்ஸ் கஜேந்திரபாபு மாதிரியான ngo அயோக்கியர்களும் தமிழகத்தில் பெரிய கல்வி புரட்சியே ஏற்பட்டுவிட்டதாக குதித்தார்கள். இந்த சமச்சீர் கல்வியை அறிமுகம் செய்த கருணாநிதியின் குடும்ப வாரிசுகளும் அதை ஆதரிக்கும் ராமதாஸின் குடும்ப வாரிசுகளும் ஏன் cbse பள்ளிகளில் படிக்கிறார்கள் என்பதை வசதியாக மறந்துவிட்டார்கள். இன்றைக்கு நம் தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு எழுத போய் விழி பிதுங்கி நிற்பதற்கும் அவர்களை ஒட்டு மொத்த இந்தியாவே காமெடி பீஸ்களாக பார்ப்பதற்கும் இந்த வில்லவன் மாதிரியான ஆட்களும் ஒரு காரணம். ஒரு குழந்தையை பள்ளியில் சேர்க்கும் பெற்றோர் அந்தக் குழந்தை பெரிய நோபல் பரிசு வாங்கும் விஞ்ஞானி ஆக வேண்டுமென நினைத்து சேர்ப்பதில்லை. தங்கள் குடும்பத்தின் பொருளாதார வளத்துக்கு அந்தக் கல்வி ஆதாரமாக இருக்க வேண்டும் என நினைத்து சேர்க்கிறார்கள். ஆங்கில மோகமும் அதனால் தான். அதில் என்ன தவறு இருக்கிறது.

    • பெரியசாமி, உங்க கருணாநிதி புராணத்தை மறுபடியும் தொடங்கிட்டீங்கள….ஆங்கில வழிக்கல்வியின் பாரதூரமான விளைவுகளை வில்லவன் கூறுகிறார். நீங்க என்னடானா …என்ன தப்பு என்று கேனப்….னாட்டம் கேள்வி கேக்குறீங்க…..

      • ஆங்கில வழிக் கல்வியால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளை விட தமிழ் வழிக் கல்வியால் அதிக பாரதூரமான விளைவுகள் ஏற்படும். நம்ம ஊர் அரசு பள்ளிகளை பார்த்தாலே இதை கண்டு கொள்ளலாம். மேலும் நம் அரசியல்வாதிகளின் லட்சணமும் அப்படி. தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலம் மட்டுமே. தனி நாடு கிடையாது. ஆகையால் தமிழர்களை ஜெர்மானியரோடும் ஜப்பானியரோடும் ஒப்பிடுவது தவறு. இது டாஸ்மாக் நாடு. தமிழ் வழி கல்வி என்னும் பித்தலாட்டத்தால் இருக்கும் கல்வித்தரமும் கெடுக்கப்படும். தான் கேனையனாக இருப்பவன் தான் அடுத்தவனை கேனையனாக நினைப்பான். மலையாளிகளுக்கும் வங்காளிகளுக்கும் இல்லாத மொழிப்பற்றா? மத்திய அரசாங்கம் நடத்தும் ஒரு தேர்வை எதிர்கொள்ள முடியாதவர்கள் தாய்மொழிவழிக் கல்வியை நடத்துகிறார்களாம். தாய்மொழி வழி கல்வி நல்லதுதான். ஆனால் அதை காங்கிரஸ்காரர்களும் பாஜகவினரும் நடைமுறைப்படுத்தினால் நாம் நம்பலாம். திராவிட கட்சிகளுக்கு அந்த தகுதி இல்லை. அது கடைசியில் சந்தி சிரிப்பதற்கு வழிவகுத்துவிடும். மேலும் தன் கட்டுரையில் அறிவு என்பதை மாணவர்கள் எளிதாக எழுதி விடுகிறார்கள் என்றும் knowledge என்பதை எழுத சிரமப்படுகிறார்கள் என்றும் வில்லவன் அடித்து விட்டிருக்கிறார். ஆங்கிலத்தில் வெறும் 26 எழுத்துக்களே. ஆனால் தமிழில் 247 எழுத்துக்கள். சமஸ்கிருத ஒலிகளையும் சேர்த்தால் இன்னமும் அதிகம். 26 எழுத்துக்களை கற்றுக்கொள்வது எளிதானதா அல்லது 247 க்கும் அதிகமான எழுத்துக்களை கற்றுக்கொள்வது எளிதா. ஆங்கில எழுத்துக்கள் எழுதுவதற்கு எளிமையானவை. ஆனால் தமிழில் எங்கே ஒற்றைக்கொம்பு இரட்டைக் கொம்பு எங்கே கால் வாங்க வேண்டும் என்பதெல்லாம் சிறுபிள்ளைகளுக்கு பெரிய தலைவலி. தமிழ் எழுத்துக்களை வளைத்து நெளித்து எழுத வேண்டும். எவ்வளவு கஷ்டம் தெரியுமா. தாய்மொழி என்பதற்காக தமிழ் எளிதல்ல. தாய் மொழி வழி கல்வி என்று இவர்கள் ஆரம்பித்தால் தாய்மொழியும் கெட்டுப் போய்விடும். கல்வியும் கெட்டுப் போய்விடும். அண்ணா பல்கலைக்கழகம் மாதிரி.

  3. இங்கே இரண்டு பிரச்சனைகள் உள்ளது…

    அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமே தமிழ் வழி கல்வி உள்ளது, அங்கு மாணவர்களுக்கு ஆசிரியர் பற்றாகுறை மற்றும் பொறுப்பின்மை…

    தனியார் பள்ளிகளில் மாணவர்களும், கல்வியும் சந்தை பொருளாகி உள்ளது, சந்தையில் வணிகத்தை கற்று கொள்ள முடியுமே தவிர கல்வியை அல்ல… அதனால்தானோ என்னவோ சென்னை தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் வணிகவியலுக்கு ஏக கிராக்கி…

  4. உலகத்திலுள்ள எல்லா நாடுகளும தாய்மொழியில் தான் கல்வி ஆகற்கவேண்டும் சில நாடுகளை தவிர இந்தியா உட்பட.விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டபோதும் அதை நாம் ஏற்க மறுக்கிறோம் ஆங்கில வழிக் கல்வியை உயர்வாக எண்ணுகிறோம் இது எப்படி என்றால் அம்மா வேண்டாம் வேலைக்காரி போதும் என்பதைப் போல .தினம் ஒருமணி நேரம் படித்தால் ஒரு வருடம் போதும் ஆங்கிலம் பேச எழுத ..ஜேர்மனி ஜப்பான் சீனா ரஷ்யா போன்ற முன்னேறிய நாடுகளில் ஆங்கிலம் பயிற்று மொழி கிடையாது.தாய்மொழி கல்விதான்.
    அவசியம் என்றால் எந்த மொழியும் எப்பொழுதும் எந்த வயதிலும் கற்கலாம்.
    .

  5. யாருக்கும் புரியப் போவது இல்லை.

    யாரும் பின்பற்றப் போவதும் இல்லை.

    யாரும் தம் பிள்ளைகள் எதையும் கற்றப் போவதில்லை என்பதை ஏற்கப் போதும் இல்லை.

    யாரும் தானக்கு கிடைக்காத அந்த டுபாக்கூர் அறிவு தன் பிள்ளைக்கு கிடைக்க வேண்டும் என விரும்பாமல் இருக்கப் போவது இல்லை.

    யாரும் தன் பிள்ளையின் மீது தன் விருப்பங்களை தினிக்காமல் இருக்கப் போவதும் இல்லை.

    கல்வி கற்பதை பொதுனலனோடு இணைக்காமல், என்ன புலம்பியும் பயன் இல்லை.

    கல்வியை சமூகத்தில் இருந்தே பெறுகிறோம். கற்றதை சமூகத்திற்கே செலவு செய்ய வேண்டும் என்பதை கல்வி கற்பிக்க வேண்டும்.

    சுயநலக் கல்வி நாசமாய் போகட்டும்.

    எவன் மயிறு போயிற்று…
    ,

  6. பள்ளிக்கல்வித்துறை பாடத் திட்டக் குழுவின் தலைவராக இருந்த உதயச்சந்திரன் ஐஏஎஸ் என்னும் நேர்மையும் அர்ப்பணிப்பும் கொண்ட அதிகாரி அரசியல் காழ்ப்புணர்வால் மாற்றப்பட்டுள்ளார். இது வன்மையான கண்டனத்துக்குரியது. எனக்கு நினைவு தெரிந்த வரை தமிழக பாடநூல் வாரியம் உருப்படியான பாடநூல்களை வெளியிட்டது இல்லை. அரசு பள்ளிகளை சேர்ந்த யாராவது நான்கு பாடாவதி ஆசிரியர்களும் உள்ளூரில் இருக்கும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இருந்து அடுத்த மாதமே ஓய்வு பெறக் கூடிய நிலையில் இருக்கும் யாராவது நான்கு பாடாவதி பேராசிரியர்களும் இதுவரை பாடப்புத்தக உருவாக்கத்தில் இடம்பெற்றிருந்தனர். அந்தப் பாடப் புத்தகங்கள் அரையும் குறையுமாக தயாரிக்கப்பட்டு மனப்பாடம் செய்யும் மாணவர்களுக்கு மட்டுமே பயனுடையதாக இருந்து வந்தன. புரிந்து படிக்கக்கூடிய மாணவர்கள் மிகப்பெரிய சிரமத்தை சந்தித்து வந்தனர். இவற்றுக்கெல்லாம் இப்போதுதான் விடிவுகாலம் பிறந்திருக்கிறது என நினைத்து இருக்கையில் இந்த மாற்றம் பேரிடியாக தமிழக கல்வியாளர்கள் மீதும் மாணவர்கள் மீதும் இறங்கி இருக்கிறது. பல லட்சம் சிறார்கள் படிக்கக்கூடிய பாடப்புத்தகங்களை உருவாக்குவது சாமானிய வேலை இல்லை. அது பரந்துபட்ட அளவிலான வல்லுநர்களின் பங்குபற்றுதலும் நுணுக்கமான கடின உழைப்பும் அதிக நேரமும் தேவைப்படக்கூடிய ஒன்று. அதனால் தான் உயர்கல்விக்கு வல்லுனர்கள் எழுதும் புத்தகங்களை வெளியிட்டு வரும் ஹார்பர் காலின்ஸ் என்னும் உலகப் புகழ்பெற்ற பதிப்பகம் சீனாவில் ஷாங்காய் மாகாணத்தில் பள்ளி மாணவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் நேர்த்தியான கணித பாட புத்தகங்களை மொழிபெயர்ப்பு செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஆனால் தமிழ்நாட்டுக்கும் தமிழக மாணவர்களுக்கும் விடிவு காலம் என்பதே கிடையாது. இதுகுறித்து வினவு அக்கறை எடுக்க வேண்டும் என்பது எனது வேண்டுதல்.

Leave a Reply to தேமா பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க