ஆளும் பா.ஜ.க. அரசு ஊடகங்களை எப்படி கட்டுப்படுத்துகிறது? இதற்கான விடையை நாம் ஆய்வுகளில் தேட வேண்டாம். தனது அனுபவத்தில் இருந்து முன்வைக்கிறார் புன்ய பிரசூன் பாஜ்பாய். இந்தி சேனலான, ஏ.பி.பி. தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நெறியாளரான புன்ய பிரசூன் பாஜ்பாய், ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ என்ற பிரைம் டைம் விவாத நிகழ்ச்சியை நடத்துபவர்.
பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்டீஸ்கரை சேர்ந்த ஒரு பெண் விவசாயி, சீத்தாப்பழ விவசாயம் மூலம் தனது லாபம் இரட்டிப்பானது என்று பேசினார். அவர் பொய்யாக அப்படி பேசியதையும், அரசு அதிகாரிகள் அந்தப் பெண்ணுக்கு பயிற்சி அளித்து பேச வைத்தனர் என்பதையும் தனது மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் அம்பலப்படுத்தினார் புன்ய பிரசூன். இதை தொடர்ந்து எழுந்த அழுத்தங்களால், மோடியின் பெயரை சொல்லக்கூடாது; மோடியின் வீடியோ மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது; மோடி பற்றி விமர்சனம் செய்யக்கூடாது என்று கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டார். இறுதியில் பணியில் இருந்து ராஜினாமாவும் செய்தார்.
தனக்கு என்ன நேர்ந்தது என்பதை விளக்கி புன்ய பிரசூன் எழுதியிருக்கும் கடிதம், அவருக்கு நேர்ந்ததை மட்டும் விவரிக்கவில்லை. இந்திய அளவில் ஊடகங்களின் குரலை ஒடுக்குவதற்கு மோடி நடத்தும் ’சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை’ வெளிக்கொண்டு வருகிறது.
***
நான் பணியாற்றும் ஏ.பி.பி. தொலைக்காட்சியின் உரிமையாளர் மற்றும் தலைமை நிர்வாக ஆசிரியர் திடீரென ஒரு நாள் என்னை அழைத்தார். ”உங்கள் மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெயரை குறிப்பிடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் பெயரை சொல்லுங்கள். மோடி பெயர் எந்த இடத்திலும் வர வேண்டாம்’’ என்றார்.
மோடியின் புகைப்படமும், வீடியோவும் இடம்பெறக்கூடாது என்றார் உரிமையாளர் மற்றும் தலைமை நிர்வாக ஆசிரியர். “அரசு என்பது மோடி மட்டும்தானா? மோடியை தவிர்த்துவிட்டு உங்களால் ரிப்போர்ட் செய்ய முடியாதா?” என்று கேட்டார்.
“அது எப்படி சாத்தியம்? அரசின் அனைத்துத் திட்டங்களையும் பிரதமர் மோடிதான் அறிவிக்கிறார்; அவர்தான் தொடங்கி வைக்கிறார். துறையின் அமைச்சர்கள் கூட மோடிக்கே முழு பெருமையையும் சமர்ப்பிக்கின்றனர். அப்படி இருக்கும்போது மோடியின் பெயரை எப்படி தவிர்க்க முடியும்?” என்று கேட்டேன்.
‘’நீங்கள் செய்வதும், சொல்வதும் சரியாக இருக்கக்கூடும். ஆனால், நான் சொல்வதைக் கேளுங்கள். தற்காலிகமாகவேனும் மோடி பெயர் எங்கும் வேண்டாம்’’ என்றார்.
ஆனால் அவரது உத்தரவை செயல்படுத்துவது அத்தனை எளிமையானதாக இருக்கவில்லை. உதாரணமாக, இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை குறித்து நான் விவாதிப்பதாக இருந்தால் 2022-க்குள் 40 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு அளிக்கப்படும் என்ற மோடியின் அறிவிப்பு குறித்தும், இதுவரை 2 கோடி இளைஞர்களுக்கு மட்டுமே திறன் மேம்பாடு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நான் பேச முடியாது. நாடு முழுவதும் திறக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி நிலையங்களில் 10-இல் 8 பூட்டிக்கிடக்கிறது என்பதையும் பேச முடியாது.
மோடி பெயரைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக ‘தற்போதுள்ள அரசு’ என்ற சொல்லை பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தோம். ஆனால் இது தொலைக்காட்சி ஊடகம். காட்சிகளைக் காட்டியாக வேண்டும். எங்கள் ‘வீடியோ லைப்ரரி’ முழுக்க மோடி காட்சிகள்தான் நிறைந்திருக்கின்றன. 2014-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதிக்குப் பிறகு எங்கள் எடிட் இயந்திரங்கள் மோடியை மட்டுமே எடிட் செய்தன. 80 சதவிகிதம் புகைப்படங்களும், வீடியோவும் மோடியுடையது மட்டும்தான். ஆகவே மோடி என்ற பெயரை பயன்படுத்தாமல் ‘தற்போதைய அரசு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும், டி.வி. திரையில் மோடியின் புகைப்படங்களே இடம்பெற்றன. ஆனால் அடுத்த 100 மணி நேரத்துக்குள் அடுத்த உத்தரவு வந்தது.
மோடியின் புகைப்படமும், வீடியோவும் இடம்பெறக்கூடாது என்றார் உரிமையாளர் மற்றும் தலைமை நிர்வாக ஆசிரியர். “அரசு என்பது மோடி மட்டும்தானா? மோடியை தவிர்த்துவிட்டு உங்களால் ரிப்போர்ட் செய்ய முடியாதா?” என்று கேட்டார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் ‘தற்போதுள்ள அரசால்’ 106 திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து திட்டங்களையும் அறிவித்தவர் மோடி. துறை சார்ந்த அமைச்சர்கள் செய்ய வேண்டிய வேலையை; தேடிக்கொள்ள வேண்டிய பெருமையை, அவரே தன் பெயரால் செய்தார். ஆகவே, மோடியின் பெயரை குறிப்பிடக்கூடாது; புகைப்படத்தைக் காட்டக்கூடாது என்றால், யார் குறித்தும், எது குறித்தும் முணுமுணுக்கக் கூடாது என்றுதான் அர்த்தம்.
ஜூன் கடைசி வாரத்தில் பா.ஜ.க.-வில் இருந்து வேறொரு அழுத்தம் வரத் தொடங்கியது. பா.ஜ.க. சார்பாக எங்கள் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க யாரும் வர முடியாது என்று மறுத்தார்கள். அதில் இருந்து சில நாட்கள் கழித்து பா.ஜ.க. பிரமுகர்கள் ஏ.பி.பி. தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்க மறுத்தனர். எங்கள் நேரலை விவாதம் ஒன்றில் கலந்துகொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியான ஒரு பேராசிரியருக்கு திடீரென ஒரு செல்போன் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசியவர் அடுத்த விநாடி, ஸ்டுடியோவில் இருந்து எழுந்து, மைக் ஒயரை கழட்டிவிட்டு, அவர் போக்கில் வெளியேறிச் சென்றார். இவை அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பானது. அந்த செல்போன் அழைப்பு வந்தபோது, அவரது முகம் அச்சத்தால் வெளிறிப் போயிருந்ததைக் கண்டேன்.
இப்படி பா.ஜ.க. தனது எல்லா அழுத்தங்களையும் செலுத்தினாலும் விளைவு வேறாக இருந்தது. ஏ.பி.பி. சேனல் மிகக் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்ட ஜூலை 5 முதல் ஜூலை 12 வரையிலான டி.ஆர்.பி. ரேட்டிங்கில் ஏ.பி.பி. தொலைக்காட்சி பலமடங்கு மேலே சென்று, இந்தி செய்திச் சேனல்களில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தைப் பெற்றது. விவாதங்களில் பா.ஜ.க.-வினர் பங்கேற்பதும், பங்கேற்காததும் ரேட்டிங்கில் ஒரு பொருட்டாக இருக்கவில்லை. மேற்கண்ட ஜூலை 5-12ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட நாள் ஒன்றில், ஜார்கண்ட் மாநிலம் கோட்டா என்ற இடத்தில் அமைக்கப்படவிருந்த அனல் மின் நிலையம் குறித்து ரிப்போர்ட் செய்தோம். அது அதானிக்கு சொந்தமான அனல் மின் நிலையம். இதற்கு நிலத்தை விற்கும்படி விவசாயிகள் மிரட்டப்பட்டனர். “நிலத்தை தரவில்லை என்றால் உயிரோடு எரித்துவிடுவதாக அதானி ஆட்கள் மிரட்டினார்கள்” என்று மக்கள் கதறினார்கள். இவை அனைத்தும் அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. அந்த வார ரேட்டிங்கில், அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு மட்டும் வழக்கத்தை விட 5 புள்ளிகள் கூடுதலாக கிடைத்திருந்தது.
அரசின் பொய்களை அம்பலப்படுத்தும் ஒரு நிகழ்ச்சிக்கு; அரசை எதிர்த்து நிகழ்ச்சிகளை நடத்தும் ஒரு சேனலுக்கு டி.ஆர்.பி. ரேட்டிங் அதிகரித்தால், மற்ற தொலைக்காட்சிகள் மத்தியில் அது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது யூகிக்க முடியாதது அல்ல. டி.ஆர்.பி. ரேட்டிங்கை அடிப்படையாக வைத்துதான் ஒரு சேனலுக்கான விளம்பர வருவாய் தீர்மானிக்கப்படுகிறது. மோடியை விமர்சித்தாலும் டி.ஆர்.பி. ரேட்டிங் வரும் என்றால், விளம்பரதாரர்கள் இந்தப் பக்கம் சாய்வார்கள்; மோடி புகழ்பாடும் சேனல்களுக்கு விளம்பர வருவாய் குறையும். ஒரே நேரத்தில் இரட்டை பாதிப்பு. இந்த தருணத்தில்தான், மோடி அரசு எங்கள் கழுத்தை நெறிக்க முடிவு செய்தது.
அது இரண்டு பகுதிகளாக நடந்தது. ஒன்று, விவாதம், நிகழ்ச்சிகள், பேட்டி என ஏ.பி.பி. சேனலின் அனைத்தையும் பா.ஜ.க. சார்பில் புறக்கணிப்பது. இரண்டாவது, ஏ.பி.பி. சேனலின் வருடாந்திர பொது நிகழ்ச்சியை புறக்கணிப்பது. பொதுமக்கள் முன்னிலையில் பெரும் அரசியல் கட்சியின் தலைவர்களை ஒன்றாக அமர வைத்து நடத்தப்படும் இந்த நிகழ்வு எங்கள் தொலைக்காட்சியால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கௌரவம் மிக்கதும், வருமானம் ஈட்டித் தரக்கூடியதுமான இந்நிகழ்வு சேனலுக்கு பல வகைகளில் முக்கியமானது. இதற்கு பா.ஜ.க. சார்பிலோ, மோடி அரசாங்கத்தின் சார்பிலோ யாரும் வரமாட்டோம் என மறுத்தார்கள். அதிகாரத்தில் இருக்கும் ஆளும் தரப்பினர் யாரும் இல்லாமல் எப்படி அந்நிகழ்வை நடத்த முடியும்?
இதன்பிறகுதான் ஜூலை 6-ஆம் தேதி சர்ச்சைக்குரிய ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளை கண்காணிப்பதற்காக பா.ஜ.க. அரசு நியமித்திருக்கும் 200 பேர் கொண்ட குழுவில் இருந்து ஒரு நண்பர் எனக்கு அழைத்தார். “எதுவும் நடக்கலாம். எச்சரிக்கையாக இருங்கள்” என்றார். இதன்பிறகு ’மாஸ்டர் ஸ்ட்ரோக்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது மட்டும் எங்களுடைய செயற்கைக்கோள் இணைப்பு தடைபடத் தொடங்கியது. அந்த ஒரு மணி நேரம் மட்டும் தொலைக்காட்சித் திரை கருப்பானது. ’மாஸ்டர் ஸ்ட்ரோக்’ முடிந்ததும், மிகச் சரியாக 10 மணிக்கு டி.வி. திரை பழையமாதிரி சரியாகிவிடும். எங்கள் தொழில்நுட்பக் குழுவால் இதை சரிசெய்யவே முடியவில்லை. உடனே தொலைக்காட்சியின் ஸ்க்ரோலிங் பகுதியில்,’’கடந்த சில நாட்களாக பிரைம் டைம் நிகழ்ச்சியின்போது எங்கள் ஒளிபரப்பில் சில தடங்கள் ஏற்படுகிறது. அதை சரிசெய்ய முயற்சித்துவருகிறோம். அதுவரை நேயர்கள் ஒத்துழைக்கவும்” என்ற செய்தியை ஒளிபரப்பினோம். ஆனால் இரண்டே மணி நேரத்தில் அந்த செய்தி அகற்றப்பட்டது. அதை ஒளிபரப்பக்கூடாது என்று நிர்வாகத்துக்கு அரசுத் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதால் நிர்வாகம் அந்த முடிவை எடுத்தது.
இதே நேரத்தில் ஏ.பி.பி. சேனலின் மிகப்பெரிய விளம்பரதாரரான ‘பதஞ்சலி புராடக்ட்ஸ்’ நிறுவனம், தன்னுடைய அனைத்து விளம்பரங்களையும் திடீரென நிறுத்திக்கொண்டது. மற்ற விளம்பர நிறுவனங்களுக்கும் இத்தகைய அழுத்தம் தரப்படுவதாக எங்களுக்குத் தொடர்ந்து தகவல் வந்து கொண்டிருந்தது. ஒருநாள், இந்த நீண்ட நெருக்கடி நிலை ஒரு முடிவை எட்டியது. ஏ.பி.பி. தொலைக்காட்சி குழுமத்தின் உரிமையாளர் மற்றும் தலைமை நிர்வாக ஆசிரியர் என் முன்னே கைகளை இறுக மடக்கிக்கொண்டு நின்றனர்.
“என்ன செய்வது? இந்த சூழ்நிலையில் நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? அநேகமாக விடுமுறையில் செல்லலாம் அல்லது ராஜினாமா செய்யலாம்” என்றார்.
இந்த அதிர்ச்சிகளை விட ஓர் அதிசயம் நடந்தது. நான் என்னுடைய ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த அடுத்த சில நிமிடங்களில், ஏ.பி.பி. சேனலில் பதஞ்சலி விளம்பரங்கள் மீண்டும் ஒளிபரப்பாகத் தொடங்கின. மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் வழக்கமாக 15 நிமிடங்கள் விளம்பரங்களுக்கு ஒதுக்கப்படும். பா.ஜ.க. அழுத்தம் காரணமாக இது வெறும் 3 நிமிடங்களாக சுருங்கியிருந்தது. நான் ராஜினாமா செய்தபிறகு இது திடீரென 20 நிமிடங்களாக அதிகரித்தது. நான் ராஜினாமா செய்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி இரவில் இருந்தே செயற்கைக்கோள் இணைப்பில் எந்த தொந்தரவும் இல்லை. டி.வி. திரைகள் கறுப்பாகாமல், வழக்கம்போல் ஒளிபரப்பாகின.
– தி வயர் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் சுருக்கம்.
தமிழாக்கம்: வழுதி