மரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா ?

நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைகளில் ஒரே ஒரு சதவீதமானவை மட்டுமே புகாரளிக்கப்படுகின்றன. அந்த ஒரு சதவீதத்தில் 19% ஆன குற்றங்களுக்கே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. இந்த இலட்சணத்தில் பாலியல் வன்முறை செய்தால் பிடிபடுவோம் என எவராவது நினைக்க முடியுமா என்ன?

0

குற்றவாளிக்கு மரண தண்டனை அல்லது கொடூரமான சித்திரவதை தருவதன் மூலம்
பாலியல் வன்முறைகள் சமூகத்தில் குறையுமா? – (பாகம்
1)

லங்கையிலோ இந்தியாவிலோ நடக்கும் ஆயிரமாயிரம் பாலியல் வன்முறைகள் / பாலியல் வன்முறையுடன் சேர்ந்த கொலைகளில் ஏதாவது ஓரிரண்டு மக்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

அப்போது அவ்வாறு செய்தவர்களைத் தூக்கில் போடுங்கள் என்று பலர் முழங்குகிறார்கள். அதற்கும் மேலாக அண்மைக்காலங்களில் அவர்களின் பிறப்புறுப்பை அறுத்துவிட்டு தூக்கில் போடுமாறும் கோசமிடுகிறார்கள்.

இது தொடர்பில் சில நாட்களுக்கு முன் ஒரு தமிழ் குறும்படம் யூடியூபில் வைரலாகியுள்ளது. கொஞ்சமும் ஆழமாகச் சிந்திக்காமல், படக்கருவைப் பற்றிய எந்தவொரு அடிப்படை அறிவுமில்லாமல், சும்மா கண்ணில் பட்ட ஓரிரு தரவுகளை மட்டுமே வைத்து எடுக்கப்பட்ட படமாகவே இதைக் கருதுகிறேன்.

படத்தின் கதைப்படி இன்றைய காலகட்டத்தில் பாலியல் வன்முறைக் கொலைகளுக்கு மரண தண்டனை அளிக்கப்படாததால் அல்லது அளித்தாலும் மனித உரிமை அமைப்புகள் அதைத் தடுப்பதால் குற்றம் செய்வோருக்கு சட்டத்தின் மேல் பயம் குறைந்து விட்டதாம்.

அதனால் கருவிலேயே பெண் சிசுக்கருவைக் கலைப்பதற்கும் மேலாக கருப்பைக்குள் ஊசி ஏற்றி பெண் சிசுவை ஆண் சிசுவாக மாற்ற அறிவியல் வழி அமைத்துக் கொடுக்குமாம்.

அதன்படி 50 ஆண்டுகளில் இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 250 பெண்கள்தான் இருப்பார்களாம். கதைக் காலம் கி.பி. 2067. ஆண்களைத் திருமணம் செய்யப் போதுமான அளவு பெண்கள் இல்லாததால், ஒரு பெண் இரு ஆண்களைக் கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சட்டம் வந்து விடுமாம். மொத்தத்தில் பெண்களைப் “பாதுகாக்க” வேண்டும் என்று யாரும் யோசிக்காததால் இப்படி ஆகிவிடுமாம்.

படத்தில் பல பிரச்சனைக்குரிய விடயங்கள் உள்ளன. சமூகம் பெண்ணுக்கு சம மனித அந்தஸ்து வழங்குவதில் கவனம் செலுத்தாமல் பெண்ணைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதே பிரச்சினைக்குரியது.

இருதார மணங்கள், ஓரினச்சேர்க்கை பற்றிய கதையாசிரியரின் தவறான கருத்துகள், காதலிப்பதாகச் சொல்லும் கணவன் கூட உறவில் பெண்ணின் சம்மதத்தை வலியுறுத்தாமை, பெண்ணைப் “பாதுகாக்க” ஒன்றுக்கு மூன்று போலிஸ்காரர்கள்; ஆனால் அப்போதும் கூட தெருவில் போகும் போது சீண்டும் ஆண்களைக் கண்டிக்காமை என கதையாக்கத்தில் உள்ள பல பிரச்சனைகளை விமர்சிக்கலாம்.

ஆனால் கொடிய பாலியல் வன்முறைக்குச் சித்திரவதையுடன் கூடிய மரணதண்டனை வழங்கப்படாததால்தான் இந்தப் பிரச்சனை நீடிக்கிறது எனும் கதையின் சாரம்சத்தை இக்கட்டுரைத் தொடரில் விரிவாக அலசலாம் என நினைக்கிறேன்.

சித்திரவதை செய்து கொலை செய் என்று இவர்கள் உணர்ச்சிவசப்பட்டு சொல்கிறார்களா? அதனால் கொஞ்சமாவது பலன் கிடைக்குமா? என்றெல்லாம் இவர்கள் யோசித்திருப்பார்களா, தெரியவில்லை.

Death Sentenceஉணர்ச்சிகளால் தூண்டப்பட்டு அறிவார்ந்து யோசிக்காமல் எடுக்கும் எந்த முடிவுகளும் அநேகமாக நியாயமாகவோ சரியாகவோ இருக்காது. மனித உரிமை அமைப்புகள் சொல்வது போல் மரண தண்டனை மனிதாபிமானமற்ற தண்டனைதான். மாற்றுக் கருத்தில்லை. மரண தண்டனை என்பது ஒருவகைப் பழிவாங்கலே தவிர நீதியானதல்ல. ஆதாரபூர்வமான எதிர்க்கருத்துகள் இருந்தால் சொல்லுங்கள், விவாதிப்போம்.

இந்த ஆட்கொல்லி தண்டனையால் பயனில்லை எனப் பல நாடுகள் மரண தண்டனையை ஒழித்து விட்டன. ஆனால் பாலியல் வன்முறைகளுக்கு எவ்வாறு நிரந்தர தீர்வுகள் எடுக்கலாம் என்பதைப் பற்றி சிந்திக்காமல் இந்திய அரசாங்கமும் சிறுமி ஆசிபாவிற்கு நடந்த கொடூரத்துடன் மக்களின் கோசமும் சேர 12 வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறுவர்களைப் பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கலாம் எனத் தீர்மானம் எடுத்திருக்கிறது.

மரண தண்டனை மனிதாபிமானமற்றதென்பதைத் தாண்டி மரண தண்டனையால் உண்மையில் பலன் ஏதாவது இருக்கிறதா என யோசித்துப் பாருங்கள். குற்றங்கள் சமூகத்தில் குறைகின்றனவா என்பது முக்கியமா அல்லது குற்றவாளியைக் கொன்று போடுவது முக்கியமா? குற்றம் செய்தவன் கொடூரமான முறையில் பழிவாங்கப்படுவது தான் முக்கியம் என்று நினைக்கிறீர்களா? மரண தண்டனையால் சமூகத்தில் மிகச் சாதாரணமாக இருக்கும் பெண் வெறுப்பும் பாலியல் வன்முறையும் முடிவுக்கு வந்து விடுமா? குறைந்தது மரண தண்டனை கொடுக்கும் சட்ட வல்லுநர்களும் நீதிபதிகளும் நியாயமாகச் செயற்படுகிறார்களா?

அநேகமான பாலியல் வன்முறைகள் புகார் செய்யப்படுவதில்லை, புகார் செய்யப்பட்டவற்றில் 90%-க்கு மேற்பட்ட பாலியல் குற்றங்கள் பெண்களுக்கோ, சிறுவர்களுக்கோ தெரிந்தோராலேயே நடத்தப்படுகிறது.

அது தந்தையாகவோ, துணைவனாகவோ, சகோதரர்களாகவோ வேறு உறவினர்கள் – நண்பர்களாகவோ கூட இருக்கலாம். 10%-க்கும் குறைவான பாலியல் வன்முறையே அந்நியர்களால் நடத்தப்படுகிறது.

ஆனால் பலதரப்பட்ட சமூகத்தவரும் குற்றவியல் / நீதி அமைப்புகளும் அந்த சிறுபான்மையான பாலியல் குற்றங்களிலேயே கவனம் செலுத்துகின்றன. பாலியல் வன்முறைக்கான சட்டங்கள் அனைத்தும், அந்நியரால் நடத்தப்படும் வன்முறை சூழல்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த மாதிரியான சட்டங்கள் / தண்டனைகள் பாலியல் அடிப்படையிலான வன்முறைகளைக் குறைப்பதற்குத் தேவையான சமூக மாற்றங்களை வழங்குவதில் தோல்வியே அடைந்துள்ளன.

நிற்க‌. மரண தண்டனை கிடைக்கும் எனத் தெரிந்தால் தம் உறவினர்களின் அத்துமீறல்கள் குறித்து புகாரளிக்க அநேகமானோர் முன்வரமாட்டார்கள். கூடவே மரண தண்டனை கிடைக்கும் எனத் தெரிந்தால் பாதிக்கப்பட்டவரை வன்முறை செய்தவன் கொலை செய்யக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டெனவும் கருதப்படுகிறது.

கொடுக்கப்படும் மரண தண்டனைகளாவது குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் பக்கச் சார்பற்று, பாரபட்சங்கள் பார்க்காமல் கொடுக்கப்படுகிறதா? டில்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் நீதித்துறை அவ்வாறு செயல்படவில்லை என்றே சொல்கின்றன.

2013-இலிருந்து 2015 வரையான காலத்தில் மரண தண்டனை அளிக்கப்பட்ட குற்றவாளிகளில் 75% பேர் தாழ்த்தப்பட்ட சாதியை அல்லது சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தோர். அதில் 63% பேர் அவர்களின் குடும்பத்தின் பிரதான வருமானத்தை ஈட்டுவோர். 88% அதற்கு முன் எந்தக் குற்றமும் செய்ததாகச் சான்றுகள் இல்லாதோர். 300க்கும் மேற்பட்ட மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்போரில் 12 பேர் பெண்கள். அவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சாதியினைச் சேர்ந்தோர்.

இப்படி எல்லா வகையிலும் விளிம்புநிலையிலுள்ள மனிதருக்கே மிக அதிகமாக மரண தண்டனை வழங்கப்படுகிறது. சாதி / மத / வர்க்க அடிப்படையில் மேல் மட்டத்திலுள்ளோர் குற்றம் செய்யவில்லை என்பதல்ல. அவர்கள் இலகுவாக தப்பித்துச் செல்வதற்கே நீதி அமைப்பு பயன்படுகிறது. எந்த வகையில் இது மனிதாபிமானது?

மரண தண்டனை கிடைக்கும் என்ற‌ பயத்தால் பாலியல் வன்முறை / கொலைக் குற்றங்கள் குறையும் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. தண்டனையின் தீவிரம், தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை, குற்றத்தின் பின் தண்டனை கொடுக்க எடுக்கும் காலம் இவை மூன்றுமே சட்டத்தின் மூலம் குற்றங்களைக் குறைக்க உதவுவன.

இதில் ஒரு குறிப்பிட்ட அளவு தீவிரமான தண்டனைகளுக்கு மேல் தண்டனைகளின் தீவிரத்தைக் கூட்டுவதால் குற்றங்கள் குறையப் போவதில்லை. தண்டனைகளின் தீவிரத்தை விட‌ தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் தண்டனை கொடுக்க எடுக்கும் கால அளவுமே குற்றங்களைக் குறைக்க வல்லது.

தண்டனை நிச்சயம் என்றால் குற்றங்கள் குறையலாம் என்று ஆதாரங்கள் சொல்கின்றன‌. சரி, ஆனால் பாலியல் வன்முறை செய்தால் கட்டாயம் பிடிபடுவோம் / தண்டனை கிடைக்கும் என்று நீங்கள் யாராவது நம்புகிறீர்களா என்ன?

2015-2016 இல் நடத்தப்பட்ட National Family Health Survey (NFHS)-இன் படி இந்தியாவில் 99% ஆன பாலியல் வன்முறைகள் புகாரளிக்கப்படுவதே இல்லை. இத்தகவலைத் திரும்பவும் ஒருமுறை உள்வாங்கிக் கொள்ளுங்கள். நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைகளில் ஒரே ஒரு சதவீதமானவை மட்டுமே புகாரளிக்கப்படுகின்றன.

தேசிய குற்றப் பதிவு மையம் (NCRB) 2016-ம் ஆண்டு தரவுகளின் படி புகாரளிக்கப்பட்ட பாலியல் வன்முறைகளுக்கு விசாரித்து தண்டனைகள் கொடுக்கப்பட்டது வெறும் 18.9% வழக்குகளில் மட்டுமே. திரும்பவும் ஒருமுறை வாசியுங்கள். புகாரளிக்கப்படுவதே ஒரே ஒரு சதவீத வன்முறைகள்தான்.

அந்த ஒரு சதவீதத்தில் 19% ஆன குற்றங்களுக்கே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. அதாவது நாட்டில் நடக்கும் ஆயிரம் பாலியல் வன்முறைகளில் இரண்டிற்கும் குறைவான குற்றங்களுக்கே குற்றவாளிக்குத் தீர்ப்பளிக்கப்படுகிறது. இந்த இலட்சணத்தில் பாலியல் வன்முறை செய்தால் பிடிபடுவோம் என எவராவது நினைக்க முடியுமா என்ன?

மொத்தத்தில் மரண தண்டனை பயத்தால் பாலியல் வன்முறை / கொலைக் குற்றங்கள் குறையப் போவதில்லை. மாறாக அரசாங்கம் குற்றவியல் / நீதி அமைப்புகளை வலுப்படுத்த முயல்வதோடு பாலியல் வன்முறை செய்தோர் பொறுப்பேற்கவும் தேசிய அளவிலான தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

தவிர எல்லா சமூகங்களிலும் பாலியல் வன்முறை மிகப் பரவலாக இருப்பதைத் தனியே சட்ட அமைப்புகளைச் சீர்திருத்துவதால் மாற்ற முடியாது. பாலியல் வன்முறை ஒரு சமூகப் பிரச்சனை.

அதன் தீர்வில் சமூகம் ஒரு பங்காக இருக்க வேண்டும். சமூகத்தில் நடக்கும் பாலியல் வன்முறைகள் ஒரு தனி நபரின் செயல்களுக்கு அப்பாற்பட்டது. நமது ஆணாதிக்க சாதி-மத / கலாச்சார நம்பிக்கைகள், நடைமுறைகள், கட்டமைப்புகள் அனைத்தும் இவ்வன்முறை நிலைத்திருப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருக்கும் ஒரு பிரச்சனைக்குத் திடீர் தீர்வுகள் எதுவும் கிடையாது. இதை உணர்ந்து சமூக உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சமூகத்தில் படிப்படியான மாற்றங்களைக் கொண்டு வந்தாலே கொஞ்சம் கொஞ்சமாக‌ மாற்ற முடியும்.

மேலும் படிக்க :

(தொடரும்)

  •  அன்னா

அன்னா: மாதவிடாய், கருப்பை, கருத்தரித்தல் தொடர்பாக உயிரியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் உயிரியலாளர் மற்றும் பெண்ணியவாதி. வினவு கருத்தாடல் பக்கத்தில் “அறிவியல்-பெண்ணியம்-சமூகம்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க