கேரளாவில் பொழிந்த கடும் மழை காரணமாக அங்கு வெள்ளப் பெருக்கும், பெரும் நிலச்சரிவும் ஏற்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் உடைமைகளை இழந்து நிராதரவாக நிற்கின்றனர். பலரும் உறவுகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் மீனவர்களும், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் களமிறங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உலகமே கேரள மக்கள் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில், தமது வெறுப்பரசியலை கேரளத்தில் நிகழ்த்தியது மோடி அரசு. இரண்டு மாவட்டங்கள் தவிர பிற அனைத்து மாவட்டங்களும் கடுமையாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு முதலில் நிவாரணத் தொகையாக வெறும் 100 கோடியை மட்டுமே ஒதுக்கியது மோடி அரசு. பின்னர் கடுமையான எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழும்பிய பின்னர் கூடுதலாக ரூ.500 கோடியை மட்டும் ஒதுக்கியிருக்கிறது. ஆனால் கேரளத்தின் தேவையோ மிகவும் அதிகமானது.

இது ஒரு புறமிருக்க, மற்றொருபுறத்தில் சங்கிகளின் விசக்கொடுக்குகள் சும்மாயிருக்கவில்லை. ஹரி பிரபாகரன் என்ற சங்கி ஒருவர் டிவிட்டரில் சபரி மலை ஐயப்பன் கோவிலின் மூழ்கிய படத்தைப் போட்டு, ”சபரிமலை அய்யப்பன் கோவில் – எந்த சட்டமும் கடவுளுக்கு மேல் இல்லை. நீங்கள் அனைவரையும் உள்ளே அனுமதித்தால், அவர் அனைவரையும் புறக்கணிப்பார்” என்று பதிவிட்டார்.

குருமூர்த்தி - மனுஷ்ய புத்திரன் ஊழியின் நடனம்
சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதிக்கான வழக்குதான் பெருவெள்ளத்திற்குக் காரணமாம்

அதாவது, சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கை முன்வைத்து அதன் கோபத்தால் ஐயப்பன் ஒட்டு மொத்த மக்களையும் புறக்கணித்து மழை வெள்ளத்தை ஏற்படுத்திவிட்டார் எனக் கூறியிருக்கிறார்

இதனை மீள்பதிவிட்டு கூடுதலாக தமது ’பொன்னான’ கருத்துகளையும் தமது டிவிட்டர் பதிவில் பின்வருமாறு உதிர்த்துவிட்டிருந்தார் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர், ஆடிட்டர் குருமூர்த்தி.

“சபரிமலையில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கும் இந்த வழக்கிற்கும் (சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவது குறித்த வழக்கு) ஏதேனும் தொடர்பு உண்டா என்பது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் பார்க்க விரும்பலாம். இலட்சத்தில் ஒரு வாய்ப்பாக ஒரு தொடர்பு இருந்தாலும், மக்கள் இந்த வழக்கில் ஐயப்பனுக்கு எதிரான தீர்ப்பு வருவதை விரும்பமாட்டார்கள்”

இந்த மழை வெள்ளத்திற்கும் இந்த வழக்கிற்கும் இருக்கும் ’சம்பந்தத்தை’ உணர்ந்து நீதிபதிகள் பக்குவமாக செயல்படுமாறு எச்சரிக்கை விடுக்கிறாராம் இந்த அரை டவுசர்.

இது சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனத்தைப் பெற்றது. சாதாரண நபர்களும் கூட காவிக் கும்பலை காரி உமிழ்ந்தனர். இந்நிலையில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு கவிதையை வெளியிட்டார்.

Abdul Hameed Sheik Mohamed

ஊழியின் நடனம்
……………………………………………….
மனுஷ்ய புத்திரன்
…………………………………………………

தேவி
உன் விடாய் குருதி
ஊழிக் காலங்களை
உருவாக்க வல்லதா?

அது
ஊர்களையும்
நகரங்களையும்
அழிக்க வல்லதா?

அது
ஆலயங்களையும்
தெய்வங்களையும்
நீரில் மூழ்கச் செய்ய வல்லதா?

அது
பாதைகளை அழித்து
வழிகளை மறைத்து
தனித் தீவுகளை
உருவாக்க வல்லதா?

தேவி
உன் விடாய் குருதி
நிலத்தைக் கடலாக்கும்
கடலை ஊராக்கும்
மகா சக்தியா?

அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள்
எந்த அணையிட்டும் தடுக்கவியலாத
இயற்கையின் ஊழி நடனமெனெ
உனது ஒரு சொட்டு விடாய் குருதியை
அவர்கள் அஞ்சுகிறார்கள்

தேவி
உன் குருதியிலிருந்தே
உயிர்கள் பிறக்கின்றன
உன் குருதியிலேயே
உயிர்கள் தஞ்சம் கொள்கின்றன

உன் விடாய் குருதியை
அசுத்தம் என்றார்கள்
தீட்டு என்றார்கள்
உன் குருதியின் வெள்ளம்
இந்த நிலத்தின் மீதிருக்கும்
அத்தனையையும்
முழுமையாக கழுவிக்கொண்டிருக்கிறது.

இவ்வளவு தூய்மை
எங்களுக்கு வேண்டாம்

தேவி
சற்றே ஓய்வுகொள்
இது கருணைக்கான வேளை

18.8.2018
பகல் 2.15
மனுஷ்ய புத்திரன்

மனிதர்களைப் படைத்தருளும் தாய்மையின் மாத விடாய்க் குருதிதான், இத்தனைப் பேரிடருக்கும் காரணமோ, அந்த தாய்மையை தேவியாக தொழுபவர்கள் தீட்டு, அசுத்தம் என்று களங்கப்படுத்தியவர்கள், அந்தக் களங்கத்தின் அத்தனை அழுக்கையும் இயற்கைத் தாய் கழுவுவதாக உருவகப் படுத்தி கவிதையை எழுதியிருக்கிறார், மனுஷ்யபுத்திரன்.

மக்கள் அனைவரும் கேரளாவின் துயரில் பங்கெடுக்கும் போது காவி பயங்கரவாதிகளுக்கு அது கவலையை ஏற்படுத்துகிறது. முடிந்த மட்டும் கேராளாவைக் கொச்சப்படுத்தவும், தனிமைப்படுத்தவும் முயல்கிறார்கள். அதனுடையை வெளிப்பாடே ஐயப்பன் பழிவாங்கினார் எனும் கருத்து. அதற்கு மேல் எச்ச ராஜா களத்திற்கு வருகிறார். மனுஷ்யபுத்திரன் இந்து தெய்வங்களை இழிவுபடுத்தியதாக கிளப்பி விடுகிறார்.

குருமூர்த்தி - மனுஷ்ய புத்திரன் ஊழியின் நடனம்
எச். ராஜா

அவரது முகநூல் பக்கத்தில், மனுஷ்யபுத்திரனை முசுலீம் மதவெறியன் என்றும், பெண்ணை தேவி என்று குறிப்பிட்டு மனுஷ்யபுத்திரன் எழுதியதை இந்து பெண் தெய்வங்களைப் பற்றி எழுதியதாகவும் திரித்துக் கூறி, சக சங்கிகளை காவல்நிலையங்களில் புகார் கொடுக்கக் கூறியிருக்கிறார். கூடுதலாக #ArrestManushiyaPutran என்ற ஹேஷ்டேகையும் பதிவிட்டிருக்கிறார்.

H Raja

 தனியார் தொலைக்காட்சி நெறியாளர் கார்த்திகேயன் இந்துக்களின் பெண் தெய்வங்களை இழிவாக பேசிய போது இந்துக்கள் சரியாக எதிர்வினையாற்றாத காரணத்தால் இன்று திமுக வின் ஊடக முகம் அப்துல் ஹமீது என்கிற முஸ்லிம் மதவெறியன் மனுஷ்யபுத்திரன் என்கிற பெயரில் ஒளிந்து கொண்டு இந்து பெண் தெய்வங்களை இழிவு படுத்தியுள்ளார். இவர் ஏற்கனவே இந்து பெண்கள் அணியும் புனிதமான தாலியை இழிவு படுத்தியவர். இந்துக்களின் மத உணர்வை புண்படுத்திய இவருக்கு எதிராக இந்து உணர்வாளர்கள் அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் செய்யவும்.

H Raja

#ArrestManushiyaPutran

இதனைத் தொடர்ந்து சங்கிகள் மனுஷ்யபுத்திரனின் முகநூல் பக்கத்திலும் அவரது செல்பேசியிலும் ஆபாசமாகப் பேசியும், கொலை மிரட்டல்களைவிடுத்தும் வந்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து தமக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் குறித்தும் ஆபாச வசவுகள் குறித்தும், ” என்னை அவர்கள் கொல்ல விரும்புகிறார்கள் ” என்ற சிறு பதிவு ஒன்றை தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மனுஷ்ய புத்திரன். மேலும் தமது பாதுகாப்புக்கான பொறுப்பு தமிழ்ச் சமூகத்திற்கானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

 Abdul Hameed Sheik Mohamed

என்னை அவர்கள் கொல்ல விரும்புகிறார்கள்
…………….
எனது கவிதையில் எந்த இந்து தெய்வம் குறித்தும் எந்த நிந்தனையும் கிடையாது. அது பெண்ணின் பேராற்றல் குறித்த கவிதை என்பதை எழுதப்படிக்கத் தெரிந்த அனைவரும் அறிவார்கள்.என் வாழ்நாளில் எவருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் எதையும் நான் எழுதியதில்லை.

நேற்று ஹெச்.ராஜா எனக்கு எதிராக அவதூறாக ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் தூண்டிய வன்முறை காரணமாக ஏராளமான கொலைமிரட்டல்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேரடியாக குறுஞ்செய்திகளாக ஆபாசச்செய்திகள், கொலை மிரட்டல்கள் அனுப்பப்படுகின்றன. எனது அலைபேசி எண் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு இடையறாத தொலைபேசி அழைப்புகள் மூலம் மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன.

என் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்து ஹெச்.ராஜா முயன்றிருக்கிறார். அவர் எனக்கு எதிராக மேற்கொண்டிருக்கும் இந்த பொய்யான பிரச்சாரத்தின் மூலம் எனக்கு நேரிடக்கூடிய எந்த அபாயத்திற்கும் ஹெச்.ராஜாவே பொறுப்பு.

ஜனநாயகத்திற்காகவும் கருத்துரிமைகாகவும் தொடர்ந்து போராடி வந்திருப்பவன் என்ற முறையில் எனது பாதுகாப்பிற்கான பொறுப்பை தமிழ்சமூகத்திடமே ஒப்படைக்கிறேன். ஜனநாயக சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களின் மற்றொரு நிகழ்வு இது.

மனுஷ்ய புத்திரன்

 மேலும், இது குறித்து சென்னை காவல்துறை ஆணையரைச் சந்தித்து புகார் மனுவும் கொடுத்துள்ளார்.

Abdul Hameed Sheik Mohamed

இன்று மதியம் காவல்துறை ஆணையரை சந்தித்து எனக்கு எதிராக எச்.ராஜாவின் தூண்டுதலின் பெயரில் சமூக வலைத்தளங்களிலும் தொலைபேசி வாயிலாகவும் நேற்று மதியத்திலிருந்து தூண்டப்படும் வன்முறை மற்றும் கொலைமிரட்டல்கள் குறித்து புகார் அளித்தேன். சமூக வலைதளங்களில் மற்றும் குறுஞ்செய்திகளில் எனது உடல் நிலை குறித்தும் என்னை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் விதமாகவும் எனக்கு அபாயத்தை விளைவிக்கும் வகையிலும் எழுதபட்ட மிரட்டல் பதிவுகளின் ஸ்க்ரீன் ஷாட்கள் மற்றும் நேரடியாக தொலைபேசியில் மிரட்டல் விடுப்பவர்களின் எண்கள் ஆகிய ஆதரங்களுடன் என் புகாரை அளித்தேன். காவல்துறை ஆணையர் புகாரை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மனுஷ்ய புத்திரன்

இது குறித்து பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு சமூக வலைத்தளத்தில் பல்வேறு தரப்பினரும் மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Vijayasankar Ramachandran

மனுஷ்ய புத்திரன் ஒரு கவிதையில் இந்து தெய்வங்களை இழிவுபடுத்தி விட்டார், அவர் ஒரு முஸ்லிம் மதவெறியன், அவருக்கு எதிராக எல்லா காவல் நிலையங்களிலும் புகார் கொடுக்கவும் என்று சங்கிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். Arrest Manushyaputhiran என்கிற ஹாஷ்டாக் ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார் எச். ராஜா. தெய்வத்தின் பெயரைச் சொல்லி பேரிடரில் சிக்கித் தவிக்கும் ஒரு மாநில மக்களை இழிவுபடுத்தும் இந்தக் கூட்டம், மனுஷ்யபுத்திரனுக்கு நூற்றுக்கணக்கான தொலைபேசி மிரட்டல்களையும் விடுத்துக் கொண்டிருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
#standwithmanushyaputhiran

 Keetru Nandhan

சங்கிகளுக்கு எதிராக சளைக்காமல் கருத்துச் சண்டை நடத்துபவர்… சங்கிகளால் எதிரியாகப் பார்க்கப்படுபவர்…

இந்த ஒரு புள்ளி போதும், நாம் மனுஷ்யபுத்திரன் பக்கம் நிற்க…
கல்புர்கி, கவுரி லங்கேஸ் சம்பவங்களின் தொடர்ச்சியை தமிழகத்தில் எதிர்பார்க்கிறார்கள் ‘எச்சை’கள்.

திராவிடம், தமிழ்த் தேசியம், கம்யூனிசம் என நமக்குள் ஆயிரம் சகோதரச் சண்டைகள் இருக்கலாம். அதற்காக ஒரு நாளும் காவிகளின் கை ஓங்க அனுமதித்துவிட‌க் கூடாது!! #stand_with_manushyaputhiran

 Sugumaran Govindarasu

கேரள மழை, வெள்ளப் பாதிப்புக்குச் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுதான் காரணமென ஆடிட்டர் குருமூர்த்தி எழுதினார். இதற்குப் பலரும் எதிர்வினை ஆற்றினர். அந்த வகையில் எழுத்தாளர் மனுஷ்யப்புத்திரன் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அவர் மீது இந்துக் கடவுளை அவமதித்துவிட்டார் என்றுக் கூறி காவல்நிலையங்களில் புகார் கொடுக்கும் செயலில் இறங்கியுள்ளனர் இந்துத்துவவாதிகள். இதன் பின்னணியில் எச்.ராஜா உள்ளார். எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் மீதான இந்தத் தாக்குதலைக் கண்டிப்போம்.

Anush

இந்தியாவின் தேசிய பேரிடர் எச்.ராஜா அவர்கள். I Stand with Manusya Puthiran.

கே. என். சிவராமன்

‘ஊழியின் நடனம்’ கவிதைக்காக கவிஞர் மனுஷ்யபுத்திரனை Abdul Hameed Sheik Mohamed மதவாதிகள் சிறைக்கு அனுப்ப வேண்டும்… கொலை செய்ய வேண்டும்… என குரல் உயர்த்தி வருகிறார்கள்.

இந்நிலையில் மனுஷுக்கு ஆதரவாக பலரும் நிலைத்தகவல் பதிந்து வரும் நிலையில் கவிஞர் சுகுமாரன் Sukumaran Narayanan ‘தேவி மகாத்மியம்’ என்ற கவிதையை எழுதி தன் சுவற்றில் பதித்திருக்கிறார்.

இதனையடுத்து பெருமாள்முருகன் பெருமாள்முருகன் ‘கவிஞர்கள் எல்லோரும் ஆளுக்கொரு ‘தேவி’ கவிதை எழுதி ‘ தேவி கவிதை இயக்கம்’ தொடங்கலாமா? நூறு இருநூறு என எழுதி எழுதி மேற்செல்வோமா?’ எனக் கேட்டிருக்கிறார்.

நல்ல யோசனை. கவிஞர்கள் களமிறங்கி மதவாதிகளை இந்த வகையிலும் அலற வைத்தால் என்ன?

Mahendhiran Kilumathur

எந்தப் பெரியாரின் வரலாற்றை ஒழிக்க முயன்றீர்களோ அவரை நாங்கள் தூக்கிச் சுமந்தோம், எந்த அண்ணாவை தேசத்தை பிரிக்க வந்தவர் என்று பிரச்சாரம் செய்தீர்களோ அவரை நாங்கள் எங்கள் அறிஞர் ஆக்கினோம், எந்தக் கலைஞரை அழிக்க முயன்றீர்களோ அவர்களைத்தான் நாங்கள் எங்கள் அரக்கனாக்கினோம், எல்லாம் நீங்கள் கற்றுக் கொடுத்த மனு நீதிப் பாடம். நாங்கள் நீங்கள் இல்லை என்பதற்காகவே நாங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் முகத்தில் உதைத்துச் சொல்வோம்.

இது எங்களின் நிலம்.
புத்தம், இந்து, இஸ்லாம், கிருஸ்த்துவம் எல்லாம் இங்கே இல்லை …மனுசபுத்திரன்கள் மட்டுமே உண்டு.

ஆண்டாள் விவகாரத்திலேயே பொய்களின் மூலம் கலவரத்தை உண்டாக்க முயன்றனர் எச்சை ராஜாவும் அவரது சங்க பரிவாரங்களும். அதில் பலத்த பதிலடி கொடுக்கப்பட்ட பின்னரும் மீண்டும் வாலை நீட்டிக் கொண்டு மீண்டும் களத்தில் இறக்கியிருக்கிறது காவிக் கும்பல். ஒட்ட நறுக்க வேண்டியது நமது பொறுப்பு.

  • வினவு செய்திப் பிரிவு