மு.வி.நந்தினி
பாராமுகம் பார்ப்போம் – மு.வி.நந்தினி

காதல் அனைவரையும் ஏதேனுமொரு சமயத்தில் கிளர்ச்சி கொள்ள வைக்கும் ஒன்று. பதின்மத்தின் ஒருதலைக் காதலுக்காகவோ, திருமணத்தில் முடிவுறாத காதலுக்காகவோ, ‘உண்மையான காதலை’த் தேடியோ பெரும்பாலான மனங்கள் ஏங்கித் தவிக்கின்றன. கார்ல் மார்க்ஸின் 200-வது பிறந்த  தினத்தில் அவருடைய கோட்பாடுகளை விவாதிப்பதைக் காட்டிலும் ஜென்னியுடனான அவருடைய காதலின் மகத்துவத்தை சொன்ன பதிவுகளைத்தான் முகநூலில் அதிகம் காணமுடிந்தது. காதலைக் கொண்டாட எல்லோருக்கும் ஒரு காரணம் தேவைப்படுகிறது. இடது, வலது, லிபரல் என வேறுபட்ட கருத்துடையவருக்கும் காதல் மிகக் கிளர்ச்சியூட்டும் வார்த்தை! எது காதல்? அது எப்படிப்பட்ட தன்மையில் இயங்குகிறது? காதல் உணர்வு ஆண்-பெண் இருவருக்கும் பொதுவானதா?

மிகைப்படுத்தப்பட்டு, பதின்மத்தின் உயிரியல் தேவைகளை புனிதத்துடன் முன்வைக்கும் ’காதல்’ உதாரணங்கள்தான் நம் முன்னே மலைபோல் குவிக்கப் பட்டிருக்கின்றன.  தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் ‘காதல்’களில் ஆண் நாயகர்கள் வெள்ளையான, தங்களைவிட உயரம் குறைவான, நாகரிக உடைகள் அணிந்த, ஒல்லியும் குண்டுமல்லாத பெண்களையே காதலிக்கிறார்கள். புரையோடிப்போன ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்தும் களமாக தமிழ் சினிமாக்கள் உள்ளன. ஒரு பெண்ணை துரத்தித் துரத்தி துன்புறுத்தி ‘காதல்’ கொள்ள வைக்கும் நவீன ‘கிருஷ்ணர்’கள் தமிழ் சினிமாவில் நாயகர்களாக உலவுகிறார்கள். தன் காதலை ஏற்காத பெண்களை குத்துடா, கொல்லுடா என்னும் போது தியேட்டரில் விசில் ஆராவாரம் காதை அடைக்கும்.

‘அடிடா அவளை கொல்றா அவளை’ என்ற நடிகர் தனுஷின் புகழ்பெற்ற பாடலை பகடி செய்யும் விதமாக சமீபத்தில் வெளியான ‘தமிழ்ப்படம்-2’-இல் ‘அடிடா அவனை’ என நாயகி பாடுவதாக ஒரு பாடல் அமைக்கப்பட்டிருந்தது.  இந்தப் பாடலின் போது திரையரங்கு ஆழ்ந்த அமைதியில் இருந்தது.

‘அடிடா அவளை கொல்றா அவளை’ என்ற நடிகர் தனுஷின் புகழ்பெற்ற பாடலை பகடி செய்யும் விதமாக சமீபத்தில் வெளியான ‘தமிழ்ப்படம்-2’-இல் ‘அடிடா அவனை’ என நாயகி பாடுவதாக ஒரு பாடல் அமைக்கப்பட்டிருந்தது.  இந்தப் பாடலின் போது திரையரங்கு ஆழ்ந்த அமைதியில் இருந்தது. விசிலடிக்கும் ‘ரசிகர்’கள் இதை ரசிக்கவில்லை என படம் பார்த்த பல பெண்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தார்கள். தமிழ் சினிமாவும் அதில் தன்னை பிணைத்துக் கொண்டிருக்கும் சமூகமும் ஒன்றைப் பார்த்து ஒன்று பிரதியெடுத்துக்கொள்கின்றன. இந்த பிரதியெடுப்பில் முதன்மையானது ஆணாதிக்க சிந்தனை.

ஒரு லும்பன் (வேலையற்ற-பெரியோரை மதிக்காத-சதா குடியும் கூத்துமாக திரியும் ஒருவன்) ஒரு கல்லூரி பெண்ணை ஈவ் டீசிங் செய்கிறான், பின் அந்தப் பெண் அவனை காதலிக்கிறாள். அந்தக் காதலுக்காக தன் படிப்பை, வீட்டை விட்டு வெளியேற தயாராக இருக்கிறாள். பல இடர்ப்பாடுகளுக்கிடையே இருவரும் திருமணம் செய்துகொள்வதாக ஒரு சினிமா முடியும். இது பொதுவானதொரு சினிமா டெம்ப்ளேட். இதில் ஆண்-பெண்ணின் பின்னணி, ஊர் இவைகளை மாற்றி பல சினிமாக்களை உருவாக்கிவிடலாம். இப்படியான சினிமாக்கள் முக்கியமான இரண்டு விஷயங்களுக்காக எடுக்கப்படுகின்றன. முதலாவதாக திரையரங்குக்கு வரும் பதின்பருவத்தினருக்காக எடுப்பது, இரண்டாவது பதின்பருவ அல்லது இருபது வயதுக்குள்ளான காதல்களைக் காட்டும்போது பெண்களுக்கு அரைகுறை ஆடை அணிவித்து அதிக பாலுணர்வு தூண்டும் காட்சிகளை வைக்க முடியும். சமூகவியல் நோக்கில் சொல்லப்போனால் காதலை பண்டமாக மாற்றும் நுகர்வுத்தன்மையை விதைக்க உதவுபவையே இத்தகைய சினிமாக்கள்.

சமூகவியல் பேராசிரியர்  இவா இலோஸ் (Eva Illouz) தன்னுடைய ‘Consuming the romantic utopia: Introduction to a political economy of love’ என்ற நூலில் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அமெரிக்க சமூகத்தில் நுகர்வை மையப்படுத்திய கற்பனாவாத காதலை பிரபலப்படுத்த சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் எப்படி பங்களித்தன என்று குறிப்பிடுகிறார்.  முதலாளித்துவ கலாச்சாரத்தில் நவீன காதல் எப்படி பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது அதன் நடைமுறைகள் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை தனது நூலில் விவரிக்கிறார் இவா இலோஸ்.

“மரபார்ந்த இணைந்திருத்தல் என்பதற்கு பதிலாக டேட்டிங் என்பது அறிமுகமாகிறது. நுகர்வை மையப்படுத்திய ஓய்வுநேர செயல்பாடுகள் (உணவகங்களுக்குச் செல்லுதல், சுற்றுலா, சினிமாவுக்குச் செல்வது, வாகனங்களில் பயணிப்பது போன்றவை) டேட்டிங்கின் முக்கிய வழிமுறைகளாக  உருவாக்கப்பட்டன என்கிறார் இவா. வெகுஜென பரப்பில் விளம்பரங்கள், சினிமாக்கள் மூலம் ‘நுகரும் இணைகளாக’ அவர்கள் முன்னிறுத்தப்படுகிறார்கள். விளம்பரங்களும் நடுத்தர வர்க்கத்தினர் வாசிக்கும் இதழ்களும் முன்வைக்கும் மிகைப்படுத்தப்பட்ட காதலும் ஓய்வை மையப்படுத்திய சந்தையும் ஒன்றுக்கொன்றை கருவியாக பயன்படுத்திக்கொண்டன.  ஓய்வை மையப்படுத்திய சந்தை, காதல் நடத்தையை வெளிப்படுத்தும் இடமாக இருக்கிறது. அதுபோல, இந்தப் பொருட்களை நுகர்வதன் மூலம் இதுதான் ‘காதல்’ என உறுதிப்படுத்தப்படுகிறது.  சந்தையை அடிப்படையாகக் கொண்ட காதல் இத்தகைய கற்பனாவாதத்தின் அடிப்படையில் இயங்குவதாக இவா தன்னுடைய கருத்தை முன்வைக்கிறார்.

நுகர்வின் வழியாக உடோப்பிய – கற்பனாவாத காதலை பெற்று, திருமணத்தின் மூலம் அது நிறைவை எட்டுவதாக திரும்பத் திரும்ப நமக்குச் சொல்லப்படுகின்றன. லும்பனை திருமணம் செய்துகொண்ட பெண்ணின் வாழ்வு எப்படி இருக்கும்? லும்பனை மட்டுமல்ல, இளவரசனை திருமணம் செய்து கொண்ட சிண்டரெல்லாக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கூட எவரும் கவலைப்படுவதில்லை.

‘‘பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையின் மையமாக காதல் இருக்கிறது. ஒரு படுகுழியைப் போல, நரகத்தைப் போல, தன்னைத்தானே மாய்த்துக்கொள்வதைப் போல பெண்களுக்கு எதிராக காதல் பயன்படுத்தப்படுகிறது”

புரட்சிகர பெண்ணியவாதியான ஷுலமித் ஃபயர்ஸ்டோன் (Shulamith Firestone, ‘The dialectic of sex: the case for feminist revolution’ என்ற நூலின் ஆசிரியர்) தன்னுடைய நூலில், ‘‘பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையின் மையமாக காதல் இருக்கிறது. ஒரு படுகுழியைப் போல, நரகத்தைப் போல, தன்னைத்தானே மாய்த்துக்கொள்வதைப் போல பெண்களுக்கு எதிராக காதல் பயன்படுத்தப்படுகிறது” என்கிறார்.

ஷுலமித் தன்னுடைய நூலில் The Culture of Romance என்ற தலைப்பில்  சொல்கிறார், “கற்பனைமயமாக்கப்பட்ட காதல் (ரொமாண்டிக்)அதிகாரத்தின் பார்வையில் சிதைந்துபோய் பாலின வர்க்க அமைப்பை வலுப்படுத்துகிறது. பெண்கள் உளவியல் ரீதியாக ஆண்களை சார்ந்திருக்க சமூக, பொருளாதார ஒடுக்குமுறைகள் உருவாக்கப்பட்டிருப்பதை அறிவோம். நவீன உலகில் சமூக-பொருளாதார ஒடுக்குமுறைகள் மட்டுமே பெண்களை உளவியல் ரீதியாக கட்டுப்படுத்தி வைக்கப் போதுமானதாக இல்லை. எனவே, அங்கு ரொமாண்டிசம் தேவைப்படுகிறது. பாலின வர்க்க அமைப்பு தகரும்போது செயற்கையான ஒன்றை அல்லது, முந்தைய ஒடுக்குமுறையின் மிகைப்படுத்தப்படுத்தப்பட்ட வடிவம் ஒன்றின் மூலம் ஆண் மேலாதிக்கம் தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு முந்தைய குடும்ப அமைப்பு தளர்வான கட்டுப்பாடுகளுடன் இருந்தது. இப்போது கட்டுப்பாடுகளுடன் கூடிய, இறுக்கமான ஆணாதிக்க தனிக்குடும்ப அமைப்பு உருவாக்கப்படுகிறது.  ஒருகாலத்தில் வெளிப்படையாக பெண்கள் அவமதிக்கப்பட்டனர். இப்போது, போலியாக துதிக்கப்படும் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். ரொமாண்டிசம் பெண்களை கலாச்சார ரீதியாக தங்களுடைய நிலையை உணர முடியாமல் வைக்கிற ஆண்களின் அதிகாரம். தொழிற்மயமாகிவரும் சமூகங்களில் அது முக்கிய தேவையாக உள்ளது.”

‘உண்மையான காதல்’, ‘தெய்வீகமான காதல்’ என பல பெயர்களில் உருவாக்கப்பட்ட அனைத்து ‘காதல்’களும் ஆண்களுக்கு தேவைப்படும் கட்டுக்கதைகள்; ஆணாதிக்க சிந்தனையில் உருவான கட்டுக்கதைகள் என்பதே பெண்ணியலாளர்களின் கருத்தாக உள்ளது.

அன்பு, காதல் எதுவும் உண்மையில்லை என்கிற ‘விரக்தி’ நிலைக்கெல்லாம் வரவேண்டியதில்லை. பெரும்பாலான உயிரினங்கள் அன்பு கொள்கின்றன. இதற்கெல்லாம் உதாரணம் சொல்ல உயிரியியலாளர்களின் மேற்கோள்களைச் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் அருகிலேயே இருக்கும் நாய், பூனைகளை கவனியுங்கள். மனித தாயைவிட அவை தங்கள் குட்டிகளுக்காக செய்யும் ‘தியாகம்’ மிகப் பெரியதாகத் தெரியும். அவற்றை தியாகம் என எண்ணி அவை செய்வதில்லை, வழியாக வந்த மரபணுக்களின் வழியாக அந்த குணங்களை அவை பெறுகின்றன. அதுபோலத்தான் மனிதர்களும். நம்மால் சிந்திக்க முடிகிறது என்பதற்காக மனிதர்கள்தான் அன்பு காட்டுவதில் சிறந்தவர்கள் எனக் கோரிக் கொள்கிறோம்.

‘உண்மையான காதல்’, ‘தெய்வீகமான காதல்’ என பல பெயர்களில் உருவாக்கப்பட்ட அனைத்து ‘காதல்’களும் ஆண்களுக்கு தேவைப்படும் கட்டுக்கதைகள்; ஆணாதிக்க சிந்தனையில் உருவான கட்டுக்கதைகள்

சற்றே நுணுக்கமாக அணுகிப் பார்த்தால் ஆண் மேலாதிக்கம், பெண்களை குடும்ப அமைப்புக்குள் இறுக்கிக் கொள்ள ‘தாய்மை’ உணர்வை பயன்படுத்திக் கொண்டது. இயல்பாக குழந்தைகள் வளரும்வரை தாயின் உதவியும் அரவணைப்பும் வழிகாட்டுதலும் தேவைப்படலாம். ஆனால், ஒரு பெண் தன் குழந்தைகள் வளர்ந்து பெரியர்களாகி, அவர்களுக்கு குழந்தை பிறந்து, அதாவது அந்தப் பெண் இறக்குவரை அவளை ‘தாய்மை’யின் பெயரால் சுரண்டுவது ஆணாதிக்கம் உருவாக்கிய குடும்ப அமைப்பில் விதியாக மாற்றப்பட்டுள்ளது.

ஷுலமித் சொன்னதுபோல, நகரமயமாதல்-தொழில்மயமாகும் சூழல் காரணமாக கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து வருகின்றன. பல கிராமங்களில் வயது முதிர்ந்த பெண்கள் தனியாக வசிக்கிறார்கள். வயது முதிர்வின் காரணமாக கணவர்களின் ஆதிக்கம் தணிந்திருக்க, பெண்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார்கள். அதேசமயம் தனிக்குடும்ப அமைப்பில் பெண்கள் மீதான ஒடுக்குமுறையின் பிடி இறுக ஆரம்பிக்கிறது. ஒடுக்குமுறை ஆயுதமாக ‘காதல்’ பயன்படுத்தப்படுகிறது.  சமூகவியலாளரும் பெண்ணியவாதியுமான கேரல் ஸ்மார்ட் (Carol Smart), “ஆணாதிக்க சமூகத்தின் கருத்தியல் ஆயுதமாக காதல் உள்ளது. காதல் என்ற பிணைப்பின் மூலம் பெண்கள், ஆண்களை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பின், திருமணம் என்கிற சாதகமற்ற சட்ட ஒப்பந்தத்தில் நுழைந்து, குழந்தைகளை பராமரித்தல் என்கிற இறுதி முடிவில் நிறுத்தப்படுகிறார்கள்” என்கிறார்.

“ஆணாதிக்க சமூகத்தின் கருத்தியல் ஆயுதமாக காதல் உள்ளது. காதல் என்ற பிணைப்பின் மூலம் பெண்கள், ஆண்களை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பின், திருமணம் என்கிற சாதகமற்ற சட்ட ஒப்பந்தத்தில் நுழைந்து, குழந்தைகளை பராமரித்தல் என்கிற இறுதி முடிவில் நிறுத்தப்படுகிறார்கள்”

பல சமூகவியல் அறிஞர்கள் காதல் பெண்களுக்கு சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் சுயத்தையும் அளிப்பதாக சொல்கிறார்கள்.  நம்முடைய சாதிய சமூகத்தில் சாதியை ஒழிக்கும் காரணியாக ‘காதல்’ இருக்கும் என பலர் பேசிவருகிறார்கள். பெரியாரும்கூட இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார். காதல் மட்டுமே பெண்களுக்கு போதுமானதல்ல, அந்தக் காதலில் சமத்துவம் இருக்க வேண்டும் என்கிறார் பெரியார். ஆனால் இங்கே முந்தைய கருத்து மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது. சமத்துவம் மீண்டும் குப்பைத் தொட்டியில் வீசப்படுகிறது.

என்னைச் சுற்றிலும் இருக்கும் ‘காதல்’களைப் பார்க்கிறேன். உடன் பணியாற்றியவர்கள், அருகில் வசிப்பவர்கள், உறவினர் என பலருடைய ‘காதல்’களை ஆராய்ந்ததில் அவர்களுடைய திருமணத்துக்குப் பின்பான வாழ்க்கை என்பது பிற்போக்குத்தனமான நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்ட பெண்களின் துயர வாழ்க்கைப் போலவே உள்ளது. திருமணம் முடிந்தவுடன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்; குழந்தை பிறந்தவுடன் வேலையை விடவேண்டும். முழுநேரமாக குழந்தைகளை வளர்த்து சரியாக மூன்று ஆண்டுக்குப் பின் அடுத்த குழந்தைக்கு தயாராக வேண்டும். அடுத்த குழந்தையை பெற்றெடுத்து இரண்டு குழந்தையை ‘சிறப்பாக’ வளர்த்து, கான்வெண்டில் படிக்க வைத்து, எண்ட்ரென்ஸ் எழுத வைத்து, வேலைக்கு அனுப்பி, திருமணம் செய்து, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆய் கழுவி… அதாவது அந்தப் பெண் சாகும்வரை இத்துப்போன குடும்ப அமைப்புக்காக உழைக்க வேண்டும். பெண்ணின் விருப்பங்கள், தேர்வுகள் எப்போதும் கண்டு கொள்ளப்படுவதேயில்லை. தான் பார்த்து வந்த பணியில் தனிப்பட்ட திறமையுடன் மிளிர்ந்த பெண்கள், காதல் – திருமணம் – குடும்பம் என்கிற ஆண் மேலாதிக்க அமைப்புகளால் சிதைந்துபோகிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண் இதழ் வடிவமைப்பாளராக பணியாற்றியவர். காதல் திருமணம் செய்துகொண்டு, குழந்தை பிறந்தபின் பணியை விட்டுவிட்டார். பணி நிமித்தமாக அவரைத் தேடி தொடர்பு கொண்டேன். குழந்தையை கவனிக்கும் நேரம் போக, மீதமுள்ள நேரத்தில் வடிவமைப்பு வேலைகளை செய்து தருவதாக சொன்னார். தன்னை தொடர்புகொண்டு பணி கொடுத்ததற்காக நன்றி சொன்ன அவரிடம், வீணாகிக் கொண்டிருக்கும் திறமை ஏதோ ஒருவிதத்தில் பயன்படுத்துவது மகிழ்ச்சி என்றேன். உடனடியாக மறுத்த அவர் தன் குடும்ப பொருளாதாரத்துக்கு சிறு உதவியாக இருக்கும் என்பதற்காக மட்டுமே செய்வதாகவும் திறமை, பெரிய இலட்சியமெல்லாம் தனக்கில்லை என்றார். சுயமான கனவும் இலட்சியமும் கொண்ட பெண்களெல்லாம் குடும்ப வாழ்க்கைக்கு ஆகாதவர்கள் என அவருடைய ஆழ்மனதில் பதிந்து போயுள்ளதை அறிய முடிந்தது. உரையாடலின் முடிவில் தான் கற்றது வீணாகக்கூடாது. தன்னாலும் பொருளீட்ட முடியும் என்கிற சுயத்தை இந்தப் பணி மீட்டுத்தரும் என போகிற போக்கில் சொன்னார்.

இவா இலோஸ் சொல்கிறார், “காதல் சுதந்திரமானதாகவும் முற்போக்கானதாகவும் இருக்கலாம். அதே சமயம் அது அடக்குமுறையுடனும் இருக்கலாம்.” அடக்குமுறையையும் ஆணாதிக்கத்தையும் மறுத்த காதல் மட்டுமே புரட்சிகரமானதாகவும் சமநிலை திறன் கொண்டதாகவும் அமையும் என்கிறார்.

எழுத்தாளர் வெண்டி லாங்ஃபோர்டு தன்னுடைய Revolutions of the Heart: Gender, Power, and the Delusions of Love நூலில்  காதலின் தன்மை நீதியின் கூறுகளை உள்ளடக்கி உள்ளதை சுட்டிக்காட்டுவதோடு அது பெரும்பாலும் தவறான வழிநடத்தல்களில் போய் முடிவதாகவும் சொல்கிறார்.

“நாம் எதிர்ப்பார்க்கும் சமத்துவம், சுதந்திரம், இணைவு ஆகியவற்றை காதல் தருவதில்லை. கூடவே வலிமிகுந்த உணர்வையும் திருப்தியின்மையையும் சுயத்தையும் இழக்க வைக்கிறது. சொல்லப்போனால், அது நேர்மறையாக மட்டுமல்ல, நடுநிலையாகவும் இல்லை; ஆனால் பெரும்பான்மையும் எதிர்மறையானது.  காதலின் வெற்றி என்பது தனிப்பட்டவர்களின் குணங்களின் அடிப்படையிலும் அவர்களுடைய பகுத்தறிவு மிக்க நடவடிக்கைகளின் அடிப்படையிலும் அமைகிறது” என்கிறார்.

காதல் குறித்த இந்தக் கட்டுரையை எழுதக் காரணம் காதலின் மிகைப்படுத்தப்பட்ட பிம்பத்தை உடைக்க வேண்டும் என்பதும் காதலும்கூட ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கு எதிரான ஒரு அமைப்பாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டவுமே. நமக்குத் தேவை ஒரு இணைவு. அந்த இணைவு சமத்துவத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். அதோடு, காதலோ, இணைவோ வாழ்வின் இலக்காக ஒருபோதும் இருந்துவிடுவதில்லை. திருமணம் செய்துகொள்ளாவிட்டால் வாழ்க்கை முழுமையடையாது என  சொல்லப்படுகிறது. உண்மையில் காதலோ, திருமணமோ எவருக்குமே முழுமையைத் தந்து விடாது. ஒரு குறிப்பிட்ட வயதின் தேடலாக மட்டுமே காதல், திருமணமும் இருக்குமே அன்றி, வாழ்க்கையின் தேடல்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

கட்டுரைக்கு உதவியவை:

மு. வி. நந்தினி.

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.

7 மறுமொழிகள்

 1. மேடம் மிகவும் நல்ல கட்டுரை. கடினமான ஆங்கில மொழியில் எழுதப்பட்ட நூல்களின் இருந்து அதன் சாரத்தை தமிழ் சூழலுக்கு பொருந்தும்படி புரிய வைத்ததற்கு நன்றி.

 2. “இணைவோ வாழ்வின் இலக்காக ஒருபோதும் இருந்துவிடுவதில்லை. திருமணம் செய்துகொள்ளாவிட்டால் வாழ்க்கை முழுமையடையாது என சொல்லப்படுகிறது. உண்மையில் காதலோ, திருமணமோ எவருக்குமே முழுமையைத் தந்து விடாது. ஒரு குறிப்பிட்ட வயதின் தேடலாக மட்டுமே காதல், திருமணமும் இருக்குமே அன்றி, வாழ்க்கையின் தேடல்கள் மாறிக்கொண்டே இருக்கும்.” என்கிறீர்கள்.சரி.தேடல்கள் மாறிக்கொண்டேயிருப்பதற்கும் காதலில் பருவங்கள் மாறிக்கொண்டேயிருப்பதற்கும் பெண்ணின் சுயத்திற்கு என்ன தடை? என்கிறார்கள் தமிழ் இலக்கியவாதிகள்.

  உதாரணத்திற்கு,”ஓர் அமரகாதல்” வழியாக தன் வாசகனுக்கு திரு.வி.க.வின் காதலை கைமாற்றித் தருகிறார், தன் பதிவில் எழுத்தாளர் ஜெயமோகன்.

  ”வருவோர் போவோர் என் வீட்டைக்கண்டு பெண்ணின் பெருமை என்பர். ஏன்? என் வீடு பெண் மயம்.யான் இப்போது குழந்தைகளுடன் விளையாடுகிறேன். குழந்தையாகிறேன். எனக்கு வயது அறுபது. யான் ஆறு வயதுக் குழந்தையாகிறேன்.” என்கிறார் திரு.வி.க பெண் ஆண்மனதில் உருவாக்கும் பேரின்பம் என்பது காமம் மட்டுமல்ல. உண்மையில் காமத்தால் அது மறைக்கப்பட்டிருக்கிறது. அதைத்தாண்டி செல்லும் மனதுக்குத் தாயாக, மகளாக, சகோதரியாக, தூய அழகாக பெண்ணுலகம் கண்முன் விரிய ஆரம்பிக்கிறது. திரு.வி.கவின் வாழ்க்கையே அதற்குச் சான்று.”என்கிறார்.

  மேலும், அவர் அமர காதலின் ஆழத்தை வாசகனுக்கு சொல்லும்போது”பிரேம்சந்த் ஒரு நாவலில் சொல்கிறார் பெண் தன் பெண்மையை ஆணுக்கு அளித்து ஆண்மையைப் பெற்றுக் கொள்வதும் ஆண் தன் ஆண்மையை அளித்து பெண்மையை பெற்றுக்கொள்வதும்தான் உண்மையான காதல் என்றுதிருவிக அதைத்தான் சொல்கிறார். ஆண்மை என்பது உயர்பண்பாகவும் பெண்மை என்பது கீழ்நிலைப்பண்பாகவும் கருதப்பட்ட அக்காலத்தில் அதைச் சொன்னது ஒரு புரட்சியே” என்று காதலை அறம் சார்ந்து நிறுவுகிறார்.
  இதுவும் உங்களின் (கட்டுரையாளரின்)சமத்துவ காதலுக்கு எந்த ஊறும் செய்யவில்லையே. சொத்துடமை சமூகத்தில், அமரகாதல் இப்படி விட்டுக்கொடுத்து(ஜனநாயகபூர்வமாக) தொடர்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

 3. காதலை பற்றி சிறிதும் புரிதல் இல்லாத முழுக்க முழுக்க ஐரோப்பிய மையவாத சிந்தனை கொண்ட பின் நவீனத்துவ பாணியிலான கட்டுரை…

  //பலருடைய ‘காதல்’களை ஆராய்ந்ததில் அவர்களுடைய திருமணத்துக்குப் பின்பான வாழ்க்கை என்பது பிற்போக்குத்தனமான நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்ட பெண்களின் துயர வாழ்க்கைப் போலவே உள்ளது. திருமணம் முடிந்தவுடன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்; குழந்தை பிறந்தவுடன் வேலையை விடவேண்டும். முழுநேரமாக குழந்தைகளை வளர்த்து சரியாக மூன்று ஆண்டுக்குப் பின் அடுத்த குழந்தைக்கு தயாராக வேண்டும். அடுத்த குழந்தையை பெற்றெடுத்து இரண்டு குழந்தையை ‘சிறப்பாக’ வளர்த்து, கான்வெண்டில் படிக்க வைத்து, எண்ட்ரென்ஸ் எழுத வைத்து, வேலைக்கு அனுப்பி, திருமணம் செய்து,….//

  ஆக குடும்ப பொறுப்புகளை கவனித்துக் கொள்வது பிற்போக்குத்தனம், பணம் சம்பாதிப்பது, சமூக சேவை செய்வது என்பது தான் முற்போக்குதனமா . குடும்பத்தினை சிறந்த முறையில் கவனித்துக் கொண்டு, பிள்ளைகளை நல்ல படியாக, பண்பாளர்களாக வளர்ப்பதிலும் கூட , மிக பெரிய சமூக சேவை இருக்கின்றது.

  //உங்கள் அருகிலேயே இருக்கும் நாய், பூனைகளை கவனியுங்கள். மனித தாயைவிட அவை தங்கள் குட்டிகளுக்காக செய்யும் ‘தியாகம்’ மிகப் பெரியதாகத் தெரியும். அவற்றை தியாகம் என எண்ணி அவை செய்வதில்லை, வழியாக வந்த மரபணுக்களின் வழியாக அந்த குணங்களை அவை பெறுகின்றன…//

  தாய்மையை மட்டுமல்ல, சமூகத்திற்காக, சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்களையும் இந்த லிஸ்டில் அடைக்கலாம். ஆனாலும், ஈகிகள் தியாகிகள் என்று நாம் அவர்களை பாராட்டாமலா போய் விட்டோம்.. அதனால் தான் பெரியாரை, தந்தை பெரியார் என்று தந்தைமையுடன் பாசத்தோடு அழைக்கிறோம். தன்னுடைய வாழ்நாளின் இறுதிவரை மக்களுக்காக, சமூக முன்னேற்றத்திற்காக அவர் உழைத்துக் கொண்டே இருந்தார். எந்த தாயும் தந்தையும் தான் தியாகம் செய்கிறோம் என்கிற எண்ணத்தில் எதையும் தங்கள் பிள்ளைகளுக்கு செய்வதில்லை, தங்கள் பிள்ளைகளுக்காக பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொன்றையும் தங்களின் ஆத்மார்த்த கடமையாகவே அதனை செய்கிறார்கள். வெளிநாட்டவர்கள், குறிப்பாக மேற்குலகை சார்ந்தவர்கள் இந்தியாவை பார்த்து ஆச்சர்யப்படும் முக்கியமான விஷயங்களில் மிக முக்கியமானது இந்திய குடும்ப அமைப்பு முறை தான்.. அதிலும் குறிப்பாக இங்குள்ள parenting ஐ பார்த்து தான். பிள்ளைகள் பிறந்தது முதல் படிக்க வைத்து ஒரு நல்ல இணையை தேடி திருமண செய்து கொடுக்கும் வரை தங்கள் கடமையை இடையறாது செய்து கொண்டு தான் இருப்பது தான் இன்று வரை அவர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது. காரணம் அவர்களுக்கென்று எந்த கலாச்சார விழுமியமும் கிடையாது ..ஆனால் இந்தனை புரிந்துக் கொண்ட அனைவருமே இதனை ஏக்க பெருமூச்சோடு தான் பார்க்கிறார்கள்..

  //சுயமான கனவும் இலட்சியமும் கொண்ட பெண்களெல்லாம் குடும்ப வாழ்க்கைக்கு ஆகாதவர்கள் என அவருடைய ஆழ்மனதில் பதிந்து போயுள்ளதை அறிய முடிந்தது. உரையாடலின் முடிவில் தான் கற்றது வீணாகக்கூடாது. தன்னாலும் பொருளீட்ட முடியும் என்கிற சுயத்தை இந்தப் பணி மீட்டுத்தரும் என போகிற போக்கில் சொன்னார்.//

  லட்சியம் என்பது இங்கு வெறும் லட்சங்களை தேடுவதில் தான் இருக்கிறதென்றால், பெண்ணை மட்டுமல்ல ஒட்டு மொத்த மனித குலத்தையும் அவமான படுத்த இந்த வாக்கியம் ஒன்றே போதும். ஏனென்றால் சுயம் என்பது பொருளாயத தேவைகளில் இருந்து உருவாகும் ஒன்றல்ல, பொருளாதாரத்தை கடந்த மன நிறைவில் இருந்து மட்டுமே அதனை பெற முடியும்.. சார்புடைமை என்பது தான் அசைக்க முடியாத உண்மையெனும்போது , கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் சார்ந்து இருப்பதில் எந்த தவறோ கீழ்மையோ அதில் கிடையாது.

 4. குடும்ப அமைப்பே கூடாது என்கிற ஈ வே ரா கோஷ்டியிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. பகுத்தறிவு சூப்பர்!!!

 5. உட்டோப்பியன் காதல் என்பது சரியாகத்தான் இருக்கின்றது. மதி, ரெபாக்கா மேரி, சதிசு எல்லோரும் காதல் எப்படி இருக்க வேண்டும் அல்லது காதல் உணர்வு எப்படி இருக்கின்றது என்று சொல்கிறீர்களே அன்றி, சமூகத்தில் அது எப்படி இருக்கின்றது என்று பார்ப்பதில்லை. என்னுடைய் அன்னை பேசி திருமணம் செய்து வைக்கப்பட்டவர். இப்போது வரை, எனது தங்தைக்கு உழைத்து கொடுத்தவர். எனது தந்தை அவர் இலட்சியங்களை (அவரது தம்பி, தங்க்கைகள் கரையேற்றுவது) நிறைவேற்ற கடன் பட்டபோது துனை நின்றவர். எனது தந்தையின் இறுதி காலத்திலும் மரணத்திற்கு பிறகும் தான் வாழ்க்கை முழுவதும் சுரண்டப்பட்டதாகச் சொல்கிறார். எனது அம்மாவின் சக ஊழியர் காதல் திருமணம் செய்தவர். ஆனால் அவர் நிலைமையும் அதுதான். ஆக, இங்கே காதல் சக பயணி என்ற தகுதியை பெண்களுக்கு தந்துவிடுவது இல்லை. சமூக பிற்போக்குதனங்கள் தகராத போது, எந்த உயரிய பண்பும் நிதர்சன்மாவது இல்லை.

 6. // வெளிநாட்டவர்கள், குறிப்பாக மேற்குலகை சார்ந்தவர்கள் இந்தியாவை பார்த்து ஆச்சர்யப்படும் முக்கியமான விஷயங்களில் மிக முக்கியமானது இந்திய குடும்ப அமைப்பு முறை தான்.. அதிலும் குறிப்பாக இங்குள்ள parenting ஐ பார்த்து தான். பிள்ளைகள் பிறந்தது முதல் படிக்க வைத்து ஒரு நல்ல இணையை தேடி திருமண செய்து கொடுக்கும் வரை தங்கள் கடமையை இடையறாது செய்து கொண்டு தான் இருப்பது தான் இன்று வரை அவர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது. காரணம் அவர்களுக்கென்று எந்த கலாச்சார விழுமியமும் கிடையாது ..ஆனால் இந்தனை புரிந்துக் கொண்ட அனைவருமே இதனை ஏக்க பெருமூச்சோடு தான் பார்க்கிறார்கள்..//

  நான இரண்டு வருடங்களாக அமெரிக்காவில் தான் பணிபுரிந்து வருகின்றேன். இங்கு, வயதுக்கு வந்த குழந்தைகளுக்கு சுதந்திரம் உள்ளது. அது, அவர்களின் பொருளாதார சுதந்திரத்தில் உள்ளது. என்னோடு பணியாற்றிய அமெரிக்கர், பெற்றோர் செய்து வைக்கும் திருமணம் என்பது மிக மிக அரிது என்றார். 17 வயதுக்கு மேல் நீங்கள் பொருளீட்ட வேண்டும். உங்கள் தந்தையோடு நீங்கள் வாழலாம். ஆனால், தண்ணீர், மின்சாரம், உணவு எல்லாவற்றிலும் தந்தை பில்லில் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும். அதுதான், குழந்தைகள் பொறுப்பானவர்களாக (Responsive) வளர வழி என்றார்.ஆக காதல் என்னும் அகவாழ்வும், பொருளாதரம் என்னும் புறத்தில் வாழ்கின்றது.

  மேலும் பிள்ளைகள் பெற்றோருடன் சேர்ந்து வாழதற்கு காரணம், பணிக்காக முதலாளித்துவத்தால் அவர்கள் விசிறி அடிக்கப்படுவதுதான்.ஏன் கணவன் மனைவி வாழ்க்கையும் அப்படிதான். என் அபார்மெண்டின் கீழ்தளத்தில் வாழ்ந்த அமெரிக்கர் விமானப்படையில் பணிபுரிபவர்.அவர் மனைவி வேறு ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர். ஒரே நகரத்தில் தொலை இடங்க்களில், இருவரும் வேறு வேறு இடங்க்களில் பணிமனைகளுக்கு அருகில் வாழ்கின்றனர். வார இறுதியில் மட்டுமே இங்கு வருவார்கள். ஆக, மேலை வாழ்னிலையும், புறத்தால் சூழப்படுவதுதான்.

Leave a Reply to சுரேஷ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க