வாஜ்பாயிக்கு புகழஞ்சலி கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது பாஜக. இந்தக் கூட்டத்தில் ‘அரசியல் நாகரிகம்’ கருதி திமுக, காங்கிரஸ், விசிக போன்ற பாஜக அரசை கடுமையாக எதிர்க்கும் கட்சிகளும் இந்த புகழஞ்சலி கூட்டத்தில் பங்கேற்கின்றன. முத்தாய்ப்பாக எப்போது ஒன்று சேர முடியாத சித்தாந்த எதிரிகளாக சொல்லிக்கொள்ளும் இடதுசாரிகளும் (சிபிஐ, சிபிஎம்) இந்த ‘புகழஞ்சலி’ கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இந்த அரசியல் நாகரீகம் சப்பைக் கட்டைத் தாண்டி ‘புகழஞ்சலி’ செலுத்துவதென்பது வேற லெவல் அரசியல். வாஜ்பாயிக்கு இவர்கள் என்ன மாதிரியான ‘புகழஞ்சலி’ செலுத்துவார்கள் என சமூக ஊடகங்கள் பரபரக்கின்றன. இந்த நிலையில் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாஜ்பாயிக்கு எப்படியெல்லாம் ‘புகழஞ்சலி’ செலுத்தலாம் என சில யோசனைகளை அள்ளித் தருகிறோம்.

இந்தியாவை ரிலையன்சுக்கு விற்ற கார்ப்பரேட் பிரதமரே வாழ்க!

reliance‘ராடியாவுக்கு முன்பே வாஜ்பாயி ஆட்சியில் இந்திய குடியரசு விற்பனைக்கு வந்தது; அதை வாங்கியது ரிலையன்ஸ்!’ என்ற தலைப்பில் அவுட்லுக் இதழ் ‘எஸ்ஸார் டேப்’ விவகாரத்தை வெளிக் கொண்டு வந்தது. ரிலையன்ஸால் ஆட்சியதிகாரத்தில் எவ்வளவு ஆழமாக ஊடுருவ முடிகிறது என்பதையும் அவர்களால் அரசாங்கத்திலும் நாடாளுமன்ற குழுக்களிடையேயும் எப்படி செல்வாக்கு செலுத்த முடிகிறது என்பதையும் யாரை அமைச்சராக்கலாம் என்பதையும் நீதித்துறையினருக்கு லஞ்சம் தருவதையும், மத்திய பட்ஜெட்டையும்கூட இந்நிறுவனம் தீர்மானிப்பதையும் எஸ்ஸார் டேப் வெளிப்படுத்தியது. அரசுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்-லுக்கு கட்டணத் திட்டங்களை வரையறுக்கும் அளவுக்கு ரிலையன்ஸ் என்ற தனியார் நிறுவனர் ஆட்சி செலுத்தியிருக்கிறது. ரிலையன்ஸ் ஸ்பான்ஸரில் ஊர் முழுக்க பல்லிளித்த ‘இந்தியா ஒளிர்கிறது’ விளம்பரங்கள் நினைவிருக்கிறதா? முந்தைய பிரதமர்கள் கார்ப்பரெட்டுகளுக்கு சாதகமாக இருந்தவர்கள்தான். ஆனால், கார்ப்பரேட்டுகளுக்காக குடியரசையே விற்ற பெருமை வாஜ்பாயியை சேரும். ஆக, ‘இந்தியாவை ரிலையன்சுக்கு விற்ற கார்ப்பரேட் பிரதமரே வாழ்க!’ என்று புகழுடன் இரங்கற்பாவை துவங்கலாம்.

அப்பாவிக்கு உதாரணமான அடல் பிஹாரி நாமம் ஓங்குக!

atal bihari vajpayeeபிரதமர் அப்பாவி, ஆனால் வாஜ்பாயி ரூ.42 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தினார்  என்கிறது 2013-ஆம் ஆண்டு வெளியான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை. காங்கிரசின் 2ஜியை பேசி தேர்தலில் வெற்றி பெற்ற மோடியின் குரு வாஜ்பாயி அரசு செய்தது இது. வாஜ்பாயி அரசில் கொண்டு வரப்பட்ட புதிய டெலிகாம் பாலிசியால் இந்த இழப்பு ஏற்பட்டதாக கூட்டுக்குழு அறிக்கை சொல்கிறது. இதையெல்லாம் தெரியாத அப்பாவி பிரதமராக வாஜ்பாயி இருந்திருக்கிறார். எனவே, அவரை  அப்பாவிக்கு உதாரணமான அடல் பிஹாரி நாமம் ஓங்குக! என வாழ்த்தலாம். 

மதசார்பின்மையை உதறிய மாமனிதரே போற்றி!

ஏப்ரல் 12, 2002 குஜராத் கலவரத்துக்குப் பின், அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாயி கோவாவில் தன்னுடைய கட்சியினருடன் ஆற்றிய உரை இப்போதும் பிரபலமானது. கம்போடியாவில் இந்து மன்னர்களின் ஆட்சியில் அனைவரும் சுபிட்சமாக இருந்ததாக குறிப்பிட்டு தனது உரையைத் தொடங்கிய வாஜ்பாயி ’மதச்சார்பின்மை இப்போது தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். நம்மை குற்றம்சாட்டும் இவர்களெல்லாம் யார்? மதச்சார்பின்மை என்பதற்கான பொருள் என்னவென்பதை இவர்கள் அறிவார்களா? முசுலீம்கள், கிறித்தவர்கள் இங்கே வராத போது இந்தியாவில் மதச்சார்பின்மை இருந்தது. கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவார்கள் என யாரும் நினைக்கவில்லை. நம்முடைய மதத்தில், நம்முடைய கலாச்சாரத்தில் அது இல்லை” என்கிறார்.  பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர், சிறுபான்மை மதத்தினரை அச்சுறுத்தும் வகையில் பேசுகிறார். தனது பதவியின் சார்பற்ற தன்மையை உதறித்தள்ளி ‘நாம்’, ‘நமது’ என பெரும்பான்மை இந்துக்களின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்துகிறார். எனவே இவருக்கு ‘மதசார்பின்மையை உதறிய மாமனிதரே’ என புகழஞ்சலி செலுத்தலாம்.

நியூட்டனின் மூன்றாம் விதிக்கு உதாரணம் சொன்ன குருவே சரணம்!

vajpayee with modiஅதே கோவா உரையில் வாஜ்பாயி சொல்கிறார், “குஜராத்தில் என்ன நடந்தது? சபர்மதி எக்ஸ்பிரஸில் அப்பாவி மக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டது நடந்திருக்காவிட்டால், குஜராத்தில் அந்த சோக சம்பவம் (முசுலீம் படுகொலை) நடந்திருக்காது. ஆனால், மக்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். இதை செய்த குற்றவாளிகள் யார்? அரசு வேகமாக விசாரித்துக் கொண்டிருக்கிறது. உளவுத்துறை வேகமாக தகவல்களை திரட்டி வருகிறது. ஆனால், குஜராத்தில் இந்த கொடுமை எப்படி தொடங்கியது என்பதை மறக்கக் கூடாது. அதன்பின் நிகழ்ந்த விளைவுகள் கண்டிக்கத் தக்கவைதான், ஆனால், கொளுத்தியவர்கள் யார்? எப்படி நெருப்பு பரவியது?” என வீரவேசம் பேசுகிறார் ஒரு சங்கியின் பாணியில். இதையேதான் குஜராத் படுகொலைகள் குறித்த டிவி பேட்டியில் மோடியும் சொன்னார். குருவின் பாணியில் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்றார் மோடி. எனவே, நியூட்டனின் மூன்றாம் விதிக்கு உதாரணம் சொன்ன குருவே சரணம் என புகழஞ்சலி செலுத்தலாம்.

கும்பல் வன்முறையை அனுமதித்த மூத்த முன்னோடி தேவா போற்றி!

1998-2004 வரையிலான வாஜ்பாயி ஆட்சியில் விஎச்பி பிரவீன் தொகாடியா வார்த்தைகளில் சொல்வதென்றால் ’இந்துத்துவ சோதனைக் களமான குஜராத்’தில் மத சிறுபான்மையினர் மீதான வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. விஎச்பி, பஜ்ரங் தள், இந்து ஜக்ரான் மஞ்ச் போன்ற வலதுசாரி கும்பல் அமைப்புகள் சிறுபான்மையினரின் வழிபாட்டிடங்கள், பள்ளிகள், திருமணங்கள், பணி இடங்கள், வீடுகளில் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். அந்தக் காலக்கட்டத்தில்தான் பசு பாதுகாப்பை முன்வைத்த வன்முறைகளும் சோதனை செய்யப்பட்டன. 1998-ஜூன், ஜூலை மாதங்களில் குஜராத் டங்க்ஸ் மாவட்டத்தில் வலதுசாரி கும்பல் ஏற்பாடு செய்திருந்த 4000 பேர் பங்கேற்ற பேரணியில் கிறித்துவர்களுக்கு எதிரான முழுக்கங்கள் வெளிப்படையாக எழுப்பப்பட்டன. கிறித்தவ பள்ளி ஒன்று அடித்து நொறுக்கப்பட்டது. எனவே, மோடி ஆட்சியில்தான் சிறுபான்மையினர் மீதான கும்பல் தாக்குதல் அறிமுகமானது என முழு ‘பெருமை’யையும் மோடி-அமித் ஷா கூட்டணிக்கு தரமுடியாது. பிரதமராக கும்பல் வன்முறையாளர்களை கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பதில் முன்னோடியான வாஜ்பாயியை, ‘கும்பல் வன்முறையை அனுமதித்த மூத்த முன்னோடி தேவா போற்றி’ என புகழலாம்.

எல்லாம் முடிந்த பின் விழித்தெழுந்த சூரியனே வாழ்க!

மீண்டும் குஜராத் படுகொலைக்கு வருவோம். குஜராத் படுகொலைகள் நிகழ்ந்தேறிய சமயத்தில் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டின் பிரதமர் மக்கள் அமைதியாக இருக்கும்படி கேட்கிறார். கலவரத்தில் ஈடுபடுகிறவர்களை அரசு எந்திரம் இரும்பு கைக் கொண்டு அடக்கும் என்பதற்கு பதிலாக ‘மதநல்லிணக்கம்’ வேண்டும் என்றார். அவருடைய பேச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவோ, வன்முறையாளர் மீது கோபமோ வெளிப்படவில்லை. குஜராத் கலவரம் முடிந்து மூன்று நாட்கள் கழித்து, அதாவது 2002, மார்ச் 2-ஆம் தேதி  இந்தத் தொலைக்காட்சி  உரையை ஆற்றினார் வாஜ்பாயி. அதற்குள் பரிவாரங்கள் எல்லா படுபாதகங்களையும் செய்து முடித்திருந்தார்கள்.  எனவே, எல்லாம் முடிந்த பின் விழித்தெழுந்த சூரியனே வாழ்க! என்ற புகழஞ்சலி முழக்கம் மிகப் பொருத்தமாக இருக்கும்.

நாக்பூர் தலைமை பீடத்தின் வழிநடப்பவரே வாழ்க, வாழ்க!

vajpayee in shaka

குஜராத் முசுலீம் மக்கள் இனப்படுகொலையை  (ஆமாம், சமகால வரலாற்றில் மறக்கக்கூடாத ரத்த ஆறு ஓடிய படுகொலை அல்லவா அது?) ஒட்டி அந்த ஆண்டின் மே மாதத்தில் மாநிலங்களவையில் வாஜ்பாயி பேசினார், “நான் கோவாவுக்குப் போனது, குஜராத் ஆட்சியாளரை (மோடி) மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான். ஆட்சியாளரை மாற்றினார் நிலைமை இன்னும் மோசமாகும் என்பதால் அதைச் செய்யவில்லை”. உண்மையில் அந்த நேரத்தில் மோடி பதவியிலிருந்து அகற்றப்படுவதை எதிர்த்தது ஆர்.எஸ்.எஸ்ஸும் விஎச்பியும் மட்டும் தான். மோடியை பதவியிலிருந்து அகற்றியிருந்தால் குஜராத்துக்கு நல்லது நடந்திருக்கும் இல்லையா என்பது வேறு விடயம். ஆனால், ஒரு நாட்டின் பிரதமர் கிரிமினல் கும்பலுக்கு பயந்து பின்வாங்கியதை வரலாற்றில் இப்படி பதிந்து புகழஞ்சலி செலுத்தலாம், “நாக்பூர் தலைமை பீடத்தின் வழிநடப்பவரே வாழ்க, வாழ்க!”

இந்து தேசியத்தின் முதல் ஊழல் அரசை அமைத்த காம்ரேட் !

இந்து தேசியத்தை முழங்கும் பாஜக ஊழல் கரைபடியாத தூய கட்சி என சங்கிகள் பிரசங்கம் செய்வார்கள். வாஜ்பாயி அதிலும் முன்னோடி! தொலைத் தொடர்பு துறையில் ஊழல், ரிலையன்சுக்கு நாட்டை விற்றது, சவப்பெட்டி வாங்கியதில் ஊழல், ஹர்ஷத் மேத்தா ஸ்டாக் மார்க்கெட் முறைகேடு, ரூ.80 ஆயிரம் கோடி அளவுக்கு கார்ப்போரேட்களின் வாராக்கடன் காரணமாக தேசிய வங்கிகளை போண்டியாக்கியது (ஆமாம் அதிலும் முன்னோடி), ஓயாமல் கூச்சலிடும் தேசபக்தி காரணமாக இராணுவத்தில் டஜனுக்கும் மேல் ஊழல்… இந்த ஊழல் பட்டியலை வெளியிட்டிருப்பது சிபிஎம் கட்சியின் இணையதளம். புகழஞ்சலி கூட்டத்துக்கு செல்லும் முன் காம்ரேட்டுகள் ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்று ‘இந்து தேசியத்தின் முதல் ஊழல் அரசை அமைத்த காம்ரேட்!’ என முழுங்கிவிட்டு வரவும்.

புகழஞ்சலி செலுத்துவோருக்கு இன்னும்கூட யோசனைகள் சொல்ல விரும்புவோர் பின்னூட்டத்தில் தாராளமாக அள்ளி வழங்கலாம். தோழர் வாஜ்பாயி நாமம் வாழ்க! புரட்சியாளர் வாஜ்பாயி புகழ் ஓங்குக!

கலைமதி

புகழஞ்சலி யோசனைகளுக்கு உதவியவை:
The ‘Laboratory of Hindutva’ Began Experimenting During Vajpayee’s Reign
‘Wherever Muslims Live…’: Text of Vajpayee’s Controversial Goa Speech, April 2002
Let Us Not Forget the Glimpse We Got of the Real Vajpayee When the Mask Slipped
The Rot Goes Deeper Than Radia
Vajpayee Government Corruption At Its Venal Worst Quit (sept 2001)
PM innocent, but Vajpayee caused Rs. 42,080 crore loss: JPC report

3 மறுமொழிகள்

  1. மொன்னை முகம் கொண்ட பார்ப்பனீய பாசிஸ்ட் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் புகழை எத்தனை கட்டுரைகள் பதிவிட்டாலும் தீர்வே தீராத இழிபுகழ் வேந்தன்.

    இந்தியா விடுதலை போராட்டத்தை காட்டிக்கொடுத்த மென்மையான துரோகியே
    இந்தியா பொதுத்துறையை விற்பனை செய்து தரகுராஜாவே
    குஜராத் இனப்படுகொலையை நியூட்டனின் இயக்கவிதி மூலம் விஞ்ஞானம் கற்றுத்துதந்த
    அறிஞனே
    இலங்கை ஈழப்பிரச்சினையில் விடுதலை புலிகளை மிரட்டி ஜனநாயகம் காத்த ஜனநாயக போராளியே
    இன்னும் எத்தனை இழிபுகழ் பாடினாலும்….
    அவருக்கு உகந்தது அவர் ஒரு
    “சுயம் சேவக்” என்பதே….
    நமக்கும் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களை புரிய எளிதானது
    அவர் ஒரு RSS சங்கி என்பதே💀💀💀

  2. பாரத ரத்னாவுக்கு தகுதி அற்றவர் என்ற 4.1.15 நாளிட்ட ஜூனியர் விகடன் செய்தியை தயவு செய்து இணைத்து பதிவிடுங்கள்

  3. தேனி நியூட்ரினோ திட்டத்தின் மூலம் அப்பகுதி மலை வளங்களை கார்ப்பரேட்களுக்கு கூட்டி கொடுக்கவிருக்கும் மோடிக்கு அச்சாரம் போட்ட பொக்ரான்
    “அணுகுண்டு” நாயகனுக்கு
    புகழஞ்சலிகள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க