இஸ்ரேல் – பாலஸ்தீனம் : உணவிலும் முரண்படும் மத்திய கிழக்கு ! ஆவணப்படம்

தங்கள் நிலத்தைப் பறிகொடுத்த பாலஸ்தீனர்கள் உணவு உள்ளிட்ட தங்களது ஒவ்வொரு கலாச்சார அடையாளத்தையும் பிடிவாதத்துடன் பற்றிக் கொண்டிருக்கின்றனர். அல்ஜசீராவின் ஆவணப்படம்.

”இந்த சூப்பின் செய்முறை பைபிளில் விளக்கப்பட்டுள்ளது. யாக்கோபு செய்த அதே சூப்பை நானும் செய்கிறேன். ஆனால், நான் யாக்கோபு செய்ததைப் போன்றே செய்கிறேனா எனத் தெரியவில்லை. சுவையாக இருக்க வேண்டுமென்பது தானே முக்கியம்? ” எனக் குறிப்பிடும் சார்கிஸ் யாக்கோபின், “பொதுவாக இங்கே மக்கள் கத்தியைப் பயன்படுத்துகின்றனர்.. கொல்வதற்காக. நாங்களும் கத்தியைத் தான் பயன்படுத்துகின்றோம்; கொல்வதற்கல்ல, சமைப்பதற்கு” எனச் சொல்கிறார்.

hamas
ஹமாஸ்

அது இசுரேலின் ஜெருசலேம் நகரில் அமைந்திருக்கும் யூகலிப்டஸ் உணவகம். இசுரேலில் உள்ள அனைத்துமே மதத்தோடும், கலாச்சாரத்தோடும், அரசியலோடும், அங்கே தொடர்ந்து கொண்டிருக்கும் இனப் பகைமையோடும் முடிச்சிட்டுப் பார்க்கப்படுவதைத் தவிர்க்கவே முடியாது. எனில், உணவு? அதைக் குறித்து தனது 22 நிமிட ஆவணப்படத்தில் ஆராய்கிறார் அல்ஜசீராவின் செய்தியாளர். இசுரேலைச் சேர்ந்த பாலஸ்தீனர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் என எல்லா மதப் பிரிவைச் சேர்ந்தவர்களின் உணவுக் கலாச்சாரங்களையும் ஒரு பருந்துப் பார்வையில் காட்சிப்படுத்தியிருக்கும் இந்த ஆவணப்படத்தில், ஆர்மீனியர்கள் துவங்கி எத்தியோப்பியர்கள் வரை பல்வேறு இனக்குழுக்களின் உணவுக் கலாச்சாரத்தையும் நேரில் சென்று நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

இசுலாமியர்களுக்கு இருப்பதைப் போன்றே யூதர்களுக்கும் மத ரீதியான உணவுச் சட்டங்கள் உள்ளன. கஷ்ரூட் என்று அழைக்கப்படும் அந்தச் சட்டங்களை அரசே முன்னின்று கடுமையாக அமல்படுத்துகின்றது. யூத மதச் சட்டங்களின் படி பன்றி இறைச்சி தடை செய்யப்பட்டது. அதே போல் செதில் மற்றும் இறக்கை இல்லாத மீன்களும், இரால் மீனும், விபத்தில் அடிபட்ட விலங்குகளின் இறைச்சியும் தடை செய்யப்பட்டவையே. தனது ஆவணப்படத்திற்காக பாரம்பரிய யூத மதக் கடுங்கோட்பாடுகளைப் பின்பற்றும் குடும்பம் ஒன்றைச் சந்திக்கிறார் செய்தியாளர்.

“எங்கள் யூத மதத்தில் ஏராளமான சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் எதற்காக இருக்கின்றன, என்ன சொல்ல வருகின்றன என்பதைப் பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது. அந்தச் சட்டங்களை ஏன் கடவுள் உண்டாக்கினார் என்பதும் தெரியாது. ஆனால், அவற்றையெல்லாம் கடவுளே ஏற்படுத்தியுள்ளார் என்பதால் அப்படியே பின்பற்றி வருகின்றோம்” என்கிறார் அக்குடும்பத் தலைவி. ஜெருசலேம் தங்களுக்காக வாக்களிக்கப்பட்ட நிலம் என யூதர்களும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் என இசுலாமிய பாலஸ்தீனர்களும் கருதுகின்றனர். இசுரேல் என்கிற தேசமே குடியேறிகளால் செயற்கையாக கட்டப்பட்ட தேசம் என்பதால் பாலஸ்தீனர்களின் கூற்றில் நியாமில்லாமல் இல்லை.

கீகே ரொட்டி

பாலஸ்தீனர்களின் உணவில் அரேபிய கலாச்சாரத்தின் தாக்கம் அதிகம். அவித்த சுண்டலை நசுக்கி மாவாக்கி அதோடு கோதுமை மாவு, எள், பூண்டு மற்றும் ஆலிவ் எண்ணையைக் கலந்து இறுதியில் எலுமிச்சை சாறைச் சேர்த்து செய்யும் ஒரு விதமான நொறுக்குத் தீனி பாலஸ்தீனர்களிடையே பிரபலம் – அந்த தின்பண்டத்தின் பெயர் ஹமாஸ். ஈராக், லெபனான், சிரியா, ஜோர்டான் மற்றும் எகிப்து போன்ற நாடுகளிலும் இதே தின்பண்டம் பிரபலம் என்றாலும், பாலஸ்தீனர்கள் அதில் சேர்க்கும் எலுமிச்சை சாறு இசுரேலில் கிடைக்கும் ஹமாசை வேறுபடுத்திக் காட்டுகிறது என்கிறார் அபு அலி எனும் உணவகத்தின் உரிமையாளர். தற்போது ஹமாஸ் யூதர்களிடையேயும் பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அதே போல் பாலஸ்தீனர்களிடையே பிரபலமாக இருக்கும் இன்னொரு உணவு கீகே எனும் ரொட்டி. ஒரு அடி அளவுக்கு நீள் வட்டமாக (நம்மூரில் கிடைக்கும் பன் – ஆனால், நடுவே ஓட்டையுடன் நீள் வட்டமாக) இருக்கும் இதை ஸாடார் எனும் ஒருவகைக் காட்டுக் கீரையில் செய்யப்படும் சட்னியில் தொட்டுச் சாப்பிடுகிறார்கள். ஸாடார் இலைகளைப் பறித்து காய வைத்துப் பொடியாக்குகிறார்கள். பின்னர் அந்தப் பொடியுடன் கொஞ்சம் உப்பும், எள் பொடியும் சேர்த்து அரைத்துக் கொள்கின்றனர். இந்தப் பொடியுடன் ஆலிவ் எண்ணையைக் கலந்து அதைச் சட்னி போல் வைத்துக் கொண்டு கீகே ரொட்டியைச் சாப்பிடுகின்றனர்.

சமீபத்தில் ஸாடார் தாவரம் அழிவின் விளிம்பில் இருப்பதாகச் சொல்லி அதைப் பறிப்பதையும் உணவுக்காக பயன்படுத்துவதையும் தடை செய்துள்ளது இசுரேல் அரசு. இந்நிலையில் காலேலி பகுதியைச் சேர்ந்த எலியாஸ் கெனானி என்பவர் தனது 86 வயது தாயாருடன் அருகில் தனது நிலத்தில் விளைந்திருந்த ஸாடார் செடியைப் பறித்த ‘குற்றத்திற்காக’ கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதோடு 660 ஷாக்கால் (இசுரேல் செலாவணி) அபராதமும் விதிக்கப்பட்டதைக் கண்டு அவரது தாயார் ஆத்திரமுற்று, “நீங்கள் அபராதம் விதித்துக் கொள்ளுங்கள், நான் அந்த தொகைக்கு ஈடான ஸாடாரை பறித்துக் கொள்கிறேன்” என போலீசாரிடம் வாதாடியுள்ளார்.

இசுரேலின் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பாலஸ்தீனப் பெண்கள் காட்டுக் கீரைகளைப் பறிப்பதற்கு விதிகப்பட்டுள்ள தடையைச் சமாளிப்பதற்காக தங்கள் சொந்த நிலத்தில் ஸாடார் சாகுபடி செய்து வருகின்றனர். எப்படி தங்கள் கிராமங்களை யூதர்கள் ஆக்கிரமித்தார்களோ அதே போல் தங்களது உணவுப் பழக்கத்தையும் ஆக்கிரமிக்க முயற்சிக்கிறார்கள் என பாலஸ்தீனர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். ஒன்று, பாலஸ்தீனர்களின் இயல்பான உணவுப் பழக்கத்தை சட்டப்படி தடுப்பது அல்லது அதை தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வது என்கிற போக்கில் யூதர்கள் செயல்படுவதாக பாலஸ்தீனர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆனால், இதற்கு இன்னொரு பக்கமும் இருப்பதைக் காட்டுகின்றது இந்த ஆவணப்படம். இசுரேல் குடியேறி யூதர்களின் தேசமாக இருப்பதால் அவர்களின் உணவு, ஓய்வு நேர விளையாட்டுக்கள், கலாச்சாரம் என சகலத்தையும் அவர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த நாடுகளில் இருந்தே சுவீகரித்துக் கொண்டுள்ளனர். விசயம் என்னவென்றால் 20-ம் நூற்றாண்டில் குடியேறிய யூதர்கள் மொராக்கோ, லெபனான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் அராபியர்களோடு அக்கம் பக்கமாய் வாழ்ந்தவர்கள். எனவே அவர்களது கலாச்சாரக் கூறுகள் பெரும்பாலும் அராபியர்களை ஒத்தே இருக்கின்றன.

நவீன இசுரேலின் கலாச்சாரம் மத்திய கிழக்கு, வட ஆப்ரிகா, ஐரோப்பா, இரசியா மற்றும் எத்தியோப்பாவின் கலாச்சாரங்களின் கூறுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. கோல்ட்பெர்க் எனும் யூத சமையல் கலை நிபுணர் “யூதர்களும், அரேபியர்களும் ஒரே விதமான மசாலாப் பொருட்களையே பயன்படுத்துகின்றனர்” என்பதை ஒப்புக் கொள்கிறார். அதே போல் ஜெருசலேமில் கிடைக்கும் கருவாடைப் பதப் படுத்தும் முறைகளில் இரசிய, ஐரோப்பிய மற்றும் துருக்கிய பாணிகள் இருப்பதையும் சுட்டிக் காட்டுகின்றார்.

எனினும், பாலஸ்தீனர்களிடையே தனித்துவமான உணவுப் பழக்கத்தை ஒன்று தமதாக்கிக் கொள்வது அல்லது தமக்கு ஏற்புடையதல்ல எனும்பட்சத்தில் ஏதாவது ஒரு முறையில் தடுத்து அவர்களுக்கு ஆத்திரமூட்டுவது என்கிற போக்கிலேயே இசுரேலிய அரசு செயல்பட்டு வருகின்றது. தங்கள் நிலத்தைப் பறிகொடுத்த பாலஸ்தீனர்கள் உணவு உள்ளிட்ட தங்களது ஒவ்வொரு கலாச்சார அடையாளத்தையும் பிடிவாதத்துடன் பற்றிக் கொண்டிருக்கின்றனர். என்றேனும் ஒரு நாள் தங்களுக்கான நிலமும் தேசமும் வாய்க்கும் வரை இந்த அடையாளங்கள் மட்டுமே அவர்களுக்கான ஆறுதல்.

  • வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க