Thursday, June 1, 2023
முகப்புபுதிய ஜனநாயகம்இந்தியா13 மாருதி தொழிலாளர்களைத் தூக்கிலிடச் சொல்கிறது பா.ஜ.க. அரசு !

13 மாருதி தொழிலாளர்களைத் தூக்கிலிடச் சொல்கிறது பா.ஜ.க. அரசு !

பன்னாட்டு நிறுவனத்தை எதிர்த்துத் தொழிற்சங்க உரிமை கேட்டதற்காக மாருதி தொழிலாளிகளுக்குத் தூக்கு! உயிர் வாழும் உரிமை கேட்டதற்காக தூத்துக்குடி மக்களுக்குத் துப்பாக்கிச்சூடு!

-

ரியானா மாநிலத்தின் பா.ஜ.க. அரசு, மாருதி தொழிலாளர்கள் 13 பேரைத் தூக்கிலிடவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தீவிரமாக வாதாடியிருக்கிறது. தொழிலாளிகளை ஒரு அரசாங்கம் தூக்கில் போடுவதைக் காலனி ஆட்சிக் காலத்தில் நாம் கண்டிருக்கிறோம். இன்று மோடியின் ஆட்சியில் அதைக் காண்கிறோம்.

ஆறு ஆண்டுகளுக்கு முன் மாருதி சுசுகி ஆலையில் நடைபெற்ற வன்முறை அந்த ஆலை நிர்வாகமே திட்டமிட்டு அரங்கேற்றிய ஒரு நாடகம். தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை கேட்ட தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகக் கூலிப்படையை வைத்து ஒரு கலவரத்தை நடத்தியது மட்டுமின்றி, சங்கம் அமைப்பதற்குத் தொழிலாளிகளுக்கு உதவிய மனிதவளத்துறை அதிகாரி அவினாஷ் தேவையும் கொலை செய்து, கொலைப்பழியைத் தொழிலாளர்கள் மீது போட்டது.

148 தொழிலாளர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. எந்த சாட்சியமுமில்லை என்று 117 பேர் விடுவிக்கப்பட்டனர். மற்றவர்கள் தண்டிக்கப்பட்டனர். அவர்களிலும் தொழிற்சங்க நிர்வாகிகளான 13 பேருக்கு ஆயுள்தண்டனை. இந்த 13 பேரைத்தான் தூக்கிலிடச் சொல்கிறது, அரியானா அரசு.

மரண தண்டனை என்பது அரிதினும் அரிதான வழக்குகளில், மிகக் கொடிய கிரிமினல் குற்றமிழைத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படவேண்டும் என்று பல தீர்ப்புகள் கூறுகின்றன. அவினாஷ் தேவின் மரணம் என்பது நிர்வாகமே செய்த கொலை என்பது ஒருபுறமிருக்க, தண்டிக்கப்பட்டிருக்கும் இந்த தொழிற்சங்கத் தலைவர்கள்தான் இதனைச் செய்தார்கள் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாத நிலையில்தான் இந்த ஆயுள் தண்டனையே வழங்கப்பட்டது.

அவ்வாறிருக்க, இந்த வழக்கில் மாருதி தொழிலாளிகளைத் தூக்கில்போட்டுவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க. அரசு ஏன் இவ்வளவு தீவிரம் காட்டுகிறது? ‘‘இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வீழ்ந்து கொண்டிருக்கிறது. அந்நிய முதலீடுகள் வருவதில்லை. மேக் இன் இந்தியா என்று பிரதமர் மோடி அறைகூவல் விட்டு வரும் இன்றைய சூழலில், மாருதி சம்பவம் நமது தேசத்திற்கே இழுக்காக அமைந்து விட்டது.

அதனால்தான் தூக்குதண்டனை கோருகிறோம் என்று விசாரணை நீதிமன்றத்தில் காரணத்தை விளக்கியிருக்கிறார் அரசு தரப்பு வழக்கறிஞர்.
இங்கே மரணதண்டனைக்குரிய குற்றமாக அரசால் கூறப்படுவது தீவைப்போ, கொலையோ அல்ல. தொழிற்சங்க உரிமைக்காகத் தொழிலாளிகள் நடத்திய போராட்டம் மோடியின் மேக் இன் இந்தியாவுக்கும், அந்நிய முதலீட்டாளர்களுக்கும் எதிராக இருப்பதால், அது தேசவிரோதமாம்; எனவே, தூக்குதண்டனை!

மாருதி தொழிலாளிகளுக்கு என்ன காரணத்துக்காக தூக்கு தண்டனை கேட்கப்படுகிறதோ, அதே காரணத்துக்காகத்தான் தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்றது இந்த அரசு. அங்கே தொழிற்சங்க உரிமை கேட்டதற்காக. இங்கே, ‘‘நீரையும் நிலத்தையும் காற்றையும் நஞ்சாக்காதே” என்று உயிர்வாழும் உரிமை கேட்டதற்காக.

மாருதி கலவரம் போலவே தூத்துக்குடி கலவரமும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்றுதான். மாருதியைப் போன்றே இங்கும் கூலிப்படைகள் உண்டு, தீவைப்பு உண்டு, இறுதியில் துப்பாக்கிச் சூடு. வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள்; பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் சுட்டுக் கொல்லப்படவேண்டியவர்களே என்பதுதான் பொன்னார் பரிவாரம் இதற்கு அளிக்கும் விளக்கம்.

*****

டுவண் மற்றும் மாநில அரசுகள் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சேவை செய்வதென்பது புதிய விசயமல்ல. மாருதி சம்பவம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் நடந்தது. ஸ்டெர்லைட்டுக்கான அனுமதியும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் முதலில் வழங்கப்பட்டது.

எனினும், முதலாளித்துவ அரசுகள் எவையும் பொதுவாகத் தங்களை முதலாளி வர்க்கத்தின் சேவகர்கள் என வெளிப்படையாக காட்டிக் கொள்வதில்லை. மக்கள் நல அரசு, அனைத்து மக்களுக்குமான நடுநிலை அரசு என்ற முகமூடிகளைப் பராமரிக்கவே அவை முயற்சிக்கின்றன.

தனியார்மய – தாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய காலத்திலிருந்து இந்த முகமூடிகள் கழன்று விழத்தொடங்கி விட்டன. மக்களுக்கு அரசு ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்த ஆளும் வர்க்க அறிவுத்துறையினரின் விளக்கங்களும் மாறத் தொடங்கிவிட்டன. அரசு என்ற அடக்குமுறை எந்திரத்தை பராமரிப்பது, அந்த பராமரிப்புச் செலவை வரியாக மக்களிடமிருந்து வசூலிப்பது என்ற இரு பணிகளைத் தவிர, மற்ற கடமைகள் ஏதுமற்ற நிர்வாண நிலையை நோக்கி முதலாளித்துவ அரசுகள் சென்று கொண்டிருக்கின்றன.

அதே நேரத்தில், அந்த நிர்வாணத்தை சற்றேனும் மறைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே ஆள்வதற்கான நியாய உரிமையைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நிர்ப்பந்தத்தை ஆளும் வர்க்கங்களும் கட்சிகளும் உணர்ந்தே இருக்கின்றன.

முதலாளி வர்க்கத்திடம் காசு வாங்கிக்கொண்டு அவர்களுக்கான பணிகளை செய்து கொடுத்துவிட்டு, மக்கள் நலனுக்காக செய்வதைப் போலக் காட்டுவது; தனக்குச் சாதகமான முதலாளிகளுக்குச் சலுகை காட்டிக் கொண்டே மொத்த முதலாளித்துவ வர்க்கத்துக்கும் நடுநிலையாக நடந்து கொள்வது போன்ற தோற்றத்தைக் காட்டுவது இவை பொதுவில் முதலாளித்துவக் கட்சிகள் கடைபிடிக்கும் அணுகுமுறைகள்.

அதேபோல, முதலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை, மோதிக் கொள்ளும் அரசியல் கட்சிகளில் யார் ஒருவருடனும் தனியே தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், கூடிய வரை விலகி நின்று கொண்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் போலக் காட்டிக் கொண்டு, எந்தக் கட்சியின் ஆட்சி வந்தாலும் தனது வர்க்கத்தின் நலனைக் காப்பாற்றிக் கொள்வதென்பது பொதுவில் அவர்கள் கடைபிடிக்கும் அணுகுமுறை.

*****

மூலதனத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பராமரிக்கப்படும் இந்த நாசூக்கான, இலைமறை காய்மறையான உறவு இப்போது வேறு விதமாக மாறிவருகிறது. தன்னை முதலாளிகளின் நண்பனாக வெளிப்படையாகவே காட்டிக்கொள்வதற்கும், குறிப்பிட்ட குஜராத்தி பனியா, மார்வாரி தரகு முதலாளிகளைச் சலுகை பெற்ற முதலாளி வர்க்கமாக (crony capitalists) நடத்துவதற்கும் மோடி அரசு சிறிதும் தயங்கவில்லை.

விஜய் மல்லையா, மெகுல் சோக்சி, நீரவ் மோடி போன்ற வங்கிக் கொள்ளையர்கள் தப்பிச்செல்ல அனுமதித்தது இருக்கட்டும். வாராக்கடன்களை வசூலிப்பதில் முதலாளிகளுக்குச் சலுகை காட்டாத ரகுராம் ராஜனை வெளியேற்றவும் மோடி தயங்கவில்லை. அதன் பின், பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினையைத் தீர்ப்பது (Bankruptcy and Insolvency Bill) என்ற பெயரில் அம்பானிகளும் அகர்வால்களும் வங்கிகளைக் கொள்ளையிடுவதற்கு வழி செய்து கொடுத்திருக்கிறார், மோடி.

அலோக் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் பொதுத்துறை வங்கிகளுக்கு தரவேண்டிய கடன் ரூ. 30,000 கோடி. வங்கிகளுக்கு 5,000 கோடியைக் கட்டிவிட்டு, அந்த நிறுவனத்தை கையகப்படுத்திக் கொண்டார் முகேஷ் அம்பானி. வங்கிக்கு நட்டம் 25,000 கோடி. பூஷண் ஸ்டீல் நிறுவனத்தின் கடன் 52,500 கோடி. அது 31,500 கோடிக்கு டாடாவுக்கு விற்கப்பட்டது. வங்கிக்கு நட்டம் 21,000 கோடி. எலக்ட்ரோ ஸ்டீல் நிறுவனத்தின் 14,000 கோடி கடனுக்கு 5,600 கோடியைக் கட்டி விட்டு, அந்நிறுவனத்தை விழுங்கிக் கொண்டார் வேதாந்தாவின் அனில் அகர்வால்.

வாராக்கடனைக் கறாராக வசூல் செய்வதாகக் கூறிக்கொண்டு மோடி கொண்டுவந்திருக்கும் திவால் சட்டம், பொதுத்துறை வங்கிகளைத் திவாலாக்குவது மட்டுமல்ல, இந்தியாவின் இரும்பு மற்றும் கனிமத்துறை முழுவதையும் ஒரு சில முதலாளிகளின் ஏகபோகமாக மாற்றுகிறது. மின்சாரம், உள் கட்டுமானம், சுரங்கம், இரும்பு நிறுவன முதலாளிகளான இவர்கள்தான் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடனில் பெரும்பகுதியைச் செலுத்த வேண்டியவர்கள்.

‘‘வெளிநாட்டுப் பயணங்களில் தன்னுடன் அழைத்துச் செல்லும் தொழிலதிபர்களின் பெயர்களை இரகசியமாக வைத்திருக்கும் ஒரே பிரதமர் மோடிதான்” என்று குற்றம் சாட்டுகிறார் கபில் சிபல். ‘‘இடைத்தரகர்களை ஒழித்துவிட்டதாக மோடி சொல்வது ஒருவகையில் உண்மைதான். தன்னைத் தவிர, மற்றெல்லா இடைத்தரகர்களையும் அவர் ஒழித்து விட்டார்” என்கிறார் யெச்சூரி.

அமைச்சரவையின் அதிகாரத்தை பிரதமர் அலுவலகத்தின் அதிகாரமாகவும், கட்சியின் அதிகாரத்தை மோடி – அமித் ஷா கும்பலின் அதிகாரமாகவும் மையப்படுத்திவிட்டதன் காரணமாக, மற்ற மட்டங்களிலான அதிகாரங்கள் அநேகமாக முடக்கப்பட்டுவிட்டன. காங்கிரசு ஆட்சியில் தனித்தனியே நடந்த ஊழல்களைக் காட்டித் தேர்தலில் வென்ற மோடி, அந்த ‘வருமானத்தையெல்லாம்’ மையப்படுத்தியிருப்பதுடன் சட்டபூர்வமாகவும் மாற்றியிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் பிரதாப் பானு மேத்தா.

பா.ஜ.க., காங்கிரசு ஆகிய இரு கட்சிகளுமே அந்நிய நிதி வரவுச் சட்டத்தை (FCRA) மீறிப் பன்னாட்டு நிறுவனமான வேதாந்தாவிடம் நன்கொடை வாங்கியிருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் 2014 – இல் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக இரு கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

இதற்கிடையில் பன்னாட்டு நிறுவனங்களும் மோடி அரசிடம் முறையீடு செய்தன. தற்போதைய அந்நிய நிதி வரவுச் சட்டம், 50% -க்கு மேல் வெளிநாட்டவரின் முதலீடு உள்ள நிறுவனங்களை அந்நிய நிறுவனங்களாக கருதுவதால், ‘கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு’ என்ற தலைப்பில் தாங்கள் செலவிடவேண்டிய 10,000 கோடி ரூபாய் தேங்கிக் கிடப்பதாக மோடியிடம் முறையிட்டன.

‘‘உடனே 100% அந்நிய முதலீடாக இருந்தாலும், அது இந்திய நிறுவனமே” என்று அந்நிய நிதி வரவுச் சட்டத்தை முன் தேதியிட்டு (2010 ஆண்டு முதல்) திருத்தியது மோடி அரசு. இதன் காரணமாக வேதாந்தாவிடம் பணம் வாங்கிய குற்றம் ரத்து செய்யப்பட்டு விட்டது. 100% அந்நிய நிறுவனங்கள் அந்நிய நிதி வரவுச் சட்டத்தைப் பொருத்தவரை இந்திய நிறுவனங்களாக மாறிவிட்டன.

மோடி அரசின் முறைகேடு இத்தோடு முடியவில்லை. நன்கொடைப் பத்திரங்கள் (Electoral bonds) என்ற புதிய முறையின் மூலம் கட்சிகளுக்குப் பணம் கொடுக்கும் முதலாளிகள், யாருக்கு எவ்வளவு கொடுத்தோம் என்பதை இரகசியமாக வைத்துக் கொள்வதையும் சட்டபூர்வமாக்கிவிட்டது.

2016 – 17 ஆம் ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடையில் 90% பாரதிய ஜனதாவுக்குத்தான் சென்றிருக்கிறது (the hindu businessline, Aug 30, 2017). இந்தப் புள்ளிவிவரத்தை மேற்சொன்ன பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போதுதான் சலுகை பெற்ற முதலாளி வர்க்கத்தினருக்கும் மோடி அரசுக்கும் இடையில் உருவாகியிருக்கும் புதிய வகைப் பிணைப்பைப் புரிந்து கொள்ளவியலும்.

தொழில் போட்டியை விரும்பாத, பொதுச்சொத்தைக் கொள்ளையிடுவதையே ஒரு தொழிலாக நடத்த விரும்புகின்ற, ‘சலுகை பெற்ற முதலாளித்துவமும்’ ஜனநாயகத்தை விரும்பாத பாசிசக் கும்பலும் ஒருவர் தேவையை மற்றவர் நிறைவு செய்கின்றனர்.

தனது ஆட்சிக்காலம் முழுவதிலும் ஊடகங்களையே சந்திக்காத மோடியை கார்ப்பரேட் ஊடகங்கள் விழுந்து தொழுவதைப் பார்க்கிறோம். ஊடகங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோடி அரசின் அரசியல் தோல்விகளை நியாயப்படுத்துகின்றன. பொய்களையும் மதவெறியையும் கூச்சமின்றிப் பிரச்சாரம் செய்கின்றன.

பா.ஜ.க. எதிர்ப்பாளர்களைக் கொச்சைப்படுத்தி மதிப்பிழக்கச் செய்கின்றன. இவையெல்லாம் இந்த உறவின் அபாயகரமான பரிமாணத்துக்குச் சான்றுகள். பசுக் குண்டர்களும், கலாச்சாரக் காவலர்களும் பார்ப்பன பாசிசத்தின் காலாட்படைகள்தான். ஆயின், அதன் புரவலர் ஆளும் வர்க்கம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

-சூரியன்
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018

மின்னூல்:
புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க