Wednesday, February 21, 2024
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்அரியானா : மாருதி நிர்வாகத்தின் சட்டபூர்வ கூலிப்படைகள் !

அரியானா : மாருதி நிர்வாகத்தின் சட்டபூர்வ கூலிப்படைகள் !

-

ரியானா மாநிலத்தின் மானேசரிலுள்ள மாருதி கார் ஆலைத் தொழிலாளர்கள், கடந்த ஆண்டு ஜூலையில் அந்நிறுவனத்தின் கார்ப்பரேட் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடிய ‘குற்ற’த்துக்காக 147 தொழிலாளர்கள் உள்ளிட்டு ஒட்டுமொத்த தொழிற்சங்கத்தினரும் சிறையிடப்பட்டுள்ளனர். அவர்களில் 66 பேர் மீது பிணையில் வெளிவர முடியாதபடி கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் போடப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டு காலமாக அவர்களுக்குப் பிணை வழங்கப்படவில்லை.

ஜியாலால் குடும்பம்
பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனது கணவர் ஜியாலாலின் புகைப்படத்தோடு அவரது மனைவி சோனியா.

கைதான தொழிலாளர்களுள் ஒருவர் விஜேந்திரா. அவர் வேலை செய்தால்தான் வீட்டில் அடுப்பெரியும் நிலைமை. அவரின் தாயோ நிரந்தர நோயாளி. கர்ப்பிணியான அவரது மனைவிக்குக் கடந்த ஜனவரியில் குழந்தை பிறந்து உதவிக்கு யாருமில்லாத நிலையில், மருத்துவமனையிலுள்ள தனது மனைவியைப் பார்த்துவிட்டு வருவதற்கு அனுமதி கோரிய போதிலும் அவருக்குப் பிணை மறுக்கப்பட்டது.

ராம்விலாஸ் எனும் மாருதி தொழிலாளி கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவரது பாட்டி, படுத்த படுக்கையாகி பிப்ரவரியில் மாண்டு போனார். மரணப் படுக்கையிலிருந்த அவரைச் சந்திக்கக்கூட அத்தொழிலாளிக்குப் பிணை தரப்படவில்லை. இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும் அவருக்கு அனுமதி தரப்படவில்லை. பின்னர், தனக்குப் பிறந்த குழந்தையைப் பார்த்துவிட்டு வருவதற்குக் கூட அவருக்குப் பிணை வழங்கப்படவில்லை.

பிரேம்பால் என்ற தொழிலாளியின் துயரம் மிகக் கொடியது. குடும்பத்தில் அவர் மட்டுமே சம்பாதிப்பவர். பிரேம்பால் கைதானபோது அவரின் 2 வயதுக் குழந்தை, தந்தையைக் காணாத ஏக்கத்தில் நோய் வாய்ப்பட்டு மரித்து விட்டது. பிரேம்பால் கைதான அதிர்ச்சியும் குழந்தை இறந்த துயரமும் சேர்ந்ததால் பிரேம்பாலின் தாயும் இறந்து விட்டார். இந்நிலையிலும் கூட பிரேம்பாலுக்கு ஒரு வார காலத்துக்கான பரோல் நிராகரிக்கப்பட்டது. அவரின் மனைவியோ கணவன் கைதாகி, குழந்தையையும் மாமியாரையும் மரணம் தின்று விட, தனிமையில் நோயாளியாகி மருத்துவமனையில் சாகக் கிடக்கிறார். இதனால் பிரேம்பால் மனநிலை பாதிக்கப்பட்டவராகி விட்டார். சிறைக்குள் வாடும் தொழிலாளர்கள் பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களில் பலர் காசநோயாலும் மூலநோயாலும் பாதிக்கப்பட்டுத் தகுந்த சிகிச்சையின்றி வாடுகின்றனர்.

சென்ற ஆண்டு ஜூலையில் மாருதி நிர்வாகத்தின் கொத்தடிமைத்தனத்துக்கும் கொடூரச் சுரண்டலுக்கும் எதிராக தொழிற்சங்கத்தைக் கட்டியமைத்துத் தொழிலாளர்கள் போராடியபோது, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஜியாலால் என்ற தொழிலாளியைச் சாதிப்பெயரைச் சொல்லித் திட்டிய கண்காணிப்பாளரைத் தட்டிக் கேட்ட தொழிலாளர்கள், நிர்வாகத்தின் குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதற்கெதிராக தொழிலாளர்களும் திருப்பித் தாக்க, இருதரப்பினருக்குமிடையிலான மோதலில் மேலாளர் அவினேஷ் தேவ் என்பவர் கொல்லப்பட்டார். இவரைத் தொழிலாளிகள்தான் கொன்றனர் என்கிறது மாருதி நிர்வாகமும் போலீசும். ஆனால், தொழிலாளர்களோ இந்த மேலாளர் தொழிற்சங்கம் கட்டுவதற்குத் துணை நின்றவர் என்கின்றனர். ஆலையில் நடந்த மோதலைப் பயன்படுத்திக் கொண்டு இவரைக் குறிவைத்துத் தாக்கி மாருதி நிர்வாகம் கொன்றொழித்துள்ளது என்று வாதிடும் தொழிலாளர்கள், இது குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்கின்றனர்.

கைதால் ஆர்ப்பாட்டம்
பொய் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரி, கைதாலிலுள்ள அரியானா மாநிலத் தொழில்துறை அமைச்சர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யத் திரண்டிருந்த மாருதி தொழிலாளர்களைத் தடுக்கும் போலீசு.

மேலாளர் அவினேஷ் தேவ் கொல்லப்பட்டதை முகாந்திரமாகக் கொண்டு அரியானா மாநில அரசும் மாருதி நிர்வாகமும் தொழிலாளர்களைப் பழிவாங்கத் தொடங்கியன. விசாரணை ஏதுமின்றி 548 தொழிலாளர்கள் மாருதி நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்தத் தொழிலாளர்களில் 2,000 பேர் வேலையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். கொலைவழக்கில் 147 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழிற்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரையும் இக்கொலை வழக்கில் அரசு கைதுசெய்துள்ளது. எனவே தற்காலிகச் செயற்குழுவை நியமித்துக் கொண்டு, ஜூலை மாதத்தில் மாருதி ஆலையில் நடந்த போராட்டம் பற்றி நடுநிலையாக விசாரிக்கவும், நிர்வாகத்தின் தொடர் அடக்குமுறைகளை எதிர்த்தும், சிறையிடப்பட்டுள்ள தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாத மாருதி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடந்த நவம்பரிலிருந்து தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். பயங்கரவாத மாருதி நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதத்தில் நாடு தழுவிய அளவில் பல்வேறு தொழிற்சங்கங்களுடன் இணைந்து பழிவாங்கப்பட்ட மாருதி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

அரசு அசைந்து கொடுக்காத நிலையில், கடந்த மார்ச் இறுதியில் அரியானா மாநிலத் தொழிலமைச்சர் வீட்டை முற்றுகையிட்டுப் போராடத் தொடங்கினர். பெருமளவில் போலீசு படையைக் குவித்துப் போராட்டக் குழுவினர் தங்குவதற்குப் பந்தல் போட்டிருந்த இடத்தின் சொந்தக்காரரை மிரட்டியும், தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருந்த டீக்கடைக்காரர்களை மிரட்டியும் இப்போராட்டத்தை அரசு ஒடுக்க முயற்சித்ததால், அதை எதிர்த்து மழையையும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் தொழிலாளர்கள் தமது குடும்பத்தோடு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். இதனைப் பல்வேறு பிரிவு உழைக்கும் மக்களும் மட்டுமின்றி, 150-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களும் ஆதரித்து நின்றதால், வேறுவழியின்றி பேச்சு வார்த்தைக்கு அரசு இறங்கி வந்தது. வழக்குகள் ஏதும் இல்லாத தொழிலாளர்களை மீண்டும் மாருதியில் சேர்த்துக்கொள்ள தொழிலாளர்நல ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், இவ்வழக்கு நடைபெறும்வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் பழிவாங்கப்பட மாட்டார்கள் என்றும் அரசு உறுதியளித்த பின்னரே உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

10-cartoonபின்னர், கடந்த மே 8-ஆம் தேதியன்று 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் சுற்றுப்புற சிறுநகர மற்றும் கிராமப்புற மக்களும் திரண்டு கைத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உழைக்கும் மக்களின் மகாபஞ்சாயத்து கூட்டத்தை நடத்தினர். இதில் ஹீரோ ஹோண்டா, ஐ.எம்.டி., ரிகோ, புளுஸ்டார் உள்ளிட்ட பல்வேறு ஆலைகளின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும், மும்பை மற்றும் பஞ்சாபின் லூதியானா மாவட்டத் தொழிற்சங்கத்தினரும், மாணவர் – மகளிர் அமைப்புகளும் பங்கேற்று ஆதரித்தன.

பல மாதங்களாகச் சிறையில் வாடும் தொழிலாளர்களைப் பிணையில் விடுவிக்கக் கோரி அனைத்துத் தரப்பு தொழிற்சங்கத்தினரும், தொழிலாளர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் உள்ளாட்சி மன்ற தலைவர்களும் இணைந்து கடந்த மே 19 அன்று மாநில தொழிலாளர் துறை அமைச்சர் வீட்டின் எதிரே ஆர்ப்பாட்டத்தை நடத்தியபோது, முன்னறிவிப்பு ஏதுமின்றித் தடியடித் தாக்குதலை நடத்தியது போலீசு. இப்போராட்டத்தில் கலந்துகொண்ட மாருதி தொழிலாளர் சங்கத்தின் தற்காலிகச் செயற்குழு உறுப்பினரோடு, உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் சுரேஷ் கோத், கைத்தால் நகர்மன்ற உறுப்பினர் பிரேம்சந்த் முதலானோர் மீதும் கொலைமுயற்சி உள்ளிட்ட பிணையில் வரமுடியாத வழக்குகளைப் போட்டுக் கைது செய்தது. இக்கொடிய அடக்குமுறையை எதிர்த்து அரியானா மாநிலத்தின் பல்வேறு தொழிற்சங்கங்களும் அங்கன்வாடி ஊழியர் சங்கமும், மாருதி பவர்ட்ரைன், ஹோண்டா, ரிக்கோ, சத்யம் ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு ஆலைகளின் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து தலைமைச் செயலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

அரியானாவின் கைதால் நகரில் 57 நாட்களாக தர்ணா போராட்டமும் 8 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்திய பிறகு, கடந்த மே 18, 19 தேதிகளில் தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தாரும் ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது போலீசாரால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டு 111 பேர் கைது செய்யப்பட்டனர். எந்த வழியிலும் போராடவே கூடாது என்று தொழிலாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகின்றனர்.

வர்க்க ஒற்றுமையுடன் தொடரும் மாருதி தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்க கைத்தால் நகரில் 144 தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது, அரியானா அரசு. போராடுவோரைப் பழிவாங்கும் நோக்கத்தோடு பிணைத்தொகையை ஒவ்வொருவருக்கும் ரூ. 40 ஆயிரம் என அரசு உயர்த்தியுள்ளது. மாருதி தொழிலாளர்களுக்குப் பிணை மறுப்பது, பொய் வழக்குகளைத் தொடர்வது போன்ற வழிமுறைகள் மூலம் அவர்களைப் பணியவைத்துவிடலாம் என்பதே அரசின் நோக்கமாக உள்ளது. இருப்பினும் இவற்றைத் துச்சமாக மதித்து, அரியானா உழைக்கும் மக்கள் தரும் ஆதரவோடு மாருதி தொழிலாளர்கள் விடாப்பிடியாக தொடர்ந்து போராடி வருகின்றனர். நீதிக்கான இந்தப்போராட்டத்தில் 84 சர்பஞ்ச்கள் (ஊராட்சி மன்றத் தலைவர்கள்) தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். கைதால் நகரின் தேநீர்க் கடைக்காரர்கள் உள்ளிட்டு அரியானாவின் பல்வேறு பிரிவு உழைக்கும் மக்களது தொழிற்சங்கங்களின் ஆதரவையும் மாருதி தொழிலாளர்கள் திரட்டியுள்ளனர்.

மும்பய் ஆர்ப்பாட்டம்
மாருதித் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு ஆதரவாகப் பல்வேறு தொழிற்சங்கங்களும் இணைந்து உருவாக்கியிருக்கும் மாருதி தொழிலாளர் போராட்ட ஆதரவு கமிட்டியின் சார்பில், பொய் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மாருதி தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரி மும்பய் நகரில் கடந்த ஜூன் மாதம் நடந்த ஆர்ப்பாட்டம்.

சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்கும் எதிரான மாருதி தொழிலாளர் போராட்டம், வரும் ஜூலை 18-ஆம் தேதியுடன் ஓராண்டை எட்டுகிறது. 147 முன்னணித் தொழிலாளர்கள் குர்கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குக் கீழமை நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் பிணை வழங்க மறுக்கின்றன. தொழிலாளருக்கு ஆதரவான அவினேஷ் தேவ் என்ற மேலாளர் கொல்லப்பட்டதைப் பற்றி விசாரணை நடத்த அரசு மறுக்கிறது. தொழிலாளர்களைக் கிரிமினல்களாகவும் தீவிரவாதிகளாகவும் மாருதி நிர்வாகம் மட்டுமின்றி, ஊடகங்களும் தொடர்ந்து அவதூறு செய்து வருகின்றன. மாருதியில் பணியாற்றிவந்த 2,300 தொழிலாளிகள் எவ்விதக் காரணமுமின்றி வேலைநீக்கம் செய்யப்பட்டு, குடும்பத்தோடு வீதியில் வீசியெறியப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தொடர் முழக்கப் போராட்டங்களோ, ஊர்வலங்களோ நடத்தக்கூடாது, துண்டுப் பிரசுரங்களைக்கூட விநியோகிக்கக் கூடாது என்று மானேசர் தொழிற்பேட்டை பகுதியில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஜூன் 23 அன்று மாருதி தொழிற்சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தின் முடிவுப்படி, வரும் ஜூலை 18 அன்று மாருதி தொழிலாளர்கள் தமது குடும்பத்தோடு மானேசர் நோக்கிச் செல்லும் நடைபயணப் போராட்டத்தையும், அந்நாளில் காலவரையற்ற மறியல் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தவுள்ளனர். இதற்கான பிரச்சார இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

மாருதி சுசுகியைப் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், தொழிலாளர்கள் சங்கமாகத் திரளும் அடிப்படை உரிமையைக்கூட மதிப்பதில்லை. இதற்கெதிராகப் போராடினால் போராட்டங்களைக் கொடூரமாக நசுக்குவதன் மூலம், அன்னிய மூலதனத்தின் கட்டற்ற கொள்ளையையும் அடக்குமுறையையும் நியாயப்படுத்திப் பாதுகாக்கிறது அரசு. தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி முதலாளித்துவ ஊடகங்கள் இதற்குத் துணை நிற்கின்றன.

தனியார்மய-தாராளமயத்தால் நாடு முழுவதும் உழைக்கும் மக்கள் கொடூரச் சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டுள்ள நிலையில், தீவிரமாகிவரும் இம்முதலாளித்துவப் பயங்கரவாதத்தை முறியடிக்க தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையும் அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களின் ஆதரவும்தான் இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் அவசர அவசியத் தேவையாகியுள்ளது. இதனைத் தமது சொந்த அனுபவத்தினூடாக உணர்ந்து, உணர்வோடும் ஒற்றுமையோடும் போராடிவரும் மாருதி தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து முன்னெடுத்துச் செல்ல வேண்டியது உழைக்கும் வர்க்கத்தின் கடமை. நம் கடமை.

– அன்பு
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2013
________________________________________________________________________________

 1. வேலைக்கு போனாட் வேலை மட்டும் செய்யனும்… அங்கே போய் ஒரு கொலை செய்தா சட்டம் சும்மா விடுமா? இதே ஒரு தொழிலாளி செத்து இருந்தா வினவு கட்டுரை எப்படி இருக்கூக்ம்னு எல்லோருக்கும் தெரியும்… 66 பேரையும் ஒரு இருபது வருசம் உள்ளப் போட்டா அடங்கிடுவானுங்க…. போராட்டத்துல கொடி பிடிச்சவனுங்க எல்லாம் இப்ப எங்கே போனானுங்க???? போலீஸ் செய்வது சரி தான்…..

  • //இந்த மேலாளர் தொழிற்சங்கம் கட்டுவதற்குத் துணை நின்றவர் என்கின்றனர். ஆலையில் நடந்த மோதலைப் பயன்படுத்திக் கொண்டு இவரைக் குறிவைத்துத் தாக்கி மாருதி நிர்வாகம் கொன்றொழித்துள்ளது//

  • வேலைன்னா வேலை மட்டும் வாங்கனும் தொழிலாளியின் உழைப்பைத் திருடினால் இப்படித்தான் நடக்கும். முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு தொழிலாளிகள் இப்படித்தான் அடி கொடுப்பார்கள், இது வெறும் துவக்கம் தான்.

   இந்தியன்னு பேரை வச்சுக்கிட்டு ஜப்பான் முதலாளிக்கு ஆதரவாகவும் இந்தியத் தொழிலாளிகளுக்கு எதிராகவும் பேசுறீங்களே உங்களுக்கு கொஞ்சம் கூட கூச்சமா இல்லை.

 2. //மேலாளர் அவினேஷ் தேவ் கொல்லப்பட்டதை முகாந்திரமாகக் கொண்டு அரியானா மாநில அரசும் மாருதி நிர்வாகமும் தொழிலாளர்களைப் பழிவாங்கத் தொடங்கியன.//

  அது சரி! மேலாளர் ‘கொல்ல’ப்பட்டதையே தொழிலாளர்களின் எழுச்சினு தானே சொன்னீங்க.

  • விஜய் மல்லையா தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட காசில்லை என்று 5000 கோடி ரூபாய் அரசு வங்கியிடமிருந்து கடன் வாங்கினான். அது கொள்ளைக்கான காரணம் என விளக்கினார்கள் பலர். அதன் பின்னர் தான் தெரிய வந்தது கடன் பெற்ற பணத்தை ஊழியர்களுக்கு கொடுக்காமல் ஐபிஎல் இல் போட்டு சூதாடினான் என்று. அதையும் சேர்த்து இப்போது அம்பலப்படுத்த வேண்டியிருக்குல்ல.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க