ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடி நகர மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தைச் சமூக விரோதிகளும் தேசவிரோத சக்திகளும் நடத்திய வன்முறை வெறியாட்டம் என அவதூறு செய்துவருகிறது பார்ப்பன பா.ஜ.க. கும்பல். இன்னொருபுறம் தனக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்திவரும் வேதாந்தா குழுமத்திற்கும் ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது என்பது போலவும், இந்த ஆலையைத் தொடங்க அனுமதி கொடுத்தது, அவ்வாலைக்கு விரிவாக்கம் செய்ய அனுமதி கொடுத்தது உள்ளிட்ட பாவங்களைச் செய்ததெல்லாம் காங்கிரசு-தி.மு.க. கூட்டணிதான் என்றும் பேசிவருகிறது. மோடி அரசிற்கு மட்டுமல்ல, அ.தி.மு.க.விற்கும்கூட இதில் கடுகளவும் பங்கு கிடையாதென்று (துக்ளக், 6.6.2018) நியாயம் பேசித் தன்னை யோக்கியனைப் போலக் காட்டிவருகிறது.
அரைகுறை உண்மையை அவிழ்த்துவிட்டுப் பிரச்சினைகளைத் திசைதிருப்பிவிடுவது பாசிஸ்டுகள் காலங்காலமாகக் கடைப்பிடித்துவரும் தந்திரம். அதற்கு ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலும் விதிவிலக்கானதல்ல. ஏதோவொரு சிதிலமடைந்த கட்டிடத்தின் மீது பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த உண்மையைத் திரித்து, அந்தக் கட்டிடம்தான் ராமர் கோவில் எனச் சாதித்தார்கள். காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்த காங்கிரசின் குற்றத்தைக் காட்டி, தமது வஞ்சகத்தை மறைக்க முயலுகிறார்கள்.
இப்பொழுது ஸ்டெர்லைட் பிரச்சினையில், ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்க அனுமதி கொடுத்தது காங்கிரசு அரசுதான் என்ற உண்மையை மட்டுமே ஊதிப் பெருக்கி, தமக்கும் ஸ்டெர்லைட் குழுமத்திற்கும் ஸ்நான பிராப்திகூடக் கிடையாது எனச் சாதிக்க முயலுகிறார்கள்.
ஆனால், உண்மையோ ஸ்டெர்லைட் முதலாளி அனில் அகர்வாலுக்கும் பா.ஜ.க.விற்கும் இடையே நகமும் சதையும் போல நெருக்கம் இருப்பதையும் அந்த உறவு இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வருவதையும் எடுத்துக் காட்டுகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இயக்கிவரும் வேதாந்தா குழுமத்தின் முதலாளி அனில் அகர்வாலுக்கும் பா.ஜ.க.விற்கும் இடையிலான உறவிற்கு வாஜ்பாயி காலத்திலேயே வலுவான அடிக்கல் நாட்டப்பட்டது. வாஜ்பாயி பிரதமராக இருந்த சமயத்தில்தான் ரூ. 5,000 கோடிக்கும் மேல் மதிப்புகொண்ட பொதுத்துறை நிறுவனமான பால்கோ ஆலை வெறும் ரூ. 551 கோடிக்கு அனில் அகர்வாலுக்கு விற்கப்பட்டது. இவ்விற்பனைக்கு எதிராக அவ்வாலையைச் சேர்ந்த தொழிலாளர்களும், அவ்வாலை அமைந்திருந்த கோர்பா பகுதி பொதுமக்களும் நடத்திய போராட்டங்களை ஒடுக்கியும், வெற்று வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றியும்தான் அவ்வாலையை அடிமாட்டு விலைக்கு வேதாந்தா குழுமத்திற்கு பட்டா எழுதிக் கொடுத்தார் உத்தமர் வாஜ்பாயி.
பால்கோ ஆலையை, இயந்திரங்கள் மற்றும் ஆலை அமைந்திருந்த நிலம் ஆகியவற்றோடு மட்டும் வாஜ்பாயி அரசு தூக்கிக் கொடுக்கவில்லை. ஆலை விற்கப்பட்ட சமயத்தில் அவ்வாலையில் விற்பனைக்குத் தயாராக இருந்த ரூ. 90 கோடி பெறுமான உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகள், ரூ. 50 கோடி பெறுமான கழித்துக் கட்டப்பட்ட தளவாடங்கள், ரூ. 100 கோடி பெறுமான அலுமினிய உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்கள், ரூ. 70 கோடி பெறுமான ஆலை அலுவலகப் பொருட்கள் மற்றும் பல நூறு கோடி ரூபாய் மதிப்புகொண்ட சுரங்கங்கள், மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றையும் ’ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே’ என்ற கதையாகத் தூக்கிக் கொடுத்தது, வாஜ்பாயி அரசு.
இப்படி வாஜ்பாயி போட்ட கோட்டைத் திருவாளர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த சமயத்திலேயே ’ஹைவேயாக’ மாற்ற முயன்றார். ஒரிசா மாநிலம்-நியம்கிரி வனப் பகுதியில் இயங்கிவந்த வேதாந்தா குழுமத்தின் அலுமினிய சுத்திகரிப்புத் தொழிற்சாலையை, அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டபொழுது, அத்தொழிற்சாலையை குஜராத்தில் அமைத்துக் கொள்ளுமாறு அனில் அகர்வாலுக்குத் தூதுவிட்டார் நரேந்திர மோடி.
அந்தச் சமயத்தில் குஜராத் அரசு நிறுவனமான குஜராத் தாதுப்பொருள் வளர்ச்சிக் கழகம் ஆஷாபுரா குழுமம் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து அலுமினிய சுத்திகரிப்புத் தொழிற்சாலையை அமைப்பதற்கு ஒப்பந்தமிட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்துவிட்டு, ஒரிசாவில் மூடவேண்டியிருந்த வேதாந்தா ஆலையை குஜராத்திற்கு மாற்றுவதற்கு ஏற்ப புதிய ஒப்பந்தமொன்றைப் போட்டுக் கொள்வதற்கும் மோடி அரசு தயாராக இருந்தது (Hindustan Times, Oct.16, 2010). டாடாவின் நானோ ஆலை போன்று அனில் அகர்வாலின் அலுமினியத் தொழிற்சாலை குஜராத்திற்கு இடம் பெயரவில்லை என்றாலும், மோடிக்கும் அனில் அகர்வாலுக்கும் இடையேயான நெருக்கத்திற்கு எந்தவொரு பங்கமும் வந்துவிடவில்லை.
கடந்த 2014, மே மாத இறுதியில் மோடி பிரதமராகப் பதவியேற்றவுடனேயே, உலகமே மோடி அரசிடமிருந்து நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் இளைஞர்கள் மோடி வேலை வாய்ப்புகளை வாரி வழங்குவார் என எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி, மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்தார், அனில் அகர்வால்.
அனில் அகர்வால் உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் வாழ்த்துக்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் உடனடியாகவே கைம்மாறு செய்யும் காரியத்தில் மோடி இறங்கினார். குறிப்பாக, முந்தைய காங்கிரசு கூட்டணி ஆட்சியில் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காமல் பல்வேறு திட்டங்கள் முடங்கிக் கிடப்பதாக இந்தியத் தரகு முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும் விட்டுவந்த முதலைக் கண்ணீரைத் துடைக்கும் முனைப்போடு, ஏற்கெனவே இயங்கிவரும் ஆலைகளை விரிவாக்கம் செய்வது தொடர்பாக 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட சுற்றுப்புறச் சூழல் விதிக்கு ஒரு புதிய விளக்கத்தை அளித்தது, மோடி அரசு. இந்த விளக்கத்தால் பயன் அடைந்த நிறுவனங்களுள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று.
“சுற்றுப்புறச் சூழல் அனுமதி பெற்று உருவாக்கப்படும் சிறப்பு தொழிற்பூங்காக்களில் புதிதாகத் தொழிற்சாலைகளை அமைப்பதற்கோ அல்லது விரிவாக்கம் செய்து கொள்வதற்கோ பகுதி மக்களின் சம்மதத்தைப் பெறத் தேவையில்லை” என்றவாறு 2006-ம் ஆண்டு சுற்றுப்புறச் சூழல் விதி வரையறுக்கப்பட்டிருந்தது.
காங்கிரசு கூட்டணி ஆட்சியில் இந்த விதி குறித்து சில கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, “இந்த விதி உருவாக்கப்படுவதற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தொழிற்பூங்காக்களுக்கும் இந்த விதி பொருந்துமா?” எனக் கேட்கப்பட்டபொழுது, காங்கிரசு கூட்டணி அரசு, “சுற்றுப்புறச் சூழல் அனுமதி பெற்று உருவாக்கப்பட்டுள்ள சிறப்புத் தொழிற்பூங்காக்களில் இயங்கிவரும் தொழிற்சாலைகளுக்கு மட்டும் இந்த விதி பொருந்தும்” என மே 16, 2014 அன்று விளக்கமளித்ததோடு, “மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்திய பிறகுதான் ஸ்டெர்லைட் நிறுவனம் தனது விரிவாக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது.
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்து, பதவி விலகிச் செல்லும் முன் காங்கிரசு கூட்டணி அரசு அளித்த இந்த விளக்கம் குறித்து கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் கொண்டிருந்த அதிருப்தியைத் துடைத்துப்போடும் வண்ணம், பா.ஜ.க. கூட்டணி அரசு டிசம்பர் 10, 2014 அன்று, “சுற்றுப்புறச் சூழல் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள சிறப்புத் தொழில் பூங்காக்களில் இயங்கிவரும் தொழிற்சாலைகளுக்கும் 2006 விதி பொருந்தும்” என விளக்கமளித்து, குறிப்பாணையொன்றை வெளியிட்டு கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் வயிற்றில் பாலை வார்த்தது.
தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் பா.ஜ.க. கூட்டணி அரசு வெளியிட்ட இந்தக் குறிப்பாணையை டிசம்பர்,2016-இல் ரத்து செய்தது. ஆனாலும், வேதாந்தா குழுமம், ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்குத் தான் ஏற்கெனவே சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்தின் அனுமதியைப் பெற்றுவிட்டதாகக் கூறி, மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த மறுத்தது. இந்த விரிவாக்கத்தைத்தான் தற்பொழுது தமிழக உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை தடை செய்திருக்கிறது.
முகேஷ் அம்பானி, கௌதம் அதானி போலவே வேதாந்தா குழுமமும், அதன் முதலாளி அனில் அகர்வாலும் மோடிக்கு மிக நெருக்கமானவராகவே இருந்து வருகிறார். குறிப்பாக, 2015 ஆம் ஆண்டு மோடி இலண்டனுக்குச் சென்றிருந்த சமயத்தில், அவரது வருகையை வரவேற்கும் விதமாக இலண்டனிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் பலவற்றில் முழுப்பக்க விளம்பரங்கள் வாரித் தெளித்திருந்தார், அனில் அகர்வால்.
அப்பொழுது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து-இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் சந்திப்புக் கூட்டத்தில் அனில் அகர்வாலும் கலந்து கொண்டார்.
இலண்டனில் இந்தச் சந்திப்பு நடந்த சமயத்தில், தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவுப்படித் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. எனினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னை வாழ்த்தி அனில் அகர்வால் விளம்பரங்களை வாரி இறைத்தது குறித்தோ, தலைமைச் செயல் அதிகாரிகள் சந்திப்பில் அனில் அகர்வால் கலந்துகொண்டது குறித்தோ அலட்டிக் கொள்ளவேயில்லை. “இதெல்லாம் சகஜமப்பா” என கவுண்டமணி கணக்காக நடந்து கொண்டார், மோடி.
Three years of @narendramodi define Modi- fications, economic reformation, and modernization to Make in India. @PMOIndia @makeinindia
— Anil Agarwal (@AnilAgarwal_Ved) May 25, 2017
மோடி அரசு மூன்றாம் ஆண்டை நிறைவு செய்ததையொட்டி, தனது இணைய பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்த அனில் அகர்வால், “மோடியின் மூன்றாண்டு ஆட்சி, மாற்றங்களும் (Modi-fications) பொருளாதார சீர்திருத்தங்களும், இந்தியாவை நவீனப்படுத்துவதையும் (Modernization to Make in India) குறிக்கிறது” எனப் புகழ்ந்து தள்ளினார்.
தூத்துக்குடியில் நடத்தப்பட்ட பச்சைப் படுகொலையை ஐ.நா. மன்றம்கூடக் கண்டிக்கும் அளவிற்கு அதன் தாக்கம் உலக அளவில் வெளிப்பட்ட பிறகும்கூட, 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து ஒப்புக்குக்கூட வருத்தம் தெரிவிக்காதவர்கள் இரண்டு பேர்தான். ஒருவர் நரேந்திர மோடி, மற்றொருவர் அனில் அகர்வால். இப்படுகொலையைக் கண்டித்து இலண்டனில் தனது சொகுசு மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாத அனில் அகர்வால், ஜூன் 2018-இல் இலண்டனுக்கு வருகை தரவிருந்த நரேந்திர மோடியை வரவேற்றுத் தனது சுட்டுரை பக்கத்தில் செய்தியொன்றை வெளியிட்டிருந்தார்.
மேலும், கடந்த நான்காண்டுகளுக்குள் மோடி அரசு ஒரு இலட்சம் இந்திய கிராமங்களுக்கு இணைய தள இணைப்பைக் கொடுத்திருப்பதாகவும், அந்த டிஜிட்டல் இந்தியா சாதனையில் வேதாந்தா நிறுவனங்களுள் ஒன்றான ஸ்டெர்லைட் டெக் முக்கியப் பங்கு வகித்திருப்பதாகவும் அச்சுட்டுரையில் பெருமையோடு குறிப்பிட்டிருந்தார்.
நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் மட்டுமல்ல, தூய்மை இந்தியா, கங்கை ஆற்றைத் தூய்மைப்படுத்துவது, உஜாலா ஆகிய திட்டங்களிலும் வேதாந்தா குழுமம் பங்கு பெற்றிருக்கிறது.
வேதாந்தா நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் மரியாதா இயக்கம், மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தோடு இணைந்து செயல்படும் என்றும், வேதாந்தா நிறுவனத்தின் சுரங்க மற்றும் தொழிற்சாலை அலுவலர்கள் துப்பரவுப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும், வேதாந்தாவின் துத்தநாக நிறுவனம் இராசஸ்தான் மாநில பா.ஜ.க. அரசோடு இணைந்து 30,000 கழிப்பறைகளைக் கட்டி வருவதாகவும் அக்.2014-இல் அறிவித்தார், அனில் அகர்வால்.
கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் இலண்டனுக்குச் சென்ற மைய அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, கங்கையுடனும் இந்தியாவுடனும் உணர்ச்சிகரமான பிணைப்புகளைக் கொண்டுள்ள பணக்கார இந்தியத் தொழிலதிபர்களைத் தாம் தேடிக் கொண்டிருப்பதாகவும் இந்தத் திட்டத்திற்கு (கங்கையைத் தூய்மைப்படுத்துவது) அனில் அகர்வால் உதவ முன்வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்குப் பதில் அளித்த அனில் அகர்வால், நவீன இந்தியாவை, அதாவது வளமான கலாச்சாரத்துடனும் விழுமியங்களுடனும் பிணைக்கப்பட்டுள்ள நவீன இந்தியாவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று தொலைநோக்குடையவர் நிதின் கட்காரி. அவரைத் தமது வீட்டிற்கு விருந்தினராக அழைத்திருப்பதாகவும் ’தி டெலிகிராப்’ நாளேட்டிற்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
நவீன இந்தியா குறித்த அனில் அகர்வாலின் சொற்களைக் கவனித்துப் பாருங்கள். அவர் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு நெருக்கமாக இருப்பதற்கான அனைத்துத் தகுதிகளையும் தன்னளவிலேயே கொண்டிருப்பதை யாரும் புரிந்துகொள்ள முடியும்.
பழைய குண்டு பல்புகளை அகற்றிவிட்டு, அதனிடத்தில் மின்சாரத்தைச் சேமிக்கும் எல்.ஈ.டி. பல்புகளைப் பொருத்தும் உஜாலா திட்டத்திற்கு அனில் அகர்வாலின் பங்களிப்பை வேண்டி விரும்பிக் கேட்டுப் பெற்றது, பா.ஜ.க. அரசு. உஜாலா திட்டத்திற்கு இங்கிலாந்து அரசின் உதவியைப் பெறும் நோக்கில் மே 2017-இல் இலண்டன் சென்ற மத்திய எரிபொருள் துறை அமைச்சர் பியுஷ் கோயல், உஜாலா திட்டம் பிரிட்டனில் பெரும் தொழில், வணிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும், பிரிட்டனிலிருந்து பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் கிளை பரப்பும் வாய்ப்புகளைக் கொண்ட இந்தத் திட்டத்தை முதலில் இலண்டனில் பதிவு செய்யப்பட்டுள்ள வேதாந்தா நிறுவனத்திடமிருந்து தொடங்க உள்ளதாகவும் அறிவித்தார்.
நரேந்திர மோடி அரசிற்கும் அனில் அகர்வாலுக்கும் இடையே வேர்விட்டு, விஷவிருட்சமாக வளர்ந்து நிற்கும் இந்த நெருக்கத்தின் காரணமாகவே, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி நகர மக்கள் நடத்திய போராட்டத்தை சமூக விரோத, தேச விரோத, அராஜகச் செயலென்று அவதூறு செய்து, போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட சட்டவிரோதமான, அரசு பயங்கரவாத துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி வருகிறது, தமிழக பா.ஜ.க. கும்பல்.
இந்த நெருக்கத்தின் காரணமாகவே துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு வருத்தம் தெரிவிக்க மறுத்து வருகிறார், நரேந்திர மோடி.
இந்த நெருக்கத்தின் காரணமாகவே, ஸ்டெர்லைட் ஆலையைப் பாதுகாப்பதற்கு தூத்துக்குடிக்கு மத்தியப் பாதுகாப்புப் படைகளை அனுப்பி வைக்கட்டுமா எனக் கேட்டார், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
இந்த நெருக்கத்தின் காரணமாகவே, ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியிருக்கிறது, பா.ஜ.க. அடிவருடி எடப்பாடி அரசு.
– திப்பு
கட்டுரை ஆக்கத்திற்கு உதவிய செய்திகள்:
1. மார்க்ஸ் 200: தூத்துக்குடியில் வர்க்கப் போராட்டம், எஸ்.வி.ராஜதுரை, உயிர் எழுத்து, ஜூன் 2018.
2. How Modi Government Helped Vedanta’s Sterlite Plant Bypass Environmental Norms, Business Standard, May 24, 2018.
3. Serial Offender, Frontline, June 22.
போதிய தரவுகள் இல்லாத, பலவீனமான குற்றச்சாட்டுகளுடன் இக்கட்டுரை வந்துள்ளது. பா.ஜ.க.வுக்கு வேதாந்தா நேரடியாக கொடுத்த நிதி, அது வழக்கமாகி இருப்பதாக வரும் செய்திகள் குறித்து விவரங்கள் இக்கட்டுரையில் இருந்திருக்கலாம்.
நல்ல நோக்கத்தோட பின்னூட்டம் போடுறதா காட்டிக்கிட்டு, அடிவெட்டு வெட்டிட்டுப் போறீங்க திருவாளர் துளசி சுரேஷ் அவர்களே..
1. போதிய தரவுகள் இல்லாத பலவீனமான கட்டுரை – என்ற குற்றச்சாட்டு வைக்கிறீர்கள். சரி எதற்கு தரவுகள் இல்லை என்பதை குறிப்பிடவும்.
2. பாஜகவுக்கு நேரடியாக கொடுத்த நிதி, அது வழக்கமாகி வருவது போன்றவை அன்றாடம் வரக்கூடிய பொதுவான செய்திகள்தான். அதில் மேலதிக விவரங்கள் நீங்கள் எதிர்பார்ப்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் கொடுக்கப்பட்ட விவரங்களில் எது பலவீனமான குற்றச்சாட்டு என்பதை நீங்கள் குறிப்பாகக் கூறினால் அது பற்றி பேசலாம்.
போகிற போக்கில் அடித்துவிட்டுப் போகக் கூடாது.
தங்களது கருத்துக்கு நன்றி… இனி விவாதிக்க என்ன இருக்கிறது?!..
கட்டுரை இன்னும் கொஞ்சம் நல்லா எழுதியிருக்கலாம்னு சொன்னா அது அடி வெட்டா?
இன்னின்ன தரவுகள் இதில் இருந்திருக்கனும்னு வாசிப்பவர் சொல்லனுமா?
வாசிப்பவர் தனக்கு தெரியாத பல தரவுகள் கட்டுரையில் இருந்தா நல்லா இருக்கும்னு எதிர்பாக்குறது தப்பா?