privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்நீட் தேர்வின் வெற்றியும் தோற்கடிக்கப்பட்ட சமூக நீதியும் !

நீட் தேர்வின் வெற்றியும் தோற்கடிக்கப்பட்ட சமூக நீதியும் !

மருத்துவம் பயில சமஸ்கிருதம் கட்டாயம் என ஒரு காலம் இருந்தது. இப்போது அதன் இடத்தில் ஆங்கிலத்தைக் நிறுத்தி, தாய்மொழியில் பயிலும் மாணவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள்.

-

நீட் தேர்வின் வெற்றியும் தோற்கடிக்கப்பட்ட சமூக நீதியும் !

ழைகள், தாய்மொழியில் கல்வி கற்பவர்கள், தனியார் தனிப்பயிற்சி நிலையங்களில் சேருமளவிற்கு வசதியற்றவர்கள் இவர்களுக்கெல்லாம் மருத்துவராகும் ‘‘தகுதி” கிடையாது என்ற புதிய மனுநீதியை இந்திய சமூகத்தின் மீது உச்ச நீதிமன்றமும் நடுவண் மோடி அரசும் நீட் தேர்வின் வழியாகத் திணித்து வருகின்றன.

இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்தப்பட்ட விதமும், அத்தேர்வு முடிவுகளும் இந்த அநீதியை மீண்டும் வெட்ட வெளிச்சமாக்கியிருப்பதால், நீட் தேர்வை ஆதரிக்கும் கல்வியாளர்களால்கூட இந்தக் கசப்பான உண்மையை மறுக்க முடியவில்லை.

இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் இந்திய அளவில் 12 இடத்தைப் பிடித்த சென்னை மாணவி கீர்த்தனா, இத்தேர்வை எதிர்கொள்வதற்காகத் தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக, அதாவது தனது மேனிலைப் பள்ளிப் பருவம் முழுவதும் தனிப் பயிற்சி எடுத்து வந்திருக்கிறார்.

இத்தேர்வில் முதலிடம் பிடித்த கல்பனா குமாரி என்ற பீகார் மாணவி, பள்ளிக்குச் செல்வதைக்கூடத் தவிர்த்துவிட்டு, டெல்லிக்குச் சென்று தனிப் பயிற்சி எடுத்திருக்கிறார். அம்மாணவி +2 பொதுத் தேர்வை எழுதுவதற்குப் போதிய வருகைப் பதிவு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது, நீட் தேர்வில் அவர் படைத்த ‘‘சாதனையைக்” காட்டி அக்குற்றச்சாட்டை ஒதுக்கித் தள்ளியது, பீகார் அரசு.

நீட் தேர்வில் முதல் நூறு இடங்களைப் பிடித்த மாணவர்களுள் 17 பேர் தங்களிடம் பயின்றவர்கள் என விளம்பரம் வெளியிட்டிருக்கிறது, சிறீ சைதன்யா தனியார் பயிற்சி மையம். முதல் 100 இடங்களைப் பிடித்த மாணவர்களுள் 53 பேர் தங்களிடம் பயின்றவர்கள் என விளம்பரம் வெளியிட்டிருக்கிறது, நாராயணா மெடிக்கல் அகாடமி.

இத்தகைய விளம்பரங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்களைக் கொண்டு பார்த்தால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் மருத்துவக் கல்லூரி அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் சேர்ந்திருக்கும் மாணவர்களுள் தனிப் பயிற்சி எடுத்துக் கொள்ளாத மாணவர்களே இருக்க மாட்டார்கள் என்று கூறிவிட முடியும்.

அதேபொழுதில், பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் எடுத்திருந்தபோதும், தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிலுமளவுக்கு வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்ட மாணவி பிரதீபா, நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியால் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார்.

*****

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் கீழ் மட்டுமே நடத்தப்படும் நீட் தேர்வு அடிப்படையிலேயே ஒருதலைப்பட்சமானது என்பது ஒருபுறமிருக்க, அத்தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பிலும்கூட ஓரவஞ்சனை காட்டப்படுகிறது.

குறிப்பாக, இந்த ஆண்டு நீட் தேர்வு தமிழ் மொழி வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழிப்பெயர்க்கப்பட்டிருப்பதும் 60 இடங்களில் தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதும் நீட் தேர்வு நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டின.

நீட் தேர்வு முடிந்தவுடனேயே, தமிழ் வழி வினாத்தாளில் 49 தவறுகள் இருப்பதைக் கல்வியாளர்கள் பலரும் சுட்டிக் காட்டினர். அதற்குப் பதில் அளிக்காமல், அலட்சியமாகவும் மவுனமாகவும் இருந்து தமிழக மாணவர்களின் கழுத்தை அறுக்க முயன்றது சி.பி.எஸ்.இ.

தமிழ் வழியில் நீட் தேர்வை எழுதிய மாணவர்களின் நலன் கருதி சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜனால் தொடரப்பட்ட வழக்கை, சி.பி.எஸ்.இ., சட்டப்படியும் அணுகவில்லை, அறத்தின்படியும் அணுகவில்லை. மாறாக, இந்த வழக்கை சதிகளின் மூலம் முறியடிக்கவே முனைந்தது.

ஜூன் 4 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவித்திருந்தது, சி.பி.எஸ்.இ. அன்றுதான் இந்த வழக்கும் விசாரணைக்கு வரவிருந்தது. நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வழக்கில் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விசாரணை தொடங்குவதற்கு முன்பே, மதியம் 12.30 மணிக்கே நீட் தேர்வு முடிவுகளை உச்ச நீதிமன்றத்தின் அனுமதியோடு வெளியிட்டு, வழக்கைச் சீர்குலைக்க முயன்றது, சி.பி.எஸ்.இ.

மேலும், விசாரணையின்போது, ‘‘தேர்வு நடத்துவது மட்டும்தான் தனது பொறுப்பு, வினாத்தாட்களைச் சரி பார்ப்பது எல்லாம் தமது வேலையல்ல எனப் பொறுப்பின்றியும் திமிராகவும் வாதாடியது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மருத்துவக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடமாட்டோம் என்ற உத்தரவாதத்தைத் தமிழக அரசு உயர் நீதிமன்றத்திடம் அளித்திருந்தது. எனினும், அந்த உத்தரவாதத்தைக் காற்றில் பறக்கவிட்டு, தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, முதல்கட்ட கலந்தாய்வையும் நடத்தி முடித்துத் தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் துரோகமிழைத்தது, எடப்பாடி கும்பல்.

இவ்வழக்கு விசாரணையில் 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டு, ‘‘அக்கேள்விகளுக்குக் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும், கலந்தாய்வை நிறுத்திவைத்து புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது மதுரை உயர் நீதிமன்றம்.

ஆனால், மேல்முறையீட்டில் இத்தீர்ப்பை அங்கீகரிக்க மறுத்துவிட்டதன் மூலம் ஏறத்தாழ 24,000 மேற்பட்ட தமிழக மாணவர்களின் நம்பிக்கையைக் கொடூரமாகச் சிதைத்தது, உச்ச நீதிமன்றம்.

‘‘நீட் தேர்வு வினாத்தாளில் மொழிமாற்ற பிரச்சினை ஏதேனும் ஏற்படும் பட்சத்தில், வினாத்தாளில் இருக்கும் ஆங்கில வினாக்களே இறுதியானது என்ற தேர்வு விதி இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது சி.பி.எஸ்.இ.

தாய்மொழி வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் தரப்படும் வினாத்தாளைப் புரிந்துகொள்ள இயலாது என்பதால்தான், தத்தமது தாய்மொழியில் நீட் தேர்வை எழுத விருப்பம் தெரிவிக்கிறார்கள். தமிழ் வழி வினாத்தாளைப் பிழையின்றித் தயாரிப்பதைத் தட்டிக் கழித்திருக்கும் சி.பி.எஸ்.இ., தனது தவறை, குற்றத்தை மறைத்துக் கொள்ள, தேர்வு விதியைக் காட்டி தமிழக மாணவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்கிறது. சி.பி.எஸ்.இ.யின் இந்த வாதமும், அதனை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்திருப்பதும் இயற்கை நீதிக்கு எதிரானது மட்டுமல்ல, குரூரமானதும்கூட.

மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு சமஸ்கிருதம் கற்றிருக்க வேண்டும் என்ற விதியை உருவாக்கி வைத்துக்கொண்டு, மருத்துவப் படிப்பில் பார்ப்பன சாதியினர் செலுத்தி வந்த ஆதிக்கம் நீதிக் கட்சி ஆட்சியில்தான் ரத்து செய்யப்பட்டது. இப்பொழுது சமஸ்கிருதத்தின் இடத்தில் ஆங்கிலத்தைக் கொண்டுவந்து நிறுத்தி, தமிழ் உள்ளிட்டுத் தாய்மொழியில் படிக்கும் மாணவர்களை மருத்துவப் படிப்பில் இருந்து ஒதுக்கி வைக்கிறார்கள்.

தமிழகத்தின் உயர் கல்வி புலத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தவுடனேயே, அதன் காரணமாக பார்ப்பன மற்றும் ஆதிக்க சாதி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவது பாதிக்கப்படக் கூடாது எனப் பதட்டமடைந்த உச்ச நீதிமன்றம், 19 சதவீதக் கூடுதல் இடங்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் உருவாக்கி, அந்த இடங்களில் கூடுதல் இட ஒதுக்கீடால் பாதிப்படையும் ஆதிக்க சாதி மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்து கடந்த ஆண்டு வரை நடைமுறைப்படுத்தியும் வந்தது. ஆதிக்க சாதியினருக்காக ஆண்டு தோறும் பொழியும் கருணையைத் தவறான வினாத்தாளினால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களுக்கு ஒரேயொருமுறைகூடக் காட்டத்தயாராக இல்லை உச்ச நீதிமன்றம்.

*****

ந்த ஆண்டிற்கான தமிழக மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த பன்னிரெண்டே மாணவர்களுக்குத்தான் இடம் கிடைத்திருக்கிறது.

நீட் தேர்வு வருவதற்கு முன்பும்கூட இந்த எண்ணிக்கை சொல்லிக்கொள்ளும்படி இல்லைதான். ஆனால், நீட் தேர்வு, அரசுப் பள்ளிகளில் படிக்கும் கீழ் நடுத்தர வர்க்க மற்றும் ஏழை மாணவர்களை மருத்துவப் படிப்பிலிருந்து ஒதுக்குவதைத் திட்டமிட்ட வகையில் நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறது.

இதுவொருபுறமிருக்க, இந்த ஆண்டிற்கான மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் தனியார் பயிற்சி மையங்களும் குவிந்திருக்கும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து மட்டும் 5,646 மாணவ அழைக்கப்பட்டிருந்தனர்.

இது, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 21 சதவீதமாகும். இந்த எண்ணிக்கையோடு, சேலம், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, வேலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால், அது 12,585 ஆகும்.

அதாவது, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மொத்த மாணவர்களுள் 50 சதவீத மாணவர்கள் இந்தப் பத்து நகர்ப்புற மாவட்டங்களிலிருந்து அழைக்கப்பட்டுள்ளனர்.

அதேபொழுதில், சிவகங்கை, இராமநாதபுரம், பெரம்பலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 10 பின்தங்கிய மாவட்டங்களிலிருந்து கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 3,019 தான். (12.11 சதவீதம்)

அரசுப் பள்ளி எதிர் சி.பி.எஸ்.இ. பள்ளி, தமிழ் வழி எதிர் ஆங்கில வழி, நகர்ப்புறம் எதிர் கிராமப்புறம் என்ற முரண்களை நீட் தேர்வு ஆழப்படுத்தியிருப்பதை மேற்சொன்ன புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றன.

‘‘தகுதியான மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் சேருவதை உத்தரவாதப்படுத்துவது, மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுப்பது” என்ற நோக்கங்களுக்காகத்தான் நீட் தேர்வைக் கட்டாயமாக்குவதாக உச்ச நீதிமன்றம் திரும்பத் திரும்ப வாதாடி வருகிறது.

ஆனால் அதில் கடுகளவும் உண்மையில்லை. கட்டணம் மற்றும் மாணவர் சேர்க்கை விடயங்களில் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்குச் சட்டபூர்வமாகவே அளிக்கப்பட்டிருக்கும் சலுகைகளும் உரிமைகளும் மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தீவிரமடையச் செய்திருக்கிறதேயொழிய, அதனை இம்மியளவுகூடத் தடுத்துவிடவில்லை.

*****

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்ச மதிப்பெண்கள் எடுத்தால்தான் தேர்ச்சி என்ற விதி இருந்தது. அதன் பின்னர் இந்த விதி, தனித்தனியாக அல்லாமல், அனைத்துப் பாடங்களிலும் சேர்த்து குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என மாற்றியமைக்கப்பட்டது.

இப்புதிய விதியின்படி 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் பொதுப் பிரிவினருக்கு 131, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினப் பிரிவினருக்கு 107 என நிர்ணயிக்கப்பட்டது. இந்தக் குறைந்தபட்ச மதிப்பெண்கள் 2018 -ஆம் ஆண்டில் முறையே 119, 96 எனக் குறைக்கப்பட்டது.

மேநிலைப் பள்ளி இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைவதற்குக் குறைந்தபட்சமாக 35 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்றுள்ள நிலையில், மருத்துவக் கல்லூரிக்கான தகுதிகாண் தேர்வு எனப்படும் நீட் (2018) தேர்வில் குறைந்தபட்சமாக 13.3 சதவீதத்திலிருந்து 16.5 சதவீத மதிப்பெண்கள் வரை எடுத்தால் தேர்ச்சி என்பது நகைப்புக்குரியது.

தரத்தை நிலைநாட்டுவதற்காகத்தான் நீட் தேர்வு என்று முழங்கியவர்கள், தரத்தை மென்மேலும் குறைத்துக் கொண்டே செல்வது ஏன்? இங்கேதான் இருக்கிறது சூட்சுமம்.

இந்தியாவிலுள்ள மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த மருத்துவ இடங்கள் 66,620. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் 30,455. தனியார் கல்லூரிகளில் 36,165. இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் எண்ணிக்கையோ 7,14,562.
அதாவது ஒரு இடத்துக்கு 11 மாணவர்கள். அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான சேர்க்கைக்கு ஒரு இடத்திற்கு அதிகபட்சமாக மூன்று அல்லது நான்கு மாணவர்கள் என்ற விகித அடிப்படையில்தான் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுகின்றனர்.

பிறகு ஏன் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்து அதிகமான மாணவர்களை வெற்றி பெற வைக்கிறது சி.பி.எஸ்.இ.?

இது, நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆள் பிடித்துக் கொடுப்பதற்கான ஏற்பாடாகும்.

நிர்வாக ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கு நீட் தேர்வில் எத்துணை மதிப்பெண் கிடைத்திருக்கிறது என்பதைவிட, ஒவ்வொரு ஆண்டும் பல இலட்ச ரூபாய் கட்டணம் செலுத்தும் வசதியிருக்கிறதா என்பதுதான் உண்மையான தகுதியாகும். எனவே, வலை எந்தளவிற்கு விரிவாக விரிக்கப்படுகிறதோ, அந்தளவிற்குப் பணம் படைத்த மாணவர்கள் கிட்ட வாய்ப்புண்டு என்பதால்தான், நீட் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

தனியாருக்கு ஆள் பிடித்து கொடுக்கும் புரோக்கர் வேலையைத்தான் மோடி அரசு செய்து வருகிறது. 2017 ஆம் ஆண்டில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள 5,000 மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகிய மைய அரசு, மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டித்து வாங்கியதோடு, ஒரு இடத்திற்குப் பத்து மாணவர்கள் என்ற விகிதத்தில் கலந்தாய்வுக்கு மாணவர்களை அழைக்கவும் அனுமதி பெற்றுத் தந்தது.

இதன் விளைவாக, நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களை மட்டுமே எடுத்துத் தேர்ச்சி பெற்ற பணக்கார வீட்டுக் குலக்கொழுந்துகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேரும் வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கப்பட்டது.

அந்த ஆண்டில் இந்தியாவெங்கிலுமுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 1,990 மாணவர்கள் நீட் தேர்வில் எடுத்த மதிப்பெண் 150 குறைவு. அவர்களுள் நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இயற்பியல், வேதியியல் பாட நீட் தேர்வில் 180 வெறும் 9 மதிப்பெண்களையே பெற்றிருப்பதும் 110 பேர் இந்த இரண்டு பாடங்களிலுமோ அல்லது ஏதாவது ஒன்றிலோ பூஜ்ஜியம் அல்லது அதற்குக் குறைவான மதிப்பெண்ணைப் பெற்றிருப்பதையும் முன்னணி ஆங்கில நாளிதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது.

இதன் பிறகும்கூடத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் கடந்த ஆண்டில் முழுமையாக நிரம்பவில்லை. இதனால் கர்நாடக மாநிலத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் தள்ளுபடி விலையில் இடங்களை நிரப்ப முயன்றதாகச் செய்திகள் வெளிவந்தன. அப்படிப்பட்ட துர்பாக்கிய நிலை 2018 -லும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, நீட் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் முந்தைய ஆண்டைக் காட்டிலும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

*****

நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆள் பிடித்துவிடும் ஏஜெண்டாக மட்டுமின்றி, அப்பல்கலைக்கழகங்கள் கட்டணம் என்ற பெயரில் அடிக்கும் கொள்ளைக்கு செக்யூரிட்டியாகவும் உச்ச நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டு கல்விக் கட்டணம் 18 இலட்ச ரூபாய் முதல் 22 இலட்ச ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அவ்வழக்கில் ஆண்டுக் கல்விக் கட்டணத்தை 13 இலட்ச ரூபாயாக நிர்ணயித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆண்டுக் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கக் குழுவொன்றை அமைக்க வேண்டும் என்றும், அந்தக் குழு 13 இலட்ச ரூபாய்க்கு மேல் கட்டணம் நிர்ணயித்தால், கூடுதல் கட்டணத்தை மாணவர்களிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம் எனப் பல்கலைக்கழக நிர்வாகங்களுக்குச் சாதகமாகவே தீர்ப்பளித்தது.

கட்டண நிர்ணயக் குழு அமைக்கும் வரையிலும்கூடப் பொறுக்காத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

அந்நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உல்டாவாக மாற்றி, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களிடம் 22 இலட்ச ரூபாய் வரை கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதித்துவிட்டு, கட்டண நிர்ணயக் குழு குறைவாகக் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்தால், மீதிப் பணத்தை மாணவர்களிடம் நிர்வாகங்கள் திருப்பிச் செலுத்த வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. யானை வாய்க்குள் போன கரும்பு மீண்டு வந்ததாக வரலாறு உண்டா?

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2.85 இலட்ச ரூபாய் முதல் நான்கு இலட்ச ரூபாய் வரை கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அக்கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.12.50 இலட்ச ரூபாய் வரை கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவை இரண்டுக்குமான சராசரியைக் கணக்கில் கொண்டால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கல்விக் கட்டணம் அதிகபட்சம் ஏழு இலட்ச ரூபாய்தான்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளுக்கும் பெயரைத் தவிர வேறு பெரிய வேறுபாடு இல்லை என்ற நிலையில், நிகர்நிலைப் பல்கலைக்கழக நிர்வாகங்கள் ஆண்டு கல்விக் கட்டணமாக 22 இலட்ச ரூபாய் வசூலித்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதித்திருப்பது கட்டணக் கொள்ளைக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டபூர்வ அங்கீகாரம் தவிர வேறில்லை.

நீட் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்களில் குறைந்தபட்ச கட்டணம் முப்பது, நாற்பதாயிரம் முதல் அதிகபட்சமாக ஒரு இலட்ச ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதிய 12,69,222 மாணவர்களுள் குறைந்தபட்சமாக சரிபாதிப் பேர் தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுக்குத் தயாராகியிருப்பார்கள் என எடுத்துக்கொண்டால்கூட, பல்லாயிரம் கோடி ரூபாய் இந்த வணிகத்தில் புரளுகிறது என்பது உறுதியாகிறது.

மதிப்பெண்களையோ, அறிவுத் திறனையோ அல்ல, பணத்தை முதன்மைத் தகுதியாகக் கொண்டுவந்து நிறுத்தியிருப்பதுதான் நீட் தேர்வின் ஒரே சாதனை!

-திப்பு
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018

மின்னூல்:
புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart