திருப்பூரில் 2010-2011-ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட நூலகம் இன்னும் திறக்கப்படவில்லை… இன்று நூலகத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு வசூலிக்கும் இந்துமுன்னணி ’பக்தர்கள்’ சரக்கடித்து பொழுதைக் கழிக்கிறார்கள். சட்டம் , கட்டுப்பாடு இதுவெல்லாம் உழைக்கும் மக்களுக்கும், மக்களுக்காக போராடும் அமைப்புகளுக்கு மட்டும் தான் போலும்.. !

விநாயகர் சிலைகளை பெரும்பாலும் ரோட்டை மறித்தே வைத்துக் கொள்ள வாய் வழி உத்தரவு கொடுத்துள்ளது அரசு நிர்வாகம். தற்போது புதிய தகரம் கொண்டே  அதிகமாக செட் போட்டுள்ளார்கள். இப்படியேவிட்டால் அடுத்து நிரந்தர கட்டிடமே அமைத்து விடுவார்கள் போல…

ரோட்டில் பல ஆண்டுகளாக இருக்கும் விநாயகர் கோவிலையே மறைத்து புது விநாயகர் சிலையை வைத்து காணிக்கையும், அன்னதானத்திற்கென்று அரிசி மூட்டை வசூலிப்பது பக்தியால் அல்ல என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

தள்ளுவண்டி இட்லிக்கடைக்காரர்களின் புலம்பலைக்கேளுங்கள்.

“3 நாள் பிழைப்பு போச்சு தம்பி. நாங்க இட்லி கடை போட்ட இடத்தில் பிள்ளையார் சிலை வைத்துள்ளனர். வேறு எங்கு போய் இப்போது கடை போட…. அப்படியே வேறு இடத்திற்கு போனோமென்றால் திரும்ப அந்த இடம் நமக்கு கிடைக்காதே… அருகில் கடை போட்டால் ஓசி இட்லி கேட்டு நச்சரிப்பான்கள். ஆகையால் வீட்டிலேயே உட்காரவேண்டியது தான். குப்பையை எல்லாம் அப்படியே போட்டுவிட்டும் போய்விடுவார்கள், அதையும் நாங்க தான் சுத்தம் செய்யனும்…

சரிங்க இதையெல்லாம் உங்க நல்லதுக்கு தான செய்யுறாங்க.. விநாயகன் அருளால் உங்க வியாபாரம் சிறப்பா நடக்குறதுக்கும்….மக்கள் நல்லபடியா வாழுறதுக்கும் தான பண்ணுறாங்க…? என்று சும்மா கேட்டோம்.

அடப்போங்கப்பா விநாயகரை வைத்து செமயா துட்டு சம்பாதிக்குறாங்க… அப்புறம் நிறைய கட்சிக்கும் பணம் பொருளுன்னு சேர்க்குறாங்க… ஏற்கனவே ஏதேதோ வரிப்போட்டு திருப்பூர் பனியன் கம்பெனிகளில் கால்வாசியை மூடிட்டாங்க. இரவில் குல்பி ஐஸ் வித்து பொழைத்தேன். அதுவும் போணியாகமா தள்ளு வண்டியில் இட்லி வித்துப்பொழைக்கிறேன்… இப்பது அதுக்கும் பிரச்சனை. ஏற்கனவே உள்ள குப்பையை அள்ள வக்கில்ல விநாயகர் விழான்னு ரோட்டவெல்லாம் மறித்து பந்தலும் வாழைமரம், தோரணம் என அழிச்சாட்டியம் செய்ய அனுமதி வேற கொடுத்துடுறாங்க இந்த அதிகாரிங்க….!

– தருமர், திருப்பூர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க