புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யபுரத்தில், கடந்த 15-ம் தேதி  (15.09.2018) அன்று தடையை மீறி நடந்த விநாயகர் ஊர்வலத்தில் பாஜக தேசியச் செயலாளரும் ஃசைபர் சைக்கோவுமான  ஹெச்.ராஜா பங்கேற்றார். அப்போது, போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்த அவர், உயர்நீதிமன்றத்தையும், போலீசாரையும் இழிவான வார்த்தைகளில் பேசினார்.

நேற்று (16.09.2018) முதல் ஃசைபர் சைக்கோ எச்.ராஜா-வின் அந்த ஆக்ரோசமான பேச்சு  வீடியோ  சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

அந்த வீடியோவில், உயர்நீதிமன்றத்தால் மேடையமைத்துப் பேச தடை செய்யப்பட்ட ஒரு பகுதியில் மேடை போட்டு பேசுவேன் என அடம்பிடிக்கிறார் எச்ச ராஜா.

தடுத்து சமாதானப்படுத்த கூனிக்குறுகி வரிக்கு வரி அண்ணாச்சி என கெஞ்சிக் கேட்கும் போலீசு அதிகாரிகளை  நாயை விட இழிவாக நடத்துகிறார் எச்.ராஜா. நொடிக்கு நொடி போலீசு அதிகாரிகளின் முகத்துக்கு நேரே கையை நீட்டி, “Police is Corrupt” எனக் கத்துகிறார். அந்த போலீசு அதிகாரியோ மானத்தை வீட்டிலேயே கழட்டி வைத்துவிட்டு வந்திருப்பார் போல. எச்.ராஜாவின் அழிச்சாட்டியத்துக்கு சமாதானம் கூற மீண்டும் முயல்கிறார். “அண்ணாச்சி, ஹை கோர்ட் ஆர்டர் அண்ணாச்சி” என காலில் விழாத குறையாக கெஞ்சுகிறார்.

அதற்கு எச்.ராஜாவோ பார்ப்பனக் கொழுப்போடு “ ஹை கோர்ட்டாவது மயிராவது !” எனத்துடிக்கிறார். நீதிபதிகளுக்கும் மானம் இல்லை என நினைத்தார்களோ என்னவோ அந்த போலீசு அதிகாரிகள் மீண்டும் எச். ராஜாவிடம் கெஞ்சத் தொடங்கினர்.

இன்னும் ஒரு படி மேலே ஏறிப் பேசினார் எச்.ராஜா. “வெட்கமா இல்லையா டிஜிபி வீட்டில ரைடு நடக்கிறது. அன்னைக்கே நீங்கள்லாம் யூனிஃபார்மைக் கழட்டிப் போட்டுட்டு வீட்டுக்கு போயிருக்கனும்.”, ”லஞ்சம் வாங்குறீங்களேயா லஞ்சம் … கிறுஸ்தவன்ட்ட முசுலீம்கிட்ட வாங்குறதயெல்லாம் சேத்து நான் தர்றேன்யா லஞ்சம்.”எனக் கதறிக் கொண்டே தனது அடிபொடிகளுக்கு அங்கு மேடை போட உத்தரவிடுகிறார்.

எச்.ராஜாவின் நோக்கம் போலீசின் கிரிமினல் வேலைகளையோ, இல்லை லஞ்ச லாவண்யங்களையோ அம்பலப்படுத்துவது அல்ல! தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி 13 பேர்களைக் கொன்ற போலீசுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தவர் இந்த எச்ச ராஜா. அப்போது இந்த குட்கா ஊழல் போலீசு நினைவுக்கு வரவில்லை! இல்லை அமித்ஷா மகன் கோடி கோடியாக ‘சம்பாதித்த’ தொழில் குறித்து எந்த போலீசும் விசாரிக்கவில்லை என இவர் ‘எழுச்சி’ காட்டவில்லை!

ஸ்டெர்லைட் போராட்டமோ, எட்டுவழிச்சாலை போராட்டமோ கருத்து சொன்னவர்களையே தேடித்தேடி கைது செய்த போலீசு இங்கே ராஜா முன் பயந்து நடுங்குகிறது. நீங்கள் இப்படி பேசலாமா என்று கெஞ்சுகிறது. அவர் என்ன பெரிய புடுங்கியா என்று ஒரு போலீசுக்காரர் கூட கேட்கவில்லை. மத்திய அரசின் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவரை ராயல் வமிச அரசர் போல கருதுகிறது போலீசு. தமிழகத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு கூடும் கூட்டம் கூட எச்.ராஜாவுக்கு கூடுவதில்லை. ஆனால் போலீசோ பயப்படுகிறது. அடிமை எடப்பாடி அரசு போல தமிழக போலீசும் ஆர்.எஸ்.எஸ்-க்கு அஞ்சி நடப்பது ஆச்சரியமானது அல்ல!

சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்த பிறகே பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின்கீழ் திருமயம் போலீசார் எச்.ராஜா மீது வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அவர்களை கைது செய்ய திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன், பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் 2 தனிப்படைகளும் அமைக்கப் பட்டிருந்தாலும் இதுவரை கைது செய்ய முடியவில்லை. மேலும் பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்றத்தை அவமதிப்பதாகக் கூறி தமிழக டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆ.. ஊ.. என்றால் நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் அவமதித்துவிட்டார்கள் என்று கொதித்தெழும் நீதியரசர்களும் இந்த விவகாரத்தை தாமாகவே கையில் எடுத்து நீதிமன்ற வழக்கு தொடுக்குமாறு உத்திரவிடவில்லை. என்ன இருந்தாலும் ராஜா ‘தேசியக் கட்சியின் செயலாளர்’ அல்லவா?

திருவாளர் எச்ச ராஜா

இதுகுறித்து எச்.ராஜா மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.ராஜசேகர் என்பவர் முறையீடு செய்தார். இந்த முறையீட்டை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுத்ததோடு எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக தொடர்ந்தால் அதுகுறித்து நீதிமன்றம் விசாரிக்க தயார் என்றும், தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது எனவும் கூறியுள்ளனர். அவர்களுக்கும் ஏதோ பயம் இருப்பது தெரிகிறது.

பிரச்சினை பெரிதான பிறகு அந்த வீடியோவில் பேசியது என் குரல் அல்ல என்று ‘அட்மின்’ புகழ் எச்.ராஜா பல்டி அடித்துள்ளார். இதிலிருந்தே அவர் ‘இந்து’வாக அந்த இடத்தில் பேசவில்லை. கூட இருந்த ‘இந்துக்களிடம்’ தான் ஒரு அப்பாடக்கர் என்று காட்டுவதற்காக ஜம்பமடித்துள்ளது தெரிகிறது. அதனால்தான் வீடியோவில் வாங்கிய காசுக்கு மேல் கூவும் முறையில் கத்தியுள்ளார் போலும்!

எச்.ராஜா உடன் எப்போதும் போலீசு பாதுகாப்பு உண்டு. அந்தப் போலீசாரை தமிழக போலீசுதான் ஷிப்ட் முறையில் அனுப்புகிறது. ஆக எச்ச எங்கே இருக்குமென்று தமிழக போலீசுக்கு தெரியாமல் இருக்காது. ஆனால் ராஜா இதுவரை கைது செய்யவில்லை. அவரைத் தேட போலீசு இரு படைகளை போட்டு அலைகிறதாம். எஸ்.வி.சேகர் போல ராஜாவும் இனி நீதிமன்றத்தில் முன்பிணை வாங்கும்வரை இப்படி போக்கு காட்டுவார்!

தமிழகத்தில் மதக்கலவரத்தை தோற்றுவிக்கும் முகமாக எப்போதும் ஊளையிடும் இந்த நபரை குண்டாசில் கைது செய்து ஐந்தாறு வருடங்கள் வெளியே வராதபடி செய்யும்வரை இந்த வெறியரை தடுக்க முடியாது! அடிமை அரசு இதை செய்யாது! அப்படி செய்ய வைக்க வேண்டுமென்றால் மக்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிமன்றத்தையும், போலீசையும் எச்.ராஜா கடுமையாக திட்டி பேசியதற்கு என்ன காரணம்?

  • பார்ப்பனக் கொழுப்பு
  • பேசியது அட்மின்தான், அவரல்ல
  • இந்துக்கள் மீது இழைக்கப்படும் அநீதி
  • தன்னை மறந்த கைப்பிள்ளையின் வெத்துவேட்டு
  • ஒரு தேசபக்தனின் அஞ்சாத வீரம்
  • எவன் கைது செய்வான் எனும் திமிர்
    (பதில்களில் மூன்றை தெரிவு செய்யலாம்)

 

ட்விட்டரில் வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

ஃபேஸ்புக்கில் வாக்களிக்க:

 வினவு செய்திப் பிரிவு