உலக தூய்மை தினம் கடந்த 15-09-2018 அன்று கொண்டாடப்பட்டது. அதே தினம் இந்திய அரசின் சார்பில் ’சுவச் பாரத்’ தினம் கடைபிடிக்கப்பட்டது. ”இன்று காலை 9:30 மணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தூய்மையே சேவை இயக்கத்தின்’ துவக்கத்தைக் கடைபிடிப்போம். காந்தியின் ‘தூய்மை இந்தியா’ கனவை நிறைவேற்ற நமக்கு இது வலிமை சேர்க்கும். இதை தூர்தர்சனிலும் ‘நரேந்திரமோடி கைபேசி செயலியிலும்’ வேறு சில ஊடகங்களிலும் நீங்கள் நேரலையாகக் காணலாம்” என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
At 9:30 AM, we mark the start of the historic 'Swachhata Hi Seva Movement', which will add vigour to our efforts to fulfil Bapu's dream of a 'Clean India.' It can be watched live on @DDNewsLive, the 'Narendra Modi Mobile App' and other mediums.
— Narendra Modi (@narendramodi) September 15, 2018
இதைத் தொடர்ந்து தில்லியின் பகார்கஞ்சில் அமைந்துள்ள பாபா சாகேப் அம்பேத்கர் உயர்நிலைப் பள்ளியில் தானே கலந்து கொண்ட ’தூய்மைப் பணிகள்’ குறித்த புகைப்படங்களை வெளியிட்டார் பிரதமர். அது தொடர்பான காணொளியும் ஊடகங்களில் வெளியானது. அந்தக் காணொளியில் புற்களின் மத்தியில் கிடக்கும் இரண்டு காகிதக் கோப்பைகளை நீண்ட விளக்குமாற்றால் கூட்டி அகற்ற முயல்கிறார் பிரதமர். அவை அசைய மறுக்கின்றன. பின்னர் தானே குனிந்து அவற்றைக் கையில் எடுத்துப் போடுகிறார். இதையடுத்து பா.ஜ.க பிரமுகர்களும், பாஜகவுக்கு அணுக்கமான பல்வேறு மாநில அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும் தங்கள் பங்குக்கு ‘குப்பை அள்ளும்’ புகைப்படங்களை வெளியிட்டு ’தூய்மை தினத்தை’ கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்தக் கொண்டாட்டங்கள் நடந்ததற்கு சரியாக ஒரு நாள் முன், செப்டெம்பர் 14-ம் தேதி அன்று செத்துப் போகிறார் 28 வயதான அனில். தில்லியின் டாப்ரி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அமைந்துள்ள வீட்டின் உரிமையாளர் சாத்பீர் என்பவர், தனது வீட்டின் கழிவுநீர்க் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பை நீக்க அனிலை வரவழைத்துள்ளார். எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவுநீர்த் தொட்டியினுள் இறங்கியுள்ளார் அனில்.
அனிலை வரவழைத்த சத்பீர், கழிவு நீர்க் குழாய்க்குள் இறங்குவதற்கு ஏதுவாக இடுப்பில் கட்ட ஒரு பழைய கயிறைக் கொடுத்துள்ளார். அனிலின் சகாவான ரமேஷ் கயிறைப் பிடித்துக் கொண்டு வெளியே நிற்க, அனில் குழாய்க்குள் இறங்கியுள்ளார். உள்ளே சென்ற 30 நொடிக்குள் உடைப்பு ஏற்பட்டு அனிலின் பாரம் தாங்காமல் கயிறு அறுந்து கழிவு நீர்த் தொட்டிக்குள் விழுந்துள்ளார் அனில். உள்ளிருந்து காப்பாற்றக் கோரி அனிலின் கூக்குரல் சரியாக 30 நொடிகளுக்கு கேட்டுள்ளது; பின் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி அனில் இறந்துள்ளார்.
- படிக்க:
- சென்னையை சுத்தம் செய்யும் தொழிலாளிகளின் துயரம் !
- மோடி புகழ் பாடும் தில்லியில் நான்கு துப்புரவு தொழிலாளிகள் பலி !
- கடலூரில் மூன்று துப்புரவுத் தொழிலாளிகளைக் கொன்ற அரசு !
அனில் இறந்ததற்கு சரியாக 5 நாட்களுக்கு முன் (செப்டெம்பர் 9, ஞாயிற்றுக் கிழமை) தில்லியை அடுத்துள்ள டி.எல்.எப் குடியிருப்பு ஒன்றில் ஐந்து துப்புரவுத் தொழிலாளர்கள் கழிவு நீர்த் தொட்டியில் மூழ்கி இறந்தனர். பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் அப்பகுதியைச் சுற்றி பி.எம்.டபிள்யூ, ஜாகுவார் போன்ற விலையுயர்ந்த கார் ஏஜென்சிகளும், நட்சத்திர விடுதிகளும் அமைந்துள்ளன.
கடந்த ஒரு வருடத்திற்குள் மட்டும் தில்லியைச் சுற்றி சுமார் 20-க்கும் மேலான துப்புரவுத் தொழிலாளர்கள் கழிவு நீர்த் தொட்டிகளுக்குள் மூழ்கி இறந்துள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவெங்கும் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்துள்ளதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. இத்தனைக்கும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்கிற சட்டம் காகிதத்தில் உள்ளது. ஆனால், இதுவரையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி துப்புரவுத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியதாக ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.

விண்வெளிக்கு செயற்கைக் கோள்களை அனுப்பும் அளவுக்கு தொழில்நுட்பத்தில் முன்னேறிய இந்தியாவிடம் வெறும் 10 அல்லது 20 அடி கழிவுத் தொட்டிகளின் கழிவுகளைக் கையால் அகற்றும் வழக்கத்தை மாற்றுவதற்கு எந்தத் தொழில்நுட்பமும் இல்லை எனக் குறிப்பிடுகிறார் பெசவாடா வில்சன். தொழில்நுட்பம் இல்லை என்பதல்ல, அப்படி ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கவோ, வெளிநாடுகளில் இருந்து வாங்கவோ மனமில்லை என்பதுதான் பிரச்சினை. அந்த மனம் பார்ப்பனிய மனம்; கழிவுகளையும் குப்பைகளை அகற்றுவது சாதியின் பேரால் சிலருக்கு விதிக்கப்பட்ட கடமை என நினைக்கும் மனம். இந்திய ஆளும் வர்க்கத்தின் ஆன்மாவாக பார்ப்பனியமே இருப்பதால் ஒடுக்கப்பட்ட மக்கள் கழிவு நீர்த் தொட்டிகளில் மூழ்கிச் சாவதை அவர்களுக்கு விதிக்கப்பட்ட ‘கர்மாவாக’வே அது கருதுகின்றது.
கடந்த 9-ம் தேதி இறந்து போன தொழிலாளர்களுக்கும் எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் கழிவு நீர்த் தொட்டிகளை இயந்திரங்களைக் கொண்டே சுத்தம் செய்கிறார்கள் என்பதைக் குறிப்பிடும் சுரேஷ் குமார் ரோஹில்லா, ஒருவேளை மனிதர்களின் நேரடித் தலையீடு தேவைப்படும் இடங்களில் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயமாக வழங்கப்படுகின்றன என்கிறார். தில்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சூழலியல் மையத்தில் பணிபுரியும் ரோஹில்லா மேலும் கூறுகையில், “எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு, இங்கே மக்கள் மலிவானதைத் தேடுகிறார்கள்” என்கிறார். தொழில்நுட்பத்தையும் பாதுகாப்பு உபகரணங்களையும் விட தலித் மக்களின் உயிர்கள் மலிவானது என்பதாலேயே இந்தக் கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த லட்சணத்தில் “தூய்மை இந்தியா” போன்ற திட்டங்களும், அதன் மேல் பாய்ச்சப்படும் அதீத விளம்பர வெளிச்சமும் உங்களுக்கு அருவெறுப்பையும் அசூசையும் ஏற்படுத்துகிறதா? ஆம், எனில் ’நகர்ப்புற நக்சல்’ பட்டியலில் உங்கள் பெயரையும் இணைத்துக் கொண்டதற்கு வாழ்த்துக்கள்.
– வினவு செய்திப் பிரிவு
மேலும் படிக்க: