பீமா கோரேகான் வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட செயல்பாட்டாளர்கள் ஐவரில், கவுதம் நவ்லகா-வை விடுவித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். நவ்லகா  வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டு 24 மணி நேரங்கள் கடந்துவிட்டது, எனவே தொடர்ந்து காவலில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது அடிப்படையற்றது, ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளது.

கைதான செயல்பாட்டாளர்கள் கவுதம் நவ்லகா உள்ளிட்ட ஐவரின் வீட்டுக் காவலை நான்கு வாரங்களுக்கு நீட்டிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் உரிய நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்த  நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் நவ்லகாவை விடுவித்து உத்தரவிட்டிருக்கிறது.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த நவ்லகா, “டெல்லி உயர்நீதிமன்றத்தின் மூலம் என்னுடைய விடுதலையை வென்றிருக்கிறேன். இது எனக்கு வியப்பை அளிக்கிறது”என்கிறார்.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதர், நீதிபதி வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு நவ்லகாவின் மனுவை விசாரித்தது. நவ்லகாவை கைது செய்து புனே கொண்டு செல்ல உத்தரவிட்ட நீதிபதியை கடுமையாக சாடிய நீதிபதிகள், கைது விவரங்கள் மராத்தியில் எழுதப்பட்டிருப்பதாகவும் வழக்கு விசாரணை செய்யும் நீதிபதி மராத்தியில் புலமை பெற்றவராக இருக்க  முடியாது எனவும் தெரிவித்தனர். நவ்லகாவின் வழக்கு ஆதாரங்கள் அற்ற, ஜோடிக்கப்பட்ட வழக்காக உள்ளது எனவும் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

தன்னுடைய கைது குறித்து நவ்லகாவுக்கு தெரிவிக்கவில்லை; அதுகுறித்த முன்னறிப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்த டெல்லி நீதிமன்றம், மகாராஷ்டிர காவல்துறை நவ்லகாவின் காவலை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என கோரியதை நிராகரித்தது.

கடந்த மாதம் நாட்டின் பல்வேறு ஊர்களில் செயல்பாட்டாளர்கள் வீடுகள், அலுவலகங்களை புனே காவல்துறை சோதித்தது. செயல்பாட்டாளர்கள் வரவரராவ், வெர்னான் கான்சால்வேஸ், அருண் ஃபெரெய்ரா, சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா ஆகியோர் ஆகஸ்டு 28-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். வரலாற்றாசிரியர் ரொமீலா தாப்பர், பிரபாத் பட்நாயக், தேவகி ஜெயின், சதீஷ் தேஷ்பாண்டே, மற்றும் மஜ தருவாலா ஆகியோர் புனே போலீசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதன் அடிப்படையில் ஆகஸ்டு 29-ஆம் தேதி கைதானவர்களை வீட்டுக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

படிக்க:
மோடி அரசின் எமர்ஜென்சி : அருந்ததி ராய் – பிரசாந்த் பூசன் – ராமச்சந்திர குஹா கண்டனம் !
வரலாறு : பார்ப்பனியத்தை வென்ற தலித் மக்களின் பீமா – கோரேகான் வெற்றித்தூண்

செயல்பாட்டாளர் கவுதம் நவ்லகா தனது டெல்லி இல்லத்தில் கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவரை டெல்லியிலிருந்து கைது செய்து புனே கொண்டுசெல்ல தெற்கு டெல்லியின் சாகேத் மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்த அனுமதியையும் உயர்நீதிமன்றம் தள்ளி வைத்திருக்கிறது.

மேலும், நவ்லகாவை மகாராஷ்டிர அரசு ஏன் கைது செய்தது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாநில அரசு காவல் துறையின் நடவடிக்கை எந்த வகையில் சட்டப்பூர்வமானது என்பதையும் புனேவுக்கு கொண்டு செல்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறித்தும் பரிசீலிக்கும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

செய்தி ஆதாரம்:
Bhima Koregaon case: Have won my freedom, says Gautam Navlakha as Delhi HC ends his house arrest