கோவில் சொத்துக்களை அபகரிக்க காவிகளின் சதி | காணொளி

தமிழக கோவில்களை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் சங்க பரிவாரத்தின் திட்டத்தை எதிர்த்து தமிழக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் வழக்கறிஞர் அருள் மொழி ஆற்றிய உரை !

கோவில்களை மீட்போம் என்ற பெயரில் எச்.ராஜா உள்ளிட்ட சங்க பரிவார கும்பல்கள், தமிழகத்தில் உள்ள மொத்தக் கோவில்களையும் ஆக்கிரமிக்கத் திட்டமிட்டுள்ளன. இந்துக் கோவில்களை இந்துக்களே நிர்வகிக்க வேண்டும், அரசு நிர்வகிக்க கூடாது என்பது சங்க பரிவாரங்களின் முக்கியமான நிகழ்ச்சி நிரலாகும். மன்னர் காலத்திலும் வெள்ளைக்காரன் காலத்திலும் சிலைகள் கடத்தப்பட்டதற்கு காரணமே இந்த ‘இந்துக்கள்’ நிர்வகித்ததுதான். அதனால்தான் நீதிகட்சி காலத்தில் இவை அரசுடமையாக்கப்பட்டன. காணாமல் போன சிலைகளுக்கு பல காரணங்கள் இருக்கும் போது இந்து அறநிலையத்துறையை மட்டும் குற்றம் சாட்டுகிறது காவிக் கும்பல்.

காவிக் கும்பலின் உருட்டலுக்கு இணங்க தமிழக போலீசு, அறநிலையத்துறை அதிகாரிகள் சிலரை கைது செய்துள்ளது. ஆனால் இதில் குற்றம் சாட்டப்பட்ட பல்வேறு முதலாளிகள், கட்சி பிரமுகர்களை கைது செய்யாமல் அமைதி காத்து வருகிறது.

இதையே காரணமாக்கி கோவில்களை மீட்போம் என இயக்கம் எடுத்திருக்கிறது பாஜக. இவர்களின் சதித்திட்டத்திற்கு இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பலியாக்கப்படுவதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு அதிகாரிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிகழ்வில் திராவிடர் கழக பேச்சாளர் அருள் மொழி கலந்து கொண்டு பேசினார்.

“எச்.ராஜா  பேசுவதை ஏதோ ஒரு நகைச்சுவையாகக் கடந்து போகக் கூடாது. மிகப்பெரும் அபாயம் கொண்ட நபர் எச்.ராஜா. இவரை போலீசு கைது செய்யும் என நினைப்பதுகூட பகற்கனவுதான். மாநில அரசு முதல் உயர்நீதிமன்றம் வரை அனைவரும் காப்பாற்றி வருகின்றன.

சிலையைக் காணவில்லை, சிலையைக் காணவில்லை என்கிறார்கள். இதே போலத்தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் இலட்சம் கோடி ஊழல் என அங்கலாய்த்தார்கள். ஆனால் இறுதியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ஒரு ஆதாரத்தைக் கூட அரசுதரப்பினால் முன் வைக்க முடியவில்லை எனக் கூறியிருக்கிறார். இங்கும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

கோவில் சிலைகளைக் காணவில்லை என்று கூறினால், இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில்களின் கணக்கை வெளிப்படையாக எடுத்து வைப்போம். அதே போல இந்து அறநிலையத் துறையின் கீழ் வராத மடங்களின் கணக்கையும் வெளிப்படையாக எடுத்து வைக்கட்டும். அதன் பிறகு உண்மை தெரியவருமே.. இதை அவர்கள் செய்வார்களா ?

நீ நாத்திகவாதியாயிற்றே, நீ ஏன் கோவில் குறித்து பேசுகிறாய் என நம்மைக் கேட்கிறார்கள். நான் நாத்திகவாதியாக இருக்கலாம், ஆனால் ஆத்திகரான என் தாத்தாவின் சொத்தை மற்றொருவன் எடுத்துச் செல்ல விடமுடியுமா?

இந்தக் கும்பலின் தலைவர் மற்றும் கோட்சேவின் குருவுமான சாவர்க்கரே ஒரு நாத்திகர் தானே. ஒரு நாத்திகரால் இந்துக்களுக்கான அமைப்புக்கு தலைவராக முடியுமென்றால், ஒரு நாத்திகன் கோவிலைக் காப்பாற்ற பேசுவதற்கு எது தடை ?” என்று பேசினார்.

கோவில்களை காவிமயமாக்கத் துடிக்கும் சங்க பரிவாரத்தின் சதியைக் குறித்து பேசுகிறார் ஒரு அறநிலையத்துறை அதிகாரி.

பாருங்கள் பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க