அகர்வாலுக்குத் துணை போகிறது அரசு | தூத்துக்குடி மக்கள் உரை | காணொளி

சென்னையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மனு அளிக்க வந்த தூத்துக்குடி மாவட்ட மக்கள் அளித்த நேர்காணல் மற்றும் உரைகள் - காணொளி

ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தூத்துக்குடி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆலைக்கு எதிராக போராடிய மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய அரசு, கண் துடைப்பு நடவடிக்கையாக ஆலையை சீல் வைத்தது. அதனை எதிர்த்து வேதாந்தா மேல்முறையீடு செய்து, அவ்வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்து வரும் சூழலில், தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக் குழுவினரை தூத்துக்குடியில் ஆய்வு நடத்தி அறிக்கை தரச் சொன்னது தே.ப.தீர்ப்பாயம்.

தூத்துக்குடி மக்கள் திரண்டு வந்து ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என ஆய்வுக் குழுவிடம் மனு அளித்தனர். சுமார் 93% மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதாகத் தெரிவித்தார் ஆய்வுக்குழு தலைவர்.

இது தொடர்பாக மீண்டும் ஒரு கருத்துக்கேட்புக் கூட்டத்தை சென்னையில் நடத்தி வருகிறது ஆய்வுக் குழு. பிரச்சினை தூத்துக்குடி மக்களுக்கு எனும் நிலையில், ஆய்வுக் குழு சென்னையில் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன ?

ஆய்வுக் குழு முன்னர் தங்கள் வாதங்களை வைக்க பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் சென்னை எழிலகத்தில் நேற்று குவிந்தனர். அங்கு வந்திருந்த தூத்துக்குடி மக்களிடம் எடுக்கப்பட்ட பேட்டி மற்றும் உரை.

***

“தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் கடந்த 1996-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. மீனவ மக்கள் மற்றும் ஸ்டெர்லைட் சுற்று வட்டாரப் பகுதியில் வழிக்கும் மக்கள் இணைந்து அதனை விரட்ட போராட்டத்தில் இறங்கினர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது போலீசு.
அதன் பின்னர் சாதிய ரீதியாக பிளவை உண்டாக்கி போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்தது. பின்னர் 2000-ம் ஆண்டுக்கு பின்னர்தான் பலதரப்பட்ட மக்களும் ஸ்டெர்லைட் பாதிப்பினை நேரடியாக உணர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

கடந்த மே22 போராட்டத்தை மக்கள் நடத்திய போது ஸ்டெர்லைட்டின் கூலிப்படையினரும், சீருடை அணியாத போலீசும் உள்ளே புகுந்து போராட்டத்தை சீர்குலைத்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் முன்னரே “அசம்பாவிதம்” நடக்கும், ஜாக்கிரதை என போலீசு எச்சரித்தது. ஆகவே இது ஏற்கனவே திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுதான்” என்கிறார் தூத்துக்குடி புதுத்தெருவைச் சேர்ந்த ஆன்ஸ்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையின் போட்டி நிறுவனங்கள் பணம் தந்ததால்தான் இந்த போராட்டம் நடந்ததா ? ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என சிலர் கூறுவது ஏன் ? ஆகிய கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார் ஆன்ஸ்.

*****
மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பலமுறை மனு கொடுக்கப்பட்டிருக்கிறது. அரசிடம் முறையிடவில்லை என்று கூறுவது பொய். ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக நின்ற அரசு, போராட்டத்தை ஒடுக்குவதற்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தியது. இது திட்டமிட்ட செயல். நிலத்தடி நீர் கடுமையாக மாசுபட்டுள்ளது.

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு இருக்கிறது என்பதை காட்டுவதற்காகவே சென்னையில் மனு கொடுக்கும் இந்த நாடகத்தை நடத்துகின்றன, அரசும் தேசிய பசுமைத் தீர்ப்பாயமும். மீண்டும் ஸ்டெர்லைட்டை திறந்து விடலாம் என அரசு கனவு கண்டால், அதில் மண்தான் விழும் என தீர்மானகரமாகச் சொல்கிறார், திருச்செந்தூரைச் சேர்ந்த விடுதலை செழியன்.

*****

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி, குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டு சிறை சென்ற மகேசின் தாயார் மாரியம்மாள் பேசுகையில், “இந்த ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் அனைவருக்கும் பாதிப்பு இருக்கிறது. புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலரும் காயமடைந்தார்கள். அனைவருக்கும் நட்ட ஈடு கொடுத்தால் சரியாகிவிடுமா ? தனது மகனை ஊனத்துடன் பார்த்துக் கொண்டிருக்க எந்தத் தாயால் முடியும்? இந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், இந்த ஆலை மூடப்படும் வரை நாங்கள் உறுதியாக போராடுவோம்.

நாங்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பணம் வாங்கிவிட்டோம் என்கிறார்கள். எங்களது சொந்த உழைப்பில்தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். எங்கள் வருங்கால சந்ததியினரைக் காக்க இறுதி வரை உறுதியாக போராடுவோம்” என்றார்.

***

“ஸ்டெர்லைட் ஆலையைக் கடந்து அந்த சாலையில் சென்றால் கையில் அவ்வளவு தூசு இருக்கும். முகத்தைக் கழுவினால் அவ்வளவு தூசு வரும். தூத்துக்குடி பாதிப்புகளைப் பற்றி சென்னையில் வந்து மனு கொடுக்கச் சொல்வதன் நோக்கம் என்ன? எங்கள் மக்கள் வரக்கூடாது என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இது. ஒரு கண் துடைப்பு நாடகத்தை அரசு நடத்துவது போலத்தான் தோன்றுகிறது” என்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த நவீஸ்.

***

ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த தங்கையா அவர்கள் பேசுகையில், “மக்களின் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் கருத்துக்களை கேட்பதற்கு எதற்கு சென்னைக்கு வரவழைத்து இழுத்தடிக்க வேண்டும். பாதிப்பிற்கு ஆதாரம் வேண்டுமெனக் கேட்கிறார்கள். கடந்த 2013-ல் ஏற்பட்ட நச்சு வாயு கசிவினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அரசு, தனியார் மருத்துவமனையில் உள்ள ஆவணங்களை விட பெரிய சான்று வேறு என்ன வேண்டும், மே 22 அன்று எழுந்த எழுச்சியை விட வேறென்ன சாட்சி வேண்டும்.

மராட்டியத்தில் ரத்தினகிரியிலிருந்து ஏன் விரட்டியடிக்கப்பட்டது இந்த ஆலை. இதை விட என்ன சாட்சி வேண்டும் ? பாதிக்கப்பட்ட இடம் தூத்துக்குடி – அங்கு மனு வாங்குவீர்களா ?. இங்கு வாங்குவீர்களா? 93% மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள் என்று கூறுகிறார் ஆய்வுக் கமிட்டியின் தருண் அகர்வால். இதற்கும்மேல் என்ன ஆதாரம் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த அரசு யாருக்காக இயங்குகிறது? இது எல்லாம் ஒரு நாடகம் போலத்தான் தோன்றுகிறது” என்கிறார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க