மார்க்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி -1

தாய் நாவல் குறித்து வி. இ. லெனின் – மாக்சிம் கார்க்கி

…லெனின் வேறு விதமாக இருப்பார் என்று நினைத்தேன். அவரிடம் ஏதோ ஒன்று இல்லாதது போல் தோன்றிற்று. அவர் கரகரத்த குரலில் பேசினார்; தமது அக்குளில் எங்கேயோ கைகளை நுழைத்துக் கொண்டு இறுமாப்பான பார்வையுடன் அங்கு நின்று கொண்டிருந்தார், மொத்தத்தில் அவர் ஒரு வெகு சாதாரணமானவராகக் காட்சி அளித்தார். அவரிடம் “தலைவரின் அடையாளம் எதுவுமே இல்லை. நான் ஓர் எழுத்தாளர். சிறு விஷயங்களைக் கவனிக்கும்படி என்னுடைய தொழில் என்னை வற்புறுத்துகிறது. இக்கடமை ஒரு பழக்கமாகிவிட்டது. சில சமயங்களில் இது சலிப்பூட்டும்.

மாக்சிம் கார்க்கி.

நான் ஜி. வி. பிளெக்கனோவிடம் ”அழைத்துச் செல்லப்பட்ட” போது, அவர் தமது கைகளைக் குறுக்கு வாட்டத்தில் வைத்துக் கொண்டு ஒரு கடுமையான, ஆனால் சலிப்படைந்த பார்வையை என்மீது வீசினர், தமது கடமையைச் செய்து சோர்வுற்ற ஓர் ஆசிரியர் மற்றொரு புதிய மாணவனைக் காண்பது போன்று அவர் பார்த்தார். அவர் மிக மிகச் சர்வசாதாரனமா ஒன்றை என்னிடம் கூறினார்: ”நான் உங்களுடைய திறமையைப் போற்றுபவன்” இது தவிர அவர் வேறு எதுவும் சொன்னதாக எனக்கு நினைவில்லை. காங்கிரஸ் நடந்தபோது அவரோ அல்லது நானோ ”மனந்திறந்து” பேசவேண்டும் என்று விரும்பவில்லை.

ஆனால், கரகரத்த குரலில் பேசும் இந்தத் தடித்த, துருதுருப்பான மனிதர், சாக்கரடீஸ் புருவம் போன்ற தமது புருவத்தை தமது ஒரு கையால் துடைத்துக் கொண்டும், மற்றொரு கையால் எனது கையை இழுத்துக் கொண்டும் தமது அதிசயமான ஜீவ ஒளி நிறைந்த கண்களில் நேசமிக்க பார்வையை பளிச்சிட என்னை நோக்கி தாய் நூலின் குறைபாடுகள் பற்றி பேசத் தொடங்கினார் ஐ.பி.லேடிஷ்னிகோவிடமிருந்து அதன் கையெழுத்துப் பிரதியை இரவல் வாங்கி அவர் படித்திருந்தார். அந்நூலை அவசரத்தில் எழுதினேன் என்று நான் சொன்னேன், ஏன் அவசர அவசரமாக எழுதினேன் என்று நான் விளக்குவதற்கு முன்பு லெனின் தலையை அசைத்து விட்டு அவரே அதை விளக்கினார்: நான் அதை அவசர அவசரமாக எழுதியது நல்லதாய் போயிற்று; ஏனெனில் இப்புத்தகம் தேவைப்பட்டது. பல தொழிலாளிகள் உணர்ச்சி வேகத்தில், தன்போக்கில் புரட்சிகர இயக்கத்தில் சேர்ந்தனர்; தாய் படிப்பது அவர்களுக்குப் பயனுள்ளதாயிருந்தது.

“மிகவும் காலப் பொருத்தமான புத்தகம்” என்று அவர் கூறினார். இதுதான் அவருடைய ஒரே பாராட்டுதல். இது எனக்கு எவ்வளவோ பெரிதாக இருந்தது. பின்னர் அவர், தாய் அந்நிய மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறதா? எந்த அளவு ரஷ்ய, அமெரிக்க தணிக்கையாளர்கள் இப்புத்தகத்தைக் கெடுத்துவிட்டனர் என்று வேகமாகவும், காரியகர மான முறையிலும் கேட்டார். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று நான் அவரிடம் சொன்னதும், ‘ முதலில் அவர் முகத்தைச் சுளித்தார்; பின்னர் தமது தலையைப் பின்பக்கமாக சாய்த்துத் தமது கண்களை மூடிக் கொண்டு அதிசயமான வகையில் சிரிக்க ஆரம்பித்தார். அவருடைய சிரிப்பு தொழிலாளிகளின் கவனத்தை ஈர்த்தது.

♦♦♦

மாக்சிம் கார்க்கியின் தாய்

I

புகையும் எண்ணெய் அழுக்கும் நிறைந்த காற்றில் தொழிலாளர் குடியிருப்புக்கு மேல், நாள்தோறும் அந்த ஆலைச்சங்கு அலறிக் கூச்சலிடும். வேலையால் இழந்த சக்தியைத் தூக்கத்தால் மீண்டும் பெறாத தொழிலாளர்கள், ஆலைச்சங்கின் அழைப்புக்குப் பணிந்து, அழுது வடியும் வீடுகளிலிருந்து கடுகடுத்த முகங்களுடன் அடித்து மோதிக்கொண்டு வெளியே ஓடி; கலைப்பட்ட கரப்பான் பூச்சிகளைப் போலத் தெருக்களில் மொய்ப்பார்கள்.

மாக்சிம் கார்க்கி
மாக்சிம் கார்க்கி
ஒரு அலட்சியமான தன்னம்பிக்கையுடன் நின்றுகொண்டிருந்த அந்த ஆலை, பதிற்றுக் கணக்கான விளக்குகளால் புழுதி படிந்த சாலையில் ஒளிபாய்ச்சிக் கொண்டிருக்கும் குளிரும் குமரியிருட்டும் கவிந்த அந்த அதிகாலையில், செப்பனிடப்படாத சாலையில், அவ்வாலையின் கற்கூடாரங்களை நோக்கி விரைவார்கள் தொழிலாளர்கள். பரபரக்கும் அவர்கள் பாதங்களின் கீழே புழுதி நெறுநெறுக்கும். தூங்கி வழியும் கரகரப்பான கூக்குரல்கள் எங்கும் எதிரொலிக்கும். கொச்சைத்தனமான வசவுகள் காற்றைச் சீறிக் கிழிக்கும் இயந்திரங்களின் ஓங்காரமும், நீராவியின் முணமுணப்பும் இத்தொழிலாளர்களுக்கு எதிராக மிதந்து வரும் குண்டாந்தடிகள் போன்ற நீண்ட கரிய புகைபோக்கிகள் அக்குடியிருப்புகளை விட உயர்ந்து நின்று துயரமும், கடுகடுப்பும் காட்டிக்கொண்டிருப்பது தொலை தூரத்திலிருந்தும் தெரியும்.

சாயங்காலச் சூரியன், வீட்டுச் சாளரங்களின் மீது, ஓய்ந்து போன தன் கிரணங்களைப் படரவிடும் மாலைப் பொழுதில், செமித்துத் தள்ளப்படும் காடு போல், தன் பாறை வயிற்றுக்குள்ளிருந்து, தொழிற்சாலை மக்களை வெளித்தள்ளும். மீண்டும் அவர்கள் அந்த அசுத்தமான தெருக்களின் வழியே கறுத்துப் புகையடித்த முகங்களோடு, பளபளக்கும் பசித்த பற்களோடு, யந்திர எண்ணையின் பிசுக்கு நாற்றம் அடிக்கும் உடலங்களோடு, நடந்து வருவார்கள். அப்போது அவர்களது குரலில் ஓரளவு உயிர் இருக்கும். உவகையும் கூட இருக்கும். அன்றைய நாள் வேலை முடிந்தது. வீட்டில் உணவும் ஓய்வும் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும்.

தொழிற்சாலை யந்திரங்கள் தேவையான மட்டும் அந்தத் தொழிலாளர்களது சக்தியை உறிஞ்சித் தீர்த்துவிடுவதோடு அந்த நாள் விழுங்கப்பட்டுவிடும். எந்தவிதமான எச்சமிச்சங்களும் இல்லாமல் அன்றையப் பொழுது அழிந்து கழியும். மனிதனும் தனது சவக்குழியை நோக்கி ஓரடி முன்னேறிவிடுவான். ஆனால் இப்போதோ ஓய்வின் சுகத்தையும், புகைமண்டிய சாராயக் கடையின் சந்தோஷத்தையும் அவள் எதிர்பார்ப்பாள். அதில் அவனுக்குத் திருப்தி.

ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த ஜனங்கள் பத்து மணி வரையிலும் தூங்கிக்கொண்டிருப்பார்கள். கண்ணியமான இல்லறவாசிகள் தங்களிடமுள்ள சிறந்த ஆடையணிகளைத் தரித்துக்கொண்டு பிரார்த்தனைக்காகத் தேவாலயத்துக்குச் செல்வார்கள். போகும் போது இளவட்டப் பிள்ளைகள் மதத்தின் மீது காட்டும் அலட்சியத்தைக் கண்டித்துச் சரமாரியாகப் பேசிக்கொண்டே செல்வார்கள். பிரார்த்தனை முடிந்த பின்னர் அவர்கள் வீட்டிற்குத் திரும்பி, அப்பம் சாப்பிடுவார்கள், மீண்டும் மாலை வரை தூங்கத் தொடங்குவார்கள்.

வருஷக் கணக்காக அதிகரித்துக்கொண்டே வரும் அலுப்பினால், அவர்களது வயிற்றுப் பசிகூட மந்தித்துப் போய்விட்டது. அந்த வயிற்றை உணர்ச்சி பெறச் செய்வதற்காக அவர்கள் கார நெடி நிறைந்த ஓட்கா மதுவைக் குடித்துக் குடித்துக் கிளர்ச்சி தரும் எரிச்சலை உண்டு பண்ணிக் கொள்வார்கள்.

மாலை நேரங்களில் அவர்கள் வீதிகளில் சுற்றித் திரிவார்கள்; ரப்பர் செருப்பு உடையவர்கள். தெருவின் தரை காய்ந்துபோயிருந்தாலும் கூட அதைப்போட்டுக்கொண்டு திரிவார்கள்; குடை வைத்திருப்பவர்கள், பொழுது வெளிறிட்டு நிர்மலமாக இருக்கும் போதும், அதை உடன் கொண்டு போவார்கள்.

வழியில் தங்கள் நண்பர்களைச் சந்திக்கும் போது தொழிற்சாலையைப் பற்றியும் யந்திரங்களைப் பற்றியும் பேசிக்கொள்வார்கள். மேஸ்திரிகளை வைவார்கள். அவர்கள் தங்கள் தொழிலோடு சம்பந்தப்பட்ட விசயங்களையே பேசினார்கள் சிந்தித்தார்கள். பேசிய விசயத்தை பேசிப் பேசி சலித்துப் போன அவர்களது அன்றாடப் பேச்சில் என்றாவது ஒருநாள் தான் ஏதோ ஒரு சக்தியற்ற எண்ணத்தின் ஒளி லேசாக மின்னிட்டுப் படர்ந்து மறையும். அவர்கள் வீட்டுக்குத் திரும்பியவுடன் தங்கள் மனைவிமாரோடு சண்டை பிடிப்பார்கள்; அடிக்கவும் செய்வார்கள்; தங்களது முஷ்டிகள் வலி கண்டாலும் கூட அடிப்பதை நிறுத்தமாட்டார்கள். இளைஞர்கள் சாராயக் கடைக்கு அடிக்கடி செல்லுவார்கள்; அல்லது வேறு யார் வீட்டுக்காவது சென்று பொழுது போக்குவார்கள்; அங்கு ஆர்மோனியம் வாசிப்பார்கள், ஆபாசமான பாட்டுக்களைப் பாடுவார்கள், ஆடுவார்கள், ஏசுவார்கள், குடித்துக் கிடப்பார்கள். அவர்கள் உழைத்து உழைத்து மிகவும் ஓய்ந்து போனவர்களாதலால், குடித்தவுடனேயே போதை வெறி உச்சிக்கு ஏறிவிடும். அவர்களது இதயங்களில் ஏதென்றறியாத எரிச்சல் குடிகொண்டிருக்கும். எனவே இந்த மாதிரியான உணர்ச்சிகளிலிருந்து விடுபடுவதற்காக, சிறு சந்தர்ப்பம் கிடைத்த போதிலும் அந்நேரத்தில் அவர்கள் சீக்கிரமே உணர்ச்சி வசப்பட்டு, ஒருவரையொருவர் மிருகத்தனமான மூர்க்க வெறியோடு கட்டித் தழுவி உருண்டு புரள்வார்கள். இதனால் ரத்தக் காயங்கள் காணும் சண்டைகள் தான் கண்ட பலன். சமயங்களில் அந்த காயங்கள் படுகாயமாய்ப் போவதுண்டு. சில வேளை கொலைகளே நிகழ்ந்துவிடுவதுமுண்டு.

படிக்க:
அந்தத் ‘தாயை’ சந்திக்க விரும்புகிறீர்களா?
சிறுகதை: எழுத்தரின் மரணம்! – ஆன்டன் செகாவ்

அவர்களது மனித சம்பந்தத்தை மறைமுகமான குரோத உணர்ச்சி ஆக்கிரமித்திருக்கும்; அவர்களது தசைக் கோளங்களின் தளர்ச்சியை எப்படி ஈடு செய்து முறுக்கேற்ற முடியாதோ அது போலவே இந்த உணர்ச்சியும் வெகுநாட்களாய் ஊறி உறைந்து போயிருக்கும். அவர்கள் பிறக்கும் போதே இந்தத் தீய உணர்ச்சியும் அவர்களோடு பிறந்து ஓர் இருண்ட நிழலைப் போல், அவர்கள் சாகிற மட்டும் அவர்களைத் தொடர்ந்து செல்லும்; இலக்கற்ற, வெறுக்கத்தக்க கொடுஞ்செயல்களுக்கே அவர்களைத் தூண்டிவிட்டுக்கொண்டிருக்கும்.

விழா நாட்களில், இளைஞர்கள் வெகு நேரங்கழித்து அடிபட்ட முகங்களுடன் வீடு திரும்புவார்கள். திரும்பும்போது அவர்களது துணிமணிகள் எல்லாம் கிழிந்து தும்பு தும்பாகி புழுதியும் சேறும் படிந்திருக்கும். சமயங்களில் அவர்கள் தமது தோழர்களுக்குத் தாம் கொடுத்த அடிகளைப் பற்றி வாய்வீச்சு வீசி வீறாப்புப் பேசுவார்கள். சமயங்களில் தங்களது குடிவெறியை, பரிதாப நிலையை, இழி நிலையை, கசந்த வாழ்வை, அவமானத்தை எண்ணி அழுவார்கள். சீறியெழுவார்கள் அல்லது சோர்ந்து போவார்கள்.

சமயங்களில் எங்கோ ஒரு வேலிப்புறத்தின் நிழலிலாவது, சாராயக்கடையின் தரையிலாவது போதை மயக்கத்தில் கிடக்கும் தம் மக்களைத் தேடிக் கண்டு பிடித்துப் பெற்றோர்கள் வீடு கொண்டு வந்துச் சேர்ப்பார்கள்: வீடு வந்து சேர்ந்த பிறகு முதியவர்கள் அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டுவார்கள், அந்த இளைஞர்களது தொள தொளத்துப்போன உடம்பைக் குத்துவார்கள். பிறகு அவர்களை ஏதோ ஒரு அன்புடன் படுக்கையில் பிடித்துத் தள்ளித் தூங்கவைப்பார்கள். அதிகாலையில் அலறும் ஆலைச்சங்கின் கோபாவேசமான கூச்சலைக் கேட்டு எழுந்திருந்து வேலைக்குச் செல்ல வேண்டுமே என்பதற்காகவே இவ்வாறு செய்வார்கள்.

அவர்கள் தங்கள் குழந்தைகளைச் சரமாரியாக உதைப்பார்கள். திட்டுவார்கள். என்றாலும் இளைஞர்கள் குடிப்பதோ சண்டை சச்சரவு செய்வதோ அவர்களுக்குத் தவறாகப்படுவதில்லை. தந்தைமார்கள் இளைஞர்களாயிருந்த காலத்தில் அவர்களுந்தான் குடித்தார்கள், சண்டையிட்டார்கள். அவர்களது பெற்றோர்களும் பதிலுக்கு அவர்களை உதைக்கத்தான் செய்தார்கள். வாழ்க்கை அப்படியேதான் பழகிப்போய்விட்டது. சீராகவும் பொதுவாகவும் எங்கோ அது வருஷக்கணக்கில் சேற்றுக் குழம்பாக ஒடிக்கொண்டிருந்த பழைய காலத்துப் பழக்க வழக்கங்களுடன் இறுகப் பிணைந்து நாள்தோறும் ஒரே மாதிரியான சிந்தனையும் செயலுமாய் இயங்கிக்கொண்டிருந்தது. அந்த வாழ்வில் எந்தவித மாறுதலையும் ஏற்படுத்த எவருமே விரும்பவில்லை.

சில சமயங்களில் வேறு பிரதேசங்களிலுள்ள மக்கள் அந்தத் தொழிலாளர் குடியிருப்புக்கு வருவதுண்டு. அந்த இடத்துக்குப் புது ஆசாமிகள் என்ற காரணத்தால் இங்குள்ளவர்களின் கவனத்தை ஆரம்பத்தில் அவர்கள் கவர்வதுண்டு. அவர்கள் வேலை பார்த்து வரும் இடங்களைப் பற்றிய அதிசயக் கதைகளைச் சொல்லும் போது இங்குள்ளவர்களுக்கு அதில் லகுவில் ஈடுபாடும் ஏற்படுவதுண்டு. ஆனால், அந்தப் புதுமை சீக்கிரத்திலேயே போய்விடும். அந்த மனிதர்களும் இவர்களுக்குப் பழகிப் போய்விடுவார்கள்; பிறகு அவர்களைக் கவனிப்பதைக் கூட இவர்கள் நிறுத்திவிடுவார்கள். புதிதாக வருபவர்கள் சொல்லுவதிலிருந்து இவர்களுக்கு ஒரே ஒரு உண்மை புலப்படும். தொழிலாளிகளின் நிலைமை எங்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது என்பதுதான் அது. இதுதான் உண்மையென்றால், பிறகு எதைப்பற்றி, என்ன பேசுவது?

ஆனால், அந்தப் புதிய மனிதர்களில் சிலர் இந்தக் குடியிருப்பு மக்கள் இதுவரை கேட்டிராத புது விஷயங்களைப் பற்றிப் பேசுவார்கள். ஆட்சேபிக்காமல் நம்பிக்கையின்றி அவற்றைக் கேட்பார்கள். சிலருக்குக் குருட்டுத்தனமான கிளர்ச்சியை அவை உண்டாக்கும். சிலருக்கு லேசான இதய அதிர்ச்சியைத் தரும். சிலருக்கோ அடையாளமே தெரியாமல் மங்கித் தோன்றும். ஒரு சிறு நம்பிக்கை மனத்தில் எழும்பிக் குறுகுறுக்கும். ஆனால் அவர்கள் அனைவருமே தங்களது வாழ்க்கையை மேலும் சிரமத்துக்கு ஆளாக்கிடக்கூடிய அந்த வேண்டாத உணர்ச்சியையும் கிளர்ச்சியையும் மறக்கடித்து விரட்டுவதற்காக மேலும் மேலும் குடித்துத் தீர்ப்பார்கள்.

படிக்க:
பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் – காம்ரேட்
பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்

அந்தப் புதிய ஆசாமிகளில் யாரேனும் ஒருவரிடம் அவர்கள் ஏதாவது ஒரு புதுமையைக் காண நேர்ந்தால், அதை அந்தத் தொழிலாளர்கள் மறக்கவே மாட்டார்கள். தம்மைப் போலில்லாத அந்த ஆசாமியிடம் சர்வ ஜாக்கிரதையுடன் நடக்க முனைவார்கள். தங்களது தற்போதைய வாழ்வின் ஒழுங்கை அவர் கெடுத்துக் குலைத்து விடுவாரோ என்று அவர்கள் பயப்படுவது போலிருக்கும். இப்போதைய வாழ்க்கை சிரம ஜீவனம்தான் என்றாலும் அமைதியாகவும் குழப்பமற்றதாகவும் இருக்கிறதே என்பதே அவர்கள் அடையும் திருப்தி. நிரந்தரமாக ஒரே சுமையைத் தம்மை அழுத்தும் வாழ்க்கையை தாங்கிக் கொள்வது அவர்களுக்குப் பழகிப் போய்விட்டது. மேலும் தங்களது கஷ்டத்துக்கும் ஒரு நிவர்த்தி உண்டு என்ற நம்பிக்கையே அவர்களுக்கு இல்லையாதலால், தனது வாழ்க்கையில் புதியதாக வரும் எந்த மாறுதலும் தங்கள் துயரங்களையும் கஷ்டங்களையும் அதிகரிக்கத்தான் செய்யுமேயன்றி ஒருக்காலும் அவற்றைக் குறைத்துவிடப் போவதில்லை என்றே அவர்கள் கருதினார்கள்.

எனவே, புதுக் கருத்துக்களைக் காதில் போட்டுக் கொள்ளாமலேயே ஒதுங்கிச் செல்வார்கள் அவர்கள். அந்தப் புதிய ஆசாமிகளும் அங்கிருந்து மறைந்து போவார்கள். அங்கேயே தங்கும் ஒரிருவர் அங்குள்ளவர்களைப் போலவே நாளடைவில் வாழத் தொடங்குவார்கள். அவ்வாறு ஒருங்கிணைய முடியவில்லையென்றால் ஒதுங்கி வாழ்வார்கள் …

இப்படிச் சுமார் ஐம்பது வருடங்கள் வாழ்ந்த பிறகு ஒரு தொழிலாளி செத்து மறைவான்.

(தொடரும்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க