சென்னை சேத்துப்பட்டு, மேயர் ராமநாதன் தெருவோர பிளாட்பாரத்தில் மூங்கில் கூடைகள், பிரம்பாலான நாற்காலி, ஊஞ்சல், சோபா போன்ற கலைப்பொருட்களை கடைவிரித்திருந்தார் நாகராஜ். மூன்று பிரம்புக் குச்சிகள் ஏற்ற இறக்கங்களின்றி ஒருசேர வளைந்து நயமாய் காட்சியளிக்கிறது நாகராஜ் கைவண்ணத்தில் உருவான நாற்காலி.

நாற்காலிகள் மட்டுமல்ல; நாகராஜ் குடியிருக்கும் வீடும் மூங்கிலால் ஆனதுதான். நட்சத்திர விடுதிகளிலும், பண்ணை வீடுகளிலும் இருப்பதைப் போன்ற கண நேரக் களிப்பிற்கான குடில்களல்ல இவை. பிளாட்பாரத்தையொட்டி, கூவம் கரையோரம் திசைக்கொரு மூங்கிலை நிறுத்தி அதன் மேல் பலகையை போட்டு சமதளமாக்கப்பட்டிருக்கிறது, இக்குடிசை. சுற்றுச்சுவர் கிடையாது. வெயில் மழையிலிருந்து காக்க மேலே போர்த்தப்பட்டிருக்கிறது, பிளாஸ்டிக் தார்ப்பாய். இந்தக் குடிசையில்தான் கடந்த பதினைந்து வருடமாக குடியிருக்கிறார், நாகராஜ்.

பத்தாம் வகுப்புவரை படித்திருக்கும் நாகராஜ், ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட குரும்பன்ஸ் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அப்பா காலத்திலேயே ஆந்திராவை விட்டு சென்னைக்கு வந்துவிட்டார்.

‘’நான் மெட்ராசுக்கு வந்து பதினஞ்சு வருசமாகுது. சத்ய ஸ்வரூப், சந்தீப், ஸ்வாதினு ரெண்டு பசங்க ஒரு பொண்ணு. எல்லாம் ஆந்திராவில படிக்குதுங்க. லீவுக்கு வந்திருக்கிதுங்க. நாங்க இங்கேயேதான் இருக்கோம்’’ என்கிறார், நாகராஜின் மனைவி லெட்சுமி.

வீட்டில் மின்சாரமில்லை; கேஸ் அடுப்பு இல்லை; பீரோ, கட்டிலும் இல்லை. சமைத்துப் போட்ட சமையல் பாத்திரங்கள் பிளாட்பாரத்தில் இறைந்து கிடக்கின்றன. மழைகாலங்களில் விறகு அடுப்பில் சமைக்க முடியாத போது, அம்மா உணவகம் அல்லது விலை மலிவான ரோட்டோரக் கடை உணவுதான் அவர்களின் பசியாற்றுகிறது.

கையிலிருக்கும் ஆண்டிராய்டு போன் ஒன்றுதான் அவர்களின் ஒரே பொழுதுபோக்கு; வெளி உலகைக் காண்பதற்கான ஒரே வாய்ப்பு. ‘’தலையெல்லாம் ஒரே பொடுகு. யூட்யூப்ல போட்ருந்தாங்க, அதான் வெங்காயத்தை அரச்சி தலையில தடவியிருக்கிறேன்’’ என்று புன்சிரிப்போடு கூறுகிறார், லெட்சுமி. நாகராஜின் நண்பர்களின் வீடுகளில்தான் போனுக்கு சார்ஜ் செய்து கொள்கிறார்கள்.

‘’2005 இல வெள்ளம் கரைய தொட்டுகிட்டு போச்சு. பொருள எல்லாம் பிளாட்பாரத்துல எடுத்து வச்சிட்டு இங்கேயே இருந்திட்டோம். வர்தா புயலப்பதான் பொருள எல்லாம் தார்ப்பாய் போட்டு மூடி வச்சிட்டு, சேத்துப்பட்டு ரயில்வே ஸ்டேசன்ல தங்கிட்டோம்’’ என்கிறார் நாகராஜ்.

‘’ஆந்திரா நெல்லூர் பக்கத்துலதான் என் சொந்த ஊர். எங்களுக்கு சொந்தமாக ஆடுகள் இருந்திச்சி. மேய்ச்சலுக்கு ஓட்டிட்டு போவோம். புல்லு கிடைக்கல. அப்பவே வித்துட்டோம். அப்புறம் இவரை கல்யாணம் பன்னிட்டு இங்கயே வந்துட்டேன்’’ என்கிறார் லட்சுமி.

பிள்ளைகள் மூவரும் நெல்லூரையடுத்த கோலகாமுடியில் தாய்மொழி வழியில் விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். இங்கேயே தெலுங்கு பள்ளிகள் இருக்கிறதே, படிக்க வைக்கலாமே? என்றபோது, ‘’நாங்க பழங்குடியினர்ன்றதால ஆந்திராவிலேயே படிச்சா., அரசாங்கம் வேலை போட்டுக்கொடுப்பாங்க. முதல்ல எங்களுக்கு போட்டுட்டுதான் மத்தவங்களுக்கு போடுவாங்க.’’ என்று வெள்ளந்தியாய்க் கூறுகிறார், லட்சுமி. வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பழங்குடியினருக்கு வழங்கப்படும் முன்னுரிமையையே, படித்துவிட்டால் அரசாங்க வேலை நிச்சயம் என்ற அளவிற்கு புரிந்து கொண்டுள்ளார்.

பிள்ளைகளை பதினைந்து நாளுக்கு ஒருமுறை சென்று பார்த்து வருகின்றனர். மூன்று நாட்களுக்கு மேலாக தொடர்விடுமுறை கிடைக்கும் நாட்களில் மட்டுமே பிள்ளைகளை இங்கே அழைத்து வருகிறார்கள்.

வளைக்கப்படாத பிரம்புகள்; மூங்கில் குச்சிகள்; இரண்டு சிறு கத்திகள்; சிறியதாய் ஒரு அறுவா; சின்ன சுத்தியல்; பொடி ஆணிகள் கொஞ்சம்; வார்னிஷ் டப்பா இதுதான் நாகராஜின் ஆலை. அவரது சொத்தும் அதுதான். பிரம்பை நெருப்பில் மிதமாக வாட்டியெடுத்து லாவகமாக வளைப்பதில்தான் திறமையிருக்கிறது, என்கிறார் அவர்.

‘’பிரம்பு நாற்காலி இல்லனா ஊஞ்சல் பின்னனுனா மெட்டீரியல் மட்டும் 1,500 முதல் 2,000 வரையில் அடக்க செலவு ஆகும். குறைஞ்சது ரெண்டு நாளாயிடும் செஞ்சி முடிக்க. முதநாள் பிரம்ப நெருப்புல வாட்டி வேனுன்ற பதத்துக்கு வளச்சி பிரேம் செஞ்சிருவோம். அப்புறம் அடுத்தநாள் அத பின்னுவோம். அதுக்கப்புறம்தான், வார்னிஷ் அடிச்சி பினிசிங் கொடுப்போம். இது எப்படியும் ரெண்டு மூனு நாளாயிரும்’’ என்கிறார், நாகராஜ்.

கணவருக்கு உதவியாக லெட்சுமியும் வேலை செய்கிறார். நாகராஜ் செய்து முடித்த பிரம்பு நாற்காலியொன்றுக்கு வார்னிஷ் பூசியபடியே பேசிய லெட்சுமி, ‘’செய்யிற பொருளுக்கேத்தமாதிரி 2,500 லிருந்து 3,500 வரை சொல்வோம். பேரம் பேசிதான் வாங்குவாங்க. பண்டிகை காலங்களில் மட்டுமே ஓரளவு வருமானம் இருக்கும். மத்த நாட்களில் சின்னதா இருக்கும் கூடைகள், தட்டுங்க மட்டும் விக்கும். சிலநேரம் வாரம் முழுக்க வியாபாரமே ஆகாம போயிடும். அப்போ, 3,000 ரூபாய் பொருள 1,500க்கு தர்றியானு கேட்பாங்க. வித்தாதான் சாப்பாடுன்றதால, நட்டம்னாலும் கொடுத்துடுவோம். இப்போகூட, மூனு நாளா பெரிய பொருள் எதும் போகல. நூறு, இருநூறுதான். மூனுநாளுக்கு முன்ன வித்த காசுலதான் செலவாகிட்டு வருது.’’ என்றார்.

‘’பிரம்புகள்  வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யனும். பாரிஸில சேட்டுங்கதான் வாங்கியாறாங்க. அவங்கள்ட்டருந்து நாங்க வாங்கிக்குவோம். மத்த வேலைக்கு காட்டு ஈச்சை பயன்படுத்துவோம். காட்டு ஈச்ச இங்க புதூர் அத்திப்பட்டு மாதிரி ரெண்டு மூனு இடங்கள்ல  கெடைக்கும். எங்காளுங்க ரெண்டு மூனு பேரா சேர்ந்து வேட்டைக்கு போறப்ப எடுத்தாருவோம்’’ என்கிறார் நாகராஜ்.

‘’கார்ப்பரேசன் காரங்கதான் அப்பக்கி அப்ப வந்து பொருள எடுத்துட்டு போயிடுவாங்க. எடத்த காலி பண்ணுனு சொல்வாங்க. அப்புறம் அதிகாரிங்கள பாத்து பேசிட்டு வர்றப்ப, எடுத்து போன பொருள்ல ரெண்டு மூனு பொருளு இருக்காது. பொருள காணோனு கேட்டா, அவ்வளவுதான் இருந்துச்சி. இங்கதான் போட்ருந்தோம். என்கிட்ட கேக்காதனு வெரட்டுவாங்க… ‘’ என்கிறார், லெட்சுமி.

விடுமுறைக்காக வந்திருந்த அவர்களது குழந்தைகள் பிளாட்பாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மூத்த பையன் வீட்டிற்குள் ஓடிச்சென்று ஆங்கில இந்து நாளிதழ் ஒன்றை எடுத்து வந்தான். நாகராஜின் படம் அதில் பிரசுரமாகியிருந்தது.

படிக்க:
இராவணனை எரிக்காதே ! மராட்டிய பழங்குடி மக்கள் போராட்டம் !
சபரிமலையில் பெண்கள் நுழையலாமா ? ஆச்சரியமூட்டும் சர்வே முடிவுகள்

தனியார் அமைப்பொன்றின் ஏற்பாட்டில் பழங்குடியினரின் விழா ஒன்றில் பங்கேற்று பாரம்பரிய வில் உள்ளிட்ட வேட்டைக் கருவிகளை கலை பொருட்களை உருவாக்கியிருக்கிறார். இது குறித்து கேட்டபோது, ‘’ எங்களுக்கு தொழில் கத்துக் கொடுத்தது முன்னோர்கள் ஏகலைவன். அவுங்க நினைவா நடத்துற நிகழ்ச்சி அது’’ என்றார், லட்சுமி.

‘’அழிந்துவரும் கைத்தொழில் இது. இந்த வேலை செய்யிற எங்காளுங்களே குறைஞ்சிட்டாங்க. எல்லாம் வேற வேற வேலைக்கு போயிட்டாங்க. கவர்மெண்ட்தான் இதுக்கு ஸ்டெப் எடுக்கனும். எக்மோர்ல வியாபாரிங்களுக்கு கடை கட்டி விட்டுருக்காங்க. அவங்களுக்கு கொடுக்க வேணானு சொல்லல. ஆனா, அவங்க வாங்கி விக்கிறவங்க. நாங்க கைத்தொழிலா பரம்பரையா செஞ்சிட்டிருக்கோம். அவங்களமாதிரி, எங்களுக்கும் கடை அமைச்சி கொடுக்கனும்.’’ என்றவரிடம் ஏக்கமாய் வெளிப்பட்டது, ‘’தனியா கடை போடனுனுதான் என்னோட ஆசை, பார்க்கலாம்…’’ என்ற வார்த்தைகள்.

விடைபெறும் முன்பாக, சத்ய ஸ்வரூப்பிடம், உன்னோட கனவு என்ன? என்றோம், சற்றும் தாமதிக்காமல் சொன்னான் ‘’சயின்டிஸ்ட் ஆகனும். ரோபோட் செய்யனும்’’.

6 மறுமொழிகள்

 1. உண்மையான சுதேசியம் என்பது, இவர்களை போன்ற சிறு, குறு உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள், குடிசை தொழில் செய்வோர் ஆகியோரிடமிருந்து நமக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் தான் அடங்கி இருக்கிறது.. இது தான் உண்மையான மனிதாபிமான பொருளாதாராமாகும் ..

   • ஆர்.எஸ்.எஸ்ஸிடம் சுதேசியம் கிடையாது, நான் கூறுவது மகாத்மா காந்தியின் சுதேசியம்

     • “உண்மையான சுதேசி பக்தன் அந்நியனிடம் பகைமை கொள்ள மாட்டான். உலகில் யார் மீதும் அவனுக்கு வெறுப்புணர்ச்சி இருக்காது . சுதேசி என்பது வேற்றுமை உணர்ச்சியின் வழிவந்தது அல்ல. அது சுயநலமற்ற தொண்டின் தத்துவம். தூய்மையான அஹிம்சை அல்லது அன்பில்தான் அதன் அடிப்படை இருக்கிறது..” – மகாத்மா காந்தி…

      மேற்படி வாசகம் தான் உண்மையான சுதேசியத்திற்கு உரைகல்லாகும். இந்த அளவின் படி ஆர்.எஸ்.எஸ் என்பது சுதேசிய அமைப்பா அல்லது அடிப்படைவாத அமைப்பா என்பதை உரசி பார்த்துக் கொள்ளவும்..

 2. இவர்களின் தொடர்பு எண்னை பகிரவும். வினவு வாசகர்கள் நிச்சயம் இவர்களின் பொருட்களே வாங்குவார்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க