நம் மவுனத்தின் வன்மம் : சிறுமி ராஜலட்சுமி படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | நேரலை | Live Stream

தலித் சிறுமி ராஜலட்சுமி படுகொலையைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள் பலரும் இணைந்து நடத்தும் ஆர்ப்பாட்டம். வினவு நேரலை

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக “மீ டூ” இயக்கம் அதிகம் பேசப்படும் காலத்தில் அதே பாலியல் வன்முறையால் கற்பனைக்கும் அப்பாற்பட்ட முறையில் கொல்லப்பட்டிருக்கிறார் அந்த 13 வயது தலித் சிறுமி ராஜலட்சுமி.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓட்டுநர் சாமிவேல். மனைவி சின்னப்பொண்ணு, ஒரு மகன், இரு மகள்கள். கடைசி மகளான ராஜலட்சுமி அருகாமை ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

சாமிவேல் வீட்டிற்கு அருகே மனைவி சாரதாவுடன் குடியிருக்கிறார் தினேஷ் குமார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் வீட்டுக்கு ராஜலட்சுமி அவ்வப்போது தண்ணீர் பிடிக்க செல்வார். சில நாட்களாக சிறுமி ராஜலட்சுமியிடம் பாலியல் துன்புறுத்தல்களை செய்ய ஆரம்பித்திருக்கிறார் தினேஷ் குமார். இவற்றை பொதுவாக வெளியே சொல்லக் கூடாது என்று ஊட்டி வளர்க்கப்படும் சமூகத்தில், சொன்னால் தொலைச்சிருவேன் என்று மிரட்டப்படும் நிலையில் அச்சிறுமி இதை தனக்குள்ளேயே வைத்து குமுறியிருக்கிறார்.

வெளியே சொல்லாமல் அழுது அரற்றிய சிறுமி இறுதியில் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். அம்மாவும் இதை அப்பாவிடம் தெரிவிப்போம் என்று சமாதானப்படுத்தியிருக்கிறார். ஒரு கிராமத்து தாய் அதுவும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தனது மகளிடம் இத்தகைய பிரச்சினைகளை  வெளியே தெரியாமல் எப்படி சரி செய்வது என்பது ஏதோ விழிப்புணர்வு பற்றிய பிரச்சினை அல்ல. வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டம் அது.

தனது குற்றம் வெளியே தெரிய வந்ததும் ஆத்திரம் தலைக்கேறிய  தினேஷ் குமார் வீட்டில் இருந்த சிறுமி ராஜலட்சுமியின் தலையை துண்டாக்கி படுகொலை செய்திருக்கிறார்.

சாதிய வெறியோடு நடத்தப்பட்ட இந்தப் படுகொலையைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள் பலரும் இணைந்து நடத்தும் ஆர்ப்பாட்டம்.

நாள்: 31-10-2018 நேரம் : 04:30

இடம்: சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதி அருகில்

பாருங்கள் ! பகிருங்கள் !