privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்டி.சி.எஸ் இலாபத்தில் கொழிக்கிறது - புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை !

டி.சி.எஸ் இலாபத்தில் கொழிக்கிறது – புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை !

-

டி.சி.எஸ் லாபம் : சம்பள உயர்வு இல்லை, புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை!

சென்ற பகுதியில் டி.சி.எஸ் காலாண்டு முடிவுகள் பற்றியும், அதன் நிகர லாப அதிகரிப்பு பற்றியும் பார்த்தோம். இந்த லாப அதிகரிப்பால் டி.சி.எஸ் தொழிலாளர்கள் எந்தவித பெரிய நலனும் அடைந்துவிடப் போவதில்லை என்பதை பார்த்தோம்.

அதே போல இன்னொரு செய்தி படிக்க நேர்ந்தது அதைப்பற்றி என்னுடைய கருத்தை உங்களுடன் ஒரு சக தொழிலாளியாக பகிர்ந்துகொள்ள விருப்பப்படுகிறேன் ஆதலால் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

அதற்கு முன்னால் உங்களுக்கு ஒருசிலவற்றை தெளிவுபடுத்த விருப்பப்படுகிறேன். நான் இவ்வாறு எழுதுவது குறிப்பிட்ட நிறுவனத்தின் நன்மதிப்பை கெடுப்பதாகவும், அதனால் மற்ற நிறுவனத்தை பாராட்டுவதாகவோ எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்தக் கட்டுரையின் நோக்கம் தொழிலாளர்களின் வேலை நிலைமைகளில் ஏற்படும் பாதிப்புகளை கண்டுகொள்ளாமல், அல்லது கண்டுகொள்வதுபோல நடித்துக் கொண்டு அடாவடியாக இருந்துகொண்டு, வெறும் லாபத்தை குறிக்கோளாக கொண்டு செயல்படுவதை நிறுவனங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே.

படிக்க :
சின்டெல் ஆட்குறைப்பு, டி.சி.எஸ் போனஸ் மோசடி
ஊழியர்களை கசக்கிப் பிழிந்தால் இலாபம் ! பட்டியலிடுகிறார் ஒரு டி.சி.எஸ் ஊழியர்

இல்லையெனில் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கூட்டாக இணைந்து நிலைமையை மாற்றி அமைக்க வேண்டும். இன்றைய நிலைமையில் ஊழியர்களுடையை பிரச்சனைகளை நிறுவனத்திற்குள் பேசும்படியான சூழல் அமையவில்லை. எனவே இந்தக் கட்டுரை மூலமாக உங்களுடன் பேசிக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்கிறேன்.

தொழிலாளர்களின் வேலை நிலைமைகள் அதாவது வேலை நேரம், வேலை செய்வதற்கான போதிய கட்டமைப்பு வசதி, அவர்களுக்கான சம்பளம் போன்ற அடிப்படை தேவைகளை சிறப்பாக எந்த நிறுவனம் செய்துகொடுக்கிறதோ அங்குதான் விருப்பத்தோடு கொடுத்த வேலையை ஊழியர்கள் செய்து முடிப்பார்கள்.

இல்லையென்றால் வேலைகளை குறித்த நேரத்தில் முடிக்கமுடியாமல் போவதும் அந்த வேலையை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்று போராடி செய்வதால் சொந்த வாழ்க்கை பிரச்சனையாக முடிவதும் நடக்கிறது. பல நேரங்களில் ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை நெருக்கடியில் சிக்கி தற்கொலையில் கூட முடிகிறது. இதை ஏதோ கற்பனையில் சொல்லவில்லை கடந்த சில காலங்களாக தற்கொலை எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருக்கிறது.

நாம் இப்போது டி.சி.எஸ் நிறுவனத்தை பற்றி வந்த அடுத்த செய்தியை பார்ப்போம் :

“இந்த வருடத்தில் டி.சி.எஸ் 28,000 பேரை வளாக நியமனம் மூலம் (campus recruitment) புதிதாக வேலைக்கு சேர்க்க உள்ளது. இது கடந்த மூன்று வருடங்களில் மிக அதிக எண்ணிக்கை ஆகும். கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 10,227 பேரை புதிதாக வேலைக்கு அமர்த்தியுள்ளது. இது கடந்த 12 காலாண்டுகளில் நடக்காத ஒன்று.” ஏற்கனவே 16,000 பேரை புதிதாக வேலையில் அமர்த்தி விட்டதாகவும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அதற்கேற்றாற்போல் தேவையான ஊழியர் எண்ணிக்கையை அதிகரிப்பதாக நிர்வாகம் தெரிவிக்கிறது.

இவ்வளவு ஊழியர்களை புதிதாக வேலைக்கு எடுக்கிறார்கள் என்றால் அவர்களுக்கான போதிய கட்டமைப்பு வசதிகள் நிறுவனத்தில் உள்ளதா என்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அதைச் செய்வதில்லை என்பதற்கு உதாரணமாக வளாக நேர்முகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் வேலைக்கு சேரும்போது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கு விளக்குகிறேன்.

புதிய ஊழியர்களின் பணி அனுபவம் எவ்வாறு உள்ளது என்று பார்ப்போம். தினமும் பேருந்தில் அடிச்சிபுடிச்சி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்ததும் அமர்ந்து வேலைபார்ப்பதற்கு நாற்காலி கிடைப்பதில்லை. ஒருவேளை நாற்காலி கிடைத்துவிட்டால் வேலைபார்ப்பதற்கு கணினி உடனடியாக கிடைப்பதில்லை. இரண்டுக்கும் காத்திருக்க வேண்டும்.

நம்மைப் போன்ற நிலையில் இருக்கும் யாராவது வேலை முடித்துவிட்டு செல்வார்களா என்று சில மணி நேரம் காத்திருக்க வேண்டும். நாற்காலியும், கணினியும் கிடைத்தவுடன் வேலையை வேகமாக தொடங்கி செய்ய வேண்டும். அதாவது சாப்பிடாமல் அல்லது இடைவேளைக்கு போகாமல் வேலை பார்த்தால் மட்டுமே கொடுத்த வேலையை ஓரளவிற்கு முடிக்க முடியும். இல்லையென்றால் இவ்வளவு நேரமாக என்ன செய்திருந்தாய் என்று மேலாளர்கள் கேட்பார்கள்.

கணினி வசதி இல்லை என்ற உண்மையான காரணத்தை சொன்னால் சகித்துக் கொள்ள முடியாமல் நம் மீது எரிந்து விழுவார்கள். அதை குறித்து வைத்துக் கொண்டு அப்ரைசல் வரும்போது “புதிதாக எதுவும் செய்யவில்லை, கொடுத்த வேலையை குறித்த நேரத்தில் முடிக்கவில்லை” என்று நம்மீது குற்றம் சுமத்தி சம்பள உயர்வை தடுப்பது அல்லது கடைசி பேண்ட் போட்டு சட்டத்திற்கு புறம்பாக சம்பளத்தை குறைப்பார்கள். அதற்கு ஏதாவது காரணத்தை உருவாக்கி ஊழியர்களை மட்டம் தட்டி, ஒதுக்கி வைப்பது நடந்திருக்கிறது. இதற்கு உதாரணம் நான்தான்.

அவர்கள் சொல்ல வருவது சொந்த வாழ்க்கை, உடல்நிலை, விருப்பம் எல்லாத்தையும் துறந்து வேலையே வாழ்க்கை என்று கம்பெனியிலேயே முக்கால்வாசி நேரத்தை செலவிட்டு கொடுத்த வேலையை முடிக்க வேண்டும். அவ்வாறு சில ஊழியர்கள் அதீத அடிமையாகி போனதை காரணம் காட்டி மற்றவர்களை வேலை செய்வதில்லை என்று முத்திரை குத்தி சம்பள உயர்வை தடுப்பது, பதவி உயர்வை தடுப்பது என்று ஊழியர்களை சுரண்டுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

நாம் போகும் நேரத்தில் அலுவலகத்தில் கணினி கிடைக்கவில்லை, அதாவது எல்லா கணினிகளும் பயன்பாட்டில் இருப்பது என்ற நிலைமை அடிக்கடி ஏற்படும். இது பற்றி முறையிட்டால், நாற்காலியும் கணினியும் ஏற்பாடு செய்யாமல் வேறு ஷிஃப்ட்டில் (இரவு நேரப்பணியில்) வருமாறு அறிவுறுத்துவார்கள். தேவையில்லாமல் இரவுப் பணிக்கு வந்து ஊழியரின் உடல்நிலை பாதிப்பதை பொருட்படுத்துவதில்லை. அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஓகே சொல்லிவிட்டு நிறுவனம் நாற்காலி/மேசை, கணினி செலவை மிச்சப்படுத்துவதற்கு நமது உடலை தேய்த்துக் கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலைதான் பெரும்பான்மையான நேரங்களில் நடக்கிறது.

ஒருவேளை அவர்கள் சொல்லும் ஷிப்டில் (வேலை நேரத்திற்கு) வருவது சாத்தியமில்லை என்று உண்மையான காரணங்களை சொன்னால் அதற்கு அவர்களுடைய பதில் “வேலை கிடைக்காமல் எவ்வளவோ பேர் காத்திருக்கிறார்கள். உங்களுக்கு கிடைத்த வேலையை பாதுகாக்க தெரியவில்லை” என்று நம்மீது குற்றம் சுமத்தி ஏற்றுக்கொள்ள நிர்பந்திப்பார்கள். இவ்வாறு நமது சக தொழிலாளர்களை காட்டியே நம்மை மிரட்டி பணிய வைப்பார்கள்.

அமருவதற்கு நாற்காலி, கணினி கிடைப்பதற்கு சிலமணி நேரம் முன்பே வேலைக்கு வரவேண்டும் என்பார்கள். அவ்வாறு வந்தாலும் நடுவில் வெளியே சென்று வரும்போது அதை இன்னொருவர் எடுத்துக்கொள்வார். அவருடன் வாக்குவாதம் ஏற்படும். அதனால் ஊழியர்களிடைய மனக்கசப்பு ஏற்பட்டுவிடும்.

படிக்க :
பொறியியல் படித்த அப்பாவிகளின் கவனத்திற்கு !
TCS டிசிஎஸ் : ஒரு இன்பக் கனவின் துன்பக் கதை !

இப்படியாக புதிய ஊழியர்களுக்கு வேலை பார்ப்பதற்கு தேவையான போதுமான கட்டமைப்பு வசதிகளை நிறுவனங்கள் ஏற்படுத்தி கொடுப்பதில்லை, அதன் மூலம் சில ஆயிரம் ரூபாய் பணத்தை மிச்சப்படுத்துகின்றனர். இவ்வாறு லாபத்தையே நோக்கமாகக் கொண்டு தொழிலாளர்களை சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் கொத்தடிமைகளாக மாற்றுவது நடைமுறையாக உள்ளது என்பதே எனது அனுபவம்.

மேலும் இன்னொரு செய்தி “ஊழியர்களுக்கு காலாண்டு ஊக்கத்தொகை (Variable pay) 100% கொடுப்பதாக தலைமை அதிகாரி தெரிவித்திருக்கிறார். பலகோடி ருபாய் லாபத்தை ஈட்டித்தந்த தொழிலாளர்களுக்கு தர வேண்டிய நியாயமான சம்பளத்தை கொடுப்பதையே பெரிய சலுகையாக நிறுவனம் பில்ட் அப் கொடுப்பதும் அதையே ஊடகங்கள் பெரிதாக செய்தி வெளியிடுவதும் அசிங்கமாக இருக்கிறது.

லாபம் இவ்வளவு அதிகரித்ததால் கூடுதலாக சம்பள உயர்வு, போனஸ் என்று செய்தி இருந்தால் அதை போடலாம். அப்படி செய்ய கார்ப்பரேட் ஆண்டைகளுக்கு மனம் வரப் போவதில்லை என்பது புரிகிறது.

– அனுபவமுள்ள ஐ.டி ஊழியர்
நன்றி : new-democrats