முகப்புஉலகம்அமெரிக்காபொறியியல் படித்த அப்பாவிகளின் கவனத்திற்கு !

பொறியியல் படித்த அப்பாவிகளின் கவனத்திற்கு !

-

சோக், எனது நண்பரின் மகன் இந்த ஆண்டு பிஈ கம்ப்யூட்டர் சைன்ஸ் முடித்திருக்கிறான்.

கல்லூரியில் வளாக நேர்முகத்துக்கு (கேம்பஸ் இன்டர்வியூ) எந்த நிறுவனமும் வரவில்லையாம். அதனால் வெளியில் வேலை தேடிக் கொண்டிருக்கிறான். “அப்பாவுக்கு தெரிந்த ஒரு பிபிஓ கம்பெனியில் திங்கள் கிழமை வரச் சொல்லியிருக்காங்க.” என்றான். “ஏற்கனவே நான் ராத்திரி எல்லாம் கேம்ஸ் விளையாடி விட்டு காலையில் 3 மணி, 4 மணிக்குத்தான் தூங்கப் போறேன். இந்த கம்பெனியில வேலை கெடைச்சா, சாயங்காலம் 6 மணிக்கு வேலைக்கு போயிட்டு காலையில 6 மணிக்கு வீட்டுக்கு வரலாம். அதுக்கப்புறம் தூங்கி எழுந்து ஏதாவது சாப்ட்வேர் வேலை தேடப் போகலாம். வீட்டு வாசல்லையே வண்டில ஏத்திட்டுப் போய் திரும்பி கொண்டு விட்டுடுவாங்களாம்”

வேலைக்கு காத்திருக்கும் பட்டதாரிகள்
வேலைக்கு காத்திருக்கும் பட்டதாரிகள்

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும், தேர்ச்சி பெறும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் இரண்டு மடங்காகியிருக்கிறது. 2006-07ம் ஆண்டு இந்தியா முழுவதும் 1,511 பொறியியல் கல்லூரிகளிலிருந்து 5.5 லட்சம் எஞ்சினியர்கள் பட்டம் பெற்று வெளி வந்தார்கள். $110 பில்லியன் (ரூ 6 லட்சம் கோடி) மதிப்பிலான ஐடி துறைக்கு லட்சோப லட்சம் எஞ்சினியர்கள் தேவை என்ற நோக்கத்தில் கல்லூரிகள் புற்றீசலாக பெருகியதைத் தொடர்ந்து இந்த ஆண்டு 3000-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 15 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளிவந்திருக்கிறார்கள்.

உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு ஐடி துறையிலும் உற்பத்தித் துறையிலும் ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்படும் சில ஆயிரக்கணக்கான இடங்களுக்கு பல லட்சம் பட்டதாரிகள் போட்டி போடுகின்றனர்.

வளாக நேர்முகங்கள் (கேம்பஸ் இன்டர்வியூ) பெருமளவு குறைந்திருக்கின்றன. வழக்கமாக 100-க்கு 100 மாணவர்களுக்கு வேலை கிடைத்து விடும் ஐஐடி போன்ற முன்னணி நிறுவனங்களிலேயே பல மாணவர்கள் வேலை இல்லாமல் கல்லூரியை விட்டு வெளியேறுகிறார்கள். 2012-13 கல்வி ஆண்டில் மும்பை ஐஐடியில் கல்லூரி வளாக நேர்முகத்தில் கலந்து கொண்ட 1,501 மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு வேலை கிடைக்கவில்லை. சென்ற ஆண்டு நான்கில் ஒரு பகுதியினருக்கு வேலை கிடைக்கவில்லை.

ஐடி நிறுவனங்கள், ஊழியர்களின் எண்ணிக்கையை காட்டி பணம் சம்பாதித்துக் கொண்டிருந்த போது, பொறியியலில் எந்த பிரிவாயிருந்தாலும் மாணவர்களை ஆயிரக்கணக்கில் வேலைக்கு எடுத்துக் கொண்டு போனார்கள். அந்த நிலை மாறி, இப்போது பல கல்லூரிகளில் வடிகட்டும் தேர்வுகளை நடத்தி அதில் தேர்ச்சியடையும் மாணவர்களுக்கு மட்டும்தான் நேர்முகத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. மொத்த மாணவர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். அமிட்டி கல்லூரியின் டில்லி வளாகத்தில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு எண்ணிக்கையில் 40 சதவீதம் ஆக குறைந்திருக்கிறது. வேலை கிடைத்தவர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பகுதியாக குறைந்தது.

சேரும் தேதி கேட்டு போராட்டம்
சேரும் தேதி கேட்டு போராட்டம்

கூடவே, கேம்பஸ் இன்டர்வியூவில் வேலைக்கு எடுப்பதாக வாக்கு கொடுக்கும் மாணவர்கள் சேரும் தேதியை நிறுவனங்கள் தாமதப்படுத்துகின்றன. சேரும் தேதிகள் நிறுவனத்தின் தேவையைப் பொறுத்து 6 மாதம் முதல் ஆண்டு கணக்கில் கூட தள்ளிப் போடப்படுகின்றன.

டெல்லி மகாராஜா சூரத்மால் கல்லூரியில் மின்னணுவியல் பிரிவில் பட்டம் பெற்ற 23 வயதாகும் லவீன் பக்ஷிக்கு இந்தியாவின் நான்காவது பெரிய மென்பொருள் நிறுவனமான எச்சிஎல் நிறுவனத்திடமிருந்து வேலை உத்தரவு பெற்ற போது இருந்த மகிழ்ச்சி, சேரும் தேதிக்காக 2 ஆண்டுகள் காத்திருந்த பிறகு இப்போது சோர்வாகவும், மன அழுத்தமாகவும், கோபமாகவும் மாறியுள்ளது. அவரைப் போலவே 6,000 மாணவர்கள் இப்போது எச்.சி.எல் மற்றும் பிற ஐடி நிறுவனங்களில் சேருவதற்கான அழைப்பு வராமல் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் முன்னணி ஐடி நிறுவனங்கள், தமது வளர்ச்சி மற்றும் லாப வீதத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக ஊழியர்களில் பலரை திறமை சரியில்லை, சரியாக வேலை செய்வதில்லை என்று பொய்யான காரணம் காட்டி வேலையை விட்டு நீக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு காக்னிசன்ட் நிறுவனம் 2000 ஊழியர்களை நீக்கப் போகிறது.

புதிதாக வரும் பட்டதாரிகளோடு, கடந்த ஆண்டுகளில் வேலை கிடைக்காதவர்கள், நிறுவனங்களிலிருந்து கழற்றி விடப்படுபவர்கள் என்று லட்சக்கணக்கான ஐடி ஊழியர்கள் வேலைக்காக நிறுவனங்களை மொய்க்கிறார்கள்.

வேலை வாய்ப்புகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, மென்பொருள் ஊழியர்களின் சமூக அந்தஸ்தை பாதித்திருக்கிறது. உதாரணமாக திருமண பொருத்தம் பார்க்கும் இணைய தளத்தில் ஐடி ஊழியர்கள் மீதான ஆர்வம் குறைந்திருக்கிறது. “ஐடி துறையில் வேலை செய்யும் வெளிநாட்டு இந்தியர்கள், அல்லது வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த கூடுதல் மதிப்பு பெருமளவு குறைந்திருக்கிறது” என்கிறார் பாரத் மேட்ரிமோனி டாட் காம் தளத்தின் தலைமை நிர்வாக அலுவலர் முருகவேல் ஜானகிராமன்.

ஒன்றரை ஆண்டுகளில் திருமணச் சந்தையில் தங்கச் சுரங்கமாக இருந்த வடக்கு பெங்களூரைச் சேர்ந்த 30 வயதான விஷ்ணுவின் புரொபைல் இப்போது ஒதுக்கப்படுவதாக ஆகியிருக்கிறது. 2011 தொடக்கத்தில் ஆன்-சைட் ஒப்பந்தத்தில் அவர் ஜெர்மனிக்கு போவதற்கு முன்பு வந்த பல திருமண சம்பந்தங்களை அவரது அம்மா லலிதா ஐயர் நிராகரித்தார். இப்போது ஜெர்மனியிலிருந்து திரும்பிய பிறகு, அமெரிக்கா போவதற்கான H-1பி விசா நிராகரிக்கப்பட்ட பிறகு, அவரது சம்பள உயர்வு முடக்கப்பட்ட பிறகு விஷ்ணு முட்டுச்சந்தில் நிற்கிறார்.

jobபல மாணவர்கள் பிற துறைகளிலும், அரசு வேலைகளிலும் சேருவதற்கு திட்டமிடுகிறார்கள். கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவில் நான்காவது பருவத்தில் படிக்கும் பிரஷஷ்தி பிரபாகர் என்ற மாணவி மென்பொருள் துறையில் சேருவதற்கான ஆர்வம் வடிந்து விட்டதாக சொல்கிறார். பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி அரசு பணியில் சேர முயற்சிக்கப் போகிறாராம்.

வேலை கிடைக்காமல், கடன் சுமையை சமாளிக்க முடியாமல் ஒரு சிலர் கிரிமினல் வேலைகளில் இறங்குகின்றனர். மும்பையின் தானே புறநகர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் ரெட்டி என்ற சிவில் எஞ்சினியர் தனது குடும்ப செலவுகளை சமாளிக்க செயின் அறுத்தலில் இறங்கியிருக்கிறார் என்ற செய்தி ஊடகங்களில் வந்திருக்கிறது. அதே போல, அவுரங்காபாதைச் சேர்ந்த இன்னொரு எஞ்சினியர் கார் திருடுதல் மூலம் பணம் ஈட்ட முயற்சித்திருக்கிறார்.

முதலாளித்துவ நிபுணர்கள் ‘பட்டதாரிகளின் எண்ணிக்கைதான் அதிகம், தரம் சரியில்லை, சந்தைக்கு தேவைப்படும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், மேல் படிப்பு படிக்க வேண்டும்’ என்று இதற்கு தீர்வுகள் சொல்கிறார்கள். “இந்த துறையில் நுழைய விரும்பும் ஊழியர்கள் தங்களது திறமைகளை பல மடங்கு வளர்த்துக் கொள்ள வேண்டும். வேலை வாய்ப்புகள் இருக்கும், ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான பேர்தான் தேவை” என்கிறார் முன்னாள் ஜென்பேக்ட் நிறுவனத்தின் தலைவர் பாசின்.

அதாவது, ஏற்கனவே நிலத்தை விற்றோ, நகையை அடமானம் வைத்தோ, வங்கிக் கடன் மூலமோ சில லட்சங்கள் செலவழித்து பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர்கள் இன்னும் சில லட்சங்களை தனியார் கல்வி முதலாளிகளுக்கு கொடுக்க தயாராகிக் கொள்ள வேண்டுமாம். அதற்குப் பிறகும் குறைவான எண்ணிக்கையில்தான் ஆள் எடுப்பார்களாம்.

இந்தியாவின் சுய பொருளாதாரத்திற்கு, என்ன படிப்பு தேவை, எத்தனை எஞ்சினியர்கள் தேவை, எத்தனை மேலாண்மை ஊழியர்கள் தேவை என்று திட்டமிடாமல், முதலாளித்துவ சந்தைக்கு தேவையான கல்வி, கல்லூரிகளை புற்றீசல் போல ஆரம்பித்து, மந்தைகளைப் போல மாணவர்களை உபரியாக இறக்கி, வேலையற்ற பட்டாளத்தை வைத்துக் கொண்டு மலிவான ஊதியத்தில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கிறது தனியார் மயம். தங்களது இலாபம், சுரண்டலுக்கேற்ற வகையிலேயே நாட்டில் கல்வி, பொருளாதாரம், அரசு அனைத்தையும் வடிவமைக்க வேண்டும் என்று கல்வித் துறையை தனியார் மய சீரழிவுக்கு ஆளாக்கியவர்கள் இதே முதலாளித்துவ நிபுணர்கள்தான். முதலாளிகளின் ஆள் தேவைகளுக்கு உபரி ஊழியர் பட்டாளத்தை உருவாக்கி அவர்களுக்கான நரகத்தை படைத்திருக்கிறது, தாராள மய, தனியார் மய, உலக மய கல்விக் கொள்கை.

– அப்துல்

மேலும் படிக்க

 1. This is a very serious poblem. If such large number of educated youth are going to be searching for jobs after draining their parents hard earned money and wealth dreaming that they will get good jobs and they will bring out their families from the hardship they have under gone sofar get frustrated then their anger against the society cannot be controlled. The goverment should come out with and give security free loans to these youths that become self emlpoyed nad provide jobs to others.
  I am sorry to say that the articles on caste and religion get so much response from the readers than the one like this that requres more attention.

 2. என் எதிர்த்த வீட்டுக்காரர் ஒரு மருத்துவமனையில் கடைநிலை ஊழியர். வயது 55. தான் வாழ்நாளில் சிறுக சிறுக சேமித்த மொத்த பணத்தையும்,வங்கியில் கடன் வாங்கியும் தன்னுடைய இரண்டு பையன்களில் ஒரு பையனை மட்டும் பி.இ. தனியார் கல்லூரியில் படிக்கவைத்தார். படிப்பு முடிந்தும் இன்னும் அந்த பையனுக்கு வேலை கிடைக்கவில்லை. அப்பாவும் பிள்ளையும் மன உளைச்சலில் இருக்கிறார்கள். இது மாதிரி கதைகள் லட்சகணக்கில் இருக்கும்.

  கணிப்பொறி துறையில் நிறைய சம்பளம் வாங்குகிறார்கள் என ஏற்றிவிட்டு, இப்பொழுது சந்தையில் உபரி ஊழியர்களை கல்வி வியாபாரிகள் லட்சகணக்கில் உருவாக்கிவிட்டார்கள். இனி முதலாளிகள் இவர்களை வைத்தே வேலையில் இருக்கும் ஊழியர்களை கசக்கி பிழிவார்கள். சம்பளத்தை, சலுகைகளை கருணையே இல்லாமல் வெட்டுவார்கள்.

  எங்க பகுதியில் இவர்கள் குடியேறி வீட்டின் வாடகை ரூ. 1500 இருந்ததை எல்லாம், இப்பொழுது ரூ. 4000க்கு ஏற்றிவிட்டுவிட்டார்கள். சந்தை சரிகிறது. கணிப்பொறியாளர்களின் சந்தை மதிப்பும் சரிகிறது. வீட்டு வாடகை ஏற்றியது ஏற்றியது தான். அது மட்டும் சரியப்போவதில்லை.

 3. தனியார் கல்வி முதலாளிகளே தற்சமயம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்…

 4. This is the third recession in IT I am seeing.
  2001-2003, 2008-2010, 2013-??

  This time the USA Govt is one of the culprit as it is blocking Indians from travelling on short term for project KT or requirement gathering. To replace Indians with Americans is a huge cost for cos. 90% rejections in L1 visa and even B1 visas are getting rejected. Add to that to be increased visa fees and conditions for H1B.

  Recession is needed to remove dead wood in management as well among employees.

  After each recession, margin of IT cos gets reduced at the same time cos which invested in resources reaps the benefit. 10+ years experienced employees who shift job after recession, get huge hike.

  I wouldn’t worry about lakhs of unemployed BE graduates – most of them from private colleges and universities – not employable in any environment.

  Visited campus interview in Satyabama, Vels, Crescent 2 years back (after that no campus event) even university topper cannot explain simple concepts.

  First parents should stop putting worthless kids in private colleges. Only then the quality of BE graduates will improve.

 5. சமீபத்தில் ஊருக்கு சென்று இருந்த போது கண்டது ,
  சாலையின் இருமருங்கிலும் வணிக வளாகங்கள்.
  ஊரை சுற்றிலும் பொறியியல் கல்லூரிகள். ஆங்கில வலி கல்வி கூடங்கள்.
  MCA படித்த மாணவர் தபால்காரர் ஆகிவிட்டார்.
  பத்தாவது முடித்த எனது உறவினர் மகளுக்குக் ஒரு லட்சம் நன்கொடை கொடுத்து +1 சேர்த்தது. மாணவி வாங்கியது 440 . 460 வாங்கியிருக்க வேண்டுமாம் .

  இன்றைய பொருளாதாரம் எனபது வெறும் கல்வி அதிபர்களை தான் உருவாக்கி உள்ளது.
  இது எங்கே பொய் முடியுமோ !

  IT துறையில் பணி புரியும் நண்பன் கூறியது , வீட்டு கடன் தவணை , கார் தவணை கட்டிய பிறகு ஒன்றும் மிஞ்சுவது இல்லை..

  பத்திரிக்கைகள் காட்டும் இந்தியா ஒளிர்கிறது வளர்கிறது எனபது வேற்று கோசம் என்பதை மக்கள் விரைவில் உணர்வார்கள்.

 6. நுகர்வு கலாச்சாரம் பெற்றோர்களை திருதிராஷ்டிரர்களாக மாற்றி வைத்திருக்கிறது. முதலாளித்துவ உற்பத்திமுறை திட்டமிட்டே நுகர்வு கலாச்சாரத்தை வளர்த்துவிடுகிறது. கல்வி வியாபாரத்தில் ஏமாற்ற பட்ட இளைஞர்கள் மனம் தளர்ந்து தவறான வழியில் செல்லாமல் இருக்க அவர்களிடம் அக்கறையுடன் நாம் உரையாடவேண்டும். இவர்களின் கோபம் இயல்பாக தங்கள் பெற்றோர் மீதும் பின்னர் சமூகத்தின் மீதும் இலக்கற்ற முறையில் திரும்புகிறது. அதை தவறு என்று நாம் அவர்களுக்கு உணர்த்தவேண்டும். உற்பத்தி உறவுகளில், சமூக உறவுகளில் அதிகாரத்தை வளர்த்தெடுக்கும் மனப்பான்மையின் ஆபத்தை விளக்கவேண்டும். அவ்வாறு அதிகார ஆட்டம் ஆடும் சிறுபான்மை கூட்டத்தை அடையாளம் காட்டவேண்டும். அவர்களோடு சேர்ந்து இந்த ஈன ஆட்டத்தை ஆடும் பெரும்பான்மை மக்களின் கவனத்தை திருப்ப இந்த இளைஞர்கள் தயாராகவேண்டும். வறுமை, வேலையின்மை,இழிவு இவற்றை தாண்டி நாளைய தலைமுறை மக்களை இந்த கொடுமையில் இருந்து காக்க இந்த தலைமுறை இளைஞர்கள் போராட முன்வரவேண்டும். அவர்களுக்கு நாம் உறுதுணையாக இருப்போம். நம் உபரியை பகிர்ந்தளிப்போம்.

 7. // 2012-13 கல்வி ஆண்டில் மும்பை ஐஐடியில் கல்லூரி வளாக நேர்முகத்தில் கலந்து கொண்ட 1,501 மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு வேலை கிடைக்கவில்லை. சென்ற ஆண்டு நான்கில் ஒரு பகுதியினருக்கு வேலை கிடைக்கவில்லை. //

  ஐஐடி மும்பை 2011-12 campus placement பற்றிய அறிக்கயை கீழே காணலாம்.

  http://placements.iitb.ac.in/files/IITB_Placement_Report_2011-12.pdf

  இதன் படி இந்த நிறுவனத்தில் எட்டு விதமான பட்டங்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொன்றாக பார்ப்போம்.

  BTech – இதில் 90% வேலை பெற்றனர்.
  Dual degree – இதில் 94% வேலை பெற்றனர்.
  MTech – இதில் 86% வேலை பெற்றனர்.
  5-year MSc (chemistry) – இதில் 93% வேலை பெற்றனர்.

  ஏன் 100% இல்லை என கேட்கலாம். பல கம்பனிகள் arrears வைத்து தேர்ச்சி பெரும் மாணவர்களை வேலைக்கு எடுக்க தயங்குகின்றன என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

  இப்போது வெற்றி சதவீதம் குறைவான பட்டங்களை பார்ப்போம்.

  MPhil – இதில் இருப்பதே 5 மாணவர்கள் தான், அதில் மூன்று பேர் வேலை பெற்றனர்.

  MSc 2-year – இதில் 60% மட்டுமே வேலை பெற்றனர். மற்ற கல்லூரிகளில் BSc முடித்தபின் இதில் சேர முடியும். இது பொறியியல் படிப்பு அல்ல. கணிதம், இயற்பியல், வேதியியல், geology (இதுக்கு தமிழ்ல என்ன?) போன்ற படிப்புகள். மற்ற கல்லூரிகளில் இந்த படிப்புகளுக்கு campus placement மிகக் குறைவே என்பதை வைத்து பார்க்கும் போது, 60% என்பது மெச்சத்தக்கதே!

  PhD – இதில் 48% வேலை பெற்றனர். இதிலும் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற படிப்புகள் அடங்கும். எனவே மேலே சொன்ன விஷயத்தை இங்கேயும் நினைவில் வைக்க வேண்டும். அதுவும் தவிர, அறிக்கை சொல்வது போல, இவர்களில் பலர் அரசு கல்வி/ஆராய்ச்சி நிறுவனங்களில் சேர விழைகின்றனர். இந்நிறுவனங்கள் campus interview விற்கு வருவதில்லை.

  MDes – animation design போன்ற பல்வேறு design படிப்புகள். இதில் 60% பேர் வேலை பெற்றனர். இந்த புதிய படிப்பு என்ன ஏது என எனக்கு தெரியாததால் லூஸ்ல விடுகிறேன்.

  மொத்தத்தில் ஐஐடி மும்பை campus placement மிகச் சிறப்பாக இருப்பதாகவே எனக்கு படுகிறது.

  மற்றபடி, கட்டுரையின் மையப் பொருளோடு எனக்கு கருத்து வேறுபாடு ஏதுமில்லை.

 8. உலக பொருளாதாரத்தின் சுவிட்ச் அமெரிக்காவிடம் இருக்கிறது. ரெசசன் என்பது உருவாக்கப்படுவது, அது அமெரிக்காவை பொறுத்த வரை ஒரு பண்டிகை.. ஒவ்வொரு ரேசசனும் அதிகபட்சம் 18 மாதங்கள் கொண்டாடப்படுகின்றன.பின்னர் அது பெரிய ரெணையசென்சாக மாறும்.

  இன்று… ரேசசன் பண்டிகை முடிந்து அமெரிக்கா மீண்டதாக அறிவிக்கிறது.. ஆயிரக்கணக்கான புதிய வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.. ஆட்கள் கிடைக்காமல் அமெரிக்க கம்பெனிகள் அல்லாடுகின்றன…

  ஐரோப்பா கூட ரேசசனுக்கு விடுதலை கொடுத்துவிட்டு , புதிய வேலைகளுக்கு ஆள் எடுக்க முனைகிறது. எமிரேட்ஸ் இருமடங்கு skilled worker வேண்டும் என கூறுகிறது.

  இந்தியாவில் கூட அணைத்து IT கம்பெனிகளிலும் ஆள் சேர்க்கை ஆரம்பித்து விட்டது.. ஒன்லி experienced professionals நோ பிரெஷேர்ஸ் ..

  ஆனால் BE மாணவர்களை IT கம்பனிகள் அதிகம் விரும்பவில்லை.காரணம் AAR சொன்னதுதான்..

  //even university topper cannot explain simple concepts.First parents should stop putting worthless kids in private colleges. Only then the quality of BE graduates will improve//

  ஒன்பதாவது வரை ஆல் பாஸ்… பத்தாவதிலும் , பனிரெண்டிலும் மனப்பாட சக்திகேற்றார் போல மதிப்பெண்கள் என்று ஸ்கூல், district , ஸ்டேட் topper என்று இந்த topper (taper ) களை பொறியியல் படிக்க சொன்னால், 5 வருடத்தில் 32000 பக்கம் மனப்பாடம் செய்து விட்டு வேலை கொடு என்றால் எவன் கொடுப்பான் ?

  our educational system should stop creating taperecorders… No MNC likes tape recorders… They need human rather robos..

  • மெக்காலே குமாஸ்தாவுக்கு தான படிக்க சொன்னாரு. இப்போ மாத்தி படியின்னா??? இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிடுச்சா?!?!

 9. நாமக்கல் கல்வி தொழில்சாலைகளில் இருந்து மாநில அளவில் அதிக மதிப்பெண் எடுத்து பொறியியல் மருத்துவம் சேரும் மாணவர்கள் முதல் ஆண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்து தோல்வியுறுவது வாடிக்கையாகிவிட்டது.

 10. இந்த பிராய்லர் பள்ளிகளிலிருந்து வரும் மாணவர்கள், படிப்புடன் இந்த சமூகத்திற்கு இருக்கும் தொடர்பைப் பற்றி சிறிதும் அறிந்திருப்பதில்லை. ஏட்டுச் சுரையினைவிட பயனற்றவர்களாக இருக்கின்றனர். மிகத் தேவையானதொரு கட்டுரை, நன்றி…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க